கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
டிச. 03 19:32

நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க முடியாதென மகிந்த அறிக்கை - சஜித்தைப் பிரதமராக்கும் மைத்திரியின் முயற்சி மீண்டும் தோல்வி

(மன்னார், ஈழம்) பிரதமராக பதவி வகிக்க முடியாதென கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தடை உத்தரவை ஏற்க முடியாதென்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். தீர்ப்புக்கு எதிராக இலங்கை உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் மகிந்த கூறியுள்ளார். இடைக்காலத் தீர்ப்புத் தொடர்பாக மகிந்த இன்று திங்கட்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கை குறித்து ரணில் தரப்பு எதுவும் கூறவில்லை. இந்த நிலையில் இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி மேலும் நீடித்துச் செல்லுகின்றது.
நவ. 29 14:29

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தமிழ்த்தேசியத்தின் சுயமரியாதையை உயிர்ப்போடு வெளிப்படுத்திய மாவீரர் நாள் நிகழ்வுகள்

(மட்டக்களப்பு, ஈழம்) 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான அரசியல் சூழலிலும் தமிழ்த்தேசிய உணர்வுடன் தமது இறைமை தன்னாதிக்கம் போன்றவற்றுக்கான அங்கீகாரத்துக்குமான ஏக்கங்களோடு ஈழத் தமிழர்கள் கொள்கை மாறாமல் இருக்கின்றனர் என்பதை செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாவீரர் நிகழ்வுகள் எடுத்துக் கூறியுள்ளனர். வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் தடைகள், அச்சுறுத்தல்கள் போன்ற துன்பங்களைத் தாண்டி திட்டமிட்டபடி மாவீரர் நாள் நிகழ்வுகளில் மக்கள் கலந்துகொண்டனர் அமைப்பு ரீதியான ஒழுங்குபடுத்தல்கள் எதுவுமேயின்றி ஒவ்வொரு பிரதேசத்திலும் வாழும் மக்கள் தாமாகவே முன்சென்று நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்தனர். விடுதலைப் புலிகளின் பாடல்கள் இசைகள் ஒதுவும் ஒலிபரப்பக் கூடாது என யாழ் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.
நவ. 28 08:27

ஐ.நா ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பணிப்பாளர் கொழும்பில் - சீனத் தூதுவர் மகிந்த தரப்புடன் சந்திப்பு

(முல்லைத்தீவு, ஈழம்) ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமரான பின்னர் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் இலங்கை அரசியல் நெருக்கடி குறித்து பிரதான அரசியல் கட்சிகளுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசி வருகின்றன. ஜனநாயக மீறல் எனவும் இலங்கை அரசியல் யாப்புக்கு அமைவாக பிரதான அரசியல் கட்சிகள் செயற்பட வேண்டும் என்றும் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் வலியுறுத்தி வருகின்றனா். அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் உரையாடியுமுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்து மைத்திரி விளக்கமளித்துமுள்ளார்.
நவ. 26 22:50

அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய ஏழு நீதியரசா்கள் நியமிக்கப்பட்டமை எந்த அடிப்படையில்?

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பான இலங்கை வர்த்தமானி அறிவிப்புக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய இலங்கை ஒற்றையாட்சி அரசின் உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான ஏழு நீதியரசர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களை பிரதம நீதியரசர் நளின் பெரேரா வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஏனைய அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் அனைத்தும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவாகவே தாக்கல் செய்திருந்தன. ஆனால் அரசியல் நெருக்கடி விவகாரமாகக் கருதி உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வாக விசாரணையை நடத்துமாறு கோரி முன்னாள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் இடையீட்டு மனு ஒன்றை கடந்த வாரம் தாக்கல் செய்திருந்தார்.
நவ. 22 21:16

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை புதுப்பிப்பது குறித்து அமெரிக்கத் தூதுவர் மகிந்தவின் அதிகாரியுடன் சந்திப்பு

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மைத்திரி மகிந்த தரப்பையும் ரணில் தரப்பையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களையும் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளும் அமெரிக்கா இந்தியா ஆகிய நாடுகளின் தூதுவர்களும் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் சந்தித்து வருகின்றனர். இலங்கை முப்படையினருடன் கூட்டுப் பயிற்சி பாதுகாப்பு, தொழில்நுட்ப உதவி மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட தங்களுக்குரிய பூகோள அரசியல் தேவைகளுக்கு ஏற்ப இந்தச் சந்திப்புக்கள் இடம்பெற்று வருவதாக கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் உள்ளிட்ட தூதுவர்கள் சந்தித்திருந்தனர்.
நவ. 20 22:22

தமிழர் தேசம் அபகரிக்கப்படும் நிலையில் வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து ரணிலுக்கு ஆதரவாகப் பேசினார் சம்பந்தன்

(மட்டக்களப்பு, ஈழம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் 15 பேரைச் சந்தித்து இலங்கை அரசியல் நெருக்கடி தொடர்பாக கலந்துரையாடியுள்ளது. கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சம்பந்தன் தலைமையில் சந்திப்பு இடம்பெற்றது. கூட்டமைப்பின் பேச்சாளரும் ரணில் விக்கிரமசிங்கவி்ன் ஜனநாயக உரிமை மீறலுக்கு எதிராக செயற்பட்டு வருபவருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பு உறுப்பினா்கள் அனைவரும் சந்திப்பில் கலந்துகொண்டனர். கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு மகிந்த ராஜபக்ச புதிய பிரதமராகப் பதவியேற்றதால் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது என சம்பந்தன் இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
நவ. 10 00:55

நாடாளுமன்றக் கலைப்பு சரியா, பிழையா- உயர் நீதிமன்றத்தின் கருத்தை சுயாதீனத் தேர்தகள் ஆணைக்குழு அறியவுள்ளது

(மன்னார், ஈழம்) இலங்கை நாடாளுமன்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலைக்கப்பட்டமை அரசியல் யாப்பின் 19 ஆவது திருத்தத்திற்கு அமைவானதா என்பது குறித்து இலங்கை சுயாதீன தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இலங்கை உயர் நீதிமன்றத்தின் கருத்தைக் கோரவுள்ளார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாறு முடிவு செய்துள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. மஹிந்த ராஜபக்ச தரப்பு பொரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு மைத்திரிபால சிறிசேன இலங்கை அரச வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளமை அரசியல் யாப்பு விதிகளை மீறும் செயல் என குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தெரிகின்றது.
நவ. 08 16:46

பிரதமர், அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்யலாம் - ஆனால் சபாநாயகரை நாடாளுமன்றம் கூடும் முன் மாற்ற முடியுமா?

(முல்லைத்தீவு, ஈழம்) மைத்திரிபால சிறிசேனவும் மஹிந்த ராஜபக்சவும் இலங்கை நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் சாதாரண பெரும்பான்மையை நிரூபிக்கும் விடயத்தில் இக்கட்டான நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜே.வி.பியும் இணைந்து மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதில்லை என்றும் வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்கவுள்ளதாகவும் கொள்கையளவில் இணங்கியுள்ளனர். ஜே.வி.பி இதனை வெளிப்படையாகவும் அதிகாரபூர்வமாகவும் இதுவரை ஊடகங்களுக்கு எதுவும் கூறவில்லை. ஆனால், ஜனநாயகத்திற்கு விரோதமாக அரசியல் யாப்பை மீறும் செயற்பாடுகளுக்கு அனுமதிக்க முடியாதென ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.
நவ. 06 14:31

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுதலிக்கும் ஜே.வி.பியோடு சம்பந்தன் ஏற்படுத்திய இணக்கம் என்ன?

(மன்னார், ஈழம்) இலங்கையில் மாறி மாறி ஆட்சியமைத்து வரும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரு கட்சிகளும் தனித்து ஆட்சி அமைக்கும் போட்டியில் தமிழ் முஸ்லிம் கட்சிகளையும் சிறிய கட்சிகளையும் பேரம்பேசி வருகின்றன. இந்த நிலையில் நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணாக ஆட்சி அமைப்பதற்கோ, அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கோ ஒருபோதும் இடமளிக்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜே.வி.பியும் தெரிவித்துள்ளன. ஜனநாயகத்திற்கு முரணான சதித்திட்டங்களை இலங்கை நாடாளுமன்றத்தில் தோற்கடிப்பது தொடர்பான தலையீட்டினை மேற்கொள்வது குறித்து இரு கட்சிகளுக்கும் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இருகட்சிகளின் தலைவர்களும் கூறியுள்ளனர்.
நவ. 04 00:48

மஹிந்த பிரதமரானமை அராஜகம் என்றால், தமிழர்களின் 70 ஆண்டுகால போராட்டத்தை அழித்தமை எந்த வகையான ஜனநாயகம்?

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி இராணுவ ரீதியான புரட்சிக்கு அல்லது வன்முறைகளாக மாறிவிடக் கூடாது என்பதில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அவதானமாகவே இருக்கின்றன. பிரதமர் பதவி மாற்றம் தொடர்பான சர்ச்சைக்கு இலங்கையின் அரசியல் யாப்பு அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் அனைத்தும் வலியுறுத்தி வருகின்றன. அதுவும் அமெரிக்கா இரண்டு தடவை அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசியல் யாப்பை கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் கூறியுள்ளார்.