2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில்

ஜே.வி.பியின் பாவங்களைக் கழுவ முற்படும் சக்திகள்

கனடாவில் அனுராவை வரவேற்கத் தயாராக இருக்கும் சில ஈழத்தமிழர்கள்? சந்திரிகாவின் பின்னணி கொண்ட வரலாறு
பதிப்பு: 2024 மார்ச் 09 21:09
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 12 20:29
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#jvp
#canada
#tamils
#srilanka
ஜே.வி.பயின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா, கனடவுக்குப் பயணம் செய்யவுள்ளார். அவரைத் அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் சிலர் வரவேற்கவுள்ளதாக செய்திகளும் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன. ஜே.வி.பி பற்றிய விம்பம் மிகச் சமீபகாலமாக அரசியல் நோக்கில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக இந்தியாவுக்குச் சென்று வந்த பின்னர் ஜே.வி.பியின் பாவங்கள் கழுவப்படுகின்றன. போரால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் சிலர் ஜே.வி.பி மீது நம்பிக்கை வைக்கிறார்கள் புதிய மாற்றம் என்று வேறு சிலர் புகழாரம் சூட்டுகிறார்கள். அனுரகுமார திஸாநாயக்க நல்லவர் வல்லவர் என்றும் சிலர் மார் தட்டுகிறார்கள். சிங்களவர்கள் ஜே.வி.பியை நம்புவதும் விசுவசிப்பதும் வேறு.
 
புலிகளின் பேச்சாளர் அன்ரன் பாலசிங்கம் விமானத்தில் தாய்லாந்தில் இருந்து கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் வந்திறங்கிய போது நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்த அனுரகுமார திஸாநாயக்கா, தரக்குறைவான வார்த்தைகளினால் ஆவேசமாக விமர்சித்திருந்தார்

ஆனாலும், சிங்கள மக்களில் அதிகமானோர் ஜே.வி.பியை இன்னமும் ஓரக் கண்ணாலேயே பார்க்கின்றனர். முழுமையாக நம்பத் தயாராக இல்லை. இப் பின்னணியில் ஈழத்தமிழர்களுக்கு ஜே.வி.பி மீது திடீர் பாசம் வருமா? முஸ்லிம்களும் நம்பும் அளவுக்கு இல்லை.

1994 இல் சந்திரிகா முதன் முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, அவர் வழங்கிய கேக் துண்டில் நஞ்சு கலந்த ஐஸ்கிறீம் பூசப்பட்டிருப்பதை அறியாமல் தமிழர்கள் பலரும் அன்று வாங்கி உண்டார்கள். அவருக்கு வாக்களித்திருந்தனர். தேவதை போன்றும் சித்தரித்தனர்.

64 சதவீத வாக்குகளுடன் இலங்கை அரசியல் வரலாற்றில் சந்திரிகா ஜனாதிபதியானார்.

ராஜீவ் காந்தியை புலிகள்தான் கொலை செய்தார்கள் என்ற சந்தேகத்துடன் மாத்திரம் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, புலிகள் தான் கொலை செய்தார்கள் என்று கண்கண்ட சாட்சி போன்று சந்திரிகா 1995 ஆம் ஆண்டு மே மாதம் புதுடில்லியில் இந்திய ஊடகங்களிடம் பகிரங்கமாக கூறியிருந்தார்.

1996இல் இடம்பெற்ற செம்மனிப் புதைகுழியில் இருந்து சந்திரிகா அரசு பதினொரு வருடங்கள் நடத்திய இன அழிப்புக்குத் தனித்த வரலாறு உண்டு.

ஆனால், அதையும் மறந்து சந்திரிகாவை மீண்டும் தேவதை என்று கூறுமளவுக்குத் தமிழர்கள் சிலர் முன்வந்துள்ள சூழலில் ஜே.வி.பிக்கும் புனிதர் பட்டம் கொடுக்க ஆரம்பித்துள்ளமைதான் பெரும் வெட்கக்கேடு.

சந்திரிகாவை தேவதை என்று 1994 இல் வர்ணித்தமைக்கு ஒப்பாக இன்று அனுரகுமார திஸாநாயக்காவை மன்மதன் என்று கூறும் அளவுக்கு நிலைமை மாறி வருகின்றது என்றால், தமிழர்களிடம் பட்டறிவு இல்லையா? அல்லது ஞாபக மறதியா?

சந்திரிகா ஜனாதிபதியாக இருந்தபோது 2000ஆம் ஆண்டு முதன் முதலில் ஜே.வி.பியின் அப்போதைய தலைவர் சோமவன்ச அமரசிங்க பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட்டார்.

சந்திரிகாவுக்கு அப்போதிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் அமரர் காமினி அத்துகொரள மற்றும் முஸ்லிம் காகிரஸ் தலைவர் அமரர் அஷ்ரப் ஆகியோர் கொடுத்த அரசியல் நெருக்கடியால் குழப்பமடைந்த சூழலிலேயே சோமவன்சவின் வருகைக்கு சந்திரிகா அனுமதியளித்திருந்தார்.

1994 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டிருந்த ஜே.வி.பி தேசியப்பட்டியல் மூலம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றிருந்தது.

நிஹால்கலபதி முதலாவது உறுப்பினராகப் பதவியேற்றபோது அன்று சந்திரிகா அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியிருந்தார்.

அந்த உறவின் நீட்சிதான் சோமவன்ச அமரசிங்கவுக்கு இலங்கைக்கு வருவதற்கான அனுமதியும் 2004இல் அனுரகுமார திஸாநாயக்கா விவசாய அமைச்சராகப் பதவியேற்பதற்கும் காரண - காரியமாக அமைந்திருந்தன.

2002 இல் சந்திரிகா ஜனாதிபதியாக இருந்தபோது ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவி வகித்திருந்தார். அப்போது விடுதலைப் புலிகளுடன் நோர்வேயின் ஏற்பாட்டில் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது.

ஆனால், அதனை விரும்பாத சந்திரிகா ஜே.வி.பி மூலமாக அன்று கொழும்பில் கடும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

புலிகளின் பேச்சாளர் அன்ரன் பாலசிங்கம் விமானத்தில் தாய்லாந்தில் இருந்து கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் வந்திறங்கிய போது நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்த அனுரகுமார திஸாநாயக்கா, தரக்குறைவான வார்த்தைகளினால் ஆவேசமாக விமர்சித்திருந்தார்.

கொட்டிக்காவத்தே சத்ததிஸ்ஸ தேரோ, வல்லதொட பண்ணதர்ஸி தோரோ, பொஹொத்தரமுல்லே ப்ரேமலோக தேரோ உள்ளிட்ட பௌத்த பிக்குகளும் ஜே.வி.பியினால் படுகொலை செய்யப்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது

2004 இல் சுனாமி பேரலையினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2005 இல் நிதியை மையப்படுத்திய பொதுக் கட்டமைப்புக்கான ஒப்பந்தம் ஒன்றில் புலிகளுடன் சந்திரிகா அரசாங்கம் கைச்சாத்திட்டது.

ஆனால் நிவாரணப் பணிகளுக்காக புலிகளுக்கு நிதி வழங்கக் கூடாது என்றும் அதனை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோசமிட்டு அன்று ஜே.வி.பி கடும் எதிர்ப்பில் ஈடுபட்டது.

பௌத்த குருமாருடன் சேர்ந்து கொழும்பில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனால் பொதுக் கட்டமைப்புக்கு நிதி வழங்கும் நாடுகள் பட்டியலில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. அத்துடன் பொதுக் கட்டமைப்பும் செயலிழந்தது.

2005 டிசம்பரில் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதிக் கதிரையில் அமர்த்த பெரும்பாடுபட்டது இந்த ஜே.வி.பிதான்.

புலிகளுடன் மகிந்த ராஜபக்சவைப் போருக்குத் தள்ளியது ஜே.வி.பிதான் என்று சிங்கள மூத்த ஊடகவியலாளர் ஞானசிறி கொத்திகொட 2010 இல் கொழும்பு இதழியல் கல்லூரியில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆகவே ஜே.வி.பிதான் போருக்குக் காரணம் என்பது பகிரங்கம்.

2000 ஆம் ஆண்டு சோமவன்ச அமரசிங்க இலங்கைக்கு வந்தவுடன் முதன் முதலில் கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் ஐம்பதாயிரம் சிங்கள இளைஞர்களைத் திரட்டி இலங்கை இராணுவத்தில் இணைத்துப் புலிகளுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்துவேன் என்று சூளுரைத்திருந்தார்.

இச் செய்தி அன்று வெளியான தமிழ், சிங்கள நாளிதழ்களில் பிரதான செய்தியாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தன.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் 2006 இல் இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வடக்குக் கிழக்கு மாகாணங்களை இரண்டாகப் பிரித்ததும் ஜே.வி.பிதான்.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு வெளியிட்டு வந்த ஜே.வி.பி 2006 இல் வடக்குக் கிழக்கைப் பிரித்து தனது இனவாத இச்சையைத் தீர்த்துக் கொண்டது.

2009 மே மாதம் இறுதிப் போர் வெற்றியை மகிந்த ராஜபக்ச கொண்டாடியபோது ஜே.வி.பி அந்த நிகழ்வை பாராட்டியது. அதன் பின்னரான சூழலிலும் ஜே.வி.பியிடம் அரசியல் தீர்வுக்கான எந்தவொரு யோசனைகளும் இல்லை.

ஆனால் இவை எல்லாவற்றையும் மறந்துபோன நிலைமையில்தான் தமிழர்கள் சிலர் ஜே.வி.பியை புதிய மாற்றம் என்று சித்திரிக்கின்றனர்.

இலங்கை வரலாற்றில், பயங்கரவாதிகள் என்றால், தமிழ் ஆயுத இயக்கங்களை மாத்திரம் ஞாபகப்படுத்துவது சிங்கள இனவாதத்தின் பண்புகளில் ஒன்று. சர்வதேசமும் அதற்கு விதி விலக்கல்ல.

1987 இல் இலங்கை நாடாளுமன்றத்துக்குள் குண்டு போட்ட பயங்கரவாதிகள், 'தேசப்பிரேமி ஜனதா வியாபாரய' (தேசபக்தி மக்கள் இயக்கம்) என்ற ஜே.வி.பியின் இராணுவப் பிரிவுதான். இது அனைத்துச் சிங்கள அரசியல் தலைவர்களுக்கும் தெரியும். ஏன் உலகத்துக்கும் புரியும்.

விடுதலைப் புலிகள் செய்த கொலைகள் எல்லாம் கெட்ட கொலை, ஜே.வி.பி செய்த படுகொலைகள் எல்லாம் நல்ல கொலைகள் என்ற அர்த்தம் இன்று பல சிங்கள தமிழ் பிரமுகர்களடம் உண்டு.

ஆனால் கொலை என்றால் அது கொலைதான். நல்ல கொலை கெட்ட கொலை என இரண்டு வகையான கொலைகள் உலகில் எங்குமே இல்லை.

சோசலிசத்துக்கான ஆயுதப் போராட்டம் என்று கூறி ஜே.வி.பி அன்று செய்த கொலைகளை இன்று பலர் மறந்துவிட்டனர்.

ஜே.வி.பி கொலையே செய்யவில்லை என்று அனுரகுமார திஸாநாயக்காவின் இரசிகர்கள் இன்று கூற ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த இரசிகர்கள் யார் என்று பார்த்தால் 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த புதிய வாக்காளர்களாக இருக்கும் இளைஞர்கள்தான். இதில், தமிழ் இளைஞர்கள் பலரும் உள்ளடங்குவர்.

ஜே.பி.வி அன்று செய்த கொலைகளைச் சட்டத்தரணி அஷோக்பரன் 2022 ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பில் இருந்து வெளிவரும் தமிழ்மிரர் நாளிதழில் அறிக்கையிட்டிருக்கிறார்.

மாகாண சபை முறைகளை இல்லாமல் செய்து, ஈழத்தமிழர்களுக்கான குறைந்தப்பட்ச அதிகார பரவலாக்கம் கூட அவசியமில்லை என்று பிரச்சாரம் செய்யும் ஜே.வி.பி தேர்தல் வெற்றிக்காகவும், இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் அதிகாரத்தைக் கைப்பற்றவும் தமிழர்களின் விடி வெள்ளி போன்று காண்பிக்க முற்படுகின்றமை இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை

இலங்கையின் பெயர்போன தொழிலதிபரும், முன்னணி திரைப்படத் தயாரிப்பாளருமான கனகசபை குணரட்ணம் (கே.ஜி), தொழிலதிபர்களான சண்முகம் சகோதரர்கள், சபீர் ஹூசைன் ஆகியோர் 1989இல் ஜே.வி.பியினரால் படுகொலை செய்யப்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜினதாஸ வீரசிங்ஹ, கீர்த்தி அபேவிக்கிரம, ஜீ.வி.எஸ்.டி சில்வா, லயனல் ஜயதிலக்க, அநுர டானியல், மெரில் காரியவசம், டபிள்யூ.எம்.பி.ஜீ. பண்டா, லெஸ்லி ரணகல, தயா சேபாலி சேனாதீர ஆகியோரும், ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களான ஹர்ஷ அபேவர்தன, நந்தலால் பெர்ணான்டோ, சரத் நாணயக்கார ஆகியோரும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினரான லக்ஷ்மன் சில்வாவும் ஜே.வி.பியால் படுகொலை செய்யப்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

லங்கா சமசமாஜக் கட்சி உறுப்பினரான பி.டீ விமலசேன, இலங்கை தாராளவாதக் கட்சி வேட்பாளர் ஓ. காரியவசம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் களுத்தறை அமைப்பாளர் இந்திரபால அபேவீர, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான எல். டபிள்யூ பண்டித, இலங்கையின் முன்னணி நடிகரும், சந்திரிகா குமாரதுங்கவின் கணவரும், இலங்கை மக்கள் கட்சியின் தலைவருமான விஜய குமாரணதுங்க ஆகியோரும் ஜே.வி.பியால் படுகொலை செய்யப்பட்டதாக அறிக்கையிடப்பட்டு உள்ளது.

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முதலாவது உபவேந்தரான பேராசிரியர் ஸ்ரான்லி விஜேசுந்தர, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான சண்ட்ரட்ன பட்டுவதவிதான ஆகியோரும் ஜே.வி.பியால் படுகொலை செய்யப்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் முதலாவது பெண் பணிப்பாளரான முனைவர் க்ளடிஸ் ஜயவர்தன ஜே.வி.பியால் படுகொலை செய்யப்பட்டதாக அறிக்கையிடப்பட்டு உள்ளது.

மேலும் பல பொலிஸ் அதிகாரிகள், அரச உத்தியோகஸ்தர்கள், தனியார் தொழில் துறை உத்தியோகஸ்தர்கள், பெருந்தோட்ட முகாமையாளர்கள், கல்வியியலாளர்கள், ஊடகவியலாளர்கள் என ஜே.வி.பி படுகொலை செய்தவர்களின் பட்டியல் மிக நீண்டது. இதில் வெளிநாட்டவர்களும் உள்ளடக்கம்.

இந்தப் படுகொலைப் பட்டியலில் பௌத்த பிக்குகளும் விதிவிலக்கல்ல. கொட்டிக்காவத்தே சத்ததிஸ்ஸ தேரோ, வல்லதொட பண்ணதர்ஸி தோரோ, பொஹொத்தரமுல்லே ப்ரேமலோக தேரோ உள்ளிட்ட பௌத்த பிக்குகளும் ஜே.வி.பியினால் படுகொலை செய்யப்பட்டதாக அறிக்கையிடப்பட்டு உள்ளது.

பல உயிர்களைப் பறித்த இரத்தக்கறை, ஜே.வி.பி மீது படிந்து கிடக்கிறது. இந்த இரத்தக்கறையை மறைக்க வேண்டிய தேவை, ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு 'ஜனநாயக வழி'க்குத் திரும்பிய ஜே.வி.பிக்கு இருந்தது. அதற்காக ஜே.வி.பி எடுத்துக்கொண்ட ஆயுதம் 'பேரினவாதம்' என்று அஷோக்பரன் தனது கட்டுரையில் விமர்சித்திருக்கிறார்.

அதேவேளை, பல கொலைகளில் ஜே.வி.பி ஈடுப்பட்டமை தொடர்பாக சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் விவரங்களை வெளியிட்டிருக்கின்றன.

சமகாலத்தில் நடைமுறையில் உள்ள மாகாண சபை முறைகளை இல்லாமல் செய்து, ஈழத்தமிழர்களுக்கான குறைந்தப்பட்ச அதிகார பரவலாக்கம் கூட அவசியமில்லை என்று பிரச்சாரம் செய்யும் ஜே.வி.பி தேர்தல் வெற்றிக்காகவும், இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் அதிகாரத்தைக் கைப்பற்றவும் தமிழர்களின் விடி வெள்ளி போன்று காண்பிக்க முற்படுகின்றமை இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை என்பதையும் மறுப்பதற்கில்லை.