மெய்ப்பொருள் அன்றி எப்பொருளும் சாரா தமிழர் புலங்களின் உயிரோட்ட நாட்காட்டி
பாரிய கடன்களைப் பெற முடியாதுபோனால்

இலங்கைத்தீவில் நான்கு மணிநேர மின் துண்டிப்பு அபாயம்

அமைச்சர் உதயகம்பன்பில கூறுகிறார்
பதிப்பு: 2022 ஜன. 21 22:28
புதுப்பிப்பு: ஜன. 21 23:05
எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் பெரியளவில் கடனைப் பெற முடியாது போனால் ஒவ்வொரு நாளும் சுமார் நான்கு மணி நேர மின்சாரம் துண்டிக்கும் நிலை ஏற்படலாமென எரிசக்தி அமைச்சர் உதயகம்பன்வில தெரிவித்துள்ளார். கடனைப் பெறுவது தொடர்பாக அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. ஆனாலும் உடனடித் தீர்வு கிடைக்குமெனக் கூற முடியாதென்றும் உதயகம்பன்பில கூறியுள்ளார். >> மேலும் வாசிக்க
ஜன. 20 22:25

புதிய அரசியல் அணியை உருவாக்கும் முயற்சியில் சந்திரிகா

(வவுனியா, ஈழம்) ராஜபக்சக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியோடு இணைந்து அந்த அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்தால், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினரின் மகளுமான சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரனதுங்க தெரிவித்துள்ளார். தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் கட்சியின் மூத்த உறுப்பினராகவும் இருக்கும் மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை 2018 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பிரதமராக்கி 52 நாட்கள் நடத்திய அரசியல் நாடகம் பெரும் சாபக்கேடு என்றும் கூறினார்.
ஜன. 19 21:57

மாந்தை கிழக்கில் அரச காணிகள் குத்தகைக்கு விடப்படுவதாகக் குற்றச்சாட்டு

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகமான வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விஸ்தீரணம் உடைய வளமான அரச காணிகள் நீண்டகால அடிப்படையில் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் பிரதேச செயலாளரினால் குத்தகைக்கு வழங்கப்படுவதாக மாந்தை கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் மகாலிங்கம் தயானந்தன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
ஜன. 18 23:40

பௌத்த சிங்கள மக்களின் விருப்பத்தைப் பிரதிபலித்த கொள்கை விளக்கவுரை

(யாழ்ப்பாணம், ஈழம்) 2009 இல் இறுதிப் போரை நடத்திய இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இனப்பிரச்சனையை வெறுமனே பொருளாதாரப் பிரச்சனையாகச் சித்தரித்திருக்கும் நிலையில், தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரிடம் கடிதம் (ஆவணம்) ஒன்றைக் கையளித்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்புவதற்காக நான்கு கூட்டங்களை நடத்தித் தயாரிக்கப்பட்ட கடிதமே இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்தி 13 இற்கு அப்பாலான அதிகாரப் பரவலாக்கத்தைக் கோருவதே கடிதத்தின் நோக்கம் என்று கூறப்பட்டாலும், கடிதத்தின் உள்ளடக்கத்தில் உள்ள உண்மையான விபரங்கள் எதுவும் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை.
ஜன. 18 14:11

ஆத்திரமடைந்த சம்பந்தன் பசிலுடன் நேரடித் தர்க்கம்

(வவுனியா, ஈழம்) இலங்கையின் திட்டமிடலோடு சுமந்திரன் அணி, செல்வம் அணி என இரண்டாகப் பிரித்து அமெரிக்க- இந்திய அரசுகளினால் கையாளப்பட்டவொரு நிலையிலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது இரண்டாவது கொள்கை விளக்கவுரையில் தேசிய இனப்பிரச்சனையென ஒன்று இருப்பதாக எந்தவொரு இடத்திலும் கூறவில்லை. இனப்பிரச்சனையை வெறுமனே பொருளாதாரப் பிரச்சனை என்ற கோணத்திலேயே கோட்டாபய ராஜபக்ச விபரித்துள்ளார். வடக்குக் கிழக்குத் தமிழ் அரசியல் கட்சிகள் தமது அரசியல் நிலைப்பாடுகளைக் கைவிட்டு அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் தனது கொள்கை விளக்கவுரையில் பகிரங்கமாக அழைப்பும் விடுத்திருக்கிறார்.
ஜன. 17 22:04

கொழும்பு பொரல்லை தேவாலய குண்டு மீட்பு விசாரணைகளில் நம்பிக்கையில்லை- சஜித்

(வவுனியா, ஈழம்) உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் நம்பிக்கை இல்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு பொரல்லை தேவாலய வளாகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கைக் குண்டு தொடர்பான விசாரணைகள் மூடி மறைக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ள சஜித் பிரேமதாச, இதன் பின்னணியில் அரசாங்கத்தில் உள்ள அரசியல்வாதிகள் சிலர் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் கூறினார். மஸ்கெலியாவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு கூறினார்.
ஜன. 15 23:48

இலங்கைக்கு இந்தியா மேலும் ஒரு பில்லியன் டொலர் உதவி

(முல்லைத்தீவு) இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கு மேலும் ஒரு பில்லியன் டொலருக்கும் அதிகமான கடன் தொகை விரைவில் வழங்கப்படுமென இந்தியா உறுதியளித்துள்ளது. தொள்ளாயிரம் (900) மில்லியன் டொலர் நிதியுதி வழங்கப்படுமென கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் கோபால் பல்கே சென்ற 13 ஆம் திகதி வியாழக்கிழமை அறிவித்திருந்தார். இந்த நிலையில், ஒரு பில்லியனுக்கும் அதிகமான கடனுதவி கிடைக்குமென கொழும்பில் உள்ள இலங்கை அரசின் நிதியமைச்சுத் தகவல்கள் கூறுகின்றன. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுடன் நடத்திய இணையவழி உரையாடலில் நிதியுதவி குறித்துப் பேசப்பட்டதாகக் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு இன்று சனிக்கிழமை தெரிவித்தன.
ஜன. 15 20:48

மன்னார் நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீதான தாக்குதல்- சந்தேக நபர்களை முன்னிலையாகுமாறு உத்தரவு

(மன்னார், ஈழம்) இலங்கையின் வடமாகாணம் மன்னார் மாவட்ட நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் மன்னார் மேல் நீதிமன்றில் கடந்த 11ஆம் திகதி செவ்வாயன்று நடைபெற்ற சமயம், குறித்த வழக்கில் தொடர்புடைய 53 சந்தேக நபர்களையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் மன்னார் மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அன்றைய தினம் இலங்கை ஒற்றையாட்சி அரசின் சட்ட மா அதிபர் சார்பான அரச சட்டத்தரணியையும் நீதிமன்றில் பிரசன்னம் ஆகுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
ஜன. 14 13:50

மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்படலாம்- சுதந்திரக் கட்சி கூறுகின்றது

(வவுனியா, ஈழம்) கோட்டாய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அரசாங்கத்துக்குள் முரண்பட்டுள்ளதால், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தமது கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவைக் காரணமின்றிக் கைது செய்ய முடியாதென தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டை அவர் பகிரங்கமாக முன்வைத்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் அரசாங்கத்தையும் விமர்சித்து வருவதால், மைத்திரிபால சிறிசேனவைக் கைது செய்து சிறையில் அடைப்பதற்கு இரகசியமாகத் திட்டமிடப்படுவதாக தயாசிறி ஜயசேகர கூறினார்.
ஜன. 13 22:42

ஆவணத்தைப் பெற முன்னர் இலங்கைக்கான நிதியுதவியை உறுதிப்படுத்தியது இந்தியா

(யாழ்ப்பாணம், ஈழம்) இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பவுள்ள ஆவணத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகள் சென்ற வியாழக்கிழமை கைச்சாத்திட்டுள்ள நிலையில், இந்திய மத்திய அரசு 900 மில்லியன் டொலர் பெறுமதியான நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று வியாழக்கிழமை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை நேரில் சந்தித்து உறுதிப்படுத்தினார். மோடிக்குக் கடிதம் அனுப்புவதற்காகக் கைச்சாத்திட்ட அன்றைய நாளே தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்கள் இந்தியாவிடம் கையளிப்பதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டிருந்தது.