இலங்கை அரசுடன் புதிய அரசியலமைப்புத் தொடர்பாகப் பேசுவதற்கு முன்னர், அரசியல் அமைப்புக்கு முற்பட்ட இணக்கப்பாடு ஒன்று சர்வதேச மத்தியஸ்தத்தோடு ஏற்படுத்தப்படவேண்டும். அதிலே சில அடிப்படைகள் தொடர்பான இணக்கம் ஏற்பட்டால் ஒழிய அரசியலமைப்பு உருவாக்க சபைக்குள் சிக்கி மீண்டும் ஏக்கிய ராஜ்ஜிய என்று ம. ஆ. சுமந்திரனும் மறைந்த இரா. சம்பந்தனும் விட்ட பெருந்தவறை இனியும் எவரும் இழைக்கக் கூடாது என்று ஆணித்தரமாக ரகுராம் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
2019 இல் கசிந்த அல்லது வெளியான அரசியலமைப்புக்கான விவாதத்துக்காக இறுதிப்படுத்தப்பட்ட மாதிரி வரைபில் பல ஆபத்தான தன்மைகள் உள்ளதை அவர் தனது பேச்சில் சுட்டிக்காட்டினார்.
இப்போது பிரியாத, எப்போதும் பிரிக்கமுடியாத ஒருமித்த நாடு என்ற கோட்பாடு ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டுக்கு முற்றிலும் முரணானது என்பதை அவர் எடுத்தியம்பினார்.
தேசிய மக்கள் சக்தி சார்பாக தற்போதைய ஜனாதிபதி அநுர திசநாயாக அந்தத் திட்டத்தை வழிகாட்டும் குழுவில் சுமந்திரனோடு அங்கம் வகித்தது மட்டுமல்ல, நியமிக்கப்பட்ட ஆறு துணைக்குழுக்களில் ஒன்றில் தற்போதைய பிரதமரான ஹரினி அமரசூரியாவும் பங்கேற்றிருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டிய ரகுராம், அந்த மாதிரி வரைபின் அடியொற்றி தமிழ்த் தேசிய நிலைப்பாடு இருக்கமுடியாது என்பதைத் தெளிவுபடுத்தினார்.
கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் ஒன்று பொது நிலைப்பாடுகளை வெளிக்கொணருவதாக இருக்கவேண்டும் என்று அவரது உரை வலியுறுத்தியுள்ளதோடு, தமிழ் மக்கள் பேரவையின் திட்டத்தில் வரவேற்கப்படவேண்டிய தன்மைகள் பல இருந்தாலும், அவசரகால விதிமுறைகள் தொடர்பான உறுப்புரையில் தமிழ் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமை மழுங்கடிக்கப்பட்டுள்ள குறைபாடு உள்ளது என்றும் அவைபோன்ற குறைபாடுகள் நீக்கப்படவேண்டும் என்றும் அங்கு அவர் குறிப்பிட்டார்.
அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்தோடு சமாந்தரமாக மாகாணசபைகளால் தெரிவுசெய்யப்பட்ட 55 பிரதிநிதிகளைக் கொண்ட ஈரவைச் சட்டமன்றம் பிரேரிக்கப்பட்டிருந்தாலும், தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் அங்கும் சிறுபான்மையாக்கப்படுவதால் அதிலே தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்குரிய சமஸ்டித் தன்மை எள்ளளவும் கிடையாது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
ரகுராமின் உரையை வரவேற்றுப் பேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தமிழ் மக்கள் பேரவை முன்வைத்த திட்டத்தில் குறைகள் இருப்பதை ஒத்துக்கொண்டார். அவற்றை மாற்றவேண்டும் என்பதையும் ஒத்துக்கொண்டார்.
தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன், தமிழ்த் தேசிய அரசியல் ஈடுபாடு கொண்டோர் என்று பல நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் மாற்றத்தையும் சுயவிமர்சனத்தையும் வரவேற்பதாக கஜேந்திரன் கருத்து வெளியிட்டுள்ளது பற்றிய சில கேள்விகள் தமிழ்த் தேசியப் பரப்பில் எழுந்துள்ளன.
குறிப்பாக, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னரும் சுமந்திரன் விமர்சித்ததைப் போல அந்த நகர்வை கஜேந்திரனும் விமர்சித்திருந்தார். கஜேந்திரகுமாரும் அதே விமர்சனத்தில் ஈடுபட்டார்.
ஏறத்தாழ முப்பதாயிரம் வாக்குகளை அதிகமாக அரியநேத்திரன் பெற்றிருந்தால் அநுரவுக்குக் கிடைத்த வாக்குகளை விட வடக்கு-கிழக்கில் தமிழ்ப் பொதுவேட்பாளர் அதிக வாக்குகளைப் பெற்றிருப்பார். அதிலே ஆரம்பித்த வீழ்ச்சி பின்னர் பொதுத் தேர்தலில் மேலும் வீழ்ச்சிக்குக் காரணமாகியது.
இதைப் போலவே, வி. மணிவண்ணன், வரதராஜா பார்த்திபன் போன்றோர் முன்னணியில் இருந்து விலக்கப்படும் நிலையைத் தோற்றுவித்ததில் மக்கள் முன்னணி தொடர்பான சுயவிமர்சனம் நடைபெற்றிருக்கிறதா என்ற கேள்வி இருக்கிறது.
அதைப் போலவே, திருகோணமலையில் ஒரு முக்கிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளராக விளங்கிய சிறிஞானேஸ்வரன் என்பவர் சர்வதேசக் குற்றங்கள் தொடர்பான ஒரு நூலை வெளியிட்டார். அந்த நூல் வெளியீட்டிலே கலந்துகொண்டு பாராட்டிவிட்டு பின்னர் அவரையே கட்சியில் இருந்து விலக்கும் செயற்பாட்டுக்குச் சென்றார்கள்.
தமிழ் மக்கள் முன்னணி சுயவிமர்சனங்களுக்குத் தயாராக இருப்பது வரவேற்கத்தக்கது.
குறிப்பாக, தமிழரசுக்கட்சி உடைந்து போய் விடக்கூடாது என்பது தொடர்பான ஆழ்ந்த கவலையோடு கஜேந்திரகுமார் கருத்துவெளியிட்டுவருகிறார். இது மிகவும் நல்ல அறிகுறி.
ஆனால், தனது வெளிப்பிம்பத்தைச் சரிக்கட்டுவதற்காக மட்டும் அரை மனதோடு சுய விமர்சனங்கள் செய்வது மட்டும் போதாது.
பேராசிரியர் ரகுராமின் ஆக்கபூர்வமான விமர்சனங்களை வரவேற்பதில் நேர்மை வெளிப்படுகிறதென்றால், அந்த நேர்மை மணிவண்ணன், பார்த்திபன், ஞானேஸ்வரன் போன்றோரை மீண்டும் அரவணைத்துச் செயற்படுவதிலும் வெளிப்பட்டால், அது மேலும் ஒரு படி ஆக்கபூர்வமான தமிழ்த் தேசிய நகர்வாக மட்டுமல்ல, பிளவுகளுக்கு ஆளாகித் தலைமைச் சிதைவில் இருக்கும் தமிழரசுக் கட்சிக்கும் ஒரு நல்ல படிப்பினையைத் தரும்.
கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும் இதற்குத் தயாராகுவார்களா.
சிங்கள அரசியல் தலைவர்களிடம் மண்டியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்களோடு ஒன்றிணைந்து தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை வளர்க்கத் தலைப்படும் கஜேந்திரகுமார் தனது அணிக்குள் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகளை மறந்து இணைந்து கைகோர்த்து இயங்கத் தயாராக உள்ளாரா என்ற கேள்வி நியாயமானதே.
உண்மையான முன்னேற்றகரமான மாற்றங்கள் இதயசுத்தியோடு வரவேற்கப்படவேண்டியவை. இது ஒட்டுமொத்தத் தமிழத் தேசியப் பரப்பின் எதிர்பார்ப்பு.