இந்த ஆண்டு, தமிழக இளைஞர் மத்தியில், முள்ளிவாய்க்கால் நினைவு நாளை அழுவதற்கான நாளாக கருதாமல், தமிழினம் மீண்டு எழுவதற்கான எழுச்சி நாளாக நினைவு கூர வேண்டும் என்ற கருத்து பரவி வருகிறது.
இதேபோன்று, நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய நாள் (மே 18) அறிக்கையில், இனப்படுகொலை நடந்து இன்னும் 10 ஆண்டுகள்கூடக் கடக்காத சூழலில் இதனை வரலாற்றுத் துயரம் எனக் கருதி வெறுமனே கடந்துவிட முடியாது. மே 18ம் நாளை தமிழர்கள் வீழ்ச்சிக்குரிய நாளாக அல்லாது விடுதலையெழுச்சிக்குரிய நாளாக உணர்ந்து போராட முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
"தன்னாட்சி தமிழகம்" கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆழி செந்தில்நாதன் அவர்களை கூர்மை இணையம் தொடர்புகொண்ட பொழுது, "நினைவஞ்சலி என்பது ஒரு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி, அதே வேளை, இந்த நாளை துக்க நாளாக கருதி ஓய்ந்து போக வேண்டியதில்லை. நினைவஞ்சலி என்ற பகுதியில் எழுச்சியும் அடக்கம், அனைத்திற்கும் மேலாக, இன்றைய நாளில் நிகழ்ந்தவைகளை தமிழர்கள் அல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டியதும் அவசியம். அதற்கான செயல்திட்டங்களை உருவாக்க இந்த நாளில் தமிழர்கள் சிந்திக்கவும் வேண்டும்" என தெரிவித்தார்.