பின்னர் 2015 ஆம் ஆண்டு 48 சிங்களக் குடும்பங்களுக்கு நாவற்குழிப் பிரதேசத்தில் காணி அனுமதிப் பத்திரம் மைத்திரி- ரணில் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு விகாரை ஒன்றைக் கட்டுவதற்காக காணி ஒதுக்கப்பட்டு, கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதற்கெதிராக சாவகச்சேரிப் பிரதேச சபை, சாவகச்சேரி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.
காணி உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் எதுவுமின்றி விகாரை கட்டப்படுவதாகக் குற்றம் சுமத்தி, சாவகச்சேரி பிரதேச சபையின் செயலாளர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இதனால் விகாரையைத் தொடர்ந்து கட்டுவதற்கு நீதிபதி சிறிநிதி நந்தசேனன் இடைக்காலத் தடை உத்தரவொன்றைப் பிறப்பித்திருந்தார்.
ஆனால் சென்ற ஆண்டு ஆவணி மாதம் 30 ஆம் திகதி உரிய ஆவணங்கள் சாவகச்சேரி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. விகாரை கட்டப்படும் காணி இலங்கைத் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குரியது என்பதால் குறித்த காணியில் விகாரை கட்டுவதற்கு கொழும்பில் உள்ள வீடமைப்பு அதிகார சபையின் சிங்கள உயர் அதிகாரிகள் அனுமதி வழங்கிய கடிதம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனால் விகாரை கட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு நீக்கப்பட்டது. சாவகச்சேரி பிரதேச சபையும் தமது மனுவை மீளப் பெற்றுக் கொண்டது. அத்துடன் சென்ற ஆண்டு பத்தாம் மாதம் பதினொராம் திகதி விகாரையைக் கட்டுவதற்கான அனுமதியையும் சாவகச்சேரி பிரதேச சபை வழங்கியுள்ளது.
அனுமதி வழங்கப்பட்டது என்பதை சாவகச்சேரி பிரதேச சபைத் தலைவர் கந்தையா வாமதேவன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் குறித்த விகாரை அவசர அவசரமாக கட்டிமுடிக்கப்பட்டு திறப்பு விழாவும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இது குறித்து கூர்மைச் செய்தித் தளத்திடம் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி காண்டீபன், விகாரை கட்டப்படுவதற்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பை வெளியிட்டிருக்க வேண்டும் என்றார்.
ஏனெனில், நீதிமன்றத்தில் ஆவணங்களைக் காண்பித்தால் பிரதேச சபை கட்டடம் கட்டுவதற்கான அனுமதியை வழங்கியே ஆகவேண்டும். இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் உள்ள சட்டங்கள் மூலமாக ஈழத் தமிழர்கள், தமது அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த முடியாது.
எனவே ஈழத் தமிழர் பிரதேசங்களில் காணி அபகரித்தல், விகாரை கட்டுதல், புத்தர் சிலைகள் வைத்தல் போன்ற விடயங்களுக்கு எதிராக இலங்கை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து நீதியைப் பெற முடியாது. ஆகவே இந்த விவகாரத்தை ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சனையாகவே நோக்கியிருக்க வேண்டும் என்று காண்டீபன் கூறினார்.
இதேவேளை, புதிதாகத் திறக்கப்படவுள்ள விகாரைக்கான புனிதத் தாது, நாளை மறுதினம் 12 ஆம் திகதி குருநாகல் நெவகட செல்கிரி விகாரையில் இருந்து காலை எட்டு மணிக்கு ஊர்வலமாக (பெரகரா) எடுத்துச் செல்லப்படும்.
அன்று இரவு அனுராதபுரம் துபாராம சைத்திய விகாரையைச் சென்றடையும் ஊர்வலம், அடுத்த நாள் 13 ஆம் திகதி காலை ஏழு மணிக்கு மீண்டும் அங்கிருந்து ஆரம்பமாகி அன்றைய தினம் மாலை ஐ;ந்து மணிக்குப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாவற்குழி சம்புத்தி சுமன விகாரையைச் சென்றடையுமென அழைப்பிதழில் கூறப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு நல்லிணக்கம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் காலத்திலேயே இலங்கைப் படையினரின் ஒத்துழைப்போடு இலங்கை ஒற்றையாட்சியின் சட்டங்களுக்கு அமைவாக விகாரைகள் துரிதமாகக் கட்டப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு மாசி மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஆயிரம் விகாரைகள் கட்டப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வரும் ஜாதிக ஹெல உறுமயவின் பிரதான செயற்பாட்டாளர் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க, வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் விகாரைகள் கட்டும் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றார்.
நாவற்குழி விகாரையை கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்ட பின்னர், கடந்த மாதம் அங்கு சென்ற அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க, அந்த விகாரையில் வழிபட்டார்.
ஆயிரம் விகாரைகள் கட்டப்படுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கூறியிருந்தார்.
சாவகச்சேரி பிரதேச சபை சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியிலேயே உள்ளது.
1987 ஆம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் காணி, பொலிஸ் அதிகாரங்கள் உண்டு. ஆனால் அந்த அதிகாரங்கள் எதுவுமே இதுவரை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
காணி அதிகாரங்களை கொழும்பு இலங்கை ஒற்றையாட்சி அரசியல் நிர்வாகம் தம்வசப்படுத்தியுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு அல்ல. ஆனால் அந்தத் திருத்தச் சட்டத்தைக் கூட உரிய முறையில் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் நடைமுறைப்படுத்த விரும்பவில்லையென தமிழ்த் தரப்பு ஏலவே குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.