அந்தக் காலப்பகுதியில் நோர்வேயின் ஏற்பாட்டுடன் இலங்கை ஒற்றையாட்சி அரசுடன் விடுதலைப் புலிகள் பேச்சில் ஈடுபட்டிருந்தனர். தேசிய இனம் ஒன்றின் விடுதலை குறித்த பேச்சுக்களுக்குத் தடையாக இருந்தவர்கள் யார் என்பது பற்றியும், அதன் உண்மைத் தன்மைகள் தொடர்பாகவும் ரகுராம் தனது ஆசிரியர் தலையங்கத்தில் சிலாகித்துள்ளார்.
சமாதானப் பேச்சுக்களுக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ள இந்த ஆசிரியர் தலையங்கங்கள், இலங்கை அரசாங்கத்தின் ஆற்றாமைகளையும், வெளிப்படைத் தன்மையற்ற செயல் முறைகளையும் விலாவாரியாகச் சுட்டிக்காட்டியுள்ளது. நூற்றி எட்டு ஆசிரியர் தலையங்கங்கள் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அக்காலத்தில் சமாதானப் பேச்சுக்கு முட்டுக்கட்டை போட்டவர்களை ரகுராமின் ஆசிரியர் தலையங்கங்களில் இருந்து மூன்று பகுதியாகப் பிரித்துப் பார்க்க முடியும். ஒன்று கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள அரசியல் கட்சிகள், இரண்டாவது கிழக்கில் தமிழ்- முஸ்லிம் கலவரங்களின் பின்னணி மூன்றாவது சிங்கள ஆங்கில ஊடகங்களின் செயற்பாடுகள்.
இவற்றில் இடதுசாரிக் கட்சி என்றும் மார்க்சியவாதிகள் எனவும் தம்மைத் தாமே மார்தட்டிக் கொள்ளும் மக்கள் விடுதலை முன்னணியெனப்படும் ஜே.வி.பியின் செயற்பாடுகள் முக்கியமானது. பதினோராம் திகதி பத்தாம் மாதம் 2002 ஆம் ஆண்டு அன்று திருகோணமலையில் இடம்பெற்ற படுகொலைகளின் பின்னணியில் ஜே.பி.வி இருப்பதாக முதற் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அ்ந்த விசாரணையின் தகவலை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் தலையங்கத்தை எழுதிய ரகுராம், திருகோணமலையில் இடம்பெற்ற படுகொலைகளின் பின்னணியில் ஜே.வி.பி ஏற்கனவே செயற்பட்டிருப்பது துலாம்பரமாகத் தெரிவதாகச் சுட்டிக்காட்டுகிறார்.
ஆகவே சமாதானப் பேச்சைக் குழப்புவதற்குப் பெரும் சதி வலை ஒன்றை ஜே.வி.பி 2002-2003 காலப்பகுதியில் உருவாக்கியிருந்தது என்ற தொனியில் அந்த ஆசிரியர் தலையங்கம் அமைந்துள்ளது. அது இன்றும் பொருந்துகின்றது.
ஏனெனில் கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை ஏற்க முடியாதென அநுரகுமார திஸாநாயக்க 2017 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற புதிய அரசியல் யாப்புத் தொடர்பான விவாதத்தில் உரையாற்றியபோது கூறியிருந்தார்.
கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது ஏற்பட்ட தமிழ்- முஸ்லிம் கலவரங்களின் பின்னணியில் முஸ்லிம் அரசியல்வாதியொருவர் செயற்பட்டமை குறித்தும் தனது ஆசிரியர் தலையங்கத்தில் ரகுராம் அன்றே சொல்லிவிட்டார்.
அதாவது சமாதானப் பேச்சைக் குழப்ப எப்படியான சக்திகளையெல்லாம் சிங்கள ஆட்சியாளர்களும், சிங்கள அரசியல்வாதிகளும் உருவாக்கியிருந்தனர் என்பதை இக் காலத்துக்கு மாத்திரமல்ல எக் காலத்திற்கும் பொருந்தக் கூடியதாகவே அந்த ஆசிரியர் தலையங்கம் சித்தரிக்கிறது.
கிழக்கில் முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் இயங்குவதாக புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் 2005 ஆம் ஆண்டு பகிரங்கமாகவே வெளிப்படுத்தியிருந்தார்.
ஆனால் அப்போது கொழும்பில் இருந்த அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஒ பிளக் அதனை மறுத்திருந்தார். எனினும் இந்த ஆண்டு ஏ்ப்பிரல் மாதம் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலிலேதான் முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் குறித்து இலங்கை ஒற்றையாட்சி அரசு விழித்துக் கொண்டது.
கிழக்கை மையமாக் கொண்ட தமிழ்த்தேசியக் கோட்பாட்டை உடைப்பதற்கான இலங்கை ஒற்றையாட்சி அரசின் நிகழ்ச்சி நிரல்கள் ஜே.ஆர் காலத்தில் உருபெற்றது என்று சொல்ல முடியும்.
ஆனாலும் 2002. 2003 ஆண்டுகளில் சந்திரிகாவின் ஆட்சியில் அதுவும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது திட்டமிடப்பட்ட இலங்கை அரச இயந்திரப் பொறிமுறையின் கீழ், புலிகளுடனான சமாதானப் பேச்சுக்காலத்தில் கிழக்கில் ஏற்பட்ட குழப்பங்கள் பற்றிய ரகுராமின் ஆசிரியர் தலையங்கக் குறிப்புகள் காலத்தின் கண்ணாடியாகின்றன.
அத்தோடு. தமிழ், முஸ்லிம் புரிந்துணர்வின் ஊடே நிரந்தர அரசியல் விடுதலையை உருவகப்படுத்த முடியும் என்ற கருத்தையும் ரகுராம் தனது ஆசிரியர் தலையங்கத்தில் வலியுறுத்தியிருக்கிறார். முஸ்லிம்களின் அரசியல் தேவைகளைப் புரிந்து கொண்டு செயற்படுவதன் மூலமே தமிழ்த் தேசியக் கோட்பாட்டை நிறுவ முடியும் என்ற கருத்தியலின் அடிப்படையில் அந்த ஆசிரியா் தலையங்கம் அமைந்துள்ளது.
அதேவேளை. சந்திரிகா ஜனாதிபதியாக இருந்தபோது அவர் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை எப்படிக் குழப்பியது என்பதை, அரசியல் நாகரீகம் இல்லாத செயற்பாடுகள் என்ற தனது ஆசிரிய தலையங்கத்தில் ரகுராம் கவலையோடு விபரிக்கிறார்.
புலிகளின் கப்பல் ஒன்றை சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து சந்திரிகாவின் உத்தரவில் இலங்கைக் கடற்படை தாக்கி அழித்தமை குறித்து ரணில் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சுக்கு தெரியாத சர்ச்சையை, அரசியல் நாகரீகமற்ற செயலென ரகுராம் கண்டிக்கிறார்.
இன்று கூட 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் மைத்திரி- ரணில் எப்படி முரண்படுகின்றனர் என்பதும் அதன் மூலம் எழுபது ஆண்டுகால ஈழத் தமிழர் அரசியல் விடுதலைக்கான தீர்வுகளை எப்படி உதாசீனம் செய்கின்றனர் என்பது தொடர்பாகவும் அறிந்துகொள்ள முடியும்.
சமாதானப் பேச்சுக்காலத்தில் பௌத்த குருமார் எப்படிச் செயற்பட்டனர் என்பதை ரகுராமின் ஆசிரியர் தலைங்கத்தின் ஊடே அக்கால நிலைமைகளை அறிய முடிகின்றது. இன்றும் பௌத்த குருமாரே இலங்கை ஒற்றையாட்சி அரச அதிகாரத்தை இயக்குவதில் கோலோச்சுகின்றனர் என்பதற்கு, மார்க்கம் தவறும் மதகுருமார் என்ற தலைப்பில் ரகுராம் அன்று எழுதிய ஆசிரியர் தலையங்கம் எடுத்துக்காட்டு.
இன்று பௌத்த குருமாரையே சமாளித்துப் பூகோள அரசியல் செய்ய வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கும் ஏற்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள தற்போதைய அமெரிக்கத் தூதுவர் அலெய்னா கடந்த யூன் மாதம் கண்டிக்குச் சென்று மகாநாயக்கத் தேரர்களைச் சந்தித்து இலங்கையின் ஒற்றையாட்சி. இறைமை பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்.
தங்களுடைய பூகோள அரசியலை இலங்கையில் முன்னெடுக்க பௌத்த குருமாருடைய ஒத்துழைப்பு அவசியம் என்பதை பௌத்த குருமாருடைய வரலாற்று ரீதியான, தொடர்ச்சியான தீவிரச் செயற்பாடுகள் அமெரிக்காவுக்கு உணர்த்தியிருகிறது போலும்.
புலிகளுடனான சமாதானப் பேச்சைக் குழப்பியதில் பெரும் பங்களிப்பு சிங்கள பௌத்த குருமாருக்கே உண்டு என்பதை உலகம் அறியும். ஆகவே அந்தப் பௌத்த தேசியவாதப் பலத்தை மீறி எதையுமே செய்ய முடியாதென தற்போது அமெரிக்கா நம்புகின்றது என்பதையே அலெய்னாவின் சந்திப்பு எடுத்துக் காட்டுகின்றது.
உலகில் அனைவரையும் சமமானவர்களாக மதிக்கும் புத்தபகவானின் போதனைகளைப் பின்பற்றும் பௌத்த குருமார். மற்றைய சகோதர இனத்தின் உரிமைகளைப் பறிப்பதிலும் தடுப்பதிலும் ஆர்வம் கொண்டு செயற்படுவதை பௌத்த தர்மம் அனுமதித்து விட்டதா என்று ரகுராம் எழுதிய, மார்க்கம் தவறும் மதகுருமார் என்ற ஆசிரியர் தலையங்கம் 2002 ஆம் ஆண்டே கேள்வி எழுப்பியிருந்தது.
ஆனால் இன்றுவரை அதைப் பற்றி உணர்ந்துகொள்ள மறுக்கும் அமெரிக்கா, தனது பூகோள அரசியல் நலனுக்காக பௌத்தகுருமாரின் அத்தனை அடாவடித் தனங்களையும் அங்கீகரித்துத் தனது நலனுக்காகவே வடக்கு- கிழக்கு ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான அங்கீகாரத்தைப் புறம் தள்ளுகின்றது என்பது கண்கூடு.
அதேவேளை, சமாதானப் பேச்சுக்காலத்தில் கொழும்பில் இருந்து வெளியான சிங்கள, ஆங்கில ஊடகங்கள் எவ்வாறு செய்திகளையும் ஆசிாியா் தலையங்கங்களையும் வெளியிட்டிருந்தன என்பது குறித்து, அமைதிக்கு நடுவே ஊடகங்களின் போர் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள ஆசிரியா் தலையங்கம் இன்றுவரை பொருந்துகின்றது.
தமிழர்களுக்கு எதிரான போரை நடத்தியதே சிங்கள, ஆங்கில ஊடகங்கள்தான் என்று பிரபல சிங்கள ஊடகவியலாளா் ஞானசிறி கொத்திக்கொட கொழும்பு இதழியல் கல்லுாரியில் 2012 ஆம் ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கூறியிருந்தார்.
போர் நிறுத்தத்தைப் பாதிக்கக் கூடிய செய்திகளுக்கே சிங்கள ஆங்கில ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்ததாக ரகுராம் 2003 ஆம் ஆண்டே தனது ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
விடுதலைப் புலிகளின் வளர்ச்சியில் குறிப்பாக அரசியல். இராணுவச் செயற்பாடுகளில் சிங்கள, ஆங்கில ஊடகங்களுக்குப் பொறாமையிருந்து. அதன் காரணமாகவே ஈழத் தமிழர்களின் போராட்டத்தை மலினப்படுத்துகின்ற செய்திகள், கட்டுரைகளுக்கு சிங்கள- ஆங்கில ஊடகங்கள் முக்கியம் கொடுத்திருந்தன என்ற தொனியில் ரகுராமின் அந்த ஆசிரியர் தலையங்கம் அமைந்திருந்தது.
எனவே ஆசிரியர் தலையங்கங்கள் தான் சார்ந்த சமூகத்தின் அரசியல் இருப்பையும் பண்பாட்டையும் தேசத்துக்கான அங்கீகாரத்தையும் உறுதிப்படுத்தி நியாயப்படுத்தி அமைதல் வேண்டும். அதன் குற்றம் குறைகளையும் சுட்டிக்காட்டிச் செம்மைப்படுத்த வேண்டும்.
முதல்நாள் வெளியாகும் செய்திகளை அடுத்த நாள் அப்படியே மீளவும் எழுதுவது ஆசிரியர் தலையங்கம் அல்ல என்பதை ரகுராம் எழுதிய ஆசிரியர் தலையங்கங்கள் எடுத்துக் காண்பிக்கின்றன.
உங்களை எதிர்பார்க்கின்றது சமூகம் என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்ட ஆசிரியர் தலையங்கங்களின் தொகுப்பு. கடந்த புதன்கிழமை பிற்பகல் யாழ் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் பத்திரிகையாளர் அ.நிக்ஸன் தலைமையில் இடம்பெற்றது.
யாழ் பல்கலைக்கழகத் தகுதிவாய்ந்த அதிகாரி மூத்த பேராசிரியர் கந்தசாமி, கலைப்பீடாதிபதி கலாநிதி கே.சுதாகர் ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.
யாழ் ஊடக அமையத்தின் ஸ்தபகர், மூத்த ஊடகவியலாளர் ரட்னம் தயாபரன் வரவேற்புரை நிகழ்த்தினார். மூத்த எழுத்தாளர் கணபதி சர்வானந்தா தொடக்கவுரையாற்றினார்.
அரசறிவியல்த் துறைத் தலைவர் கலாநிதி கே.ரி.கணேசலிங்கம், மூத்த ஊடகவியலாளர் ஆ.சபேசன் ஆகியோர் நுாலை ஆய்வு செய்தனர்.
ரகுராம் ஊடகத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றுத் தற்போது யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கை நெறியின் தலைவராகவும் மூத்த விரிவுரையாளராகவும் செயற்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.