இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்ற இலங்கைப் பொலிஸார் கட்டுமானப் பணியில் ஈடுபட்டோரை உடனடியாகப் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு உத்தரவிட்டிருந்தனர்.
இதனையடுத்து பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாட்டாளர்களிடம், நினைவுத்தூபி அமைக்கும் பணிக்கான பிரதேச சபையின் ஒரு வருட அனுமதிக்காலம் கடந்த யூலை மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ள நிலையில், கட்டடப் பணிகளை முன்னெடுக்க வேண்டாம் என்றும் பிரதேச சபையின் அனுமதியுடன் கட்டடப் பணிகளை முன்னெடுக்குமாறும் தெரிவித்துள்ளனர்.
நினைவுத்தூபியில் உயிரிழந்தவர்களின் படங்களையோ அல்லது பெயரையோ பொறிக்க முடியாது என்றும் பொலிசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.
முல்லைத்தீவு உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கைப் படையினரால் அமைக்கப்படும் நினைவுத்தூபிகள் பிரதேச சபையின் அனுமதியுடனா அமைக்கப்படுகின்றது எனக் கேள்வி எழுப்பியுள்ள விழா ஏற்பாட்டுக் குழுவினர், செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தலைக் குழப்பும் நடவடிக்கையே இது என்று கூர்மை செய்தித் தளத்திற்கு கூறியதோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக தமது விசனத்தையும் வெளியிட்டுள்ளனர்.