இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல்

வெற்றியடைந்த மறு நாள் சிறையில் உள்ள இராணுவத்தினர் விடுவிக்கப்படுவர்- கோட்டா அறிவிப்பு

இலங்கையின் தேசிய பாதுகாப்பு முக்கியம் என்கிறார்.
பதிப்பு: 2019 ஒக். 09 23:47
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 10 01:47
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#gotabayarajapaksa
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள், இராணுவச் சிப்பாய்கள் அனைவரையும் அடுத்த நாள் விடுதலை செய்யவுள்ளதாக இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச இன்று புதன்கிழமை தெரிவித்தார். அவருடைய முதலாவது தேர்தல் பிரச்சாரம் அனுராதபுரத்தில் இன்று மாலை இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் இலங்கை இராணுவத்தினரைப் பலப்படுத்தினார். ஆனால் 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அரசாங்கம், இலங்கை இராணுவத்தை சர்வதேச அரங்கில் காட்டிக்கொடுத்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.
 
இராணுவத்திற்கு மரியாதை செய்வதன் மூலமே இலங்கையின் தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்றும் கோட்டாபய ராஜபக்ச கூறினார். பெரும் திரளான மக்கள் முன்னிலையில் உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ச, தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியென்றும் கூறினார்.

மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க முன்வந்தமை தொடர்பாக கூட்டத்தில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச பாராட்டினார்.

அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கவுள்ளதாக கட்சியின் மத்திய குழு முடிவெடுத்துள்ளது.

இதனால் அதிருப்தியடைந்த நிலையில் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகியுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் கட்சியில் இருந்து விலகியுள்ளதாக மைத்திரிபால சிறிசேன அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.