கடந்த 20ஆம் திகதி தோட்டக் காணியை துப்பரவு செய்த போது மனித எச்சங்கள் காணப்படுவதாக இலங்கைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.அதனையடுத்து அங்கு சென்ற இலங்கைத் தடயவியல் பொலிஸார், குறித்த காணியைப் பார்வையிட்டதுடன் முல்லைத்தீவு நீதிமன்றத்தின் அனுமதியோடு மனிதப் புதைகுழி இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இடத்தை அகழ்வு செய்தனர்.
நீதிபதி எஸ். லெனின்குமார் முன்னிலையில் உரிய அதிகாரிகளின் ஒத்துழைப்போடு தடயவியல் பொலிஸார் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டனர். சட்ட மருத்துவ அதிகாரி றெகான்கேரத், சட்ட வைத்திய நிபுணர் இளங்கோவன், காணாமல் போனோர் அலுவலக ஆணையாளர்கள் மிராட்றஹீம், க.வேந்தன்,பிரதீபா புண்ணியமூர்த்தி ஆகியோரும் மீட்புப் பணியை நேரில் பார்வையிட்டனர்
குறித்த காணியில் இருந்து ஏற்கனவே எடுக்கப்பட்ட மண் கொட்டப்பட்டுள்ள இடத்திலும், மண்ணை வெட்டிய இடத்திலும் காணப்பட்ட மனித எச்சங்கள் எடுக்கப்பட்டன. ஐம்பது வயதுடைய ஆண் ஒருவரின் மனித எலும்புகள், எச்சங்கள் மீட்கப்பட்டதாகத் தடயவியல் பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிமன்ற அனுமதியோடு மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி இடம்பெறுவதால் மேலதிக விபரங்களை நீதிமன்ற அனுமதியின்றி வழங்க முடியாதெனவும் பொலிஸார் கூறினர். மேலதிக விசாரணையின் பின்னர் மேலும் அகழ்வுப் பணி இடம்பெறுமெனக் கூறப்படுகின்றது.
கண்டெடுக்கப்பட்ட இந்த மனித எச்சங்கள் போர்க்காலத்துக்குரியதா என்பது குறித்துத் தடயவியல் பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர். அகழ்வுப் பணியாளர்கள் இது எந்தக்காலத்துக்குரியதென ஆராய்கின்றனர்.