போர்க்காலத்தில் இவருடைய பணி முக்கியமானதாக இருந்தது. அந்தக் காலப் பகுதியிலேயே ஈழநாடு வாரமஞ்சரியின் ஆசிரியராகவும் பெருமாள் பதவி வகித்திருந்தார்.
பிற்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் ஆலோசகராகவும் பெருமாள் பணிபுரிந்தார். சுமார் ஐம்பத்து ஐந்து வருடங்கள் பத்திரிகைத் துறையில் பணியாற்றிய பெருமாள், 2017 ஆண்டு ஓய்வு பெற்ற பின்னரும் கூட ஊடகத்துறை மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்கி வந்தார்.
குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கை நெறி மாணவர்களுக்குத் தன்னுடைய அனுபவங்களை இவர் பகிர்ந்து வந்தார். யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் அவரைச் சந்திப்பது வழமையாகும்.
இதேவேளை, பெருமாளின் விருப்பப்படி அவரது புகழுடல் சமயச் சடங்குகளின் பின்னர் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களின் ஆய்வுக்காக உறவினர்களினால் கையளிக்கப்படவுள்ளது.
தற்போது ஊடகவியலாளர்கள் உட்பட பலரும் அவருடைய இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.