ஆனால் அது தொடர்பாகக் கோட்டாபய ராஜபக்ச நேரடியாகச் செய்தியாளர் முன்னிலையில் எந்தவொரு மறுப்பும் தெரிவித்திருக்கவில்லை. ஏனெனில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாதென்பதற்குரிய விளக்கம் மோடிக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் கோட்டாபய ராஜபக்ச அவ்வாறு கூறிய பதிலை நரேந்திரமோடி வெளிப்படுத்தாமல், சந்திப்பின்போது 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து அழுத்தம் கொடுத்ததாகத் தெரிவித்தாரென புதுடில்லியில் உள்ள இலங்கைத் தூதரகத் தகவல்கள் கூறுகின்றன.
சுமார் ஒரு மணிநேரத்துக்கும் அதிகமாக மொழிபெயர்பாளர் ஒருவருடன் மாத்திரம் இடம்பெற்ற சந்திப்பில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான தனது நிலைப்பாட்டை கோட்டாபய ராஜபக்ச நரேந்திரமோடியிடம் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினாலும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் உள்ளிட்ட அதிகாரகள் எதுவுமே மாகாணங்களுக்குப் பகிரப்படாதென்றும் கோட்டாபய ராஜபக்ச நேரடியாகவே கூறியிருக்கிறார். எந்தவொரு உறுதிமொழியையும் கோட்டாபய ராஜபக்ச நரேந்திரமோடிக்குக் கொடுக்கவில்லை.
மாறாக அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்தப்படும் எனவும் அதற்கு இந்தியா உதவியளிக்க முடியும் என்று மாத்திரமே கோட்டாபய ராஜபக்ச கூறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தோ- பசுபிக் பிராந்திய நலன்களில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை செயற்படாதென்றும் அம்பாந்தோட்டை. திருகோணமலைத் துறைமுகங்களுக்கு எந்த நாடுகளின் கப்பல்களும் வந்து செல்ல முடியுமெனவும் கோட்டாபய ராஜபக்ச நேரடியாகவே நரேந்திரமோடியிடம் கூறியிருக்கிறார்.
இந்தியாவில் இருந்து வெளிவரும் ஹிந்துப் பத்திரிகைக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் கூட 13 ஆவது திருத்தச் சட்டத்தை சிங்கள மக்களின் விருப்பத்துக்கு மாறாக நடைமுறைப்படுத்த முடியாதென்றும் கோட்டாபய ராஜபக்ச கூறியிருக்கிறார்.
ஆனால் நரேந்திரமோடியிடம் நேரடியாகவே மறுப்புத் தெரிவித்தமை தொடர்பாக கோட்டாபய ராஜபக்ச அந்த நேர்காணல்களில் எதுவுமே கூறவில்லை. ஏனெனில் அவ்வாறு வெளிப்படுத்த வேண்டியதொரு அவசியம் கோட்டாபய ராஜபக்சவுக்கு இல்லையெனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.
சிங்கள மக்களின் விருப்பத்துக்கு மாறாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாதென நரேந்திரமோடியிடம கோட்டாபய ராஜபக்ச கூறியதைப் பகிரங்கமாக செயதிப் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் கூறுவது அரசியல் நாகரிகமல்ல என்று கருதியே கோட்டாபய ராஜபக்ச அதனைத் தவிர்த்திருக்கலாமென கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால் கோட்டாபய ராஜபக்ச தனது முகத்துக்கு நேரே மறுத்ததை வெளிப்படுத்தாமல், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்று கோட்டாபய ராஜபக்சவிடம் தான் வலியுறுத்தியதாக நரேந்திரமோடி புதுடில்லியில் செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவித்தமை எந்தவகையான அரசியல் நாகரிகம் என்ற கேள்விகளும் எழாமலில்லை.
ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களை இந்தியா தமது பூகோள அரசியல் நலன்சார்ந்து ஓர் ஆயுதமாகவே இலங்கைச் சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்துகிறது. ஆனால் நேர்மையான நோக்கில் இந்தியா ஒருபோதும் செயற்பட்டதில்லை என்பதை ஈழத் தமிழர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென அரசியல் விமர்சகர்கள் ஏலவே கூறியிருப்பதையும் ஞாபகப்படுத்த வேண்டும்.
இந்தியாவில் ஜம்முக்காஸ்மிர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரங்களை நரேந்திரமோடி தனது இரண்டாவது பதவிக் காலத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் தன்னிச்சையாகவே ரத்துச் செய்தவர். ஆகவே ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென எந்த முகத்தோடு கோட்டாபய ராஜபக்சவிடம் மோடி கேட்டிருப்பார் என்ற கேள்விகளும் உண்டு.
கோட்டாபய ராஜபக்ச கூட தனது மனதுக்குள்ளேனும் அவ்வாறு நினைத்திருக்கக் கூடும். எனவே இந்த 13 ஆவது திருத்தச் சட்ட விளையாட்டு இந்தியாவின் நலன் சார்ந்ததே என்று கோட்டாபய ராஜபக்ச கூட எந்தவிதமான அச்சமுமின்றி தனது மனதுக்குள் நினைத்திருப்பார். சிரித்துமிருப்பார்.
இலங்கை சீனாவிடம் முழுமையாகச் சென்றுவிடக் கூடாது. இந்தியாவைக் கடந்து அமெரிக்காவோடு நேரடியாக நட்புக்கொள்ளவும் கூடாதென்ற ஒரேயொரு நோக்கில் இந்திரா காந்திகாலத்தில் இருந்தே இந்தியா செயற்படுகின்றது.
ஈழத் தமிழர்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தை நியாயப்படுத்துவது போன்று அல்லது அனுதாபமாக வெளிப்படுத்தி அதனை மூலதனமாக்கி முற்று முழுதாக தமது பிராந்திய அரசியல் நலன்களை மாத்திரமே இந்தியா வளர்த்துக் கொண்டது என்பது வரலாறு.
இந்தியாவின் நாகரீகமற்ற இந்த அரசியல் சாணக்கியத்தை 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் கூட தமிழரசுக் கட்சி புரிந்துகொண்டதாக இல்லை.
அதேவேளை, சீனாவின் இலங்கைக்கான முன்னாள் தூதுவர் வு ஜியாங்காவோ (Wu Jianghao) விசேட பிரதிநிதியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்புக்கு வந்துள்ளார்.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு வழங்கும் 99 வருட குத்தகைக்கான ஒப்பந்தத்தை ரத்துச் செய்யாமல் மீளப் புதுப்பிப்பது குறித்து இன்று திங்கட்கிழமை பேசியிருக்கிறார். ஆனால் அது பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்று கோட்டாபய ராஜபக்ச நேரடியாகக் கூறியதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
இருந்தாலும் பூகோள அரசியல் நிலைமைகளுக்கு ஏற்ப அம்பாந்தோட்டைத் துறைமுக ஒப்பந்த விடயத்தில் எதிர்காலத்தில் சில மாற்றங்களை கோட்டாபய ராஜபக்ச செய்யக் கூடும். எனினும் ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியா சொல்வதை கோட்டாபய ராஜபக்ச இப்ப மறுத்தாலும் பின்னர் ஏதோவொரு காலத்தில் செய்வார் அல்லது மாற்றம் வரும் என்ற பேச்சுக்கு இடமிருக்குமா?
இனப்பிரச்சினைத் தீர்வுக்காக 13 ஆவது திருத்தச் சட்டத்தைத் தும்புத் தடியாலும் கூடத் தொட்டுப்பார்க்க முடியாதெனச் சம்பந்தன், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோதே இலங்கை நாடாளுமன்றத்தில் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் கூறியிருந்தார் என்பது வேறு கதை.