வடமாகாணம்

யாழ் வடமராட்சிக் கிழக்கில் சட்டவிரோத மண் அகழ்வு இடத்தை மக்கள் அடையாளப்படுத்தினர்

மண் வளத்தைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம்
பதிப்பு: 2019 டிச. 22 22:44
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 23 23:15
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாக மக்கள் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தி வரும் நிலையில், சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகளைத் தடுப்பதற்குரிய ஏற்பாடுகள் எதுவுமே செய்யப்படவில்லை. இது தொடர்பாக தமிழ்ப் பிரதிநிதிகள் சிலர் ஏற்கனவே எடுத்துக் கூறியிருந்தனர். ஆனாலும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் சிலர் இவ்வாறான சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகளில் இலங்கைப் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் செயற்படுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
 
இந்த நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மணல் வளம் மிகவும் சுதந்திரமான முறையில் சூறையாடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மண் வளத்தைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.

இன்று முற்பகல் 9.30க்கு வடமராட்சிக் கிழக்கில் திரண்ட மக்கள் சட்டத்துக்கு மாறாக மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களை அடையாளப்படுத்தினர். இலங்கைப் பொலிஸார் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உள்ளுரில் உள்ள இளைஞர்கள் சிலரை ஊக்குவித்தும் தென்பகுதியில் இருந்து வரவழைத்தும் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறியுள்ளனர்.

தாயகப் பிரதேசங்களில் மணல் வளம் சூறையாடப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரும் மனு ஒன்று வடமராட்சி கிழக்கு பிரதேசச் செயலக அதிகாரியொருவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.