தமிழ் பேசும் மக்களின் தாயகத்திலுள்ள

திருகோணமலைத் துறைமுகத்தை ஐந்து வருட குத்தகைக்கு அமெரிக்காவுக்கு வழங்க உடன்படிக்கையா?

கோட்டாபயவை ஜனாதிபதியாக்குவதற்குப் பாடுபட்ட தேசியப் பற்றுள்ள தேசிய இயக்கம் அம்பலப்படுத்தியது
பதிப்பு: 2021 ஜூலை 12 23:03
புலம்: திருகோணமலை, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 15 21:31
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் திருகோணமலை துறைமுகத்தை 3000 மில்லியன் டொலர்களுக்கு அமெரிக்காவுக்கு ஐந்து வருட குத்தகை என்கிற அடிப்படையில் வழங்க இலங்கை அரசாங்கம் இணக்கம் வெளியிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்துக் கொழும்பில் உள்ள உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் இலங்கை அரசாங்கம் இதுவரை எதுவுமே கூறவில்லை. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் சீனாவை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தோ பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உத்திகளில் ஒன்றாகவே திருகோணமலைத் துறைமுகத்தை அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திடம் இருந்து குத்தகைக்கு எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
 
பசில் ராஜபக்ச அமெரிக்காவுக்குச் சென்றிருந்த போதே இது குறித்த பேச்சுக்கள் இடம்பெற்றதாகவும் கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. பசில் ராஜபக்ச கடந்த வாரம் நிதியமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

இந்தவொரு நிலையிலேயே கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதில் பெரும் பங்காற்றிய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் திருகோணமலைத் துறைமுகத்தை அமெரிக்காவுக்குக் குத்தகைக்குக் கொடுக்கவுள்ள தகவலை வெளியிட்டுள்ளது.

திருகோணமலை துறைமுகத்தை வைத்து இலங்கை அரசாங்கம் செய்யவுள்ள திரைமறைவிலான வர்த்தக உடன்படிக்கை ஒன்றை இந்த அறிக்கை ஊடாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் வசந்த பண்டார அம்பலப்படுத்தியுள்ளார்.

தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமொன்றினால் 3000 அமெரிக்க டொலர் முதலீட்டுப் பெறுமதியாக இந்த உடன்படிக்கை செய்யப்படவுள்ளது என்றும் அவர் இன்று திங்கட் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

திருகோணமலை துறைமுகத்திற்கு அருகில் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தை முன்னெடுக்கவே அமெரிக்க நிறுவனம் முன்வந்திருப்பதாகவும் வசந்த பண்டார தெரிவிக்கின்றார்.

இலங்கை அரசாங்கம் செய்துகொள்ள உத்தேசித்துள்ள உடன்படிக்கையானது ரணில்-மைத்திரி தலைமையிலான அரசாங்கம் செய்துகொள்ளவிருந்த எம்.சி.சி உடன்படிக்கையை விடப் பயங்கரமானது என்று எச்சரித்துள்ளார்.

அதனூடாக, 33 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு அமெரிக்கா வசமாகப் போவதாகவும், அந்தக் காணிகளில் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கே முதலீட்டு வாய்ப்பு வழங்கப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தகத்தில் ஈடுபடும் நோக்கில், அமெரிக்கா தமது படைகளை அங்கு அழைத்துவராது என்பதை உறுதிபடக் கூற முடியாது என்றும் தென்னிலங்கையில் செயற்படுகின்ற தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளரான வசந்த பண்டா மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த மைத்திரி ரணில் அரசாங்கத்தின் காலத்தில் கைச்சாத்திடப்படவிருந்த எம்.சி.சி உடன்படிக்கை, அமுல்படுத்தப்பட்டால் இலங்கையில் உள்ள பெறுமதிமிக்க நிலப்பரப்பை அமெரிக்கா கொள்வனவு செய்துவிடும் என்ற அச்சத்தை இலங்கை மக்கள் மத்தியில் தற்போதைய ஆளுந்தரப்பு கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மக்கள் மத்தியில் உருவாக்கியிருந்தனர்.

குறிப்பாக அமெரிக்க உடன்படிக்கை அமுல்படுத்தப்பட்டால், பௌத்த மக்களுக்கு கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்குக்கூட பிரவேசிக்க முடியாமற் போய்விடும் என்றே ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்தவொரு நிலையிலேயே ராஜபக்ச அரசாங்கம் அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் திருகோணமலைத் துறைமுகத்தை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யவுள்ளதாகத் தேசியப் பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.