திருகோணமலையை அமெரிக்கா தலைமையில் இந்தியாவும் பங்கேற்கும் குவாட்டிற்குத் தாரைவார்ப்பதன் மூலம் புவிசார் அரசியலைக் கையாண்டு சர்வதேச விசாரணை முனைப்புகளில் இருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ளும் இலங்கை அரசின் இராஜதந்திர நகர்வாக இது இருக்கக்கூடும் என்ற ஊகம் வலுத்துள்ளது.
அதேவேளை இந்த நகர்வில் இந்தியாவின் வகிபாகம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அமெரிக்காவுக்குப் பயணமாகியிருந்த பசில் ராஜபக்ஷவை உலகத் தமிழர் பேரவை என்ற பெயரில் இயங்கும் புலம்பெயர் தமிழ்க் குழு ஒன்றுடன் இரகசிய உடன்பாடு ஒன்றை எட்டவைக்கச் செய்யும் வகையில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் முயன்றன என்பதை ஆழமாக உறுதிப்படுத்திய பின்னர் அமெரிக்காவானது பசில் ராஜபக்ஷ ஊடாகத் தமிழர் தரப்புடன் இரகசியப் பேச்சு நகர்வொன்றை மேற்கொள்கிறதா என்ற தலைப்பில் ஜூன் 20ம் திகதியன்று கூர்மை ஆசிரியபீடம் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது.
அந்தக் கட்டுரை வெளியிடப்படமுன்னர் முறைப்படி, சட்டத்தரணி சுமந்திரனையும் இலங்கைத் தீவில் இருக்கும் புலம்பெயர் அமைப்பின் அறியப்பட்ட தலைவரான இமானுவல் அடிகளாரையும் தொடர்புகொண்டு குறித்த தரப்புகளின் கூற்றுகளும் அதில் உள்வாங்கப்பட்டிருந்தன.
அக் கட்டுரையில் வெளிவந்த தகவல்கள் ஆழமான அரசியல் சர்ச்சைகளை மேற்படி தரப்புகளின் உள்வட்டாரங்களில் ஏற்படுத்திவிட்டிருந்தன. இரகசியமாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் பின்னணி வெளிவந்தமையால் மிகுந்த நெருக்கடி குறித்த தரப்புகளுக்கு ஏற்படலாயிற்று.
அந்தத் தகவல் எவ்வாறு வெளியே தெரியவந்தது என்று கடும் விசனத்துக்குள்ளாகிய பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் கொழும்பில் இருந்து கனடா வரை தனது தொடர்புகளைக் கேள்விக்குள்ளாக்கினார். இமானுவல் அடிகளாரும் அழுத்தத்துக்கு ஆளாகினார். இந்திய இராஜதந்திர வட்டாரங்களும் இந்தத் தகவல் குறித்து ஆராய்ந்தவாறு கூர்மை ஆசிரியபீடத்தையும் தொடர்புகொண்டிருந்தன.
இந்தச் சூழலிற்தான், மேற்குறித்த அமெரிக்க-பசில் நகர்வின் அடுத்த கட்டம் மேற்குலகில் இருந்து கொழும்பு நோக்கி, அதுவும் அமெரிக்கத் தூதுவரின் முன்னிலையில், இரகசியமாகக் கடந்த புதனன்று நகர ஆரம்பித்திருக்கிறது.
இதில் அமெரிக்கத் தூதுவரின் பங்கையும் சந்திப்பு நடந்த இடத்தையும் நாளையும் குறிப்பிடாமல் வீரகேசரி தலைப்புச் செய்தி ஒன்றைக் கடந்த ஞாயிறன்று வெளியிட்டிருந்தது. அந்தச் செய்தி வீரகேசரியில் வெளியாகிச் சில மணி நேரங்களுக்குள் கூர்மை செய்தித்தளம் அந்தக் கூட்டம் நடைபெற்றது அமெரிக்கத் தூதுவரின் முன்னிலையில் என்ற தகவலை வெளியிட்டிருந்தது.
இந்த வெளிப்படுத்தல் குறித்துக் கூட்டமைப்புத் தரப்பு விசனமடைந்திருக்கிறது என்பதை ஊடகர் வித்தியாதரனின் நாளேட்டின் ''இனி இது இரகசியம் அல்ல'' என்ற இன்றைய பத்தி வெளிப்படுத்திநிற்கிறது.
அது மட்டுமன்றி, இந்த நகர்வுக்குச் சமாந்தரமாக இந்தியாவுடன் ஒரு சந்திப்புக்கு சம்பந்தன் தயாராகி வருகிறார் என்ற செய்தியும், சம்பந்தனிடம் அனுமதிபெற்றே சுமந்திரன் அமெரிக்க நகர்வில் பங்கேற்றார் என்ற தகவலும் குறித்த பத்தியில் ''தெளிவு'' படுத்தப்படுகிறது.
பசிலோடு சந்திப்பதற்கான பூர்வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற தகவலைத் தெரியப்படுத்தவேண்டிய நேரம் வந்தாகிவிட்டது என்ற தேவை கூட்டமைப்புக்கு உருவாகியுள்ளது என்பதை வீரகேசரிச் செய்தி வெளிப்படுத்தும் அதேவேளை அமெரிக்காவின் பங்கு மிக நுட்பமாகவும் தீவிரமாகவும் மறைக்கப்படுகிறது. ஆனால், மறைப்புகளுக்கு அப்பால் நம்பகமான கசிவுகளும் தெளிவுபடுத்தல்களும் ஏற்படுத்தப்பட்டுவிடுகின்றன.
இந்த இக்கட்டான சூழலில் சுமந்திரன் அணியோடு நல்லுறவைப் பேணும் ஊடகமான காலைக்கதிர் அமெரிக்காவின் பங்கை எதேச்சையான, சர்வசாதராணமான ஒன்று போலச் சித்தரிக்க விழைகிறது என்ற விமர்சனம் தமிழ் ஊடக வட்டாரங்களில் புதன்கிழமை மாலை எழுந்துள்ளது.
இலங்கை ஒற்றையாட்சி அரசைப் பொறுத்தவரை ஜெனீவாவை மையம் கொண்ட மேற்கு மற்றும் இந்தியாவை உள்ளடக்கிய பூகோள அரசியலின் ஒரு பாகமாக விரியும் சர்வதேச மனித உரிமை சார் நெருக்கடிகளையும், அவற்றுக்கும் அப்பாற்பட்ட புலம்பெயர் ஈழத்தமிழர்களின் செயற்பாட்டுத் தளத்தில் தற்போது கெட்டியாகிவரும் இன அழிப்புக்கான சர்வதேச நீதி பற்றிய சுயாதீன நகர்வுகளையும் நீர்த்துப்போகச் செய்யும் நோக்குடன் செயற்படவேண்டிய நெருக்கடிநிலையும் அதற்குத் தோன்றியிருக்கிறது.
செப்ரம்பர் மாதம் ஜெனீவாவில் அடுத்த கட்ட மனித உரிமைச் சபையின் நடவடிக்கைகள் எவ்வாறிருக்க வேண்டும் என்ற கருத்தியற் தாக்கத்தை பிரித்தானியா தலைமையிலான மேற்கு அணி மேற்கொள்ளவிருக்கின்ற சூழலில் இந்த அமெரிக்க-பசில் நகர்வு தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.
சுமந்திரனின் இந்த நடவடிக்கைகளால் மீண்டும் இழுத்தடிப்பு, கால நீடிப்பு என்ற சிக்கல் எழ இருப்பதாகவும் இது குறித்து ரெலோ செல்வத்துடனும் புளொட் சித்தார்த்தனுடனும் கலந்து ஆலோசிக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னைநாள் வடமாகாண முதலமைச்சருமான நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் உள்ளகமாக சட்டத்தரணி சிறிகாந்தா மற்றும் தனது அணியில் அங்கம் வகிக்கும் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் ஆலோசகர்களிடம் செவ்வாய்க்கிழமையன்று கோரியிருப்பதாக அந்த அணியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதே போன்ற கரிசனையை சுரேஷ் பிரேமச்சந்திரனும் ஊடகங்களுக்கு வெளியிட்டிருக்கிறார்.
பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும் இது குறித்த தனது பதிவொன்றை முகநூலில் வெளியிட்டிருக்கிறார்.