கிழக்கு மாகாணம் ஒதுங்கியுள்ள நிலையில்

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள்- வெளிப்படுத்தப்பட்ட கூட்டுரிமையும் மறைக்கப்பட்ட அடையாளங்களும்

தனியார் காணிக்குள் சுடர் ஏற்றிய கஜேந்திரகுமார்- ஆரிய குளத்தில் மின் வெளிச்சம்
பதிப்பு: 2021 நவ. 30 09:20
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 01 20:35
main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும், கடந்த சனிக்கிழமை மாவீரர் நினைவேந்தல் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. பொது மக்களும் தமிழ்த் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளும் நிகழ்வுகளில் பங்கேற்றனர். இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மக்கள் துணிவோடு நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபட்டுத் தமது கூட்டுரிமையை வலியுத்தியிருக்கிறார்கள். ஆனால் சிவப்பு- மஞ்சள் நிறக் கொடி, கார்த்திகைப் பூ போன்ற மாவீரர் நாளுக்குரிய அடையாளங்கள் எதுவுமே பயன்படுத்தப்படவில்லை. சட்டப் பாதுகாப்போடு தமிழ்த் தேசியக் கட்சிகளின் சில பிரதிநிதிகள் இம்முறை நினைவேந்தல் நிகழ்வுகளைச் செய்து முடித்திருக்கிறார்கள் என்பதே இதன் வெளிப்பாடு.
 
தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கட்சிக் கொடிகளில் சிவப்பு- மஞ்சள் நிறம் இருக்கின்றது. ஆகவே கட்சிக் கொடியைக் கூட இவர்கள் ஏன் பயன்படுத்தவில்லை என்ற கேள்விகளும் உண்டு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வன்னிவிளாங்குளம், புதுக்குடியிருப்பு தேவிபுரம் பிரதேசங்களில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களைத் தவிர வேறெந்தவொரு துயிலும் இல்லங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இராணுவம் அனுமதிக்கவில்லை. அந்தத் துயிலும் இல்லங்களுக்கு முன்பாக இராணுவம் குவிக்கப்பட்டிருந்தது.

வன்னி விளாங்குளம், புதுக்குடியிருப்பு தேவிபுரம் பிரதேசங்களில் உள்ள இரண்டு மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு மாத்திரம், கெடுபிடிகளுக்குப் பின்னர் குறைந்தது ஐம்பது பேரை இராணுவம் அனுமதியளித்தது.

வன்னி விளாங்குளம் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ரெலோ இயக்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் பங்குபற்றினார். அங்கு சுடர்கள் ஏற்றப்பட்டன.

யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதியில் உள்ள வேலனை சாட்டிப் பிரதேசத்தில் உள்ள துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தச் சென்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஸ் உள்ளிட்ட சிலர் இராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஆனாலும் வாக்குவாதத்தின் பின்னர் இராணுவத் தடைகளையும் மீறி துயிலும் இல்லத்திற்குள் சுகாஸ் குழுவினர் சென்றுவிட்டனர். எனினும் சுடர் ஏற்ற அனுமதிக்கப்படாமல் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி இராணுவம் காவல் புரிந்தது. இராணுவம் துப்பாக்கிகளோடு புடை சூழ்ந்து நிற்க சுகாஸ் குழுவினர் அமைதியாகத் தரையில் அமர்ந்திருந்தனர்.

துப்பாக்கிகளோடு இராணுவம் புடைசூழ சுகாஸ் குழுவினர் அமைதியாகத் தரையில் அமர்ந்திருக்கும் படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவியிருந்தன. துணிவோடு முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் என்று அங்கிருந்தவர்கள் கூர்மைச் செய்தி இணையத்தளத்திற்குத் தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை தீருவில் பிரதேசத்தில் உள்ள குமரப்பா, புலேந்திரன் நினைவுத் தூபி வைக்கப்பட்டிருந்த துயிலும் இல்லத்தில நினைவேந்தல் இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியில் இடம்பெற்றிருக்கிறது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் வேலன் சுவாமிகள் ஆகியோர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டு கூட்டுரிமையை வெளிப்படுத்தியிருந்தனர். பெருமளவு மக்கள் கட்டம் கட்டமாக துயிலும் இலத்திற்குள் வந்து சுடர் ஏற்றினர்.

மைத்திரி- ரணில் அரசாங்கத்தின்போது யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை அதற்குரிய அடையாளங்களுடன் நடத்தி வந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் இம்முறை பருத்திதுறைக் கடற்கரையில் உள்ள தனியார் காணி ஒன்றில் நினைவேந்தல் நிகழ்வை நடத்தியிருக்கின்றனர்.

அந்தக் காணி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் சொந்தக் காணி என்று பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

கிழக்கு மாகாணம் நினைவேந்தல் நிகழ்வில் இருந்து முற்றாகாகவே ஒதுங்கியுள்ளது. ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் அம்பாறை மாவட்டத்திற்குச் சென்று ஏன் சுடர் ஏற்றவில்லை என்ற கேள்விகள் எழுகின்றன

இராணுவம் தடுக்க முற்பட்டபோது முன்னணியின் சட்ட ஆலோசகர் காண்டீபன் இந்த எல்லைக்குள் வரக்கூடாதெனக் கூறி இராணுவத்தை வெளியேற்றுகிறார். ஏனெனில் அது தனியார் காணி என்பதால், அந்தக் காணிக்குள் நடத்தப்படும் எந்தவொரு நிகழ்வுகளையும் இராணுவம் தடுக்க முடியாது என்பதே அதன் சட்ட விளக்கமாகும்.

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து,ரவிகரன் நந்திக்கடலில் கடலுக்குள் சிவப்பு மஞ்சல் பூக்களைத் தூவி வணக்க நிகழ்வுகளில் ஈடுபட்டார்.

முன்னாள் வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் சுடர் ஏற்றினார். முல்லைத்தீவு கடற்கரையில் சுடர் ஏற்றுவதற்காகத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் இளைஞர் முன்னணியின் பொருளாளருமான பீற்றர் இளஞ்செழியன் அவரது மனைவி மற்றும் பலரும் சென்ற போது முல்லைத்தீவு கடற்கரையில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர். அவருடைய மனைவியைத் தள்ளி விழுத்தினர்.

இதனால், குறித்த இடத்தில் பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் வாய்த் தர்க்கம் எழுந்தது.

முல்லைத்தீவு கடற்கரையில் இராணுவம் பொலிசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் சிறிது நேரத்தில் அந்த இடத்திலேயே இராணுவத்தினர் மோட்டார் சைக்கிள்களில் வந்து மக்களை அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டனர்.

ஆனாலும் தடைகளுக்கு மத்தியிலும் குறித்த இடத்திலிருந்து சுடர்களை தாங்கியவாறு முல்லைத்தீவு கடற்கரைக்குச் சென்ற பொதுமக்கள் முல்லைத்தீவு கடற்கரையில் சரியாக ஆறு மணிக்குப் பொதுச் சுடர் ஏற்றினர். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தினர்.

தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் எஸ்.சிறிதரனின் கிளிநொச்சியில் உள்ள வீட்டில் அவருடைய உறவினர்கள் சுடர் ஏற்றி வணக்க நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்தனர். அன்றைய நாள் இலங்கை நாடாளுமன்றத்தில் சிறிதரன் மாவீரர் நினைவேந்தல் குறித்து உரையாற்றியிருக்கிறார். இதனால் சபையில் வாதப்பிரதிவாதங்களும் எழுந்தன. (சில நாட்களுக்கு முன்னர் செல்வராஜா கஜேந்திரன் உரையாற்றியபோது மேதகு பிரபாகரன் என விழித்துப் பேசியதால் சபையில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன.)

யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தனது வீட்டில் சிவப்பு- மஞ்சல் கொடியேற்றி நினைவேந்தல் நிகழ்வைச் செய்திருக்கிறார். (இவர் மாத்திரமே சிவப்பு- மஞ்சள் கொடியைப் பயன்படுத்தியிருக்கிறார்)

அதேவேளை, யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணண், யாழ் மத்திய பகுதியில் உள்ள ஆரிய குளத்தில் 27 மின் விளக்குகளை ஏற்றி அமைதியான முறையில் அந்த நிகழ்வை செய்திருக்கிறார். குளத்தைச் சுற்றி வாகை மரங்களும் நாட்டப்பட்டுள்ளன.

அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக்குழுவை உருவாக்கி அந்தப் பொதுக் குழுவின் செயற்பாடுகள் மூலம் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தியிருக்கலாம்

புனரமைக்கப்பட்ட ஆரியகுளத்திற்கு மின் பாய்ச்சும் நிகழ்வு என்று தலைப்பிட்டிருந்தாலும், மாவீரர் நினைவேந்தல் நேரத்தில் செய்யப்பட்டமை வரவேற்கப்படுகின்றது. ஆரியகுளம் புனரமைப்புத் தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கும் அவர் முற்றுப் புள்ளியிட்டிருக்கிறார்.

மாவீரர் நினைவேந்தல்களை அதற்குரிய அடையாளங்களைத் தவிர்த்து நடத்த முடியுமென முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் யாழ் நீதிமன்றம் அவ்வாறான உத்தரவைப் பிறப்பிக்கவில்லை. அப்படியிருந்தும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் மாவீரர் நாளுக்குரிய அடையாளங்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.

தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கட்சிக் கொடிகளில் சிவப்பு- மஞ்சள் நிறம் இருக்கின்றது. ஆகவே கட்சிக் கொடியைக் கூட இவர்கள் ஏன் பயன்படுத்தவில்லை என்ற கேள்விகளும் உண்டு.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வில் இலங்கையை மேலும் பாதுகாக்கக்கூடிய ஏற்பாடுகளில் அரசாங்கம் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றது. இதனால் இம்முறை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் பெருமளவு கெடுபிடிகளைச் செய்ய அரசாங்கம் விரும்பியிருக்கவில்லை என்பது நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் வெளிப்பட்டுள்ளன.

இராணுவம் வழமைபோன்று கெடுபிடிகளில் ஈடுபட்டாலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் கைது செய்ய முற்படவில்லை அப்படிக் கைது செய்யப்பட்டிருந்தால், அது அடுத்தகட்ட சாத்வீகப் போராட்டத்துக்கான உந்துதலாக மாறிவிடுமோ என்ற ஒரு அச்சம் அரசாங்கத்திடம் இல்லாமலில்லை.

ஆனாலும் தொடர்ந்து அச்சுறுத்துவோம் என்ற அடையாளத்துக்காகவே பீற்றர் இளம் செழியன் மாத்திரம் கைது செய்யப்பட்டுப் பின்னா் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கோட்டாபய ராஜபக்ச தனது ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பத்து அம்சக் கொள்கை ஒன்றைப் பிரகடனம் செய்திருந்தார்.

அதில் முதலாவதாகத் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை என்றும் பத்தாவதாக சட்டத்தை மதிக்கக் கூடிய ஒழுக்க நெறியுடைய குணநலம் கொண்ட சமூகத்தை உருவாக்குதல் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஈழத்தமிழர்களைத் தனது சிங்களப் பெரும்பான்மைப் பொலிஸார் மற்றும் முப்படைகளூடாகவும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் சட்டங்களை மதிப்பவர்களாக ஒழுக்கப்படுத்தல் (disciplining) என்பதும் அதன் உட் பொருளாகும்.

தான் பதவிக்கு வந்தபோது சொன்ன மேற்குறித்த விடயத்தையே 2019/20 ஆம் ஆண்டு நவம்பர் மாதங்களில் நிறுவ முற்பட்டிருந்தார். ஆனால் இந்த ஆண்டு மாவீரர் நினைவேந்தலுக்குரிய அடையாளங்கள் தவிர்க்கப்பட்டமை, கோட்டாபய ராஜபக்சவின் ஒழங்குபடுத்தலுக்குள் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் தாமாகவே அடங்கிவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டக் கோவை (PTA), பொலிஸ் சட்டக் கோவை (Police Ordinance), 2007ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சமவாயச் சட்டத்தின் (ICCPR Act) பிரிவுகள் போன்றவற்றையும் ஒன்றுடன் ஒன்று தொடுத்து தனது ஒழுக்கப்படுத்தலை கோட்டாபய நடைமுறைப்படுத்தியிருக்கிறார்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், ஈழத்தமிழர்கள் தமது மாவீரர்களுக்கான கூட்டு நினைவேந்தலைப் பகிரங்க நிகழ்வுகளாக முன்னெடுக்கக்கூடாது என்பது இலங்கை ஒற்றையாட்சி அரசின் நிலைப்பாடாக மாறியுள்ளது.

மாவீரர் நினைவேந்தலுக்குரிய குறியீடுகள் இந்த ஆண்டு தவிர்க்கப்பட்டமை அந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறது. ஒற்றையாட்சி அரசு தனது அரசியல் சட்டங்களை அதீதமாகப் பயன்படுத்துவதே அதற்குக் காரணமா என்பதைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் பகிரங்கப்படுத்த வேண்டும்.

கோட்டாபய ராஜபக்ச தனது ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சட்டங்களை மதித்து ஒழுக்கப்படுத்தல் (disciplining) உள்ளிட்ட பத்து அம்சக் கொள்கை ஒன்றைப் பிரகடனம் செய்திருந்தார்

அதேவேளை, கிழக்கு மாகாணம் நினைவேந்தல் நிகழ்வில் இருந்து முற்காகவே ஒதுங்கியுள்ளது. ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் அம்பாறை மாவட்டத்திற்குச் சென்று ஏன் சுடர் ஏற்றவில்லை என்ற கேள்விகள் எழுகின்றன.

அம்பாறை மாவட்டத்துக்கான முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினராக செல்வராஜா கஜேந்திரன் செயற்படுகிறாரென அறிவித்தது முன்னணிதானே?

அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக்குழுவை உருவாக்கி அந்தப் பொதுக் குழுவின் செயற்பாடுகள் மூலம் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தியிருக்கலாம்.

தமிழ்த் தேசியக் கட்சிகள், ஒரு தேசமாக எழுந்து தேர்தல் அரசியலைக் கடந்து ஒரே குரலில் ஒரே தேசமாகச் செயற்படுவதற்கான காலம் வரும் என்று இனிமேல் நம்புவதற்கில்லை. ஆகவே சிவில் சமூக அமைப்புகள் எழுச்சி பெற வேண்டுமென்பதே காலத்தின் கட்டாயமாகின்றது.