இலங்கை- ரஷிய

இராணுவ உறவின் முக்கியத்துவம்- செயலணிக்குழுக்களை அமைத்துச் செயற்பட அமைச்சரவை அங்கீகாரம்

ஏனைய நாடுகளின் உறவுகளை பாதிக்கும் என கூட்டு எதிர்க்கட்சி விமர்சனம்
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 10 14:33
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 10 15:24
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கைக்கும் ரஷியாவுக்கும் இடையிலான இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான கூட்டுச் செயலணிக் குழுக்களை அமைப்பதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முப்படைகளின் தளபதி மற்றும் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான அங்கீhரத்தைப் பெறும் யோசனை ஒன்றை, சென்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்தார். இரு நாடுகளுக்கிடையேயும் உருவாக்கப்படவுள்ள இந்தக் கூட்டுச் செயலணிக் குழுக்களின் செயற்பாடுகள், நிபந்தனைகள் குறித்து ஆவணம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கான அனுமதியை இலங்கை அமைச்சரவை வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனரட்ன கூறியுள்ளார்.
 
இலங்கை, ரஷியா ஆகிய இரு நாடுகளும் 2004 ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்பாட்டுக்கு அமைவாக இந்தக் கூட்டு செயலணிக் குழுக்களை உருவாக்க மைத்திரி- ரணில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தச் செயலணிக்குழுக்களின் செயற்பாடுகள் இலங்கை இராணுவத்தின் தொழில் நுட்பத் தரத்தை பேணும் என்றும் இலங்கை இராணுவச் சேவை விஸ்த்தரப்புக்கு உதவியாக அமையும் எனவும் அமைச்சர் ராஜத சேனரட்ன கூறியுள்ளார்.

அதேவேளை, இந்தச் செயலணிக்குழுக்களை அமைப்பதன் மூலம் இலங்கை இராணுவத்தின் தரம் குறைவடையும் எனவும். ரஷிய இராணுவத்தின் மேலாதிக்கம் இலங்கையில் அதிகரிக்கும் எனவும் ஜே.வி.பி.குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கை இராணுவத்தின் தொழில் நுட்பத்தை மேற்படுத்தும் இந்தச் செயலணிக்குழுக்களின் செயற்பாடுகளினால், இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் டளஸ் அழகபெருமா கூறியுள்ளார்.

சீனா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இருந்தும் இலங்கை இராணுவத்திற்குத் தேவையான தொழில் நுட்ப உதவிகளை இலங்கை அரசாங்கம் பெற்று வருகின்றது.

மஹிந்த ராஜபக்ச அரசாங்கம், இலங்கை முப்படைகளையும் எவ்வாறு வெளிநாடுகளின் உதவியுட்ன பலப்படுத்தியதோ அதேபேன்ற செயற்திட்டங்களை மைத்திரி- ரணில் அரசாங்கமும் நடைமுறைப்படுத்தி வருவதாக அவதானிகள் கூறுகின்றனர்.

2009 ஆம் ஆண்டு மே மாத்திற்குப் பின்னரான சூழலிலும் தமிழர் தாயகமான வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டும், புதிய மற்றும் நிரந்தர படை முகாம்கள் அமைக்கப்பட்டும் வரும் நிலையிலும் இலங்கை- ரஷிய இராணுவ உறவு குறித்து தமிழ்த் தரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது.