உலக அரசியல் ஒழுங்கில் சடுதியான மாற்றங்களை ஏற்படுத்துகின்ற

உக்ரெய்ன் போருக்குப் பின்னரான ஈழத்தமிழர் புவிசார் அரசியலும், ரசியா-சீனா தொடர்பான இந்திய வில்லங்கமும்

அமெரிக்காவின் பக்கம் மீண்டும் இலங்கை. தமிழ்நாடும் புலம்பெயர் சமூகமும் மேலும் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம்
பதிப்பு: 2022 மார்ச் 22 20:59
புதுப்பிப்பு: மார்ச் 25 21:05
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
1980களில் பனிப்போர் காலத்தில் இந்தியா எப்படி ரசியாவுடன் மறைமுகப் புரிந்துணர்வைப் பேணியதோ, அதேபோன்று விரும்பியோ விரும்பாமலோ ரசியாவுடனும் ரசியா ஊடாகச் சீனாவுடனும் இராஜந்திர உறவைப் பேண வேண்டிய நிலையை இந்தியாவுக்கு உக்ரெயன் போர் ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இதனால் இலங்கை அமெரிக்காவின் பக்கம் செல்லும் நிலையும் ஏற்படலாம். ஆகவே ஈழத்தமிழர்கள் தமது அதி உச்சக் கோரிக்கையை இந்தியாவிடம் கூட்டாக முன்வைக்க வேண்டியதொரு காலகட்டத்தையே உக்ரெயன் போரக்குப் பின்னரான சூழல் உருவாக்கியுள்ளதை உணர்ந்துகொள்ள வேண்டும். எந்தவிதமான ஐயத்துக்கும் இடமின்றித் தமது கோரிக்கைகளைத் தெளிவாக முன்வைக்க வேண்டிய பொறுப்பை கருத்துருவாக்கிகள், சிவில் சமூக அமைப்புகள் விரைந்து கையாளவேண்டும்.
 
உக்ரெய்ன் போரில் சீனா ரசியாவுக்கு ஆதரவாகச் செயற்படுகின்ற தன்மைகளும், பொருளாதார ரீதியாக சீனா ரசியாவுக்கு ஒத்துழைக்கின்ற முறைகளும் அமெரிக்காவுக்குச் சிக்கலை ஏற்படுத்துகின்றன. அத்துடன் ரசிய, சீனா என்ற அணிக்குள் இந்தியாவும் நுழைந்துவிடுமோ என்றொரு அச்சம் அமெரிக்காவுக்கு எழுந்துள்ளது

தமிழ்த்தேசியக் கட்சிகள் எடுக்கும் நடவடிக்கைகள் பிளவுகளையே உருவாக்கும் என்பதால், அரசியல் கட்சிகளைத் தாண்டிப் பொது அமைப்புகள் இப் பொறுப்பைச் செயற்படுத்த வேண்டும் என்பதை உக்ரெயென் போருக்குப் பின்னரான சூழல் உணர்த்தியிருக்கின்றது.

வடக்குக் கிழக்கு தாயகப் பிரதேசங்களில் உள்ள ஈழத்தமிழ் அமைப்புகள் ஐயுறவின்றி கோரிக்கைகளை முன்வைக்கும்போது, தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் சமூகம் இன்னும் கூடுதலான அதி உச்சக் கோரிக்கைகளை முன்வைத்து அழுத்தம் கொடுத்தால் அது இன்னமும் அர்த்தமுள்ளதாகவே மாறும்.

இவ்வாறு ஒருமித்த குரலில் கூட்டுக் கோரிக்கையாக இந்தியாவிடம் முன்வைப்பதை இலங்கை தடுக்கவும் முற்படும். இந்தியாவிடம் தமிழர்கள் கூட்டாகத் தமக்குரிய அரசியல் கோரிக்கையை முன்வைத்துவிடக்கூடாது என்பதிலேயே இலங்கை மற்றும் வல்லரசுக் சக்திகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

குறிப்பாக 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், தமிழ் நாடு, புலம்பெயர் சமூகம் ஆகியவற்றுக்கிடையேயான பிளவுகளை இலங்கையும் வல்லரசு சக்திகளும் கணிசமான அளவு உருவாக்கியுமுள்ளன.

தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை பிளவுபடுத்தும் நோக்கிலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான ரெலோ கட்சியின் மூலம் இலங்கை அரசாங்கத்தின் மறைமுக இணக்கத்தோடு இந்தியப் பிரதமர் மோடிக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தை அரசியல் தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாக்குவது குறித்து கடிதம் அனுப்புவது தொடர்பான நகர்வுகள் கடந்த வருட இறுதியில் முன்னெடுக்கப்பட்டுமிருந்தன.

அதற்குப் போட்டியாகவே சட்டத்தரணி சுமந்திரன் அணி அமெரிக்காவுக்குச் சென்றதுடன், இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலமான அதிகாரப் பரவலாக்கத்துக்கும் அதில் இருந்து ஒஸ்லோ உடன்படிக்கை ஊடான சமஸ்டித் தீர்வு நோக்கிச் செல்வது குறித்தும் சுமந்திரன் பதில் நகர்வுகளை மேற்கொண்டிருந்தார்.

ஆகவே செல்வம் - சுமந்திரன் என்ற இருமுனைப் போட்டிகள் உக்ரெய்ன் போருக்கு முன்னரே ஆரம்பித்திருந்தன.

உக்ரெய்ன் போருக்குப் பின்னரான புவிசார் அரசியல் சூழலில் இந்தப் போட்டி மேலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையை உக்ரெய்ன் போருக்கு முன், உக்ரெய்ன் போருக்குப் பின் என்று பிரித்துப் பார்த்து, ஈழத்தமிழர்கள் - தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் சமூகம் ஆகியவற்றுக்கிடையே பிளவுகள், போட்டிகள் எழாத வகையில் செயற்பட ஆரம்பிக்க வேண்டும்.

2009 இற்கு முன்பிருந்ததது போன்ற ஒற்றுமைச் செயற்பாட்டுத் தளத்தை உக்ரெய்ன் போருக்குப் பின்னரான பனிப்போர்க் காலத்தில் மீளவும் ஈழத்தமிழர்கள் புதுப்பிக்க வேண்டியதொரு கட்டாயம் உருவாகியுள்ளது.

அதற்கான ஏற்பாடுகளையே பொது அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும்.

உக்ரெய்ன் போருக்குப் பின்னரான சூழலில், இலங்கை அமெரிக்காவுடன் தனியாகச் செயற்பட ஆரம்பிக்கும் நிலையும் தோன்றலாம். இதை முடிந்த முடிபாகத் தற்போது கொள்ள முடியாதென்றாலும், எதிர்வரும் ஒரு சில கிழமைகளுக்குள் இது குறித்த நிலைமையை மேலும் தெளிவாக உய்த்து உணர முடியும்.

மீண்டும், 1980 களில் சோவியத் யூனியன் காலத்தில் ஏற்பட்டது போன்று இலங்கையை அச்சுறுத்தும் நோக்கில், தமிழர் தாயகப் பகுதிகளில் அசம்பாவிதங்களை உருவாக்கிச் சில தமிழ்த் தரப்புகளைத் தனக்கு ஏற்ற வகையில் இந்தியா தூண்டிப் பயன்படுத்திவிட்டுப் பின்னர் கைவிட்டுச் செல்லும் ஆபத்து உருவாகலாம். இது பட்டறிவு தரும் பாடம்.

ஆகவே இவ்வாறான முன் அனுபவம் உள்ள ஈழத்தமிழர்கள், தெளிவான முறையில் அரசியல் நிலைப்பாடுகளை மேற்கொண்டு இந்தியாவிடம் நேரடியாகவும் நேர்மையாகவும் அவற்றை எடுத்துரைக்க வேண்டும்.

மீண்டும், 1980 களில் சோவியத் யூனியன் காலத்தில் ஏற்பட்டது போன்று இலங்கையை அச்சுறுத்தும் நோக்கில், தமிழர் தாயகப் பகுதிகளில் அசம்பாவிதங்களை உருவாக்கிச் சில தமிழ்த் தரப்புகளைத் தனக்கு ஏற்ற வகையில் இந்தியா தூண்டிப் பயன்படுத்திவிட்டுப் பின்னர் கைவிட்டுச் செல்லும் ஆபத்து உருவாகலாம்

வரலாற்று ரீதியான தவறுகள், நியாயப்பாடுகள் போன்றவற்றைப் பகிரங்கமாக எடுத்துரைப்பதில் பின் நிற்கவும்கூடாது.

உக்ரெய்ன் போருக்கு முன்னர் 13 ஐ மீண்டும் அரசியல் தீர்வுக்கான பாதையின் ஆரம்பப் புள்ளியாக்கிக் கடிதம் அனுப்பப்பட்ட விவகாரம் என்பது வேறு. ஆனால், உக்ரெய்ன் போருக்குப் பின்னரான சூழலில், இந்தியாதான் ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்த விவகாரங்களைத் தீர்மானிக்கவுள்ளது என்பது புவிசார் அரசியற் பரப்பில் மேலும் உறுதியாகி வருவதால், அதற்கேற்ற தயாரிப்புகளைத் தமிழர் தரப்பு மீண்டுமொரு முறை மீளாய்வு செய்து ஆரம்பிக்க வேண்டியது காலத்தின் தேவையாகிறது.

ரசியாவுடன் நேரடியாகவும், ரசியா ஊடாகச் சீனாவுடன் மறைமுகமாகவும் நின்று கொண்டு, புதுடில்லி தனது வட இந்தியாவுக்கான புவிசார் அரசியலைக் கையாளுவதற்குரிய ஏதுநிலைகளே தென்படுகின்றன.

உக்ரெயன் போர் விவகாரத்தில் ரசியாவுடன் மறைமுக நட்பைப் பேணுவதன் மூலம் சீன அரசுடன் உள்ள எதிர்ப்பைச் சமாளிக்கலாம் என்ற சிந்தனை இந்தியாவிடம் தற்போது எழுந்துள்ளது.

ஆனால் புதுடில்லியின் தென் இந்தியா குறித்த புவிசார் அரசியல் என்பது இந்தோ- பசுபிக் கொள்கை என்பதுடன், அது இந்து சமுத்திரத்துடன் சம்மந்தப்பட்டதுமாகிறது.

ஆகவே தெற்கில் இந்து சமுத்திரத்தில் சீனாவைக் கையாள்வதற்கு இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் தேவைப்படும்.

இந்தியாவின் வடகிழக்கு எல்லையிலும், இந்தியாவின் மேற்கு எல்லையிலும் இருக்கும் பிரச்சினைகள் இந்தியாவுக்கு முக்கியமானவை. அதாவது ஒரு பக்கம் சீனா மறுபக்கம் பாகிஸ்தான்- காஷ்மீர் எல்லைகள் என்ற நில விவகாரங்களுக்குள் சீனா, ரசியா என்ற நில இணைப்புக் கொண்ட நாடுகள் பற்றிய கரிசனை இந்தியாவுக்கு அவசியம் தேவையான ஒன்று.

வட இந்தியாவில் நிலம் சார்ந்த புவிசார் அரசியலும் தெற்கில் இருக்கின்ற கடல் சார்ந்த இந்தோ- பசுபிக் விவகாரத்திலும் எவ்வாறு சமநிலையைப் பேணுவது என்ற சிக்கல் இந்தியாவுக்கு உக்ரெய்ன் போருக்குப் பின்னரான சூழலில் உருவாகியுள்ளது.

இந்தப் பின்னணியிலே அமெரிக்கா சீனாவை ரசியா குறித்த நிலைப்பாட்டில் நெருக்கடிக்குள் கொண்டு வந்துள்ளது. உக்ரெய்ன் போரில் சீனா ரசியாவுக்கு ஆதரவாகச் செயற்படுகின்ற தன்மைகளும், பொருளாதார ரீதியாக சீனா ரசியாவுக்கு ஒத்துழைக்கின்ற முறைகளும் அமெரிக்காவுக்குப் பெருத்த தலையிடியை ஏற்படுத்துகின்றன.

அத்துடன் ரசியா, சீனா என்ற அணி வகுப்புக்குள் இந்தியாவும் நுழைந்துவிடுமோ என்றொரு அச்சம் அமெரிக்காவுக்கு எழுந்துள்ளது.

இவ்வாறு சீனாவுக்கு அமெரிக்கா கொடுக்கும் அழுத்தம் இந்தியாவுக்கும் சேர்த்தே என்பதையும் இங்கே நோக்க வேண்டும். இந்தியாவின் வடக்கைச் சுற்றியுள்ள நிலத் தொடர்பு விடயங்களில் புதுடில்லி கூடுதல் கவனம் செலுத்துவதால், இந்தோ- பசுபிக் விடயத்தில் ஒரு முனைப்பாக இந்தியாவுக்குப் பங்களிக்க முடியாதெனற ஒரு சிக்கல் உருவாகும். அது அமெரிக்காவுக்குப் பிரச்சினை.

ஒருபுறம் ரசியாவையும் மறுபுறம் அமெரிக்காவையும் இந்தியா கையாள முற்படும் இந்த அணுகுமுறையை அமெரிக்கச் சார்புடைய வேறு நாடுகளும் பின்னபற்ற ஆரம்பித்தால் அது அமெரிக்கப் புவிசார் அரசியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆகவே உக்ரெய்ன் போர் நீடித்தால் அமெரிக்கா தனது பெருவிரலால் இந்தியாவுக்கு அழுத்தி எச்சரிக்கை விடுக்கும் நிலைமை ஏற்படலாம். அதாவது இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விகாரத்தில் அமெரிக்காவோடு குவாட் (QUAD) அமைப்புக்குள் இந்தியா ஒருமுனையாக நிற்குமா அல்லது இந்திய நிலப் பாதுகாப்பு அடிப்படையில் ரசியாவுடன் கூடுதலாக நிற்குமா என்ற கேள்வியோடு இந்தியாவுக்கு நேரடி அழுத்தத்தை அமெரிக்கா வழங்க எத்தனிக்கும்.

அமெரிக்கா அல்லது ரசியா ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட திரிசங்கு நிலைப்பாட்டில் இந்தியா இருக்க முடியாது என்ற செய்தியை அமெரிக்கா நேரடியாகவே புதுடில்லிக்குக் கொடுக்கக்கூடும்.

இதுவே உக்ரெய்ன் போருக்குப் பின்னரான இந்தியாவின் புவிசார் திண்டாட்டமாக இருக்கப்போகின்றது.

ரசியாவுடன் கூடுதலான உறவு வைக்கும் நிலைக்குள் இந்தியா தள்ளப்படும்போது, இலங்கை 1980களில் இருந்தது போன்று மீண்டும் அமெரிக்காவின் பக்கம் செல்லும் நிலைமையும் உருவாகலாம். அத்துடன் அமெரிக்காவுக்குரிய தளமாகவும் இலங்கை மாறலாம்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது உக்ரெயன் போருக்குப் பின்னர் இந்தியாவின் புவிசார் நிலைப்பாடு பின்வரும் மூன்று நிலைகளில் ஏதோவொன்றாக அமைய வேண்டிய தெரிவு உள்ளது.

ஒன்று- முழுமையாக அமெரிக்காவின் இந்தோ- பசுபிக் மூலோபாயத்துக்குள் செல்வது. அல்லது அமெரிக்காவில் இருந்து விலகி வட இந்திய புவிசார் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நேரடியாக ரசியாவோடும், மறைமுகமாகச் சீனாவோடும், புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வது.

ரசியாவுடன் கூடுதலான உறவு வைக்கம் நிலைக்குள் இந்தியா தள்ளப்படும்போது, இலங்கை 1980களில் இருந்தது போன்று மீண்டும் அமெரிக்காவின் பக்கம் செல்லும் நிலைமையும் உருவாகும். அத்துடன் அமெரிக்காவுக்குரிய தளமாகவும் இலங்கை மாறும்

அல்லாவிடின் மூன்றாவது தெரிவாகத் திரிசங்கு நிலையை தொடர்ந்தும் நீடிப்பது. இது நெருக்கடியான போர்ச் சூழலில் மிகவும் சிரமமான தெரிவாகவே இந்தியாவுக்கு விட்டுவைக்கப்படும். அமெரிக்காவைப் பொறுத்தவரை அமெரிக்க அணியோடு முழுமையாக நிற்க வேண்டும். அல்லது முழுமையாக நிற்காத அனைத்து நாடுகளும் எதிரிகளோடு நிற்பவையாகவே கருதப்படும் என்ற அரசியல் கலாச்சாரம் அமெரிக்காவில் இருக்கின்றது. ஆகவே இந்தியா பெருத்த திண்டாட்டத்துக்குள் மாட்டிக் கொண்டிருக்கின்றது.

ஒரு முனைப்போடு அமெரிக்கச் சார்பான புவிசார் அரசியலை இந்தியா தழுவ வேண்டிய நிலை ஏற்பட்டால், இலங்கை அரசு இந்தியாவினாலும் அமெரிக்காவினாலும் இணைந்து கையாளப்படும் தற்போதைய நிலையே நீடிக்கும்.

அப்போது ஈழத்தமிழர்கள் இந்தியாவிடம் அரசியல் தீர்வையும், மேற்குலக நாடுகளிடம் மனித உரிமை மற்றும் இன அழிப்பு, போர்க்குற்றங்கள் சார்ந்த விவகாரங்களைக் கையாள வேண்டிய தற்போதைய நிலையே தொடரும்.

ஆனால், ரசியாவோடும் சீனாவோடும் இந்தியாவுக்குக் கூடுதல் புரிந்துணர்வு ஏற்பட்டால், இலங்கை அரசுக்கு இரண்டு தெரிவுகள்தான் இருக்கும்.

ஒன்று- இந்தியாவின் அழுத்தத்திற்கு உள்ளாவது. அதாவது தனது ரசிய, சீன நட்பின் வீச்சினால் தடுக்க முடியாத இந்தியாவின் அழுத்தத்திற்கு உள்ளாகுவது.

இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கு இருக்கும் இரண்டாவது தெரிவு ஜே.ஆர். ஜயவர்த்தனா காலத்தைப் போன்றும் 2009 காலத்தைப் போலவும் அமெரிக்காவை நம்பிச் செயற்படுவது.

இரண்டாவது தெரிவை இலங்கை மேற்கொண்டால், தமிழர்கள் தொடர்ந்தும் மேற்குலகின் கையாளுகைக்கு உள்ளாக வேண்டியிருக்கும். குறிப்பாகப் புலம்பெயர் தமிழர்களின் திறமையைப் பொறுத்து சிங்கள இராஜதந்திரிகள் வெல்லப் போகின்றார்களா, அல்லது ஈழத்தமிழர்கள் வெல்லப் போகின்றனரா என்பது தீர்மானிக்கப்படும். அதேவேளை ரசிய இந்திய அணிக்குள் அகப்பட்டு ஏமாற்றப்படும் ஆபத்தையும் ஈழத்தமிழர்களின் சில அணிகள் எதிர்கொள்ள நேரிடும்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தில் இருந்து இந்தியாவிடமும் சரி, மேற்குலகத்திடமும் சரி அரசியல் தீர்வை நோக்கித் தாங்கள் எந்தப் புள்ளியில் இருந்து ஆரம்பிக்க இயலும் என்பதையும், எதை இடைக்காலத் தீர்வாகவும் இறுதித் தீர்வாகவும் தாங்கள் பார்க்கிறோம் என்பதையும் கருத்தொருமித்து மிகவும் தெளிவாக முன்வைக்க வேண்டிய தேவை உக்ரெய்ன் போருக்குப் பின்னர் முக்கியமானதாக எழுந்துள்ளது.

இந்த மூன்று புள்ளிகளும் ஒற்றையாட்சிக்குள் இருக்க முடியாது என்பது இந்தியாவுக்கும் மேற்குலகத்துக்கும் தெளிவாகச் சொல்லப்பட வேண்டும்.

அதேவேளை, புலம்பெயர் தமிழர்களும் தமிழ்நாடும் உச்சபட்ச நிலைகளில் கருத்தொருமித்துப் பயணிக்க வேண்டியிருக்கும். அதிலும் முக்கியமாக ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தில் வைக்கப்படும் அரசியல் தீர்வுக்கான ஆரம்பப் புள்ளி தொடர்பான நிலைப்பாடு அதற்கு வெளியில் இருந்து புலம்பெயர் தமிழர்களினாலும் தமிழ்நாட்டினாலும் வைக்கப்படும் உச்சபட்ச நிலைப்பாட்டோடு முரண்பட்டதாக இருக்கக் கூடாது.

ஒன்றுக்கொன்று இசைந்து செல்வதாகவும் தமிழர்களின் ஒன்றினைந்த அணுகுமுறை அமைய வேண்டும்.