இதனை அசோக எக்கநாயக்கா என்ற சிங்களப் பேராசிரியர் சென்ற மாதம் 21 ஆம் திகதி கொழும்பு ரெலிகிராப் என்ற ஆங்கில செய்தித் தளத்தில் எழுதிய தனது கட்டுரையில் விபரமாகக் கூறுகின்றார்.
ஆகவே இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொறுப்புக்கூற வேண்டும். சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி புதிய கட்சியாக இருந்தாலும் அந்தக் கட்சியில் அங்கம் வகிக்கும் 54 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்களே.
2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் அவருக்கு ஆதரவு கொடுத்திருந்த ஜே.வி.பி 2009 இறுதிப் போரை நடத்தக் காரணமாக இருந்தது. போருக்குத் தூண்டியது ஜே.வி.பிதான் என்று அப்போது பிரதமராக இருந்த அமரர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க பகிரங்கப்படுத்தியிருந்தார்.
ஆகவே முப்பது ஆண்டுகால போரின் நீட்சிதான் 2009 இல் நடத்தப்பட்ட இறுதிப்போர். எனவே தொடர்ச்சியாகப் போரை நடத்திய அனைத்துச் சிங்களக் கட்சிகளும் இன்றைய பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
போருக்காகச் செலவிடப்பட்ட நிதி பற்றிய முழுமையான விபரங்களை எந்தவொரு சிங்களக் கட்சியும் இன்றுவரை பகிரங்கப்படுத்தவேயில்லை. போருக்குச் செலவிடப்பட்ட விபரங்கள் இதுவரை நாடாளுமன்றத்தில் முழுமையாகச் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. சமர்ப்பிக்குமாறு எவரும் வலியுறுத்தவுமில்லை.
2009 இன் பின்னரான கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளிலும்கூட வடக்குக் கிழக்குத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்குரிய எந்தவொரு தீர்வையும் சிங்கள ஆட்சியாளர்கள் முன்வைக்கவேயில்லை. அதாவது முப்பது ஆண்டுகால போருக்குக் காரணமான அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகள் பரிந்துரைக்கப்படவேயில்லை.
அத்துடன் வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவின் உள்ளூர் சுயபொருளாதார கட்டமைப்புகளை ஊக்குவிக்கும் செயல்திட்டங்கள்கூட வகுக்கப்படவுமில்லை. வடக்குக் கிழக்கில் ஒப்பாசாரத்துக்காக முன்மொழியப்பட்ட சில அபிவிருத்தித் திட்டங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுமுள்ளன.
ஆனால் வடக்கு கிழக்கில் தமிழ் - முஸ்லிம் மக்களின் தாயகப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டமை, புத்த விகாரைகள் அமைக்கப்பட்டமை போன்ற சிங்கள மயமாக்கல் மாத்திரமே நாளுக்கு நாள் புனரமைப்பு என்ற போர்வையில் வெவ்வேறு வடிவங்களில் தீவிரப்படுத்தப்பட்டு வந்தன.
இதற்கு வசதியாகவே இராணுவ முகாம்களும் விஸ்தரிக்கப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்டன. வீதிகளும் செப்பனிடப்பட்டன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுமிருந்தன.
அதாவது 2009 ஆம் ஆண்டு போர் இல்லாதொழிக்கப்பட்ட பின்னரான பன்னிரெண்டு ஆண்டுகளிலும் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதி சிங்கள மயமாக்கலை மையமாகக் கொண்டே அமைந்தன என்பது கண்கூடு. இதனைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தியுமுள்ளனர்.
ஆனால் வடக்குக் கிழக்கில் சிங்கள மயமாக்கல் பற்றி எந்தவொரு சிங்கள அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் வாய்திறந்து கண்டிக்கவேயில்லை. இருந்தாலும் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமென சும்மா ஒப்பாசாரத்துக்காக அவ்வப்போது நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்கள். நீலிக்கண்ணீரும் வடித்திருக்கின்றனர்.
ஆகவே இதன் பின்புலத்திலேதான் இலங்கைத்தீவு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுகள் குறித்து விவாதிக்க வேண்டும்.
வெறுமனே ராஜபக்சக்களின் ஆட்சியை மாற்றிவிட்டால் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமெனச் சிங்கள மக்கள் நம்புவது அடிப்படையில் தவறானது.
2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்புவதாகக் கூறி உருவாக்கப்பட்ட ஆட்சி மாற்றமே மைத்திரி- ரணில் அரசாங்கம். ஆனால் இந்த அரசாங்கமே வடக்குக் கிழக்கில் காணி அபகரிப்பு, புத்தர் சிலை வைத்தல் உள்ளிட்ட சிங்கள மயமாக்கல் திட்டங்களை கொழும்பை மையமாகக் கொண்ட அரச திணைக்களங்கள் ஊடாக மாற்றியமைத்தது.
அதாவது தொல்பொருள் திணைக்களம், காணி அபிவிருத்தித் திணைக்களம். வன இலாகாத் திணைக்களம் உள்ளிட்ட பல அரச திணைக்களங்களைப் பயன்படுத்தி ஒற்றையாட்சிச் சட்டத்திற்கு ஏற்ற முறையில் வடக்குக் கிழக்கு பிரதேசங்களில் தமிழ் - முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான மரபுரிமைகள் மாற்றியமைக்கப்பட்டுச் சிங்கள மயப்படுத்தப்பட்டன.
இதற்காகப் பல மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் வரவு செலவுத் திட்டத்தில் இதற்குரிய ஒதுக்கீடுகள் உரிய முறையில் காண்பிக்கப்படுவதுமில்லை.
அதேபோன்று வெளிநாட்டு நிதியுதவிகள் பற்றிய முழுமையான விபரங்களும் வரவு செலவுத்திட்டத்தில் காண்பிக்கப்படுவதில்லை. கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது, ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு உதவிகள் பற்றிய முழு விபரங்களையும் சபையில் சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தார்.
பதிலுக்கு 2015 ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் வழங்கப்பட்ட வெளிநாட்டு நிதியுதவிகள் பற்றிய விபரங்களை ராஜபக்ச அரசாங்கம் கோரிக் கிண்டலடித்திருந்தது. அதனால் ரணில் அமைதியாகிவிட்டார்.
ஆகவே எந்தவொரு சிங்கள ஆட்சியாளர்களும் வெளிநாட்டு நிதியுதவிகள் பற்றிய விபரங்களையும், வடக்குக் கிழக்கில் சிங்கள மயப்படுத்தும் நோக்கில் செய்யப்படும் வேலைத் திட்டங்களுக்கான நிதிகள் குறித்தும் உண்மையான விபரங்களை பகிரங்கப்படுத்த விரும்புவதில்லை என்பதே இதன் வெளிப்பாடு.
அத்துடன் 2012 ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முதல், கடந்த ஆண்டுவரை முன்வைக்கப்பட்ட ஜெனீவா தீர்மானங்கள் எதுவுமே இலங்கையினால் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை.
குறிப்பாகச் சர்வதேசம் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகளான போர்க்குற்றம், மனித உரிமை மீறல் உள்ளிட்ட விவகாரங்கள் எதற்கும் இலங்கை பொறுப்புக்கூறவில்லை. நல்லாட்சி என்று தம்மைத்தாமே கூறிக் கொண்டு 2015 இல் பதவிக்கு வந்த மைத்திரி-ரணில் அரசாங்கம்கூட ஜெனீவா மனித உரிமைச் சபைத் தீர்மானத்துக்கு ஏற்ப பொறுப்புக்கூறவேயில்லை.
மாறாக வெறும் வாக்குறுதிகள் மாத்திரமே வழங்கப்படுகின்றன.
ஆகவே ஈழத்தமிழர் விவகாரங்களில் பொறுப்புக்கூறல் என்பது சிங்கள ஆட்சியாளர்கள் எவருக்குமே உரித்துடையதல்ல என்ற எண்ணக் கரு அனைத்துச் சிங்களக் கட்சிகளிடமும் நிறுவப்பட்டுள்ளது. இதுவே சிங்கள மக்களின் மனங்களிலும் பதியப்பட்டுள்ளன. சிங்கள - ஆங்கில ஊடகங்களும் அதனையே பிரதிபலிக்கின்றன.
இந்த நிலையில் பொறுப்புக்கூறல் பற்றி அவ்வப்போது இலங்கையிடம் வலியுறுத்தி வரும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள், தமது புவிசார் அரசியல் நோக்கில் ஈழத்தமிழர்கள், இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள் அடங்கி வாழ வேண்டும் என்ற அழுத்தங்களையே 2009 இற்குப் பின்னரான பன்னிரெண்டு ஆண்டுகளிலும் தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் போதித்து வருகின்றன.
இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முப்பது ஆண்டுகால போரும் அதன் பின்னரான பன்னிரெண்டு ஆண்டுகளில் வகுக்கப்பட்ட அரசியல், பொருளாதாரத் திட்டங்களுமே காரணம் என்பது இந்த வல்லாதிக்க நாடுகளுக்குப் புரியாததல்ல.
ஈழத்தமிழர் பற்றிய சிங்கள ஆட்சியாளர்கள் ஒவ்வொருவருடைய மனட்சாட்சியும் அமெரிக்க - இந்திய நாடுகளுக்குத் தெரியாததுமல்ல. ஆனால் தமது புவிசார் அரசியல் நோக்கில் இலங்கை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் தற்போதைய நெருக்கடிச் சூழலைத் தமக்குச் சாதகமாக்கும் உத்திகளை மாத்திரமே இந்த வல்லாதிக்க நாடுகள் கையாண்டு கொண்டிருக்கின்றன.
ஆகவே கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்குப் போ என்று கோசமிட்டு வீதியில் இறங்கிப் போராடும் சிங்கள மக்கள், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் இலங்கையை மையப்படுத்திய புவிசார் நோக்கங்களையும், இந்தியா போன்ற நாடுகளின் கபடத்தனமான உத்திகளையும் முதலில் அறிய வேண்டும்.
அத்தோடு 1947 ஆம் ஆண்டில் இருந்து சிங்கள இனவாதத்தை மூலதனமாக்கிக் கையாண்ட அரசியல் பொருளாதார உத்திகளே, தற்போதைய இந்த அவல நிலைக்குக் காரணம் என்பதைப் பகிரங்கப்படுத்துவதும் அவசியம்.
எனவே தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைக்கான அடிப்படை மூலம் என்பது முப்பது ஆண்டுகாலப் போரும் அதற்காகச் செலவிடப்பட்ட நிதி மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் புவிசார் நலன், இந்தியாவின் அரசியல் தேவை போன்ற காரணிகளும் ஒரே புள்ளியில் அமைந்ததன் விளைவுதான் என்பதைப் போராட்டத்தில் ஈடுபடும் சிங்கள மக்கள் அம்பலப்படுத்துவார்களா?
2009 போருக்கு முன்னரும் பின்னரும் ராஜபக்சக்கள் மேற்கொண்ட அதிகாரத் துஸ்பிரயோகம், ஊழல் மோசடிகள் மாத்திரமல்ல, 2015 இல் நல்லாட்சி என மார்தட்டிக் கொண்டு பதவிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கம் இலங்கை மத்திய வங்கியில் மேற்கொண்ட பாரிய நிதிமோசடிகள் பற்றியும் வெளிப்படுத்த வேண்டும்.
குறிப்பாக ரணில் அரசாங்கம் மேற்கொண்ட நிதி மோசடியை 2020 இல் மீண்டும் பதவிக்கு வந்த ராஜபக்ச அரசாங்கம் மூடி மறைத்தது. 2006 இல் இருந்து 2009 வரை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நடத்திய போர் அதற்காக முறைகேடாகச் செலவிடப்பட்ட நிதிகள் பற்றியும் 2014 ஆண்டு டிசம்பர் மாதம் வரை மேற்கொண்ட ஊழல் மோசடி, அதிகாரத் துஸ்பிரயோகங்கள் குறித்தும் 2015 இல் பதவிக்கு வந்த ரணில் அரசாங்கம், விசாரணை என்ற போர்வையில் மூடி மறைத்தது.
ஆகவே கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் அரசியல் நலன் நோக்கிலான இந்த மூடிமறைப்புகள் தொடர்பாகச் சிங்கள மக்கள் உரத்துக் கேள்வி கேட்க வேண்டும்.
இதன் பின்புலத்திலேதான் நேர்மையான அரசியல் மாற்றத்தைக் காணலாம். அதாவது சிங்கள மகாவம்ச மன நிலையில் இருந்தும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக விதைக்கப்படும் பௌத்த சிங்களத் தேசியவாதச் சிந்தனை பற்றிய பொய்யான வாக்குறுதிகளில் இருந்தும் மக்கள் விடுபட முடியும்.
அது மாத்திரமல்ல என்றைக்குமே சிங்கள - தமிழ் உறவு ஏற்படாத வகையில் 2016 இல் மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் மாற்றம் செய்யப்பட்ட சிங்கள- தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டங்களில், தமிழர்களின் தொல்லியல் வரலாறுகள் மறைக்கப்பட்டு சிங்கள மயமாக்கலுக்கு ஏற்ற முறையில் திரிபுபடுத்தப்பட்டுமுள்ளன.
சிங்களச் சொற்களுடன் கூடிய பௌத்த சமய வரலாறுகளே தமிழ் வரலாற்றுப் பாட நூல்களில் திணிக்கப்பட்டுள்ளன. ஆகவே இது தொடர்பாகவும் சிங்களக் கல்வியாளர்கள் நியாயமான கேள்விகளைத் தொடுக்க வேண்டும்.
ஆகவே மாறி மாறி ஆட்சிக்கு வரும் சிங்கள ஆட்சியாளர்களினால் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அந்த அநீதிகளைச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட அதிகாரத் துஸ்பிரயோகங்கள், ஊழல் மோசடிகளே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான உண்மைக் காரணிகள் என்பதைத் தமது மனச்சாட்சியோடு சிங்கள சிவில் சமூக அமைப்புகள் முன்வைக்க வேண்டும்.
ஆனால் மனட்சாட்சியோடு முன்வருவார்களா?
இதற்குத் தமிழர்களின் ஒத்துழைப்பு சிங்கள சிவில் சமூக அமைப்புகளுக்குத் தேவையில்லை. இந்த நெருக்கடிக்குரிய அடிப்படை மூலங்களை வெளிப்படுத்தும்போது, 1947 இல் இருந்து ஈழத்தமிழர்களுக்கு அரசியல், பொருளாதார ரீதியாக இழைக்கப்பட்ட அநீதிகள் இயல்பாகவே வெளிப்படும்.
கோட்டாபயவை வெளியேறுமாறு கோரி ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபடும் சாதாரண சிங்கள மக்கள் ஈழப்போராட்டம் இல்லாதொழிக்கப்பட்டதன் வேதனைகளை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் அதன் நியாயப்பாடுகளை ஒருங்கமைத்து மேலும் விழிப்படையச் செய்ய வேண்டியது சிங்கள சிவில் சமூக அமைப்புகளின் பொறுப்பு.