அமெரிக்க - இந்திய அரசுகளும் கடும் அழுத்தங்கள் கொடுத்துவரும் நிலையில், உறுதியான அரசியல் நிலைப்பாடு, அதாவது உறுதியான அரசாங்கம் இன்னமும் உருவாகவில்லை.
இந்தவொரு நிலையில், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் சில அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்குப் பாரப்படுத்தும் 21 ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் வரைபு தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி சாதகமான நிலைப்பாட்டை இதுவரை வெளியிடவில்லை. முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களே வெளியிடப்படுகின்றன.
21 தொடர்பாக ராஜபக்ச ஆதரவு உறுப்பினர்களின் மனச்சாட்சி இதுவரை சரியான முறையில் வெளிப்படவேயில்லை.
குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியில் இருந்து, விலகி சுயாதீனமாகச் செயற்பட்ட நாற்பது உறுப்பினர்களும், மே மாதம் ஒன்பதாம் திகதி கொழும்பில் இடம்பெற்ற வன்முறையின் பின்னரானதொரு சூழலில், ராஜபக்ச குடும்பத்துடன் மீண்டும் மறைமுக மென்போக்கு அரசியல் நகர்வைக் கையாண்டு வருகின்றனர் என்பது கண்கூடு.
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு ஆதரவான உறுப்பினர்கள், அவருடன் முரண்பட்ட உறுப்பினர்கள் எனப் பலரும், ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி என்ற அடிப்படையில் இயங்க மறுத்தாலும், தமது அரசாங்கம் என்ற நிலைப்பாட்டில் முரண்பாட்டில் ஓர் உடன்பாடாகச் செயற்பட ஆரம்பித்திருப்பதைச் சமீபகால நகர்வுகள் மூலம் அவதானிக்க முடிகின்றது.
இதன் பின்னணியில் 21 ஆவது திருத்தத்துக்கான நகல் வரைபு நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதற்குரிய சந்தர்ப்பங்கள் குறைவடைந்துள்ளன.
அத்துடன் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவற்றின் நிதியுதவிகளும் உடனடியாகக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் அரிதாகியுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
குறிப்பாகப் பிரதமரைப் பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட சில முக்கியமான அமைச்சுப் பொறுப்புக்களை ஜனாதிபதி வைத்திருப்பதற்குரிய ஏற்பாடுகள் 21 ஆவது திருத்தத்தில் இருக்க வேண்டுமெனவும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் அழுத்தம் கொடுக்கின்றனர்.
கோட்டாபய ராஜபக்சவுக்கு நெருக்கமான உறுப்பினர்களே ஜனாதிபதியின் அதிகாரங்களைத் தொடர்ந்து பேண வேண்டிய அவசியம் குறித்த யோசனையை முன்வைக்கின்றனர். மீண்டும் சென்ற மூன்றாம் திகதி ரணில் தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் இணக்கம் ஏற்பட்டதாகக் கூறினாலும் முரண்பாடுகள் தொடருகின்றன.
குறிப்பாக கோட்டாபய ராஜபக்சவுடன் முரண்பட்டுச் சுயாதீனமாக இயங்கிவரும் உறுப்பினர்கள் 21 பற்றி மேலும் குழப்பமான யோசனைகளை முன்வைக்கின்றனர்.
இதனாலேயே 21 ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவது பற்றிய சந்தேகங்கள் அதிகரித்துள்ளன. அத்துடன் ஒன்பது சிறிய கட்சிகள் 21 தொடர்பான தமது யோசனைகளை முன்வைத்திருப்பதும், மேலும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை.
ஆகவே நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தலைமையிலான குழுவினர் தயாரித்த நகல் வரைபு முற்று முழுதாகத் திருத்தம் செய்யப்பட வேண்டியதொரு கட்டாயச் சூழல் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
விஜயதாச ராஜபக்ச தயாரித்த நகல் வரைபில் இருக்கும் பரிந்துரைகள் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் அதிகாரங்கள் பலவற்றை நாடாளுமன்றத்துக்குப் பாரப்படுத்துகின்றன.
ஆனாலும் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம், அந்தப் பரிந்துரைகள் கூடப் போதுமானவை அல்ல என்றும், ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் குறைக்க வேண்டுமென்றும் தொடரந்து வாதிடுகின்றது.
அத்துடன் நான்கு அம்சக் கோரிக்கை ஒன்றையும் சட்டத்தரணிகள் சங்கம் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிடம் பரிந்துரைத்திருந்தது. இதன் பின்னணியில் தற்போது ஒன்பது அரசியல் கட்சிகள் தமது யோசனைகளை முன்வைத்திருப்பது, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவைக்குப் பெரும் தலையிடியாகும்.
இந்த ஒன்பது கட்சிகளும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சிகளாகும்.
ஏனெனில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதியின் அதிகாரங்களை 19 ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்ததுபோன்று 21 ஆவது திருத்தச் சட்டத்தில் மீண்டும் கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
ஜே.வி.பியும் அதே நிலைப்பாட்டில்தான் உள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அவ்வப்போது 21 பற்றிக் கருத்துக் கூறுகின்றது. அதேநேரம் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை முன்வைக்காமல், 21 பற்றிப் பேசுவதில் பயனில்லை என்ற தொனியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கருத்திட்டுள்ளது.
ஆகவே ரணில் தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பலர், ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு முழுமையான ஆதரவைத் தெரிவிக்காத அல்லது கோட்டா, பசில் ஆகியோருடனான உறவை முற்றாகக் கைவிடாதவொரு சூழலில், 21 ஐ விஜயதாச ராஜபக்ச என்ற தனிமனிதனின் ஆதரவை மாத்திரம் வைத்துக் கொண்டு ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு நிறைவேற்றப் போகின்றார் என்ற கேள்வி யதார்த்தமானதே.
ஒன்பது கட்சிகளும் சமர்ப்பித்துள்ள யோசனைகள் என்பதற்குள், ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் குறிப்பாக ராஜபக்ச சகோதரர்களின் பின்னணி இருந்திருக்க வாய்ப்புண்டு.
அந்தப் பின்னணி வெளிப்படையாகவே தெரிகின்றது.
குறிப்பாக பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட சில முக்கியமான அமைச்சுப் பொறுப்புக்கள் தொடர்ந்தும் ஜனாதிபதியிடம் இருக்க வேண்டுமென்ற பரிந்துரைகளை, ராஜபக்ச குடும்பத்தின் பின்னணியோடு சில மூத்த உறுப்பினர்களும் விரும்புகின்றனர் என்று கூறலாம்.
சஜித் பிரேமதாசாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஆகவே நெருக்கடியானதொரு சூழலில் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தனது பதவியைத் தக்கவைக்க முடியுமா என்ற கேள்வி எழுகின்றது. அது மாத்திரமல்ல, பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு என்று யாரும் கேள்வி எழுப்பினால், அந்தக் கேள்வியின் தொனி அனைத்து மக்களின் ஏக்கங்களையும் பிரதிபலிப்பதாகவே அமையும்.
21 ஆவது திருத்தம் எழுபது வருட இனப் பிரச்சினைக்குத் தீர்வல்ல.
ஆனால், வல்லரசு நாடுகளின் தலையீடுகளோடு சிலவேளை ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு 21 இன் மூலமாக ஏதேனும் தீர்வு வந்துவிடுமோ என்ற கற்பனையான அச்சம், சிங்கள அரசியல் தலைவர்கள் பலருக்கு உண்டு.
மகாநாயக்க தேரர்களும் அதற்கு விதிவிலக்கல்ல.
இலங்கை ஒற்றையாட்சி அரசியல் கட்டமைப்பைத் தொடர்ந்து பேண வேண்டும் என்பதே சிங்கள அரசியல் தலைவர்கள் பலரின் பலமான அடிப்படைச் சிந்தனை.
ஆகவே ரணில் பிரதமர் பதவியை ஏற்ற பின்னரான சூழலில், தோற்கப்போவது சிங்கள அரசியல் தலைவர்களா, அல்லது பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சிங்கள மக்களா என்பதை அவதானிக்க இன்னும் ஓரிரு வாரங்களே உண்டு.
ஆனால் இக் கேள்விகள் அவதானிப்புகள் அனைத்தையும் கடந்து, இந்த நெருக்கடிச் சூழலைத் தனக்குச் சாதகமாக்கி, பெரும்பான்மைச் சிங்கள அரசு எழுபது வருடகால ஈழத்தமிழர் அரசியல் உரிமைக் கோரிக்கைகளை வேறு திசைக்குத் திருப்பிவிடுமோ என்ற அச்சமே ஈழத்தமிழ் மக்களிடம் மேலோங்கியுள்ளது.
இந்தவொரு நிலையில், 21 தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் சூம் செயலி மூலம் ஒன்று கூடி ஆராயவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை ஒருமித்த குரலில் முன்னெடுக்காமல் கூடி ஆராய்வதில் பயனில்லை என்பது பொதுவான அவதானிப்பு.
பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ஈழத்தமிழர் விவகாரத்தைச் சர்வதேச அரங்கில் தோற்கடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பு, தற்போது தமிழ் நாட்டையும் புதுடில்லியின் நிலைப்பாட்டோடு இலகுவாக இணைத்துவிடும் அரசியல் வேலைத் திட்டங்களில் கவனம் செலுத்தியுள்ளது.
ஆகவே 2009 இன் பின்னரான சூழலில், மொழியாலும் பண்பாட்டு மரபுவழி உறவு முறைகளினாலும் இலகுவான வழியில் தொடர்புகளை உருவாக்கி ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழ் நாட்டின் ஒட்டுமொத்த ஆதரவை ஒருமித்த குரலில் பெற முயற்சிக்க முடியாத தமிழ்த் தேசியக் கட்சிகள், 21 பற்றிக் கூடி ஆராய்வதில் பயன் இல்லை (தனிப்பட்ட முறையில் தமிழக தலைவர்களுடன் வைத்திருக்கும் உறவுகளை ஈழத்தமிழர்களின் அரசியல் நலன்களோடு ஒப்பிடுவது அடிப்படையில் தவறு).
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களுடனும் முஸ்லிம் அரசியல் தலைவர்களோடும் திறந்த உரையாடல்களை ஆரம்பித்து, வடக்குக் கிழக்கு இணைந்த தாயகத்தை நிறுவுவதற்கான உத்திகள் கூட 2009 இன் பின்னரான சூழலில் வகுக்கப்படாதாவொரு பின்னணியிலும் தமிழ்த்தேசியக் கட்சிகள் 21 பற்றிப் பேசுவதில் அர்த்தமே இல்லை.
இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள் நின்று கொண்டும், இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் பேசியும் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்குத் தீர்வு காண முடியாது என்பதே தமிழ்த்தேசியக் கோட்பாட்டின் அடிப்படை.
இந்த அடிப்படையைக்கூடப் புரிந்துகொள்ளாத அல்லது ஏற்றுக்கொள்ள விரும்பாத தமிழ்த்தேசியக் கட்சிகள், வாக்கு அரசியலுக்காக மாத்திரம். தமிழ்த்தேசியத்தைப் பேசுகின்றனர் என்பதை மக்கள் அறிந்துகொள்ளக் கூடிய காலமிது.
எழுபது ஆண்டுகால இனப்பிரச்சினைக்கு நிரந்த அரசியல் தீர்வை முன்வைக்காமல், இலங்கைத்தீவில் ஸ்திரமான அரசியல் இருப்பும், உறுதியான பொருளாதாரக் கட்டமைப்பும் நிலைபெற முடியாதென்பதையும் சிங்கள அரசியல் தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயச் சூழல் இது.