நிதி நெருக்கடிக்கான காரணங்கள் மற்றும் அரசியல் பிரச்சினைகள் பற்றி விளக்கமளித்த ரணில் விக்கிரமசிங்க, இலங்கை தற்போது எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு அப்பால் மிகவும் பாரதூரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகக் கூறினார்.
இலங்கையின் பொருளாதாரம் முற்றுமுழுதான வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளதாகவும், இதுவே தற்போது இலங்கை எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்தார்.
இந்திய கடன் வசதியின் கீழ் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் பெறப்பட்டுள்ளது. இந்தியாவிடம் இருந்து மேலும் கடனுதவிகளைக் கோரியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி, திறைசேரி, சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களுடனான கலந்துரையாடலின் பின்னர், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்ப கலந்துரையாடல்களை நிறைவு செய்துள்ளதாகவும், பொது நிதி, நிதி, கடன் நிலைத்தன்மை, வங்கித்துறையின் ஸ்திரத்தன்மை மற்றும் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு போன்ற பல்வேறு துறைகள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாகவும் பிரதமர் கூறினார்.