தமிழ்த்தேசிய

விடுதலைப் போராட்டத்தைத் திரைப்படமாக எடுக்க முற்படுவோர் கவனிக்க வேண்டியதென்ன?

வெறுமனே தாக்குதல்கள் மாத்திரமல்ல, அரசியல் கோட்பாட்டு விளக்கங்கள் கதை - வசனங்களில் அமைய வேண்டும்
பதிப்பு: 2022 செப். 03 14:47
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: செப். 06 19:06
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
தமிழ்த்தேசிய அரசியல் விடுதலைப் போராட்டம், தமிழர் வாழ்வுரிமை மறுப்புத் தொடர்பான கோட்பாட்டு விளக்கங்களை மையமாகக் கொண்டது. அதனைக் குழப்புவதற்கான புவிசார் அரசியல் - பொருளாதாரப் பின்னணிகளும் உண்டு. ஆகவே தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்பாகப் படம் எடுக்க முற்படுவோர் இப் பின்புலங்களின் அடிப்படையைக் கொண்டே கதை வசனங்களை அமைக்க வேண்டும். தனியே வன்முறைக் காட்சிகளாக மாத்திரம் காண்பித்து உணர்ச்சிகரமாகச் சித்தரிப்பது வரலாற்றுத் தவறு. ஆனால் தாக்குதலின்போது கையாளப்பட்ட மரபுவழி இராணுவத் தந்திரோபாயங்கள், (Military Strategies) தாக்குதல் உத்திகள் (Attack Tactics) பற்றிய இராணுவ அறிவுரீதியான நுட்பங்களைப் படத்தில் வெளிப்படுத்த வேண்டும்.
 
ஐ.நா.வில் அங்கீகரிக்கப்பட்ட அரசு என்ற கட்டமைப்பில் இருந்து கொண்டு சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்கள் மீது மேற்கொண்ட ஜனநாயகத்துக்கு மாறான வன்முறைகளே ஆயுதப் போராட்டத்தைத் தூண்டியது என்ற பொருள்கோடல் கோட்பாட்டு ரீதியாகப் படக் காட்சிகளில் முன்வைக்கப்பட வேண்டும்

1920 இல் சிங்கள - தமிழ் பிரதிநிதிகளை உள்ளடக்கிய இலங்கைத்தேசிய இயக்கம் பிளவுபட்டு, 1921 இல் தமிழர் மகாசபை உருவாக்கப்பட்ட நாள் முதல் அகிம்சை வழியில் நடைபெற்ற போராட்டங்களை அடக்க இலங்கை ஒற்றையாட்சி அரசு தனது அரசியல் - இராணுவப் பலங்களைப் பயன்படுத்தித் தமிழர்கள் மீது வன்முறைகளை ஏவியது.

அதுவே 1950களில் இருந்து தமிழ் இன அழிப்பாக மாறியது. இதுவே தமிழ் இளைஞர்கள் - யுவதிகள் ஆயுதம் ஏந்தக் காரண காரியமாகியது என்ற கற்பிதங்கள் கதை - வசன அமைப்புகளில் உருவகப்படுத்தப்பட வேண்டும்.

1950 களிலேயே போராட்டம் அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் எழுந்தது. பின்னர் ஆயுதப் போராட்டமாக மாறியபோது, போராட்டத்தில் ஜனநாயகத் தன்மை இருக்கவில்லை எனச் சிங்கள ஆட்சியாளர்களும் சில தமிழ்த் தரப்புகளும் குற்றம் சுமத்தியிருந்தன. சர்வதேச நாடுகள் அந்தக் குற்றங்களைத் தமது புவிசார் அரசியல் - பொருளாதார நலன்களுக்கு ஏற்பச் சாதகமாக்கின.

ஆகவே ஐ.நா.வில் அங்கீகரிக்கப்பட்ட அரசு என்ற கட்டமைப்பில் இருந்து கொண்டு சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்கள் மீது மேற்கொண்ட ஜனநாயகத்துக்கு மாறான வன்முறைகளே ஆயுதப் போராட்டத்தைத் தூண்டியது என்ற பொருள்கோடல் கோட்பாட்டு ரீதியாகப் படக் காட்சிகளில் முன்வைக்கப்பட வேண்டும்.

அப்படி ஜனநாயகத்திற்கு மாறான செயலில் ஈடுபட்ட அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கிய இளைஞர்களை ஜனநாயக வழிக்குத் திரும்புங்கள் என்று கேட்பதானால், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வுக்கு இலங்கை வழி வகுத்திருக்க வேண்டும்.

ஆனால் அதற்கான ஏற்பாடுகள் இன்றி வெறுமனே விடுதலை இயக்கத்தை வன்முறையாளராகச் சிங்கள ஆட்சியாளர்கள் சித்தரித்தனர் என்ற காரண காரியம் படத்தில் காட்சிகளாக வெளிப்பட வேண்டும்.

அந்தக் காரண காரியத்தில் இருந்துதான் தேச விடுதலையை வெளிப்படுத்தும் படக் கதை ஆரம்பிக்கப்பட வேண்டும். ஜனநாயக சோசலிச இலங்கைக் குடியரசு என்பதுதான் இலங்கை அரச கொள்கைத் தத்துவம். இன்றுவரை அதுதான் அரச கொள்கை.

இதனைப் பெயர்ப் பலகையாக மாத்திரம் வைத்துக் கொண்டு 1950 களிலேயே தமிழ் மக்கள் மீது ஏவப்பட்ட வன்முறைக்கு எதிராகவும், தமக்குப் பாதுகாப்புக்காகவும் ஆயுங்களை 1970 களில் கையிலெடுத்த தமிழ் இளைஞர், யுவதிகளை வன்முறையாளர்களாகச் சித்தரிக்க முடியாது.

தமிழ் இளைஞர்கள் கையில் ஏன் ஆயுதங்களைத் தூக்கினார்கள், ஏன் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கைப் பொருளாதாரக் கட்டமைப்புகள், சிங்களக் குடியேற்றங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்பதற்குரிய புரிதல்கள் தேச விடுதலைப் படங்களில் உரிய முறையில் சிலாகிக்கப்பட வேண்டும்.

அது பற்றிய கற்பிதங்களை உரிய முறையில் வசன அமைப்புகள் மூலமாகத் தெளிவுபடுத்தவும் வேண்டும்.

மொழி உரிமைச் சிந்தனை, மொழியைப் பாதுகாத்தல் அதன் வரலாறுகளைத் தேடிப் புதுப்பித்தல், ஈழத்து இலக்கியப் படைப்புகள், போர்க் காலக் கவிதைகள், பெண் விடுதலை, சாதியொழிப்புப் போன்ற தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்களுக்குக் கோட்பாட்டு ரீதியான விளக்கங்கள் போராட்டக் காலத்தில் செயற்பாட்டு முறையில் வகுக்கப்பட்டிருந்தன. இப் பின்புலங்களும் படத்தில் பிரதான கதை - வசன அமைப்புகளாக இருத்தல் வேண்டும்.

மொழி உரிமைச் சிந்தனை, மொழியைப் பாதுகாத்தல் அதன் வரலாறுகளைத் தேடிப் புதுப்பித்தல், ஈழத்து இலக்கியப் படைப்புகள், போர்க் காலக் கவிதைகள், பெண் விடுதலை, சாதியொழிப்புப் போன்ற தமிழ்ப் பண்பாட்டு வழுமியங்களுக்குக் கோட்பாட்டு ரீதியான விளக்கங்கள் போராட்டக் காலத்தில் செயற்பாட்டு முறையில் வகுக்கப்பட்டிருந்தன. இப் பின்புலங்களும் படத்தில் பிரதான கதை - வசன அமைப்புகளாக இருத்தல் வேண்டும்

முதன் முதலில் மொழிப் பிரச்சினை, பின்னர் மொழி உரிமைக்கான மோதல், மொழி விடுதலை, முற்போக்கு எழுத்தாளர் சக்தியினால் நடத்தப்பட்ட மொழி இயக்கம், இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் தேசியப் பரிமாணம், இலங்கைவாழ் தமிழ் மக்களின் தேசிய இனத் தனித்துவம் என்ற அடிப்படையில் பின்னிப் பினைந்துள்ள போது, தாக்குதல் கட்சிகள் மாத்திரம் தேசிய விடுதலையை நியாயப்படுத்தாது.

அத்துடன் சரியான முறையில் போராட்ட வரலாறு தெரிந்தவர்கள், அர்ப்பணிப்புடன் ஈடுபட்டவர்கள், போராட்டம் பற்றி எதிரான விமர்சனங்களை முன்வைத்தவர்கள் எல்லோருடனும் சிறிய உரையாடல் ஒன்றை நடத்தி அதற்கேற்பவே காட்சிகளை வடிவமைக்கவும் வேண்டும்.

உலகில் விடுதலை கோரிப் போராடிய ஏனைய தேசிய இனங்களின் போராட்ட முறைகள் பற்றிய படங்கள், குறும் படங்கள் ஏராளம் உண்டு. அந்தப் படங்களில் ஒன்றையேனும் தமிழ்த்தேசிய விடுதலைப் படத் தயாரிப்பாளர்கள் பார்க்க வேண்டும்.

இவ்வாறான கதை அம்சங்கள் - கூறுகள் இல்லாமல் ஆர்வக் கோளாறில் நல்லது செய்வதாக நினைத்துப் படம் எடுத்துத் தமிழ்த்தேசியம் பற்றிய தவறான வரலாற்றுக் கற்பிதங்களை முன் உதாரணமாக்குவதை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

வன்முறைதான் விடுதலைப் போராட்டமா என்று எதிர்காலத் தமிழ்ச் சந்ததி தலையில் கைவைத்துக் கேள்வி எழுப்பும் அளவுக்கு படத் தயாரிப்பாளர்கள் தங்கள் சுயமரியாதையை இழந்துவிடவும் கூடாது.

எழுபது ஆண்டுகளுக்கும் மேலான கோட்பாட்டு முறையிலான அரசியல் விடுதலைப் போராட்டத்தை வெறும் வன்முறையோடு மாத்திரம் ஒப்பிட்டுப் படம் எடுத்தால், அது உலகத்தமிழர்கள் அனைவரையுமே கொச்சைப்படுத்தும்.

போராட்டத்தின் சரி - பிழைகளை விமர்சிக்கலாம். ஆனால் அதனைக்கூடச் சிலா் சிங்களவர்கள் பக்கமாகவும், வேறு சிலர் இந்தியாவின் குரலாகவும் விமர்சிக்கின்றனர். அதுவும் ஆரோக்கியமானதல்ல.