அதாவது 2009 இல் போரை ஆயுதரீதியாக வெற்றிகொண்டது போன்று, அரசியல் ரீதியாக அதுவும் சர்வதேச அரங்கில் இருந்து ஈழத்தமிழர் விவகாரத்தை முற்றாக நீக்கம் செய்ய மிலிந்த மொறொகொட, சுவிஸ்லாந்தில் தூதுவராகப் பதவி வகிக்கும் சி.ஏ.பிரேமச்சந்திர ஆகியோரை கோட்டாபய நம்பியது போன்று தற்போது ரணிலும் நம்புகிறார்.
ஏறத்தாள கோட்டாபய வகுத்த வியூகமே இது. மைக் பொம்பியோ அமெரிக்க வெளியுறவுச் செயலாளராகப் பதவி வகித்திருந்தபோதே, இந்தியாவைக் கடந்து அமெரிக்காவுடன் உறவைப் பேணும் உத்தி வகுக்கப்பட்டிருந்தது.
போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சர்வதேச பயங்கரவாதத் தடுப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு கோட்டாபயவுக்கும் ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்த பேராசிரியர் றொஹான் குணரட்ன, மிலிந்த மொறகொட, சி.ஏ.பிரேமச்சந்திர ஆகியோர் தற்போது 13 ஐ நீக்கும் விடயத்தில் குறிப்பாக, இந்தியத் தலையீட்டை தவிர்க்கும் உத்திகளை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வகுத்துக் கொடுக்கிறார்கள்.
இதனை மூத்த இராஜதந்திரியான தயான் ஜயதிலக கொழும்பில் இருந்து வெளிவரும் த.ஐலன்ட் என்ற ஆங்கில நாளிதழில் கடந்த ஒக்ரோபர் மாதம் பதினாறாம் திகதி எழுதிய கட்டுரையில் நாசூக்காக விபரிக்கிறார்.
அதாவது ஜெனிவாவில் இந்தியா மாத்திரமே 13 ஐ வலியுறுத்தி வருகின்றது. அது ஒன்றுதான் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்குமான தொடர்பாகவும் உள்ளது.
ஆகவே மேற்படி மூன்றுபேருடைய 13 இற்கும் எதிரான நகர்வுகளைப் பயன்படுத்துவதன் ஊடாக இந்தியத் தலையீட்டை அகற்ற ரணில் முற்படுகிறார் என்ற தொனியைத் தயான் ஜயதிலக தனது கட்டுரையில் வெளிப்படுத்துகிறார்.
13 ஐ அகற்றுவது இலங்கைத்தீவுக்கு ஆரோக்கியமானதல்ல என்ற கருத்தையே அவர் கட்டுரையில் முன்வைத்து ரணிலையும் கண்டிக்கிறார்.
ஆகவே ஈழத்தமிழர் பிரச்சினைக்கு 13 தீர்வு அல்ல. 13 ஐ அடிப்படையாகக் கொண்டு சமஸ்டி முறையை உருவாக்கவும் முடியாது. அதனால் முழுமையான சமஸ்டி முறைதான் தீர்வு என்பதைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 2009 இற்குப் பின்னரான சூழலில் இந்தியாவுக்கு எடுத்துக் கூறியிருக்க வேண்டும்.
இந்திய மாநிலங்களில் சமஸ்டி ஆட்சித் தன்மை கொண்ட ஒற்றையாட்சி முறைக்கு மேலதிகமான அதிகாரங்களை உள்ளடக்கிய அரசியல்தீர்வின் அவசியத்தை இந்தியாவுக்கு ஊட்டியிருக்க வேண்டும்.
இந்தியாவில் பல இனங்கள் வாழ்வதாலும் சீனா - பாகிஸ்தான் போன்ற பெரிய நாடுகள் இந்திய எல்லையில் இருப்பதாலும் அங்கு சமஸ்டி முறையிலான ஒற்றையாட்சி பொருத்தமானது.
ஆனால் இலங்கைத்தீவில் வடக்குக் கிழக்கில் முழுமையான சமஸ்டி ஆட்சிமுறை ஏற்படுத்தினால் மாத்திரமே ஈழத்தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ முடியும். (இலங்கையில் ஒற்றையாட்சித் தன்மையுடைய சமஸ்டி முறைகூட இல்லை)
அத்துடன் இந்தோ - பசுபிக் பிராந்தியத்திற்கும் அது பாதுகாப்பானது என்ற கருத்தியலை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அறிவுசார்ந்து வலியுறுத்தத் தவறியுள்ளது.
2015 இல் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திரமோடி, பல தேசிய இனங்கள் வாழும் நாடுகளில் கூட்டாச்சி முறையே சிறந்த அரசியல் தீர்வு என்று வலியுறுத்தியிருக்கிறார். மோடி, இலங்கை என்று நேரடியாகக் கூறவில்லை.
ஆனாலும், இலங்கை நாடாளுமன்றத்திற்குள் நின்றுகொண்டு அந்தக் கருத்தைப் பகிரங்கப்படுத்தியிருக்கிறார் என்றால், அதனைப் புரிந்துகொண்டு தமிழ்த்தேசியக் கட்சிகள் அவ்வாறான ஆட்சி முறைக்குத் தொடர்ந்து வலியுறுத்திருக்க வேண்டும்.
அத்துடன் இந்திய மாநிலங்களுக்கும் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என மோடியை மையப்படுத்திய பா.ஜா.கவும் தற்போது கூறி வருகின்றது. ஆகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சந்தர்ப்பத்தைச் சரியாகக் கையாளவில்லை.
இந்த டிசம்பர் மாதம் பன்னிரண்டாம் திகதி த.ஐலன்ட் ஆங்கில நாளிதழுக்குச் சம்பந்தன் வழங்கிய நேர்காணாலில் ரணில் மீதும் இந்தியா மீதும் நம்பிக்கை இழந்து காணப்படுவதை அதவானிக்க முடிகின்றது.
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பற்றிச் சம்பந்தன் அந்த நேர்காணலில் வற்புறுத்துகிறார். இந்தியா மாத்திரமல்ல அமெரிக்கா, பிரித்தானியா போன்ற ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் கூட்டுச் சேர்ந்தே ஈழத்தமிழர் விவகாரத்துக்குத் தீர்வு காண வேண்டுமெனவும் இடித்துரைக்கிறார்.
அதாவது தனியாக நின்று ஈழத்தமிழர் பிரச்சினையை இந்தியாவினால் கையாள முடியாது என்று சம்பந்தன் எடுத்துரைக்கிறார்.
ஆனால் ஈழத்தமிழர் விவகாரத்தை இந்தியா மாத்திரம் தனியாகக் கையாள வேண்டுமென்பது புதுடில்லியின் நீண்டகால விருப்பம். ஆனால் தற்போது இந்தியாவையும் 13 ஐயும் நீக்கிவிட்டு அமெரிக்காவோடு சேர்ந்து வேறொரு வடிவில் புதிய தீர்வை முன்வைக்க ரணிலும் முற்படுகின்றார். தனது நகர்வுக்குச் சாதகமாகவும், தன்னைச் சந்தேகப்படாத முறையிலும் இலங்கையில் இந்தியாவுக்கான முன்னுரிமையை ரணில் வழங்கியுமுள்ளார்.
ஆனால் இந்தியாவைக் கடந்து அனைத்து விடயங்களிலும் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுடன் சமந்தரமான முறையில் கையாள வேண்டும் என்பதையே ரணிலுடைய நகர்வுகள் காண்பிக்கின்றன.
2015 இல் ரணில் பிரதமராகப் பதவி வகித்திருந்தபோதும் அமெரிக்க - சீன அரசுகளுடன் இலங்கை சமாந்தரமான உறவைப் பேணும் என்று ரணில் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.
'ரணிலின் சர்வதேச ஆதரவின் மாயை' என்ற கட்டுரையில், தயான் ஜயதிலக. ரணில் விக்கிரமசிங்கவின் மேற்படி அணுகுமுறையைக் கடுமையாகச் சாடுகிறார். எனவே கோட்டாய ராஜபக்சவின் கொள்கையோடு ரணில் பயணிப்பதன் மூலம் ஈழத்தமிழர் விவகாரத்தைச் சர்வதேச அரங்கில் இருந்து ஒதுக்கி அதனை உள்ளக விவகாரமாக மாற்றும் முயற்சி தற்போது வெளிப்படுகின்றது.
புதிய அரசியல் யாப்பின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்று கூறி ரணில் மேற்கொள்ளும் பரப்புரையில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏனைய அங்கத்துவக் கட்சிகள் இணங்கிப் போகக் கூடிய வாய்ப்பும் உண்டு. ஆனால் சம்பந்தனுக்கு அந்த நம்பிக்கை இல்லை. ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும் ரணிலின் புதிய ஏமாற்றுப் புரிகின்றது.
ஆனால் சம்பந்தனின் வயது மூப்பினால் கூட்டமைப்பின் தலைமை மாறுமாக இருந்தால், இந்தியாவைக் கடந்து ரணில் கையாள முற்படும் உத்திக்குள் ஈழத்தமிழர் விவகாரத்தை உட்செலுத்துக்கூடிய ஆபத்துக்கள் நேரலாம்.
ஏனெனில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஆயுத இயக்கங்களைத் தமிழ்த்தேசிய அரசியலில் இருந்து நீக்கம் செய்து தமிழரக் கட்சியை மாத்திரம் தனித்துச் செயற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் சுமந்திரன்.
ஆகவே ஐலன்ட் நேர்காணலின் பிரகாரம் ரணில் மீதும் இந்தியா மீதும் நம்பிக்கை இழந்து காணப்படும் சம்பந்தன், ஈழத்தமிழர் விவகாரம் இனிமேல் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்ற தனது உத்தியை இறுதிக் காலகட்டத்தில் வெளிப்படுத்தியிருந்தாலும், அதனை நேர்த்தியாகக் கொண்டு செல்லக் கூடிய ஆற்றல் மற்றும் இதயசுத்தி உள்ளவர்கள் கூட்டமைப்புக்குள் இல்லை.
அப்படி இருந்தாலும். சுமந்திரனைக் கடந்து எவ்வாறு முன்னெடுக்க முடியும் என்ற கேள்விகளும் இல்லாமில்லை.
2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் உரையாற்றியருந்த சம்பந்தன், போரை முடிவுக்குக் கொண்டு வரவுள்ளதாகவும், அதன் பின்னர் நிரந்த அரசியல் தீர்வு வழங்கப்படும் என்றும் அப்போது கொழும்பில் இருந்த அமெரிக்க, இந்தியத் தூதுவர்கள் 2009 இல் தனது கொழும்பு இல்லத்துக்கு வருகை தந்து உறுதிமொழி வழங்கியதாகச் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆனால் பத்து வருடங்கள் சென்ற நிலையில் இன்னமும் அரசியல் தீர்வு ஏற்படவில்லை என்று கூறியதோடு, அமெரிக்க இந்திய அரசுகள் மீதும் குற்றம் சுமத்தியிருந்தார். தான் ஏமாற்றமடைந்து விட்டதாகவும் அந்த உரையில் கவலை வெளியிட்டிருந்தார்.
அதேநேரம் வடக்குக் கிழக்குத் தமிழ்பேசும் மக்களின் தாயகம் என்று இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருப்பதாகச் சம்பந்தன் ஐலன்ட் நேர்காணலில் கூறியிருப்பது மிகத் தவறு. வரலாற்று வாழ்விடங்கள் என்றே ஒப்பந்தத்தில் உள்ளன.
அப்போதைய இநதியத் தூதுவர் ஜே.என். டிக்சிற் 1998 இல் தான் எழுதிய அசைமென்ற் கொழும்பு (Assignment Colombo) என்ற நூலில் வடக்குக் கிழக்குத் தமிழ் பேசும் மக்களின் தாயகம் (Homeland) என்ற வாக்கியத்தை ஒப்பந்தத்தில் இணைக்க ஜே.ஆர். விரும்பவில்லை என்றும், அதனாலேயே மிகவும் கஷ்டப்பட்டுத் தேடிப் பிடித்து வரலாற்று வாழ்விடங்கள் (Historic) என்ற சொல்லைப் பயன்படுத்தியதாகவும் விபரிக்கிறார். அதாவது ஜே.ஆர்.பிடிவாதமாக நின்றதாகக் கூறுகிறார்.
ஆகவே வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகம் என்று ஒப்பந்தத்தில் இல்லை என்பது நிரூபணமாகிறது. இதனைச் சம்பந்தன் போன்ற மூத்த தமிழ்த் தலைவர்கள் மூடி மறைக்காமல், தமிழ் பேசும் தாயகம் என்ற அங்கீகாரத்துடனேயே அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதையும் இந்தியாவுக்கு வலியுறுத்த வேண்டும்.
இந்தியா அதனை ஏற்குமானால் அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு அதில் பிரச்சினை இருக்காது.
ஆகவே இந்த விடயங்களைப் புரிந்து கொண்டு ஒருமித்த குரலில் தமிழ்த்தரப்பு இந்தியாவை அணுகவில்லை என்பது பட்டவர்த்தனமாகிறது.
இருந்தாலும் ரணில் மேற்கொள்ளும் உத்தியின் ஆபத்தை உணர்ந்து இந்தியா மாத்திரமல்ல, அமெரிக்கா பிரித்தானிய போன்ற நாடுகள் ஒன்று சேர்ந்தே கையாள வேண்டுமெனச் சம்பந்தன் ஐலன்ட் நேர்காணலில் விடுத்துள்ள எச்சரிக்கையையின் பின்னணியை அறிந்து தமிழ்த்தரப்பு இயங்குமாக இருந்தால், ரணில், மிலிந்த மொறொகொட போன்ற சிங்கள இராஜதந்திரிகளின் ஒற்றையாடசிக் கோட்பாட்டைத் தகர்க்க முடியும்.
ரசிய ஆதரவும் இந்தோ - பசுபிக் விவகாரத்தில் அமெரிக்க ஆதரவு என்றும் இரட்டைத் தன்மையுடைய இந்திய வெளியுறவுக் கொள்கை தொடர்பாக அமெரிக்கா பல சந்தர்ப்பங்களில் இந்தியாவுக்குக் கடும் அழுத்தம் கொடுத்திருக்கிறது.
எனவே உக்ரெயன் போர்ச் சூழலில் இந்திய நிலைப்பாடு குறித்து அமெரிக்கா அதிருப்தியடைந்துள்ளதை ரணில் அறியதாவரல்ல. அமெரிக்காவும் ரணிலின் உத்திக்கு ஆதரவும் வழங்கக்கூடும்.
ஏனெனில் உக்ரெயன் போர்ச் சூழலில் உலக அரசியல் ஒழங்கு இன்னமும் ஒரு சமன்பாட்டுக்கு வரவில்லை. ஆகவே அமெரிக்க - இந்தியப் பனிப்போருக்கு மத்தியில், அவசர அவசரமாக இனப்பிரச்சினைத் தீர்வு என்று கூறிக் கொண்டு 13 ஐ அகற்றி இந்தியத் தலையீட்டையும் நீக்கம் செய்து, புதிய அரசியல் தீர்வு என்ற தோற்றப்பாட்டை உருவகப்படுத்த ரணில் எடுக்கும் முயற்சிக்குத் தமிழர்கள் சிலர் ஒத்துழைப்பு வழங்ககக்கூடிய ஆபத்துக்களும் இல்லாமில்லை.
அதாவது கோட்டாபயவின் இந்த நகர்வை அவருடன் சேர்ந்து 2020 இல் கையாளத் தயங்கிய சில தமிழர் தரப்புகள் தற்போது ரணிலுடன் இணைந்து கையாள விரும்பக்கூடும். ஆனால் ரணிலின் இந்த நகர்வில் அரசியல் தீர்வு என்ற கதை வெறுமனே ஒரு உருவகப்படுத்தல் மாத்திரமாகவே அமையும் என்பதில் சந்தேகமேயில்லை.
அத்துடன் ஈழத்தமிழர் விவகாரம் என்பது ஒட்டுமொத்த இலங்கை மக்களின் பிரச்சினையாகவும் ரணில் சித்தரிக்கிறார். முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், சிங்கள மக்கள் எல்லோருக்கும் பிரச்சினை உள்ளது என்று பொதுமையாகக் கூறுவதன் மூலம் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை பற்றிய தமிழ்த்தேசியக் கோட்பாட்டை அகற்றுவதே அதன் பிரதான நோக்கம்.
ஆகவே இறுதியில் பதின்மூன்றும் இல்லை, இந்தியத் தலையீடும் இல்லை என்ற நிலை உருவாகும். 'ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்குப் பிரச்சினைகள் இருக்கலாம். ஆகவே வடக்குக் கிழக்குத் தமிழர்களின் அரசியல் பிரச்சினை வேறு அதனைத் தனியாகவே பேசித் தீர்க்க வேண்டும் என்று சம்பந்தன் ஐலன்ட் நேர்காணலில் அடித்துக் கூறியதன் காரண காரியமும் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
எனவே 13 அரசியல் தீர்வு அல்ல என்பதில் உறுதியாக இருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி போன்ற தமிழ்த்தரப்புகள், இறுதி நேரத்தில் சம்பந்தன் தான் விட்ட தவறுகளை உணர்ந்தோ அல்லது விரும்பியோ விரும்பாமலோ ஐலன்ட் நாளிதழில் முன்வைத்துள்ள சில நியாயங்களை ஒருமித்த குரலில் செயற்படுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய காலகட்டமிது.
எதிர்த்துவிட்டு வெளியில் நிற்காமல், தற்போது உருவாகியுள்ள புவிசார் அரசியல் - பொருளாதார நெருக்கடிக்குள் ஈழத்தமிழர் தொடர்பாகச் சர்வதேசத்தை நோக்கிய சரியான உத்தியை வகுக்க வேண்டும். ஒருமித்த குரலில் கூட்டாச்சி முறைக்கு அல்லது முழுமையான சமஸ்டிக் கோரிக்கையை முன்வைப்பதற்குரிய ஏற்பாட்டை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தற்துணிவோடு நகர்த்த வேண்டிய தருணமிது.
"இலங்கையின் தேசிய பாதுகாப்பை மறுபரிசீலனை செய்தல் புரிந்து கொள்ளுதல் தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் அபாயங்களுக்கு பதிலளிப்பது" என்ற தலைப்பில் கோட்டாபயவின் நிழல் ஆலோசகராக இருந்த பேராசியர் றொஹான் குணரட்ன (Rohan Gunaratna) சிறிலங்கா மிலிற்றரி அக்கடமிக் ஜேர்னல் (Sri lanka Military Academy Jurnal) என்ற ஆங்கிலச் சஞ்சிகையின் இந்த மாதம் வெளியான நான்காவது இதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.
இலங்கையின் தேசிய பாதுகாப்பு பலவீனமாகியுள்ளது எனவும் இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தக் கூடியதாக இல்லை என்றும் அதற்குரிய காரண காரியங்களையும் பேராசிரியர் தனது கட்டுரையில் முன்மொழிந்திருக்கிறார்.
தேசிய பாதுக்காப்புச் சட்டங்கள், இலங்கை இராணுவத்தைப் பாதுகாத்தல், இராணுவத்துக்கு எதிரான இணையத்தளப் பிரச்சாரங்கள் மற்றும் இலங்கையின் காலநிலை. உணவுப் பாதுகாப்பு. சுகாதாரம் ஆகியவற்றை மேற்படுத்த வேண்டிய அவசியம் பற்றிய நீண்ட ஆய்வுச் சஞ்சிகையில் இலங்கையின் ஒருமைப்பாட்டை, அதாவது ஒற்றையாட்சி மற்றும் சிங்கள தேசம் என்பதை நிறுவும் கோட்பாட்டு முறையை அறிமுகம் செய்துள்ளார்.
வடக்குக் கிழக்குப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு அவசியம் இல்லை என்ற தொனியைப் பேராசிரியர் வெளிப்படுகிறார். ரணில் மாத்திரம் அல்ல, இலங்கைத்தீவில் எவர் ஆட்சியமைத்தாலும் றொஹான் குணரட்ன வகுத்த ஆய்வின் அடிப்படையில் இலங்கை நிர்வாகம் அமைய வேண்டும் என்ற பரிந்துரையும் கண்கூடாகத் தெரிகிறது.
எனவே 13 ஐ ஆரம்பப் புள்ளியாக நோக்கி மோடிக்குக் கடிதம் எழுதிய ஆறு தமிழ்த்தேசியக் கட்சிகளும் முழுமையான சமஸ்டிக்கு ஏற்ப இந்தியாவைக் கையாளக்கூடிய உத்திகளை அப்போதே வகித்திருக்க வேண்டும்.
மாறாகச் சிங்கள ஆட்சியாளர்களின் நகர்வை அறிந்து தமது புவிசார் அரசியல் நலனுக்கு ஏற்ப பதின்மூன்றுடன் மட்டுப்படுத்திக் கையாண்ட புதுடில்லியின் போக்குக்கு ஏற்ப தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டதன் ஆபத்துக்களையே, தற்போது ரணில் ஆட்சியில் எதிர்நோக்க நேரிட்டுள்ளது. அதன் வலியை இந்தியாவும் இன்று அனுபவிக்கின்றது.
அதாவது பதின்மூன்றுடன் சேர்த்து இந்தியாவையும் அகற்றி அமெரிக்க- சீன அரசுகளுடன் இந்தியாவைக் கடந்து நேரடி இராஜதந்திர உறவைப் பேண வேண்டும் என்ற சிங்கள ஆட்சியாளர்களின் விருப்பங்களின் ஆபத்துக்களைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பகிரங்கப்படுத்தவில்லை.
அத்துடன் ஈழத்தமிழர்களின் இந்தியா மீதான நம்பிக்கையின் வகிபாகம் எதுவாக இருக்கும் என்பது பற்றி உரிய முறையில் வெளிப்படுத்தவுமில்லை.
வெறுமனே கையாளப்படும் சக்தியாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பயன்படுத்தியதன் பாதக விளைவுகளையே இன்று இந்தியா அனுபவிக்கின்றது. ஈழத் தமிழர்களை திரிசங்கு நிலைக்கும் அது தள்ளியுள்ளது.
தற்போது ரணில் நடத்தவுள்ள பேச்சுக்கு இந்தியா மத்தியஸ்தம் வகிக்க வேண்டுமெனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கோருவது பாதை தவறிய நீதி எனலாம்.