போர் முடிவடைந்த பின்னரும் கூட மக்களை ஐ.நா பாதுகாக்கத் தவறிவிட்டது என்றும் சம்பந்தன் குற்றம் சுமத்தியிருந்தார். ஐ.நா நிபுணர்குழுவும் தவறை ஒப்புக்கொண்டது.
இதன் பின்னணியில் ஜெனீவாவில் 2012 இல் இருந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் குறைந்தபட்சம் ஒன்றையேனும் நிறைவேற்றக் கடும் அழுத்தம் கொடுக்க வேண்டுமென்ற சிந்தனை எதுவுமேயின்றி ஈழத்தமிழர்களுக்குச் சார்பான அரசியல் நிலைப்பாடு என்ற கற்பனைத் தோற்றப்பாட்டைக் காண்பித்துக் கொண்டு தடை என்ற பெயரில் கனடா காய் நகர்த்தியிருக்கிறது.
மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் இலங்கைப் படை அதிகாரிகள் உள்ளிட்ட நான்கு பேருக்கு விதித்துள்ள தடை தொடர்பாக ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சியடைய எதுவுமில்லை.
தடை விதிக்கப்பட்டதால், தனிப்பட்ட முறையில் ராஜபக்ச குடும்பத்துக்கு மாத்திரமே தலைக் குனிவு ஏற்பட்டுள்ளது என்று கூடக் கூற முடியாது. ஏனெனில் ராஜபக்ச குடும்பத்தின் உள்ளூர் பௌத்த தேசிய அரசியல் செல்வாக்கை அது உயர்த்தியுள்ளதாகவே கருத முடியும். கடந்த காலங்களில் கூட இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்களை ராஜபக்ச குடும்பம் அவ்வாறுதான் நன்கு பயன்படுத்தியது.
ஆகவே கனடா விதித்த தடை இலங்கை அரசு (Sri Lankan State) என்ற கட்டமைப்புக்கும் இலங்கையின் இறைமைக்கும் (Sovereignty) அபகீர்த்தி என்று அச்சமடைந்து போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல் மற்றும் மனித குலத்துக்கு எதிரான படுகொலைகளுக்கு இலங்கை பொறுப்புக் கூறும் என்று எவரும் எதிர்பார்க்க முடியாது.
ஈழத்தமிழர்கள் பிரச்சினை என்பது வெறுமனே மனித உரிமை மீறல் விவகாரமல்ல. அது எழுபது ஆண்டுகால அரசியல் விடுதலைப் போராட்டம்.
1958 ஆம் ஆண்டில் இருந்து இலங்கைத்தீவில் ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பு இடம்பெற்று வருவதற்கான ஆதாரங்கள் உண்டு. ஈழத்தமிழ் அமைப்புகள் அவ்வாறுதான் கூறுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் அப்போதைய செயலாளர் நாயகம் பான்கீ மூன் 2010 இல் அமைத்த நிபுணர்குழு அறிக்கை 1948 இல் இருந்து இனப்பிரச்சினை நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
கனடாவில் உள்ள பல புலம்பெயர் அமைப்புகளும் இன அழிப்பு வரலாற்றை அவ்வாறுதான் உறுதிப்படுத்தியுமுள்ளன. ஆகவே இதன் பின்னணியில் கனடா அரசு விதித்த தடை எந்த அடிப்படையில் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையைச் சர்வதேச அரங்கில் நியாயப்படுத்தும் என்ற கேள்விகளே விஞ்சிக் காணப்படுகின்றன.
ராஜபக்ச குடும்பத்துடனும் குறிப்பிட்ட சில இராணுவ அதிகாரிகளுடனும் மாத்திரம் ஈழத்தமிழர்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டம் சுருக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சர்வதேச போர்க்குற்ற விசாரணை, பொறுப்புக்கூறல் போன்ற ஜெனீவா மனித உரிமைச் சபையின் எந்த ஒரு தீர்மானத்துக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் எவருமே கட்டுப்பட்டதாகவும், ஏற்றுக் கொண்டதாகவும் இல்லை.
ஆக, அமெரிக்க - இந்திய அரசுகள் தமக்குரிய புவிசார் அரசியல் நோக்கில் முடிந்தவரை ஜெனீவாத் தீர்மானங்கள் மூலம் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்ததே தவிர, ஈழத்தமிழர் நலன் சார்ந்தது அல்ல என்பதே வெளிப்படை.
கலப்புப் பொறிமுறை விசாரணை என்றும், இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் எனவும் மனித உரிமைச் சபை ஆணையாளர்கள் பரிந்துரைத்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், இலங்கை அதற்கு உரிய பொறுப்பு மிக்க பதிலை வழங்கவில்லை. பகிரங்கமாக மறுத்திருக்கின்றன. நிராகரித்திருக்கின்றன.
இலங்கைப் போர்க் குற்றவாளிகள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது விசாரணை நடத்தும் யுனிவேர்சல் யூறிஸ்டிக்சன் (Universal Jurisdiction) முறையை ஜெனீவா அறிமுகப்படுத்தியபோதும், அதனைக் கூட இலங்கை ஏற்கவில்லை, விரும்பவுமில்லை.
முடிந்தவரை போர்க்குற்ற விசாரணை தேவையில்லை என்றும், அந்த விசாரணையை இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் உள்ளகப் பொறிமுறை மூலம் நடத்த முடியுமெனவும் இலங்கை ஜெனீவாவில் தன்னிலை விளக்கமளித்திருந்தது.
இந்த இடத்தில் அமெரிக்காவைப் பொறுத்தவரை ஏதேனும் ஒரு விசாரணை பொறிமுறைக்கு இலங்கை உட்பட வேண்டுமென அழுத்தம் கொடுத்திருந்தது. ஆனால் இந்தியா, இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்கள் போன்றவை பற்றி வெளிப்படையாக எதுவுமே கூறவில்லை. இன்றுவரையும் இந்தியா அந்த விவகாரத்தில் மௌனமாகவே உள்ளது.
13 ஆவது திருத்தச் சட்டத்தைத் தவிர வேறு எதனையும் இந்தியா ஜெனீவாவில் பேசவேயில்லை.
ஆகவே குற்றச்சாட்டுக்களில் இருந்து இலங்கையைக் காப்பாற்றுகின்ற போக்குகளே ஜெனிவா மனித உரிமைச் சபையின் நீட்சியாகக் காணப்பட்டு வருகின்றன. அதுவும் 2015 ஆம் ஆண்டு மைத்திரி ரணில் அரசாங்கம் அமைந்த காலத்தில் இருந்து இந்த ஆண்டு வரை இலங்கை தப்பித்துக் கொள்ளக்கூடிய சாதகமான சூழல் ஜெனிவாவில் நிலவுகின்றது.
இவ்வாறான நிலையில் இலங்கை தொடர்பாக ஏதேனும் குறைந்த பட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஜெனிவா மனித உரிமைச் சபையின் எதிர்பார்ப்பைத் தாம் நிறைவேற்றுவதாகக் காண்பிக்கும் ஒரு ஏற்பாடாக மாத்திரமே கனடா விதித்த தடையை அவதானிக்க முடிகின்றது.
அத்துடன் இலங்கைப் போர்க் குற்றவாளிகள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது குறித்த அந்த நாடுகள் விசாரணை செய்ய வேண்டும் என்ற யுனிவேர்சல் யூறிஸ்டிக்சன் என்ற முறைக்கு அமைவாகக் கனடாவுக்குள் இவர்கள் நால்வரில் எவரேனும் சென்றால், அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்படும்.
ஆகவே அந்த விசாரணையைத் தவிர்க்கும் நோக்கிலும் தடையுத்தரவை கனடா விதித்தமைக்குக் காரணம் எனலாம்.
அதாவது மகிந்த கோட்டா ஆகியோர் கனடவுக்கு வந்தால் அவர்கள் மீது விசாரணை நடத்தி இராஜதந்திரச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் ஆபத்துக்களைத் தவிர்க்கும் நோக்கில் கனடா இத் தடையை விதித்திருக்கின்றதென்றால், அதில் மாற்றுக் கருத்தில்லை.
ஈழத்தமிழர் நலன் சார்ந்து கனடா செயற்பட வேண்டுமெனக் கருதியிருந்தால், இன அழிப்பு நடந்தது என்று விபரித்திருக்க வேண்டும். அதற்கான வரலாற்று ஆவணங்களைக் கனடாவில் உள்ள ஈழத்தமிழ் அமைப்புகளிடம் கோரியிருக்கவும் வேண்டும்.
ஆனால் கனடா அரசு அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாமல் வெறுமனே ஜெனிவா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா மற்றும் இலங்கை தொடர்பான கருக்குழு நாடுகள் (Core Group) போன்றவற்றின் விருப்பங்களுக்கு ஏற்ப தடை விதித்திருக்கின்றது.
இலங்கை விவகாரம் தொடர்பாக ஜெனீவாவில் செயற்படும் ஜேர்மன் தலைமையிலான கருக்குழு நாடுகள், போர்க்குற்ற விசாரணை மற்றும் மனித உரிமை மீறல் விவகாரங்களில் மென்போக்கையே கடைப்பித்திருக்கின்றன. அதற்குப் பங்கம் ஏற்படாமலேயே கனடா செயற்பட்டிருக்கின்றது.
ஆகவே இத் தடை குறித்த நான்கு பேரையும் காப்பாற்றியுள்ளது எனலாம். கனடாவுக்குச் சென்றால் நிச்சயம் விசாரணை நடக்கும் என்பதால் குறித்த நான்கு பேரும் கனடாவுக்குப் பயணிப்பதை இயல்பாகவே தவிர்த்துக் கொள்வர்.
கனடாவைத் தொடர்ந்து வேறு சில ஐரோப்பிய நாடுகளும் தடை விதிக்குமானால், குறித்த நான்கு பேரும் தடை விதிக்காத நாடுகளுக்குக் கூடப் பயணம் செய்வதை இயல்பாகவே தவிர்த்துக்கொள்வர். அதாவது பாதுகாப்பாக உங்கள் நாட்டிலேயே இருங்கள் என்ற செய்தியை ராஜபக்சக்களுக்குக் கனடா சொல்லி வைத்திருக்கிறது.
ஆகவே ஜெனீவா மனித உரிமைச் சபை கூறுகின்ற போர்க் குற்ற விசாரணைகளில் இருந்து இலங்கையைக் காப்பாற்றும் ஒரு உத்திதான் கனடாவின் தடை என்பது மற்றுமொரு புரிதல்.
உண்மையில் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை தொடர்பான ஆர்வம் கனடாவுக்கு இருக்குமானால், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கனடாவுக்குச் செல்ல விதிக்கப்பட்டிருக்கும் தடையைக் கனடா நீக்க வேண்டும்.
அவ்வாறு தடை நீக்கப்பட்டுக் கனடாவுக்குள் பிரவேசித்து அங்கு வாழும் புலம் பெயர் ஈழத்தமிழர்கள் மத்தியில் தமிழ்த்தேசிய அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்குக் கனடா அனுமதி வழங்குமா?
கனடா அரசின் பார்வையில் மகிந்த, கோட்டா ஆகியோர் போர்க் குற்றவாளிகள், மனித உரிமை மீறியவர்கள் என்ற கருத்து உறுதியாக இருக்குமானால், தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்குக் கனடாவுக்குப் பயணிக்க அனுமதிக்க வேண்டுமல்லவா?
சுமந்திரன், சாணக்கியன் கனடாவுக்குள் செல்ல முடியுமென்றால், கஜேந்திரகுமாருக்கு அனுமதி மறுப்பதன் பின்னணி என்ன?
அவர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடாத ஒருவா். தமிழ்த்தேசிய அரசியலை ஜனநாயக வழியில் முன்னெடுத்துச் செல்கிறார். ஆகவே அவ்வாறான ஒரு அரசியல் பிரதிநிதி கனடாவுக்குச் சொல்ல ஏன் தடை விதிக்க வேண்டும்?
கஜேந்திரகுமார் முன்வைக்கும் அரசியலில் கனடாவுக்கு பிரச்சினை உண்டென்றால், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை தொடா்பாகக் கனடா அரசின் நிலைப்பாடென்ன?
இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துச் செல்லக் கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் அணுகுமுறையைத்தான் கனடா விரும்புகின்றதா?
ஆகவே தடை நீக்கம் எதனை வெளிப்படுத்துகின்றது? 2012 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்கா ஜெனீவா மனித உரிமைச் சபையில் முன்வைத்த தீர்மானம் முதல் இன்று வரை அமெரிக்க - இந்திய அரசுகள் இலங்கை தொடர்பாக என்ன நிலைப்பாட்டை எடுத்திருந்ததோ, அதற்கு மேலும் வலுச் சேர்ப்பதாகவே தடை அமைந்துள்ளது.
ஈழத்தமிழர் தொடர்பாக நோ்மையான அரசியல் பார்வை கனடா அரசுக்கு இருந்திருக்குமானால், குறித்த நான்கு பேருக்கும் தடை விதித்த அன்றைய தினமே கஜேந்திரகுமார் கனடாவுக்குப் பயணிக்க முடியும் என்று அறிவித்திருக்க வேண்டும்.
அல்லது தனிப்பட்ட முறையில் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். (கஜேந்திரகுமார் கனடாவுக்குச் செல்ல முடியாது என்ற தடை பகிரங்கமாக அறிவிக்கப்பட்டதல்ல)
ஆகவே புவிசார் அரசியல் - புவிசார் பொருளாதாரத்தை மையமாக் கொண்டு அரசுக்கு அரசு என்ற அணுகுமுறையில் இராஜதந்திர வியூகங்கள் வகுக்கப்பட்டுக் காய் நகர்த்தப்படுகின்றதே தவிர, போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் நலன் கருதியல்ல என்பது இங்கு பகிரங்கமாகிறது.
அமெரிக்கா, கனடா போன்ற மேற்குலக நாடுகளும் ஐரோப்பாவும் மற்றும் இந்தியாவும், தத்தமது புவிசார் அரசியல் வியூகங்கள் - நலன்களுக்காகப் பாதிக்கப்பட்ட சமூகங்களின் அரசியல் விடுலைக் கோரிக்கைகளையும் அதன் நியாயங்களையும் தொடர்ச்சியாக மறுதலித்துக் கொண்டே வருகின்றன.
பாலஸ்தீனம், மற்றும் ஈழத்தமிழர் விவகாரங்கள் சிறந்த உதாரணங்கள். உலகில் விடுதலை கோரிப் போராடுகின்ற தேசிய இனங்களைப் பிரித்தாளுவது, தமக்குரியவாறு கையாளுவது மற்றும் தேசிய இனங்களை ஒடுக்குகின்ற அரசுகளைப் பாதுகாப்பது போன்ற அறமற்ற அரசியல் சர்வதேசத்தில் தற்போது மேலோங்கி நிற்கின்றன.
இந்த உலக ஒழுக்கமற்ற வஞ்சக அரசியல் செயற்பாடுகளின் பின்னால் உள்ள ஆபத்துக்களைப் புரிந்துகொள்ளாமல், அதனைச் தமக்குச் சாதகமாகக் கருதிப் புலம்பெயர் நாடுகளில் உள்ள சில ஈழத்தமிழ் அமைப்புகள் ஆதரவு கொடுக்கின்றன.
அமெரிக்கா, இந்தியா போன்ற மேற்கு நாடுகளின் பேச்சுக்களை நம்பி இலங்கையில் முதலீடுகளைச் செய்யவும் சில புலம்பெயர் அமைப்புகள் ஆர்வம் காட்டுகின்றன.
ஆகவே தனிப்பட்ட முறையில் ராஜபக்ச குடும்பத்துக்கும் இலங்கை படைகளின் ஒரு சில அதிகரிகளுக்கும் மாத்திரம் தடை விதிக்கப்படுவதால் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு என்ற கட்டமைப்பு இன அழிப்பில் ஈடுபடவில்லை என்ற தவறான கற்பிதம் உலகில் தோற்றம் பெறும்.
அத்துடன் குறிப்பிட்ட ஒரு சில சிங்கள ஆட்சியார்கள்தான் ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள் என்று உலகம் பேசக் கூடிய ஆபத்துக்களும் உண்டு.
எனவே கனடா அரசு விதித்துள்ள தடை ஈழத்தமிழர்களுக்கான சர்வதேச நீதியை முழுமையாகப் பாதித்துள்ளது என்றே பொருள்கொள்ள வேண்டும்.