செபி (SEBI) எனப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை சபை (Securities and Exchange Board of India) அதானி குழுமத்தை விசாரணை நடத்த வேண்டுமெனவும் காங்கிரஸ் கோரியதால் மோடியின் பொருளாதாரத் திட்டங்களுக்குப் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளுக்கு நிதியுதவி வழங்குவதாகக் கடந்த வாரம் கொழும்பில் அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்திருந்த நிலையில் அமெரிக்க முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை வெளிவந்துள்ளமை மோடி அரசுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் பிரதான அரசியல் கட்சியான காங்கிரஸ் விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளமை இந்திய அரசியல் - பொருளாதாரச் செயற்பாடுகளில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதை இந்திய ஆங்கில ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன.
அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதானி குழுமம் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை ஏசியன்நியூஸ் செய்தி நிறுவனம் உள்ளிட்ட பல இந்திய ஆங்கில நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன.
"அதானி குழுமம் பங்குசந்தையில் ஏராளமான மோசடி வேலைகள் செய்துள்ளது" என்று அந்தச் செய்தி நிறுவனம் விமர்சித்துள்ளது.
இரண்டு வருடங்களாக அதானி குழுமம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு இந்திய மதிப்பில் பதினேழாயிரத்து எண்பது இலட்சம் கோடி ரூபா நிதியை அதானி குழுமம் பங்குச்சந்தையில் மோசடி செய்து, பங்குகளை மாற்றியமைத்துள்ளதாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி குறித்த செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் மோசடி குற்றச்சாட்டினால், அதானி குழுமத்தின் பங்குகள் இந்திய மதிப்பில் நாற்பத்தாறாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதானி குழுமம் கூறியுள்ளது. அத்துடன் அமெரிக்க நிறுவனத்தின் குற்றச்சாட்டு உண்மைக்கு மாறானது என்றும் அதானி குழுமம் மறுத்துள்ளது.
ஆனால் அமெரிக்க நிறுவனமான ஹிடன்பெர்க் தமது ஆராய்ச்சியின் உண்மைத் தகவல்களை நியாயப்படுத்தி அதானி குழுமத்தின் நிதி மோசடிகளை விபரித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஹிடன்பெர்க் எனப்படும் தடயவியல் முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனம் இந்த விசாரணையை நடத்தி வந்தமை உலகறிந்த உண்மை. அதன்படி அதானி குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான கௌதம் அதானியின் தேறிய சொத்து மதிப்பு சுமார் நூற்று இருபது பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் நூறு பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக உயர்ந்து தற்போதைய தேறிய வருமானத்தை அடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை அதானி குழுமத்துக்குச் சொந்தமான ஏழு மிக முக்கியமான பொது வர்த்தக நிறுவனங்களும் சராசரியாக எண்ணூற்றுப் பத்தொன்பது சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் ஹிடன்பெர்க் தமது ஆராய்ச்சி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அதானி குழும நிறுவனத்தில் முன்னர் பணியாற்றிய மூத்த நிர்வாகிகள், நிறுவனத்தில் பணியாற்றிய வேறு பல அதிகாரிகளிடமும் வாக்கு மூலங்கள் பெறப்பட்டிருக்கின்றன. ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் அதானி குழுமம் அரசாங்கத்திற்கு எதிராக நான்கு முக்கிய மோசடிகளில் ஈடுபட்டுள்ளது, அவற்றின் மதிப்பு சுமார் பதினேழு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட இந்த அறிக்கையை அடுத்து அதானி தேற்றல் கேஸ் லிமிட்டட் (Adani Total Gas Limited-ATGL), அதானி எண்டர்பிரைசஸ் (Adani Enterprises Ltd - AEL), அதானி ரான்ஸ்மிஷன் (Adani Transmissions), அதானி கிரீன் எனேர்ஜி (Adani Green Energy Ltd - AGEL), அதானி போர்ட்ஸ் மனேஜ்மன்ற் (Adani Bird Management), அதானி பவர் லிமிட்டெட் (Adani Power Stock) மற்றும் அதானி வில்மர் (Adani Wilmar) ஆகியவற்றின் பங்குகள் சுமார் நான்கு சதவீதம் வரை குறைவடைந்துள்ளன.
இதன் பிரகாரம் அதானி குழுமத்தின் ஏழு பங்குகள் சந்தை மதிப்பில் சுமார் நாற்பத்தாறாயிரத்து எண்பத்து ஆறு கோடி ரூபாவை இழந்துள்ளன. அதானி டோட்டல் கேஸ் பன்னிரண்டாயிரத்து முந்நூற்று அறுபத்து ஆறு கோடி ரூபாவையும், அதானி போர்ட்ஸ் எண்ணாயிரத்து முந்நூற்று நாற்பத்தி இரண்டு கோடி ரூபாவையும் அதானி ரான்ஸ்மிஷன் எண்ணாயிரத்து முப்பத்து ஒன்பது கோடி ரூபாவையும் இழந்துள்ளதாக தினச்சுவடு செய்தி இணையம் கூறுகின்றது.
அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி, ஜுஷேிந்தர் சிங் குறித்த அமெரிக்க நிறுவனத்தின் அறிக்கையை முற்றாக நிராகரித்துள்ளார். அந்த அறிக்கையால் அதானி குழுமம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் இது தேர்ந்தெடுக்கப்பட்ட தவறான தகவல் மற்றும் பழமையான, ஆதாரமற்ற மற்றும் மதிப்பிழந்த குற்றச்சாட்டுகளின் தீங்கிழைக்கும் கலவையாகும் என்று விபரித்திருக்கிறார்.
ஆனால் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அல்லது அவரது நெருங்கிய நண்பர்களினால் குறைந்தபட்சம் 28 ஷெல் நிறுவனங்கள் இயக்கப்பட்டதாக அமெரிக்க நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் இந்தியாவின் மிகப் பெரிய முதலீட்டாளரான அதானியின் அடுத்த வர்த்தகச் செயற்பாடுகளுக்குப் பாரிய தடை என்றும் ஏசியன்நியூஸ் நிறுவனம் வர்ணித்துள்ளது.
அதேவேளை, அதானி குழுமம் சட்ட நடவடிக்கை எடுத்தாலும் அதைபற்றி கவலைப்படமாட்டோம் என்றும் சட்டரீதியாக அதனை எதிர்கொள்வோம் என்றும் அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் சென்ற வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
அதானி குழுமத்திடம் இருந்து தங்களின் நிதி மோசடி அறிக்கையின் பிரகாரம் ஆவணங்களை கேட்போம் என்று ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் சவால் விடுத்துள்ளது. இந்த அறிக்கையினால் ஒரே நாளில் மட்டும் இந்திய மதிப்பில் ஐம்பத்து ஐயாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஏசியன்நியூஸ் கூறுகின்றது.
ரசிய - உக்ரெயன் போரில் இந்தியா ரசியாவுக்கு ஆதரவாகச் செயற்படுவதால் அமெரிக்கா இந்தியாவுக்குக் கடும் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், அதானி குழுமத்திற்கு எதிரான இக் குற்றச்சாட்டுக்கள் இந்தியப் பங்குச் சந்தையில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்துமென மோடிக்கு ஆதரவான இந்திய ஊடகங்கள் அலறுகின்றன.
அமெரிக்கா இந்தியாவை ஒருபோதும் பகைத்துக்கொள்ளாது. ஆனால் இந்தோ பசுபிக் விவகாரம் உள்ளிட்ட தெற்காசியப் பிராந்திய அரசியல் - பொருளாதாரச் செயற்பாடுகளில் இந்தியா தமக்கு ஆதரவாக இருக்க வேண்டுமென்றே அமெரிக்கா விரும்புகின்றது.
இதன் காரணமாகவே இந்தியாவுக்கு அமெரிக்கா கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றது. குறிப்பாக அயல்நாடான பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா திடீரென உதவியளிக்கின்றது. பாகிஸ்தான் படைகளை மேலும் வலுப்படுத்தும் செயற்பாடுகள் மற்றும் காஸ்மீர் எல்லைப் பகுதிகளுக்குப் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதுவர் சென்று வருவது போன்ற செயற்பாடுகள் இந்தியாவுக்குக் கொடுக்கும் அழுத்தமாகும்.
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா பாகிஸ்தானுடன் நெருக்கமாகச் செயற்படுவதாக பாகிஸ்தான்ரூடே என்ற ஆங்கில நாளிதழ் கூறுகின்றது.
இருதரப்பு மற்றும் பிராந்தியத்தில் இரு நாடுகளின் பகிரப்பட்ட இலக்குகளை முன்னேற்றுவதற்குக் கட்டமைக்கப்பட்ட மற்றும் பரந்த அடிப்படையிலான அமெரிக்க - பாகிஸ்தான் ஈடுபாடு முக்கியமானது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷேரபாஸ் ஷெரிப் 25 ஆம் திகதி வெள்ளியன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக பாகிஸ்தான்ருடே ஆங்கில செய்தித்தளம் தெரிவித்துள்ளது.
ஷோபாஸ் ஷெரிப் பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதுவர் டொனால்ட் ப்ளோமுடன் வியாழக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறியிருக்கிறார்.
அமெரிக்க ஆதரவுடன் கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான் கானைப் பிரதமர் பதவியில் இருந்து கவிழ்த்து புதிய பிரதமராகப் பதவியேற்ற ஷோபாஸ் ஷெரிப், இம்ரான் கானின் சீனா மற்றும் ரசிய ஆதரவுக் கொள்கைகளை மாற்றியமைத்து அமெரிக்காவுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்.
இந்த இடத்தில் இலங்கையைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முற்படும் இந்தியா, தற்போது இலங்கைக்குக் கூடுதல் கடன் வழங்க இணங்கியிருக்கிறது. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சென்ற 19 ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்புக்கு வந்தபோது. சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் கடன் வழங்குநர்கள் கடன் மறுசீரமைப்பில் தாமதத்தை ஏற்படுத்தினால், இந்தியா உதவியளிக்கும் என்று உறுதியளித்திருந்தார்.
இதனை அமெரிக்கா, இராஜதந்திர நோக்கில் வரவேற்றுள்ளதுடன் அமெரிக்காவும் இலங்கைக்கு உதவியளிக்கும் என்று கொழும்பில் உள்ள தூதுவர் உடனடியாகவே கூறியிருந்தார். அதனையடுத்து அமெரிக்காவுக்குச் சார்பான ஐரோப்பிய நாடுகளும் இலங்கைக்கு உதவியளிப்பதாக உறுதியளித்திருக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான உத்தரவாதங்களை வழங்கி இலங்கைக்கு உதவுவதற்கு ஐக்கிய இராச்சியம் முன்வந்துள்ளது.
பாரிஸ் கிளப் மற்றும் பாரிஸ் கிளப் அல்லாத கடன் வழங்குபவர்களுக்கு இடையிலான இலங்கையின் உத்தேச ஒருங்கிணைப்புக்கு ஐக்கிய இராச்சியம் முழுமையாக ஆதரவளிப்பதாக ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக இராஜாங்க அமைச்சர் அன் மேரி ட்ரெவெல்யன் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சென்ற 26 ஆம் திகதி வெள்ளியன்று அறிவித்திருக்கிறார்.
ஆகவே இந்திய உதவிகளை மீறி இலங்கைக்கு நிதியுதவி வழங்குவதன் மூலம் இந்தியாவுக்கு அமெரிக்கா பாடம் கற்பிக்கின்றது அல்லது இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து ரசிய உறவில் இருந்து விலகி முற்றாக அமெரிக்காவோடு நிற்க வேண்டும் என்ற செய்தியை அமெரிக்கா கொடுத்திருக்கின்றது எனலாம்.
ரசியாவுக்கு எதிரான போரில் உக்ரெயன் அரசுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வெளிப்படையாகவே இராணுவ உதவிகள் மற்றும் நிதியுதவிகளை வழங்குகின்றன. ஆனாலும் போரில் ரசியாவின் ஆதிக்கம் அதிகரித்தே வருகின்றது.
இதன் காரணமாகவும் ரசியாவுக்கான ஆதரவை இந்தியா விலக்கித் தம்மோடு நிற்க வேண்டுமென அமெரிக்கா விரும்புகின்றது.
ஆகவே அமெரிக்க இந்தியப் பனிப்போர் ஜனாதிபதி ரணிலுக்குத் தெரியாததல்ல. இந்தியாவைக் கடந்து அமெரிக்காவுடனும் சீனாவுடனும் சிறிய நாடு என்ற வகையிலும், பிராந்தியத்தில் இலங்கை முக்கியமான நாடு என்ற அந்தஸ்த்தை உயர்த்த வேண்டும் என்பதிலும் நுட்பமாகக் காய்நகர்த்தும் ரணில், அதானி குழுமத்துக்கு எதிரான அமெரிக்க நிறுவனத்தின் குற்றச்சாட்டுக்களை இலங்கைக்குச் சாதகமாகக் பயன்படுத்தவும் கூடும்.
கொழும்புத் துறைமுக மேற்கு முனையத்தின் அபிவிருத்திகளை அதானி குழுமத்துக்கு வழங்கும் ஒப்பந்தம் 2021 செப்ரெம்பரில் கைச்சாத்திட்டபோதும், அதற்குரிய அபிவிருத்திச் செயற்பாடுகளை அதானி குழுமத்துக்கு வழங்க இலங்கை விரும்பவில்லை. பௌத்த சிங்கள கடும் எதிர்ப்புகளைக் காரணம் காண்பித்து, இலங்கை அதானி குழுமத்துக்கான அனுமதியைத் தாமதிக்கின்றது.
இருந்தாலும் மன்னாரில் காற்றாலை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதலீடுகளைச் செய்ய அதானி குழுமத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதானி குழுமத்துக்கு முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டுமென பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு நேரடி அழுத்தம் கொடுத்தார் என்றுகூட சிங்கள ஆங்கில ஊடகங்கள் அப்போது குற்றம் சுமத்தியிருந்தன.
இந்த நிலையில் அமைச்சர் ஜெய்சங்கர் இந்த மாதம் கொழும்புக்குப் பயணம் செய்தபோது நடத்திய பேச்சுக்களில், இலங்கையில் இந்தியாவுக்குரிய முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்திருந்தார். குறிப்பாக அதானி குழுமத்துக்கு இலங்கையில் முதலிட மேலும் சில அனுமதிகளை வழங்குவது பற்றியே பேசியிருந்தார்.
ஆனால் இலங்கைக்கு உதவ இந்தியா பயன்படுத்திய இலங்கையின் பொருளாதார நெருக்கடியைக் காரணம் கூறி, அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இலங்கைக்கு உதவியளிக்க முன்வந்துள்ளன.
இந்தப் புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிகளை நன்கு அவதானிக்கும் ரணில், இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கக்கூடிய உத்திகளைப் புதுவடிவத்தில் தற்போது வகுக்க ஆரம்பித்துள்ளார்.
அத்துடன் இந்தியாவுக்கான முக்கியத்துவத்தைக் குறைப்பது குறிப்பாக தமிழர் தாயகமான வடக்கில் அதானி குழுமத்துக்கு வழங்கிய முதலீட்டு அனுமதிகளை மறுப்பது மற்றும் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதாகக் கூறிக் கொண்டு காலத்தைக் கடத்துவது போன்ற உத்திகளையும் ரணில் தீவிரப்படுத்தச் சந்தர்ப்பம் இல்லாமலில்லை.
குறிப்பாக அமெரிக்க - சீனா ஆகிய நாடுகளுடன் நேரடி உறவுகளைப் பேண வேண்டும் என்ற இலங்கையின் விரும்பம் நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஆனால் ரசிய உறவை முற்றாகக் கைவிட்டு அமெரிக்காவுடன் இந்தியா முழுமையாக நெருங்கிச் செயற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் ஒருபோதும் வந்துவிடாது. அமெரிக்காவும் முழுமையாக இந்தியாவைப் பகைத்துக்கொள்ளும் சூழல் இல்லை.
பாகிஸ்தான் இலங்கை போன்ற நாடுகளை நேரடியாகக் கையாண்டு அழுத்தம் கொடுக்கலாமே தவிர, இந்திய உறவை அமெரிக்கா ஒருபோதும் நேரடியாக முறித்துக் கொள்ள முற்படாது.
ஆனால் இப்புவிசார் அரசியல் போட்டிகள் நீடித்தால், ரணில் அதனைப் பயன்படுத்தி இந்தியத் தலையீட்டை நீக்கம் செய்து ஈழத்தமிழர் விவகாரத்தை முற்று முழுதாக உள்ளக விவகாரமாக மாற்றிவிடுவார் என்பது மாத்திரம் பட்டவர்த்தனம்.
ஏனெனில் பிராந்தியத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறிப்பாக வட இந்தியாவைப் பாதுகாப்பதில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல்களினால், ஈழத்தமிழர் விவகாரத்தில் கவனம் செலுத்தக்கூடிய நிலைமை இல்லை. ஆகவே 13 ஐ தீர்வாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற தொனியை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழ்த்தேசியக் கட்சிகளுடனான சந்திப்பில் வெளிப்படுத்தியதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன.
அதானி குழுமத்தின் நிதி மோசடிகளை விசாரணை நடத்த வேண்டுமெனக் காங்கிரஸ் கோரியதால், காங்கிரஸ் ஆதரவு அம்பானியை ஓரப்படுத்தி அதானியை முன்னிலைப்படுத்திய மோடி அரசுக்கு உள்ளூர் அரசியலிலும் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.