அறிவுடை அமைச்சனாக வள்ளுவ நெறிப்படி நின்றவன் சுமந்திரன் என்ற தலைப்பில் உரையாற்றிய செல்வவடிவேல், நிர்வாகத்தில் வேதியரை நியமிக்காதே, உறவுக்காரனைச் சேர்க்காதே, வணிகனைச் அமைச்சராக்காதே என்று ஒளவையார், கூறியதாகக் குறிப்பிட்டு, நல்ல உள்ளம் படைத்த வேளாளனை நிர்வாகத்தில் சேர்க்க வேண்டும் என்று சொன்னதாகத் தவறான விளக்கம் கொடுத்தார்.
அப்போது தலைமை வகித்த கம்பவாரிதி இ.ஜெயராஜ், இராமாயணத்திலே வருகின்ற தசரதனுடைய மந்திரியான சுமந்திரன், வேளாளன் என்பதற்கு ஒளவையார் பாடிய பாடல் ஆதராங்கள் உண்டா என்று கேட்டார்.
பாடல் ஆதாரம் இல்லை என்று கூறி விவசாயம் செய்பவன், அறுவடை செய்பவன் என்று விளக்க முற்பட்டதன் மூலமாக, வேளாளன் என்று ஒளவையார் கூறியதாக செல்வவடிவேல் திரிபுபடுத்தி ஒப்புவித்தார். ஆதாரம் இல்லாத இச் செய்தியை விவாதத்துக்கு எடுக்க முடியாது என்றார் ஜெயராஜ். ஆனால் முடிவுரையில் அவர் அதற்கு விளக்கம் கொடுக்கவில்லை.
எந்த ஒரு இடத்திலும் வேதியரை (பிராமணனை) நிர்வாகத்தில் சேர்க்காதே என்று ஒளவையார் கூறவில்லை. அப்படியிருக்க வேளாளனை நிர்வாகத்தில் சேர்க்க வேண்டும் என்று கூறியிருப்பாரா?
மூன்று பெண் புலவர்கள் பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்கு முன் ஒளவை எனும் பெயருடனும் ஒரே குணாம்சங்களோடும் புலமையோடும் வெவ்வேறு கால கட்டங்களில் தமிழகத்தில் வாழ்ந்தனர், கவியும் பாடியதாக இலக்கிய வரலாறு கூறுகின்றது.
கடை ஏழு வள்ளல்கள் வாழ்ந்த காலத்தில் முதலாம் ஒளவை வாழ்ந்தார். இரண்டாம் ஒளவை பக்தி இலக்கியப் புலவர்களாகிய சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோர் காலத்திலும், மூன்றாம் ஒளவை கம்பர், புகழேந்தி, சயங்கொண்டார், சேக்கிழார், ஒட்டக்கூத்தர் ஆகியோர் வாழ்ந்த காலத்திலும் வாழ்ந்துள்ளனர்.
இந்த மூன்று ஒளவையார்களும் சாதி மதத்தைச் சொல்லிப் பாடல் இயற்றியதாக அறியப்படவில்லை. இவர்கள் மேன்மக்கள் என்று கூறியது சிறந்த பண்பாடுள்ள மக்களையே.
ஆனால் கம்பன் பெயரில் விழா நடத்தி விவாதம் செய்யும் ஈழத்தமிழ் அறிஞர் எனப்படுவோர் சிலர் வள்ளுவன், ஒளவை கூறிய மேன் மக்கள் என்பதை மேட்டுக்குடி மக்களுக்கான புரிதலாகவும், கற்றோர் கல்லாதோர் என்று வேறு படுத்தியும் வட இந்திய வழிபாட்டு முறைகளை இங்கு புகுத்தும் நோக்கிலும் தமது வாதங்களை நியாயப்படுத்துகின்றனர்.
கம்பராமாணம் பற்றிய ஒளவையார் பாடல்களிலும் சாதி மதங்கள் இல்லை. ஆனால் வள்ளுவன், ஒளவையார் பாடல்களுக்கான பொருள் விளக்கம் என்ற போர்வையில், தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற முறையிலும் சாதி சமயச் செருக்குடன் விவாதித்து மக்கள் மத்தியில் இதுதான் தமிழ்ப் பண்பாடு என்ற தவறான கற்பிதங்களை ஏற்புடையதாக நிறுவ விளைகின்றனர்.
"அட்டாலும் பால் சுவையிற் குன்றாது அளவளாய் நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" என்பது ஒளவையார் அருளிய மூதுரை.
அதாவது பாலினை எவ்வளவு காய்ச்சினாலும் அதன் சுவை குறையாது. கடலில் விளையும் சங்கினை நெருப்பில் இட்டுச் சுட்டு நீறாக்கினாலும் அதனுடைய வெண்மை நிறம் மாறவே மாறாது. அதேபோல் அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த மேன்மக்களாகிய நல்லோர் வறுமையுற்று வாடும் காலையிலும், தமது உயரிய குண நலன்களில் இருந்து சிறிதும் விலகிச் செல்லமாட்டார்.
ஆனால் நட்பின் மேன்மையை அறியாக் கீழோர், எத்துணை நெருக்கமாக எங்களுடன் பழகினாலும், அவர் எங்களுக்கு உற்ற நண்பராக எக்காலத்திலும் இருக்க மாட்டார் என்பதே அப் பாடலின் பொருள்.
இராமாயணம் ஒரு புனையப்பட்ட கதை (Fabricated Story) அது உண்மை அல்ல. தசரதன் அயோத்தில் அறுபது ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்று ஆரம்பித்து வள்ளுவரின் அரசியல் நிர்வாக நெறிப்படி ஈழத்தமிழ் இன விடுதலைப் போராட்டம் நடக்கவில்லை என்ற தொனியிலும், தவறான ஒரு தலைவன், திருத்த முடியாத ஒரு தலைவன் என்று இராமாயணக் கதைகளில் வரும் கற்பனைக் கதாபாத்திரங்களைத் தமிழர் அரசியல் விடுதலைப் போராட்டத்துடன் ஒப்பிட்டுக் குத்திக் காண்பிக்கின்றனர்.
புனை கதையான வால்மீகி இராமாயணத்தைக் கம்பன் தமிழில் மொழி பெயர்த்தபோது, தமிழ்ப் பண்பாட்டு முறைகளுக்கும் தமிழர்களின் வைணவ நெறிக்கு ஏற்பவுமே எழுதினான். வட இந்திய வாழிபாட்டு முறைகள் எதனையும் கம்பன் தனது இராமாயணக் கதைகளில் புகுத்தவேயில்லை.
"உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகு" என்று கம்பராமாயாணத்தில் கம்பன் பாடிய முதற் பாயிரத்திலேயே தமிழ்ப் பண்பாட்டையும் சமயம் அற்ற கருவூலங்களையும் தமிழியல் நெறிகளையும் கம்பன் விபரிக்கிறாா்.
ஆகவே கம்பராமாயணம் வெறுமனே மொழி பெயர்ப்பு என்று கற்பிதம் செய்ய முடியாது. வால்மீகி இராமாயணத்தை உள்வாங்கித் தமிழ்ச் சமூகத்தின் மரபுரிமைகளை மையப்படுத்திச் சற்று வேறுபட்டதாக இராமாயணத்தைப் பாடியிருக்கிறார் கம்பன்.
இராமனைக் கடவுள் என்று எந்த இடத்திலும் கம்பன் சொல்லவில்லை. இராமன் ஒரு மனிதன் என்ற பார்வையுடன் கம்பன், இராமன் என்ற கதாபாத்திரத்தைத் தமிழ் கதைக்குள் முக்கியப்படுத்தி வடிவமைத்துள்ளான். வால்மீக இராமாயணத்தில் இராமன் வலுவிழந்த மன்னன் என்றுதான் அர்த்தப்படுகிறது.
ஆனால் கம்பன் கழகம், இராமனைத் தெய்வமாகவும், தமிழர்களின் பாண்பாட்டுக்குரிய மன்னாகவும் உருவகப்படுத்துகின்றது. இலங்கையின் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறை வினாத் தாள்களில் கம்பராமாயணம் தமிழ் பண்பாட்டின் கருவூலம் என்றுதான் வினாவப்படுகின்றது.
தொல்காப்பியத்தில் இருந்து திருக்குறள் தொடங்கித் தமிழ்ச் சமூகத்தின் செவ்வியல் இலக்கியங்களில் (Pure Tamil literature) சாதியம் பற்றிய கோட்பாடுகளே இல்லை.
வட இந்தியர்களின் வேதங்கள் ஊடாக வர்ணாச்சிரமதர்மக் கோபாட்டில் இருந்துதான் சாதியம் எழுந்தது. பிரமாணர் சைத்திரியர் வைசிகர், சுத்திரர் என்ற முறையில் எழுந்து தமிழகத்தில் ஊடுருவி ஈழத்தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு பெயர் வடிங்களில் தோன்றியிருக்கின்றன.
பி்ன்னாளில் தமிழர்களைப் பிரித்தாள வசதியாகப் பிரித்தானியர் மேலும் ஊக்குவித்த சாதிமுறையையும், அதன் ஊடான சமூக ஏற்றத் தாழ்வுகளையும், விவாதம் என்ற பெயரில் தமிழ் நாகரிகமாகக் காண்பித்துத் தமிழ்த் தேசிய அரசியல் சிந்தனைகளைக் கம்பன் கழகம் மடைமாற்ற முனைகிறது.
மூட நம்பிக்கைகள், வட இந்தியர்களின் கலை கலாசாரங்கள் ஏற்புடையவை என்ற போதனைகளும் திணிக்கப்படுகின்றன. அத்துடன் தமிழ்ச் சைவ நீதி (Tamil Saiva Justice Ideologies) என்ற சித்தாத்தங்களைக் குறைத்து மதிப்பிடும் திட்டமாகவும் இதனைக் கருத முடியும்.
அறிவுடை அமைச்சனாக வள்ளுவ நெறிப்படி நின்றவன் அனுமன் என்ற தலைப்பில் உரையாற்றிய பேராசிரியர் வரதராஜன் ஸ்ரீபிரசாந்தன் காப்பாற்றக்கூடிய தலைவனைத் தான் காப்பாற்றலாம் என்று வாலியை மேற்கோள்காட்டி, தேசத்தைப் பலியாக்கிவிடக் கூடாது என்கிறார்.
"வலியோருடைய சேதத்துக்கு இருக்கின்ற மதியுகம், எதிரிக்குச் சமனான தேசத்தில் இருக்கிற மதியுகம் எதிரியுடைய வலிந்த தேசத்துக்கு இருக்கிற மதியுகமும் ஒன்றாக இருக்க முடியாது. அமெரிக்கா எடுக்கும் முடிவைப் போல இலங்கை எடுக்க முடியாது" என்று உதாரணம் கூறுவதுபோன்று 2009 இல் நடந்த போரை ஏளனம் செய்கிறார்.
இதற்கு 'உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்' என்ற குறளை மேற்கோள்காட்டுகிறார்.
அதாவது இடம் சிறியது, அரசனும் சிறியவன் என்ன செய்யலாம்? உள்ளே இருக்கிற மக்கள் அழுகிறார்கள், எந்த நேரத்தில் எங்களுக்கு எதுவும் நடக்கலாம், எங்கள் பிள்ளைகள் களவாடப்பட்டு விடலாம், நாங்கள் இறந்துபோகலாம் என்று மக்கள் அஞ்சிக் கதறுகிறார்கள்.
இதைப் புரிந்து கொண்டு மக்களுடைய நாடித்துடிப்பை அறியக் கூடிய மந்திரி இருக்க வேண்டும். மக்கள் அஞ்சுவதைப் பார்த்து மந்திரி பயப்பட வேண்டும் என்று வள்ளுவன் சொல்வதாகக் கூறி அந்தக் குறளின் பொருளை விளக்குகிறார் பிரசாந்தன்.
தங்களைவிடப் பெரியவர் ஒருவரைப் பணிந்தாகிலும் தங்களுக்கு நட்பாகக் கொள்ள வேண்டும் என்று வள்ளுவர் சொல்வதாகக் கூறி, 'நாங்கள் பார்க்க மறந்த குறள் என்றும், எங்களுடைய இனம் இவ்வளவு கீழ்மையாகப் போனமைக்கு காரணம்' எனவும் கூறி இக் குறலின் பொருளைத் திரிபுபடுத்தி உதாரணம் காண்பிக்கிறார். இவ்வாறு கூறுவதன் மூலம், இறுதிப் போரைத் தவிர்த்து இலங்கை - இந்திய அரசுகளிடம் புலிகள் பணிந்திருக்கலாம் என்பதைச் சொல்லாமல் சொன்னார்கள்.
கிட்கிந்தை அழியப் போகின்றது கிட்கிந்தையினுடைய முன்னாள் அரசன் சுக்ரீவன் ஒழித்திருக்கின்றான். ஆகவே இராமன் என்ன செய்தான்? வருபவனுக்குப் பணிந்து தங்களுடைய பகைவர்களை நட்பாக்கி அவர்களைவிடவும் உயர்வாகத் தங்களைக் கருதிக் கொண்டு மீண்டும் அந்தத் தேசத்துக்கு முடி சூடித் தேசத்தைக் காத்தானா இல்லையா? என்று உரக்கச் சத்தமிட்டு அழிந்துபோன எம் இனம் என்று பிரசாந்தன் மேலும் ஈழத்தமிழர் போராட்டம் தொடர்பாக ஏதோசொல்ல வரும்போது ஜெயராஜ் குறிக்கிட்டுக் கேள்வி தொடுத்தார்.
கேள்வியும் பதிலும், மன்னன் அறத்தின் படி நின்றும் குற்றங்கள் இல்லாதவனாகவும் இருக்க வேண்டும் என்பதைக் குத்திக் காட்டிப் புலிகளின் தலைமையிடம் அறம் இருக்கவில்லை என்ற தொனியில் பேசியமை அவர்களது உள்ளுறை உவமம் (Internal Metaphor)
உறைசிறியார் உள்நடுங்கல் என்ற குறளைத் தொட்டுக்காட்டி 'எம் இனம் படிக்கத் தவறிய குறள்' என்று பிரசாந்தன் உரத்த குரலில் கூறியதன் ஊடாக ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டம் பற்றிய தவறான கற்பிதத்தை இளம் சமூகத்திடம் விதைக்க முற்படுகிறார்.
உறை சிறியர் என்ற குறளில் வள்ளுவர் சொல்ல வரும் தலைமைப் பண்பு, நிர்வாக ஆற்றல் என்பது மன்னர்களை மையமாகக் கொண்டது. ஆனாலும் தற்கால நவீன அரசுகளை ஆளும் ஆட்சியாளர்களுக்கு அது மிகப் பொருத்தம்.
சிறிய அரசு ஒன்று பெரிய அரசுக்குப் பணிந்துதான் ஆக வேண்டும். ஆகவே தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் 'உறைசிறியர் உள்நடுங்கல் என்ற குறள் பொருத்தமானது. பெரிய நிறுவனம் ஒன்றின் தலைவருக்கு அதன் கீழ் பணியாற்றும் இரண்டாம் நிலை அதிகாரி பணிந்தாக வேண்டும் என்பதையும் அக் குறள் சுட்டி நிற்கிறது.
ஆனால் இன விடுதலை ஒன்றுக்காகப் போராடுகின்ற இயக்கம் ஒன்றின் தலைவன் மிகப் பெரிய எதிரிப்படைகளைக் கண்டு பணிந்தாக வேண்டும் என்று அர்த்தம் கொள்ள முடியாது.
வள்ளுவர் காட்டும் அரசியல் என்பது மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு தத்துவம். கொள்கை அரசியல் என்பது வாழும் முறை (Way of life) அல்லது வாழ்க்கை முறை (Way of living) என்று குன்றக் குடி அடிகளார் விபரிக்கிறார்.
இதன் படி நோக்கினால் இன விடுதலைப் போராட்டம் பற்றிய புரிதல் ஏற்படும்.
ஒரு நாட்டின் எல்லைக்குள் வாழும் பல இனங்களின் தேசியம், மரபுரிமைகள், பற்றிய சிந்தனைகள் அவற்றை அரசுகளாக நிறுவும் உத்திகள் அரசறிவியல் கோட்பாடுகளில் (Political Science Theory) உண்டு.
ஆகவே தேசிய இன விடுலைச் சிந்தனைகளை உள்ளடக்கிய அரசியறிவியல் கோட்பாடுகளுக்கு மாறாகப் பிரசாந்தன், எம் இனம் படிக்கத் தவறிய குறள் என்று குத்திக் காட்டியிருப்பது கம்பன் கழகத்தின் வன்மம்.
தாயக மண்ணில் நடந்தது அரசியல் விடுதலைப் போராட்டம். (Political Emancipation) அது நாடுகளுக்கிடையிலான போர் அல்ல. ஆனால் அரசற்ற இனமாகவும், ஒரு நாடு போன்று செயற்பட்டதாலும் புலிகளை இல்லாமல் ஒழிப்பதற்கு அமெரிக்க, இந்திய. சீன அரசுகள் முரண்பாட்டில் உடன்பாடாக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தன
மரபுவழிப் போராட்ட முறைமை சர்வதேசத்தில் ஏனைய விடுதலை இயக்கங்களுக்கு முன் உதாரணமாகவிடக் கூடதென்ற நவீன அரசுகளின் இராணுவத் தந்திரோபாயக் கூட்டிணைவின் மூலமே 2009 இல் போர் இல்லாதொழிக்கப்பட்டது.
புவிசார் அரசியல் - பொருளாதார (Geo-politics - Geo-economics) தேவைகள் மற்றும் அமெரிக்க இந்திய அரசுகள் வழங்கிய உறுதிமொழியை நம்பித் தான் ஏமாற்றப்பட்டமை குறித்துச் சம்பந்தன் 2020 ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரை மற்றும் ஐ.நா.நிபுணர்குழு அறிக்கை சுட்டிகாட்டியிருந்த ஆதாரங்களுடன் இப் பத்தியில் ஏற்கனவே எழுதியிருக்கின்றேன்.
சில பத்தி எழுத்தாளர்கள், சர்வதேச ஊடகங்கள், இராஜதந்திரிகள் போன்றோர் 2009 இல் போர் இல்லாதொழிக்கப்பட்டமைக்கான காரண - காரியங்களை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கூறிய பல தகவல்களும் இருக்கின்றன.
ஆகவே கற்பனைக் கதையான இராமாயணத்தைத் தமக்கேற்றவாறு பொருள் விளக்கம் கொடுக்கும் கம்பன் கழகப் பேச்சாளர்களுக்கு எழுபது வருட அரசியல் போராட்டங்களில் முப்பது வருடங்கள் கண்முன்னே நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தின்போது சிங்கள ஆட்சியாளர்களினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தெரியாதா?
போர்க் காலத்தில் வெளியான படைப்புகள் அதன் உணர்வுகள், வலிகள், மற்றும் அவமானங்கள் போன்றவற்றை தமிழ் இலக்கண இலக்கிய நோக்கிலும், தமிழ் விழுமியங்கள், மரபுகள், தமிழ்ப் பண்பாடுகள் சார்ந்தும் பேசத் தயங்குவது ஏன்?
அயோத்தியில் இராமனுக்கும் வாலிக்கும் நடந்ததாக் கூறப்படும் கற்பனைப் போரை மேற்கோள்காட்டி உயிர்த் தியாகங்கள், சொத்து இழப்புகள் என்று பல வலிகளோடு நடந்த விடுதலைப் போராட்டம் (War of Sacrifice) ஒன்றை ஒப்பிட்டு விமர்சிப்பதில் உள்ள அறம் என்ன?
வள்ளுவர், ஓளவையார் பாடல்கள், தொல்காப்பியம், கம்பராமாயாணம் ஆகிய பழந்தமிழ் இலக்கியங்களில் நேர்த்தியாகச் சொல்லப்படும் தமிழர் பண்பாட்டுக்குரிய அறம்சார் கருத்துக்கள், அரசியல் நெறிகளைத் தவிர்த்து, முடிந்தவரை தமிழர்களின் அரசியல் விடுதலையையும் அதன் வழி வந்த இலக்கியப் படைப்புகளையும் திட்டமிட்டுக் கொச்சைப்படுத்தும் உத்தி அல்லவா இது.
குறளில் படைமாட்சி அதிகாரத்திலுள்ள சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை என்ற குறளுக்கு பிரசாந்தன் விளக்கம் கொடுத்திருக்கலாமே?
'தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவனிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றி பெறும்' என்று மு வரதராசன் அக் குறளுக்குப் பொருள் விளக்கம் கொடுத்திருக்கின்றார். இப் பண்பு புலிகளிடமும் அதன் தலைமையிடம் இருந்தது. ஆனால் போர் இல்லாதொழிக்கப்பட்டது எந்த வழி முறையில்?
பொருட்பாலில் அரசன், அரசாட்சி, பொருளாதாரம், நிர்வாகம், குடிமக்கள் பண்புகள் பற்றி எழுபது அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ளன. உள்ள பொருளை மேலும் பெருக்கவும் அதைத் தமக்கும் பிறர்க்கும் பயன்படும் நல்வழிகளில் செலவிடவும், அப்பொருளைப் பிறர் வஞ்சித்துக் கவராமல் காக்கவும் பொறுப்பு வாய்ந்த அரசமைப்பும் அதற்கு அறிவுரை கூறவல்ல அமைச்சரவையும் பிரதானம்.
இப்படி முறையாக அமைக்கப்பட்ட சமுதாயத்திலிருந்தே பொருள் உண்டாக்க முடியும். இவ்வாறாக அரசியலையும் அது நிலைப்படக் காரணமான குடிமக்களின் நல்வழிப்பட்ட உயர் பண்புகளையும் விளக்குவதுதான் திருக்குறளில் உள்ள பொருட்பாலின் உள்ளீடு.
இதனைப் புரிந்துகொள்ள முடியாமலா கம்பன் பெயரில் விவாதம் நடத்துகிறீர்கள்?
இப் பொருட்பாலின் உள்ளீட்டுக்கு அமைவாகப் போராட்டம் நடந்தது என்பதை நிறுவ முடியாதா? போராட்ட முறைகள் பற்றி இலக்கு மாறாத, மாற்றுக் கருத்துடைய விமர்சனங்களும், சமூக நீதி பற்றிய பார்வைகளில் சீரான எதிர்வாதங்களும் அவசியமானவை.
அதற்கு ஏற்ப பழந்தமிழ் இலக்கியங்களில் பொருள் அர்த்தங்கள் உண்டு. அவற்றையெல்லாம் மேற்கோள காண்பிக்க முடியாமலா, கற்பனைப் போரியல் கதைகள் மூலம் தமிழ்ச் சமூகத்துக்கு வழிகாட்ட கம்பன் கழகம் முற்படுகிறது.
ஆனையிறவுச் சமர் சயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணியை முன் நிறுத்துகின்றது என்பதை பிரசாந்தன் மனம்கொள்ள மறந்தது ஏன்?
கொலைகளை நியாயப்படுத்த முடியாது. ஆனால் இராமாயணத்தில் வரும் சகோதரப் படுகொலைகளைப் பக்குவமாக விவாதித்து நீதிக்கு மாறாகச் சமூக அறம் பற்றி எடுத்துரைக்கும் கம்பன் கழகம், தமிழர்களின் முப்பது வருட ஆயுதப் போராட்டத்தை எந்தக் கண்ணோட்டத்துடன் நோக்குகிறது?