ஒற்றையாட்சி அரசியல் யாப்புடன்

இலங்கைத் தேசியத்தைப் பாதுகாத்து பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் முயற்சியில் ரணில்

தமிழர் விவகாரத்தை ஓரம் கட்டி மேலெழும் பௌத்த தேசிய நகர்வுக்கு ஆதரவு வழங்கவுள்ள எதிர்தரப்பு உறுப்பினர்கள்
பதிப்பு: 2023 ஏப். 08 20:18
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 01 16:10
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
#unp
#sjp
2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், ஈழத்தமிழர்களுக்கு ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது தமிழ்த்தேசிய அரசியல் தலைமை இல்லாமல் போனது போன்று, பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் பிளவுபட்டிருந்தன. ஆனால் தற்போது பௌத்த சமயத்தை மையமாகக் கொண்ட "இலங்கைத்தேசியம்" என்ற கட்டமைப்பைப் பாதுகாக்கும் நோக்கில் ஒன்றிணையும் முயற்சிகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2009 இறுதிப் போரின்போதும், இலங்கைத்தேசியம் என்பதைப் பாதுகாக்க கட்சி வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைந்தனர். 2023 இல் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள மீண்டும் ஒன்றிணைந்து செயலாற்ற முனைகின்றனர். இதன் பின்னணியில் மகாநாயக்கத் தேரர்களின் ஆசீர்வாதம் உண்டென்பது இரகசியமல்ல.
 
சிங்களக் கட்சிகளின் "இலங்கைத்தேசியம்" என்ற கொள்கைப் பற்றும், கட்சி முரண்பாடுகளுக்கு அப்பால் யாரைப் பயன்படுத்தியேனும் முதலில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமென்ற ஒருமித்த கருத்துடைய செயற்பாடுகளுக்கு ரணிலைப் பயன்படுத்தும் நுட்பமும் பௌத்த தேசியத்தின் அடிப்படை என்பது புரிகிறது

ஆனால் தமிழ்த்தேசியக் கட்சிகள் 2009 இற்குப் பின்னரான சூழலில் தத்தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வியூகங்களுடன், தேர்தல் கட்சிகளாக மாத்திரமே இயங்கி வருகின்றன. இதுதான் சிங்கள - தமிழ்க் கட்சிகளிடையேயான வேறுபாடு.

மலையகத் தமிழ் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் அவ்வப்போது ஆட்சியமைக்கும் சிங்கள அரசியல் கட்சிகளுடன் இணைந்து அமைச்சுப் பொறுப்பை ஏற்பது, அல்லது பேரம் பேசுவது போன்ற இணக்க அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது வேறு.

அதேபோன்று வடக்குக் கிழக்கை மையமாகக் கொண்ட டக்ளஸ், கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் போன்றவர்களின் தமிழ்க் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து பயனிக்கும் அரசியலும் வேறு.

ஆனால் தமிழ்த்தேசியம் பற்றி உரத்துப் பேசுகின்ற பிரதான தமிழ்க் கட்சிகளின் அரசியல் இயங்குதளம், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு உரியதாக இல்லை என்பது இங்கே பட்டவர்த்தனமாகிறது.

இந்த நிலையில் 2020 ஏப்ரல் மாதம் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிச் சூழலில் இருந்து தம்மை மீளக் கட்டியெழுப்ப முற்படும் சிங்கள அரசியல் கட்சிகள், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் "இலங்கைத்தேசியம்" என்பதைக் கட்டியெழுப்ப வேண்டுமெனச் சிந்திக்கத் தூண்டப்பட்டுள்ளனர்.

அதாவது கட்சி முரண்பாடுகள் இருந்தாலும், சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு ஏற்ப இலங்கைத்தீவுப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமென்ற சிங்கள தேச அரசியல் பற்றிய "ஞானம்" தற்போது பிறந்திருக்கிறது எனலாம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சித்தாலும், இலங்கைத்தீவின் பொருளாதாரத்தை மாத்திரமல்ல, 2009 இற்குப் பின்னரான சூழலில் ஈழத்தமிழர் விவகாரத்தையும் முற்றாக இல்லாமல் செய்வதற்குரிய உத்தியைக் கையாளும் ஆற்றல் கொண்டவர் ரணில் என்ற "பொது அபிப்பிராயம்" சிங்களக் கட்சிகளிடம் உண்டு

இதற்கு ஒத்திசைவான முறையில்தான் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலரும் சிந்திக்கத் தூண்டப்பட்டுள்ளனர். "கட்சி அரசியலாக நோக்காமல் இலங்கைத்தீவின் பொருளாதார மீள் எழுச்சியாகப் பார்க்க வேண்டும்" என்று நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்ஷா டி சில்வா தற்போது மார்தட்டுகிறார்.

சஜித் திறமையானவர். ஆனால் தற்போதைய சூழலில் சஜித்தின் கட்சியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் பலர் ரணிலுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்களாக மாறி வரும் நிலை இருப்பதாக ஹர்ஷா டி சில்வா தனக்கு நெருக்கான செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். சஜித்தை அவர் குறைகூறவில்லை.

"சஜித்தும் ஆதரவு வழங்கினால் நல்லது. இலங்கைத்தேசியம் பற்றி அக்கறையுள்ள சஜித் தற்போதைய சூழலில், முரண்பாடுகளைத் தவிர்ப்பார்" என்று நம்புவதாக ஏரான் விக்கிரமரட்னவும் தனக்கு நெருக்கமான செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

மகிந்த ராஜபக்ச ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தவேளை 2006 இல் மீண்டும் போர் ஆரம்பித்தபோது, ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் கரு ஜயசூரிய தலைமையில் பதினேழு பேர் மகிந்தவுக்கு ஆதரவு வழங்கி அமைச்சுப் பொறுப்புகளையும் ஏற்றிருந்தனர்.

விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என்ற இலங்கைத்தேசிய நோக்கிலேயே மகிந்தவுக்கு ஆதரவு வழங்கியதாக அப்போது கரு ஜயசூரிய விளக்கமளித்திருந்தார். 2009 இல் போர் இல்லாமல் ஒழிக்கப்பட்டதும் பின்னர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்.

இதேபோன்றுதான் ஹர்ஷா டி சில்வா தலைமையில் ராஜித சேனரட்ன உட்பட பதின்நான்கு பேர் அல்லது பதினொருபேர் தற்போது சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். அதாவது 2023 இல் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்கித் தங்கள் பொருளாதார மூளையையும் பயன்படுத்த வேண்டுமென்று இவர்கள் ஆவல் கொண்டுள்ளனர் என்பது தெரிகிறது.

ஹர்ஷா டி சில்வா, ராஜித சேனரட்ன, எரான் விக்கிரமரட்ன மற்றும் கபீர் காசிம் ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ரவி கருணாநாயக்கவை வெள்ளிக்கிழமை இரவு சந்தித்து தமது ஆதரவை உறுதி செய்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து குறைந்தது பதினொருபேர் அல்லது பதின்நான்கு பேர் அரசாங்கத்துடன் இணைவர் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இரண்டு பேருக்கு மாத்திரமே அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமென ரணில் கூறியிருக்கிறார்.

இந்த நிபந்தனைகளினால் முக்கிய உறுப்பினர்கள் இரண்டுபேர் இணைவதற்குச் சற்றுத் தாமதம் ஏற்படுமெனவும், ஆனாலும் முதற்கட்டமாக பதினொருபோர் இணைவது உறுதியெனவும் ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அதேநேரம் ஒரு வருடத்துக்கு முன்னரே 2024 ஜனவரியில் இடம்பெறலாமென நம்பப்படும் ஜனாதிபதித் தேர்தலை மனதில் கொண்டு ரணில் - சஜித் ஆகிய இரண்டு பிரதான தலைவர்களை ஒற்றுமைப்படுத்தும் வேலைத்திட்டத்தில் கடந்த வாரம் பௌத்த குருமாரும் பிரபல சிங்கள வர்த்தகர்கள் சிலரும் ஈடுபட்டதாகவும் ஆனாலும் சஜித் பிரேமதாச அதற்கு உடன்படவில்லை எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றால் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டு பிரதான கட்சிகளின் பொது வேட்பாளராக ரணில் இருப்பார் என்றும், சஜித் பிரதமராகப் பதவி வகிப்பாரெனவும் எடுக்கப்பட்ட முடிவை சஜித் நிராகரித்துள்ளார்.

மகிந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஆதரவு வழங்கவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் பொது வேட்பாளராகக் களமிறக்கப்படுவார் எனவும் பிரதமர் வேட்பாளராக மகிந்த போட்டியிடுவார் என்றும் இரகசியச் சந்திப்பில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன

2029 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை ரணில், சஜித்திற்கு வழங்குவார் என்ற உறுதிமொழியையும் சஜித்தின் குடும்ப உறுப்பினர்கள் ஏற்கவில்லை என்று தெரிகிறது.

இதேவேளை, பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்க ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நாற்பது போர் விரைவில் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைவர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர் லக்ஸ்மன் விஜேமான்ன கொழும்பில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் தற்போது ஐம்பத்து மூன்று உறுப்பினர்கள் உள்ளனர்.

சஜித்துடன் இணைந்து தொலைபேசிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியடைந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஏனைய மலையகத் தமிழ் உறுப்பினர்களான வடிவேல் சுரேஸ், வேலுக்குமார், இராதாகிருஸ்ணன் ஆகியோரும் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் உறுப்பினர்கள் பலரும் ரணிலுக்கு ஆதரவு வழங்கக்கூடிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

அதேநேரம் ரணிலுக்கு மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியில் நூற்று இருபத்து எட்டுப்பேர் தொடர்ந்து ஆதரவு வழங்குகின்றமை மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இப் பின்னணியில் எதிர்வரும் சித்திரை வருடப் பிறப்புக்குப் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு ஹர்ஷா டி சில்வா, ராஜித சேனரட்ன ஆகியோர் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பர் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை பாட்டாளி சம்பிக்க ரணவக்க புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுகின்றார். சரத்பொன்சேகா உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலர் புதிய கட்சியில் இணைந்துகொள்வர் என்று சம்பிக்க ரணவக்க நம்பிக்கையாகக் கூறுகிறார்.

இப் பின்னணியில் சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மேலும் பலவீனமடையலாம்.

மகிந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஆதரவு வழங்கவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் பொது வேட்பாளராகக் களமிறக்கப்படுவார் எனவும் பிரதமர் வேட்பாளராக மகிந்த போட்டியிடுவார் என்றும் வெள்ளிக்கிழமை இரவு கொழும்பில் இடம்பெற்ற இரகசியச் சந்திப்பில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஆனால் பாட்டாளி சம்பிக்க ரணவக்க, தனது புதிய கட்சியில் 2024 ஓகஸ்ட்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டுப் பின்னர் ரணிலுடன் பேரம்பேசி பிரதமர் பதவியைப் பெறுவார் என்றும் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த இடத்தில் மகிந்த ராஜபக்ச - சம்பிக்க ரணவக்க என்ற இரு அரசியல் தலைகளை ரணில் மிக நுட்பமாகக் கையாளுவதாகவும், இரண்டாம் நிலைத் தலைவராக இதுவரை அறியப்பட்ட சஜித் வெள்ளிக்கிழமை இரவில் இருந்து தனது அரசியல் முக்கியத்துவத்தையும் தலைமைத்துவத்தையும் இழந்துவிட்டார் எனவும் கொழும்பில் உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தமக்குள் பேசிக்கொள்கின்றன.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் அமெரிக்க - இந்திய அரசுகளின் முழு ஒத்துழைப்புடன் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள எழும்போது ஈழத்தமிழர் விவகாரம் மத்திரமல்ல, முஸ்லிம் - மலையகத் தமிழர்கள் ஆகியோருடைய அரசியல் சிக்கல்களும் இருக்கவேகூடாது என்ற கோணத்திலேயே ரணில் விக்கிரமசிங்கவை மையப்படுத்தி மூத்த சிங்கள அரசியல் பிரதிநிதிகளின் மூளை இயங்குவது பகிரங்கமாகியுள்ளது.

2009 இற்குப் பின்னரான சூழலில் தமிழ்த்தேசியக் கோட்பாட்டை நிறுவ, கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒருமதித்த குரலில் செயற்பட்டிருக்க வேண்டிய தமிழ்க் கட்சிகள், தற்போது சிதறிக் கிடக்கின்றன

ஜே.வி.பி, ரணிலை விமர்சித்தாலும் எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்கும் அளவுக்குத் தமது அரசியலைத் திட்டமிட்டு வகுத்துள்ளது. அதாவது சிங்கள இனவாதத்தை வேறொரு வகிபாகத்தில் ஜே.வி.பி தனது அடிப்படை மூலதனமாக்கியுள்ளது.

மைத்திரி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, டளஸ் அழகப் பெருமா தலைமையிலான அணி எதிர்காலத்தில் ஜே.வி.பியுடன் கூட்டணி அமைத்துப் பலமான எதிர்க்கட்சியாக மாறலாம். அல்லது மகிந்தவுடன் மீண்டும் இணைந்து தமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பிப் பலப்படுத்த முற்படலாம். இது பற்றிய உரையாடல் ஒன்றைச் சந்திரிகா ஆரம்பித்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.

ஆகவே சிங்களக் கட்சிகளின் இலங்கைத்தேசியம் என்ற கொள்கைப் பற்றும், கட்சி முரண்பாடுகளுக்கு அப்பால் யாரைப் பயன்படுத்தியேனும் முதலில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமென்ற ஒருமித்த கருத்துடைய செயற்பாடுகளுக்கு ரணிலைப் பயன்படுத்தும் நுட்பமும் பௌத்த தேசியத்தின் அடிப்படை என்பது புரிகிறது.

இந்த அடிப்படையின் பிரகாரமே, ஜெனீவா மனித உரிமைச் சபைத் தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் அவ்வப்போது நிராகாித்த முறைகளைச் சுட்டிக்காட்டவும் முடியும்.

ஆனால் 2009 இற்குப் பின்னரான சூழலில் தமிழ்த்தேசியக் கோட்பாட்டை நிறுவ, கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒருமதித்த குரலில் செயற்பட்டிருக்க வேண்டிய தமிழ்க் கட்சிகள், தற்போது சிதறிக் கிடக்கின்றன.

2015 ஐ போன்று சர்வதேச பொறிமுறைகளுக்கு ஏற்ப பிரதான சிங்களக் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் அரசியல் சூழல்கூட, உருவாக முடியாத அளவுக்குச் சிங்கள பௌத்த தேசியம் தற்போது தனித்துவமாகப் பலமடைந்து வருகின்றது. குறிப்பாக ரணில் தனது நிலையை ஸ்திரப்படுத்தி வருகிறார்.