போர்க்காலத்திலும் 2009 இன் பின்னரான சூழலிலும்

செய்தித்துறையின் பாடநூல் மாணிக்கவாசகம்

இதழியல் பணிக்குரிய வகிபாகத்தை மனச்சாட்சியுடன் நிறுவியிருக்கிறார்
பதிப்பு: 2023 ஏப். 13 09:53
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 20 22:34
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
#tamil
#journalism
ஒரு செய்தியாளனுக்கு மிகுந்த பொறுமை வேண்டும். அவசரப் படவோ பதட்டப் படவோ கூடாது. பதறாத காரியம் சிதறாது என்பது பழமொழி. செய்தியை அறிந்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம், உண்மையை வரவழைத்து, அதனைச் செய்தியாக எழுதி அலுவலகத்திற்கு அனுப்பும் வரை பல இடையூறுகள் ஏற்படும். அவற்றை எல்லாம் மனத்தளர்ச்சி இன்றி முயற்சி திருவினையாக்கும் (Effort Will Pay Off) என்ற தெளிவோடு நடைமுறையில் அதுவும் போர்க் காலத்தில் செயற்படுத்திக் காண்பித்தவர்தான் மூத்த செய்தியாளர் பொன்னையா மாணிக்கவாசகம். 
 
நல்ல தொடர்புகள், நம்பிக்கையைக் கட்டிக் காத்தல், நேர்மை, கையூட்டுப் பெறாமை, செயல் திறன், ஏற்கும் ஆற்றல், தன்னம்பிக்கை, தெளிவாகக் கூறும் ஆற்றல், தமிழ் மரபுகள் பற்றிய அறிவு, சட்டத் தெளிவு ஆகிய திறமைகளைக் கொண்டு விளங்கிய மாணிக்கவாசகம், இவை அனைத்தும் ஒரு செய்தியாளனுக்கு அவசியமானது என்பதை நிறுவிச் சென்றிருக்கிறார்

இணையம், புலனம் (WhatsApp) மற்றும் சமூகவலைத் தளங்கள் என்று நவீன தொழில் நுட்பங்கள் வளர்ச்சியடைவதற்கு முந்திய 1980 களில் தனது செய்திப் பயணத்தை ஆரம்பித்த மாணிக்கவாசகம், போர்க்காலத்தில் மேற்கொண்ட செய்தியிடல் முறை, பிராந்தியச் செய்தியாளான் என்ற படி நிலையைக் கடந்து, தேசிய மற்றும் சர்வதேசச் செய்தியாளான் என்ற தரத்துக்குத் தன்னை உயர்த்திக் கொண்டார்.

அந்தத் தரத்துக்குத் தன்னை மாத்திரமல்ல, பிராந்தியச் செய்தியாளர்கள்தான் தேசிய மட்டத்தில் தாக்கத்தைச் செலுத்தும் செய்தியாளர்கள் என்ற கம்பீரத்தையும் (Majesty) நிலை நிறுத்தினார்.

மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மாணிக்கவாசகம், வட்டகொடை ஹொலிரூட் கிராமத்தில் பிறந்து தலவாக்கலை சென் பற்றிக்ஸ் கல்லூரியில் உயர்தரம்வரை கற்றார். மணிக்கவாசகர் பாடசாலைக் காலத்தில் சிறந்த மாணவன் என்று அவருடன் கல்வி கற்ற, ஓய்வு நிலைப் பேராசிரியர் தை.தனராஜ் என்னிடம் கூறியிருந்தார். 

கல்வி கற்கும்போது மாணிக்கவாசகர் பொருளியல் துறையில் சிறந்து பிரகாசித்திருந்தார். பின்னர் எப்படி ஊடகத்துறைக்குள் கால்பதித்தார் என்று புரியவில்லை எனவும் பேராசிரியர் தனராஜ் என்னிடம் கேள்வி எழுப்பியதோடு, மாணிக்கவாசகத்தின் ஒவ்வொரு திறமைகள் பற்றியும் என்னிடம் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

செய்திகளைத் திரட்டுவதில் தனக்கென்று ஒரு தனித்துவத்தை (Uniqueness) உருவாக்கி மற்றவர்களைப் பின்பற்றாது தனி முத்திரை பதித்திருக்கும் மாணிக்கவாசகம், செய்தி உலகத்துக்குள் கால்பதித்தன் நோக்கத்தை நிறைவேற்றியிருக்கிறார்.

பேராசிரியர் தனராஜ் கேள்வி எழுப்பியதுபோன்று சிலவேளை மாணிக்கவாசகம் வேறு துறைக்குள் சென்றிருந்தால், செய்தித்துறையின் ஊடே அவர் ஆற்றிய அரிய செயலைச் செய்திருக்க அவருக்கு வாய்ப்பிருந்திருக்காது.  

ஆகவே தமிழ்ச் சமூகத்துக்குரியவர் மாணிக்கம் என்று காலம் திர்மானித்திருக்கின்றது என்ற முடிவுக்கு இலகுவாக வந்தவிடலாம். அத்துடன் செய்தித்துறையின் சொத்து என்று இதழியல் உலகமும் அன்றே மாணிக்கத்தை விதந்துரைத்திருக்கிறது போலும். 

நல்ல தொடர்புகள், நம்பிக்கையைக் கட்டிக் காத்தல், நேர்மை, கையூட்டுப் பெறாமை, செயல் திறன், ஏற்கும் ஆற்றல், தன்னம்பிக்கை, தெளிவாகக் கூறும் ஆற்றல், தமிழ் மரபுகள் பற்றிய அறிவு, சட்டத் தெளிவு ஆகிய திறமைகளைக் கொண்டு விளங்கிய மாணிக்கவாசகம், இவை அனைத்தும் ஒரு செய்தியாளனுக்கு அவசியமானது என்பதை நிறுவிச் சென்றிருக்கிறார்.

இந்த அனைத்து ஆற்றல்களையும் இந்திய இராணுவம், வடக்குக் கிழக்கில் நிலைகொண்டிருந்தபோதே வளர்த்துக் கொண்ட மாணிக்கம், 1990 இல் இரண்டாம் ஈழப்போர் ஆரம்பித்தபோது, பிராந்தியச் செய்தியாளர்களின் முக்கியத்துவத்தை ஊடக நிறுவனங்களின் தலைவர்களை உணரவைக்கும் அளவுக்குத் தனது பணியை காரண - காரியத்தோடு செய்திருக்கிறார்.   

குறிப்பாக லன்டன் பிபிசி போன்று இலங்கைத்தீவில் தமிழ் இலத்திரனியல் ஊடகங்கள் அப்போது இருக்கவில்லை. கொழும்பை மையமாகக் கொண்டு இலங்கை வானொலி மாத்திரமே இருந்தது. 

அக் காலத்தில் தமிழ் அச்சு ஊடகங்கள் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் அதிகளவில் இருந்ததால், இந்த ஊடகங்களில் பணியாற்றுகின்ற பிராந்தியச் செய்தியாளர்கள் இனமுரண்பாடுகள் மற்றும் தமிழ் மக்களின் பொருளாதார நிலைமைகள், நெருக்கடிகள், இடப்பெயர்வுகள் பற்றிய தகவல்களை எப்படிச் செய்தியாக்க வேண்டுமென்ற நுட்பங்களைத் தனது செய்திகள் மூலம் காண்பித்திருக்கிறார்.  

கொழும்மை மையமாகக் கொண்ட தமிழ் நாழிதளான வீரகேசரி, வடக்குக் கிழக்கில் இந்திய இராணுவம் மேற்கொண்ட அடக்குமுறைகள் பற்றிய செய்திகளை இருட்டிப்புச் செய்திருந்தது. ஆனால் மாணிக்கவாசகம், பிபிசி தமிழோசையில் வழங்கும் நேர்காணல்களில் அந்த அடக்குமுறைகளை மிக நுட்பமாகச் சொல்வார். பிடிகொடுக்காமல் சொற்களை அவதானமாகவும் கையாளுவார்.

மாணிக்கவாசகம் கூறுகின்ற தகவல்களைக் கேட்டு அல்லது மாணிக்கவாசகத்தை மேற்கோள்காண்பித்தே அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த நாளிதழ்கள் செய்திகளை பிரசுரித்திருந்தன. அந்தளவுக்குச் செய்திகளின் நம்பகத்தன்மையாளன் என்ற முத்திரையை இவர் பதித்திருந்தார்.

1983 இல் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து 2009 இறுதிப் போர் வரையும் அதன் பின்னரான இன்றைய காலகட்டம் வரையும் வவுனியா பிரதேசம் மையமாக விளங்கியதால், வவுனியாவில் பிராந்தியச் செய்தியாளராக இருந்த மாணிக்கவாசகம், செய்திகளின் மையக் கருமூலமாக விளங்கினார். 

மரணத்துக்குப் பின்னரும் "செய்தியாளன்"என்ற பதவி நிலைத்து நிற்க வேண்டுமானால், மாணிக்கவாசம் போன்ற மனட்சாட்சியுள்ள அர்ப்பணிப்புடைய செய்தியாளர்களாகத் திகழ வேண்டும் என்பதைத் தற்போதை செய்தியாளர்கள் ஒவ்வொருவரும் உணரத்தலைப்பட வேண்டும்

செய்தியாளர் எதனையும் தெளிவாக எடுத்துக் கூறும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். பேசுவதிலும், எழுதுவதிலும் தெளிவு இருக்க வேண்டும். நேரில் பார்த்துச் செய்திகளைச் சேகரிக்கின்றபோது தெளிவாக விபரங்களைக் கேட்டறிய வேண்டும். செய்திகளை, குழப்ப மில்லாமல் தெளிவாக எழுதும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.

எத்தகைய செய்திகளை வெளியிட்டால் சட்டப்படி குற்றம் ஆகிவிடும் என்பதைச் செய்தியாளர் அறிந்திருக்க வேண்டும். சட்டத் தெளிவு இல்லாமல் எதையும் செய்தியாக எழுதினால் நாளிதழ் நிறுவனங்களுக்கும் பிரச்சினை ஏற்படும்.

ஆகவே போர்க்காலத்தில் இவற்றை நன்கு உணர்ந்திருந்த  மாணிக்கவாசகம், இப் பண்புகளை ஊடக ஒழுக்க விதிகளாகத் தனக்குத் தானே வகுத்துப் பின்னர், அதன் அவசியத்தை தமிழ்ச் செய்தி உலகத்துக்கு விரிவாக்கினார். தற்போது செய்தியாளர்களின் பாடநூலாகிவிட்டர்.

செய்தியாளர்களின் பாடநூல் என்று சொல்வதற்கு மூன்று காலகட்ட போர் வரலாறுகள் பிரதானமாகவுள்ளன. ஒன்று, இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் சமாதானப் படைகள் என்று கூறிக் கொண்டு வடக்குக் கிழக்குத் தமிழ் பேசும் மக்களின் தாயகத்திற்குள் பிரவேசித்த இந்திய இராணுவத்தின் அடக்குமுறைகள், 

இரண்டாவது, 1995 இல் சந்திரிகா ஜனாதிபதியாக இருந்தபோது யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி அங்கு புரிந்த இன ஒடுக்கல் செயற்பாடுகள்.  மூன்றாவது, 2006 இருந்து 2009 மே மாதம் வரை இடம்பெற்ற இறுதிப் போர்.

இந்த மூன்று கால கட்டத்திலும் நவீன தொழிநுட்பங்கள் வளர்ச்சியடையவில்லை. தமிழ் ஊடகத்துறை குறிப்பாகப் பிராந்தியச் செய்தித்துறை பெரும் சவால்களை எதிர் நோக்கியிருந்த காலம். அதுவும் வவுனியா மையப் பிரதேசமாக இருந்ததால், அங்கிருந்து கொழும்புக்கு வருவதற்குக் கூட இராணுவத்தின் அனுமதி தேவை. 

இக் காலத்தில் இராணுவத்தின் அனுமதியைப் பெற்று கொழும்புக்கு வந்து, செய்திப் பணிக்குரிய மேலதிகக் கடமைகளையும் செய்துவிட்டு மீண்டும் வவுனியாவுக்குச் செல்லும்போது பல நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறார்.

குறிப்பாக 1997/98/99 ஆம் ஆண்டுகளில் வவுனியாவில் இலங்கை இராணுவத்துடன் சேரந்து இயங்கிய ஆயுதக் குழுவின் அச்சுறுத்தல்கள், கண்காணிப்புகள் போன்ற கடுமையான நெருக்குவாரங்களுக்கு மத்தியில் இருந்து மாணிக்கவாசகம் வழங்கிய செய்திகளின் உண்மைத்தன்மை. இன்றுவரை சரியான வரலாறுகளை எதிர்காலச் சமூகத்துக்குக் கொடுத்திருக்கின்றது.

இன்றைய செய்தி என்பது நாளைய வரலாறு. அந்த வரலாறுகளை உரிய முறையிலும் சரியான தகவல்களோடும் அடுத்து வருகின்ற இளம் சமூகம் சரியாக அறிந்துகொள்ள வேண்டுமானால், செய்திகள், செய்திக் கட்டுரைகள் உரிய தகவல்களோடு வெளிவர வேண்டும். இலத்திரனியல் செய்தி ஊடகங்களை விடவும் அச்சு ஊடகங்களுக்கே அந்தப் பொறுப்பு அதிகம்.

1980 களுக்குப் பின்னரான வீரகேசரி மற்றும் சில அச்சு ஊடங்கங்களைப் புரட்டினால், மாணிக்கத்தின் ஒவ்வொரு எழுத்திலும் வரலாறுகள் பொதிந்திருக்கும்.

வரலாற்று ஆசிரியர்கள் செய்திகளின் மூலங்களையும் தமது வரலாற்று ஆய்வுக்கு ஆதாரமாக எடுத்துக்கொள்வது வழமை. அந்த அடிப்படையில் பிராந்தியச் செய்தியாளன், தேசிய, சர்வதேசச் செய்தியாளன் என்ற பன்முகத் தன்மையோடு மாணிக்கம் வெளிக் கொணர்ந்த பல அரிய தகவல்கள் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் எதிர்கால வரலாறுகள்.

"ப்ரெவர்ஸ்‌" என்ற ஆங்கில அகராதி; இதழியல் (Journal ) என்றால்‌ பத்திரிகை வகை மரபுக்குரிய ஒரு பெயர்‌ என்பதைத்‌ திட்டவட்டமாக விளக்கிக்‌ கூறியுள்ளது. (Journal a daily record, as of occurrences, experiences, or observations) 

இந்த இதழியல் பணிக்குரிய வகிபாகத்தை மனட்சாட்சியுடன் நிறுவியிருக்கிறார் மாணிக்கவாசகம். தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராக அவர் இருந்தபோது வெளிப்படுத்திய மனட்சாட்சியும் அர்ப்பணிப்பும் மற்றும் கடமை உணர்வும் இன்றைய செய்தியாளர்களுக்குப் பட்டறிவாக வேண்டும். 

செய்தியாளனுக்கு ஓய்வு இருக்கக்கூடாது என்று வாழ்ந்துகாட்டிய மாணிக்கம், மரணத்திற்குப் பின்னரான காலத்திலும் ஒரு செய்தியாளனின் எழுத்து பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஊடகத் தொழில் மேன்மையையும் விட்டுச் சென்றிருக்கிறார்

செய்தியாளன் அல்லது பத்திரிகையாளன் (Journalist) என்பதுதான் வாழ்நாள் முழுவதும் அதாவது மரணிக்கும் வரையுள்ள பதவி நிலை. இந்தப் பத்திரிகையாளனுக்கு ஓய்வு காலம் என்பதும் இல்லை.

பிரதான ஊடக நிறுவனங்களில் (Mainstream Media) பணியாற்றும்போதும் ஓய்வு என்பது இல்லை. ஆனால் தற்கால ஊடக நிறுவனங்கள் அரசாங்கத்தின் தனியார் நிறுவன தொழிலாளர் சட்ட விதிகளுக்கு ஏற்ப ஐம்பத்து ஐந்து வயதுடன் ஓரு செய்தியாளனை அதாவது பத்திரிகையாளனைப் பணியில் இருந்து நிறுத்துகின்றது.

பின்னர் ஒப்பந்த அடிப்படையில் அறுபது வயதுவரை பணியாற்றப் பணிக்கின்றது. ஆனால் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒரு செய்தியாளன் அதுவும் நடைமுறை விடயங்களை எழுதிக் கொண்டிருக்கும் செய்தியாளனை, அவனுக்கு உடல் தகுதியும் தளராத மனமும் இருக்கும் வரை பணிபுரிய அனுமதிக்கின்றது.

நிறுவனத்துக்குள் இல்லாது விட்டாலும், வெளியில் இருந்து குறித்த செய்தியாளனின் சேவைகளை சில நிறுவனங்கள் ஊதியம் வழங்கிப் பெற்றுக் கொள்கின்றன.

ஏனெனில் ஒரு செய்தியாளனுக்கு வயது முதிர்ச்சியின்போதுதான் மேலும் ஆழமான அனுபவமும் பக்குவமும் வரலாற்று ஆதாரங்களை எதிர்காலச் சமூகத்திற்கு ஏற்ப எழுதவும் முடியும். ஆகவே பயன் அறிந்து செய்தியாளனைப் பயன்படுத்தும் பக்குவம் இலங்கைத்தீவில் உள்ள சில நவீன ஊடக நிறுவனங்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

இச் சூழலில்தான் மாணிக்கவாசகம், தனது எழுபத்து ஆறு வயது வரை அதாவது இறப்பதற்கு முதல்நாள் வரை எழுதிக் கொண்டே இருந்தார். என்ன எழுதினார்? எதனைப் புரியவைத்தார்?

போரின் பக்க விளைவுகளில் ஒன்றான ஊனமுற்றோரின் வாழ்வியல் அவலங்கள், இடப்பெயர்வுகளினால் எழுந்த சமூகச் சீர்கேடுகளை மாற்றியமைத்தல், 2009 இற்குப் பின்னரும் தொடரும் மனித உரிமை மீறல்கள், புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் எதிர்கால விளைவுகள் குறிப்பாகத் தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளப்போகும் ஆபத்துகள் பற்றி விபரித்திருந்தார்.

செய்தியாளனுக்கு ஓய்வு இருக்கக்கூடாது என்று வாழ்ந்துகாட்டிய மாணிக்கம், மரணத்திற்குப் பின்னரான காலத்திலும் ஒரு செய்தியாளனின் எழுத்து பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஊடகத் தொழில் மேன்மையையும் விட்டுச் சென்றிருக்கிறார்.

செய்தியாளன் (Journalist) என்பதுதான் செய்தித்துறையின் பிரதான மூலம். (Mainstream of Journalism) இங்கிருந்துதான் பிரதம ஆசிரியர் (Chief Editor) செய்தி ஆசிரியர் (News Editor) உதவி அசிரியர் (Sup Editor) செய்தி முகாமையாளர் (News Manager) என்ற பதவி நிலைகள் உயர்வடையும். ஆனால் இப் பதவிகள் எல்லாமே ஊடக நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வரைதான். ஓய்வு பெற்றதும் இப் பதவிகள் இல்லாமல் போய்விடும்.

மூத்த செய்தியாளன் என்ற சொல் மாத்திரமே வாழ்நாளில் விஞ்சியிருக்கும்.

மரணத்துக்குப் பின்னரும் "செய்தியாளன்" என்ற இச் சொல் விஞ்சி நிலைத்து நிற்க வேண்டுமானால், மாணிக்கவாசகம் போன்ற மனட்சாட்சியுள்ள அர்ப்பணிப்புடைய செய்தியாளர்களாகத் திகழ வேண்டும் என்பதைத் தற்போதை செய்தியாளர்கள் ஒவ்வொருவரும் உணரத் தலைப்பட வேண்டும்.