குறிப்பாக இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை நிரந்தரமாகக் கைவிடுவது என்ற "பொது அரசியல் இலக்கு" (Common Political Goal) ஜே.வி.பி உள்ளிட்ட சிங்களக் கட்சிகளிடம் உண்டு.
இதன் பின்னணியைப் புரிந்துகொண்ட நிலையிலேதான் இந்தியாவும் இந்தோ பசுபிக் உள்ளிட்ட புவிசார் அரசியல் - பொருளாதார தேவைகள் கருதி இலங்கையோடு காய் நகர்த்துகின்றது. ஆனால் இக் காய் நகர்த்தும் உத்திகளினால் இந்தியா சொல்வதைக் கேட்க வேண்டிய கட்டாயத்துக்குள் தமிழ்த்தேசியக் கட்சிகள் சிக்குண்டுள்ளன.
குறிப்பாக அரசியல் தீர்வாக பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை ஏற்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனை தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளன. இருந்தாலும் பதின்மூன்று பற்றிப் பேச வேண்டும் என்று கூறிக் காலத்தைக் கடத்திவிடும் உத்திகளையே ரணில் கையாளுகின்றார் என்பது இரகசியமல்ல.
இவ்வாறான சிங்களத் தேசிய அரசியல் பின்புலத்திலேதான் தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புத் தடைச் சட்டத்துக்கான நகல் சட்ட மூலம் குறித்த நிலைப்பாடு மற்றும் பதின்மூன்றை நடைமுறைப்படுத்துவது குறித்துக் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு ரணில் அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.
ஜெனீவா மனித உரிமைச் சபையின் நீண்டகாலப் பரிந்துரைகளுக்கு ஏற்ப உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையை அமைப்பது உட்பட நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டிருக்கின்றது.
மேற்குலக மற்றும் ஐரோப்பிய, தெற்காசிய நாடுகளின் தூதுவர்கள் உள்ளிட்ட சர்வதேசப் பிரநிதிகள் பலரைச் சந்தித்துச் சென்ற திங்கட்கிழமை விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆகியோர் இணைந்து கூட்டாக விளக்கமளித்துள்ளனர்.
வடக்குக் கிழக்கில் தற்போது ஜனநாயகச் சூழல் உருவாகியுள்ளது என்றும், தமிழ்த் தேசியக் கட்சிகள் இலங்கை ஒற்றையாட்சிக்கு உட்பட்ட அனைத்துத் தேர்தல்களிலும் பங்குபற்றி இணைந்து வாழும் நல்லிணக்கப் பொறிமுறைகளை ஏற்றிருப்பதாகவும் அமைச்சர் அலி சப்ரி விளக்கமளித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இராஜதந்திரிகளுடன் பேசப்பட்ட விடயங்கள் எதுவும் அதிகாரபூர்வமாகச் செய்தியாளர்களிடம் கூறப்படவில்லை. ஆனால் பதின்மூன்றாவது திருத்தம் மற்றும் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் பற்றிய விபரங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டு இராஜதந்திரிகளின் அபிப்பிராயங்களும் பெறப்பட்டதாக மாத்திரமே ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியிருந்தது.
ஆனால் இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களிடம் இருந்தும் நிதிகளைப் பெறுவதற்குரிய வகையில் நல்லிணக்கச் செயற்பாடுகள் பற்றி மிகைப்படுத்தப்பட்ட விளக்கங்கள் கொடுக்கப்பட்டதாகவே அறியமுடிகின்றது.
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்துடன் நிரந்த அரசியல் தீர்வைக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையும் அதன் மூலம் இந்தியாவைத் திருப்திப்படுத்தும் உத்திகளும் இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் மிக நுட்பமாகக் கையாளப்பட்டுள்ளதாகக் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
இச் சந்திப்புத் தொடர்பாக சென்ற வியாழக்கிழமை கொழும்பில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வெளிநாட்டு இராஜதந்திரிகளை அரசாங்கம் ஏமாற்றியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ரணிலின் அணுகுமுறை, இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பை நிலை நிறுத்தக்கூடிய முறையிலான இலங்கைத்தேசியம் என்பதை மையப்படுத்தியே அமைந்துள்ளது என்று சஜித்துக்குப் புரியாமலில்லை. இருந்தாலும் தனது கட்சி அரசியல் நோக்கில் ரணில் அரசாங்கம் மீது குற்றம் சுமத்துகிறார் சஜித். இதன் மூலம் பல உண்மைகள் வெளிக்கிளம்புகின்றன.
குறிப்பாக பதின்மூன்றைக் கொடுப்பது போல காண்பித்துக் கொண்டு வேறு காரணங்களைக் கூறி அதனைத் தாமதப்படுத்துவதும், புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உள்ள ஆபத்துக்கள் பற்றியும் சஜித் தனது கட்சி அரசியலுக்காகப் பகிரங்கப்படுத்தியிருக்கிறார்.
எவ்வாறாயினும் சஜித் வெளிப்படுத்தும் இந்த உண்மைகளைத் தமக்குச் சாதகமாக்கிக் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிப்பதன் மூலம், சிங்கள ஆட்சியாளர்கள் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கும் அநீதிகளை அரசியல் ஆதாரங்களுடன் வெளிப்படுத்த முடியும்.
ஆனால் தனித்தனிச் சந்திப்புகளும் ஒருமித்த குரல் இல்லாத கோரிக்கைகளும் முன்வைக்கப்படுவதால், மிக இலகுவாகச் சிங்கள ஆட்சியாளர்களினால், தமிழ்த் தரப்பை வெட்டியோட முடிகின்றது. குறிப்பாக ரணில் இலகுவாகக் கையாளுகிறார்.
பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டது என்பதற்கு அப்பால், அதில் உள்ள அதிகாரங்கள் பலவற்றைக் கொழும்பை மையப்படுத்திய இலங்கை ஒற்றையாட்சி நிர்வாகம் மீளப் பெற்றுள்ளது என்றும் வேறு சில அதிகாரங்களை நடைமுறைப்படுத்தாமல் கொழும்பு நிர்வாகம் இழுத்துப் பிடிக்கின்றது எனவும் சட்ட ஆதாரங்களுடன் எடுத்துக் கூற வேண்டும்.
ஆனால் இப் பணியைச் சட்டம் தெரிந்த தமிழ்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்வதேயில்லை. நிராகரிக்கின்றோம் என்ற ஒற்றைச் சொல்லில் கூறி முடித்துவிட்டுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுக்கும் செயற்பாடுகளில் மாத்திரமே ஈடுபடுகின்றனர். அதற்கேற்ப மக்களையும் தயார்ப்படுத்துகின்றனர். ஆனால் அரசியல் விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்துவதில்லை.
இந்திய - இலங்கை ஒப்பந்தம் 1987 யூலை மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்தாகிச் சில மாதங்களுக்குள் முரண்பாடுகள் உருவெடுத்தன. இதனால் ஆயுதப் போராட்டம் மீண்டும் ஆரம்பித்தது. அதுவும் இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் வல்லரசாக வர விரும்பும் இந்திய அரசின் இராணுவத்துடன் போர் மூண்டது.
இச் சூழலில் புலம்பெயர் நாடுகளில் வாழந்த ஈழத்தமிழர்கள் பதின்மூன்றுக்கு எதிராகவும் இந்திய இராணுவத்தின் மனித உரிமைகள் மீறல்கள் பற்றியும் பிரஸ்தாபிக்க ஆரம்பித்தனர்.
1988 ஏப்ரல் முப்பதாம் திகதியும் மே முதலாம் திகதியும் சர்வதேச தமிழ் மாநாட்டை ((International Tamil conference) 'தமிழ் தேசிய போராட்டமும் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தமும்' (Tamil National struggle and Indo-Lanka Peace Accord) என்ற தலைப்பில் உலகத் தமிழர் ஒன்றியம் லண்டனில் மாபெரும் கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தது.
ஈழத்தமிழர்களுக்காக இந்திய மத்திய அரசின் நாடாளுமன்றம் வரை குரல் கொடுத்து வரும் வை .கோபாலசாமி, ஓய்வு பெற்ற இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர் கிருஷ்ண ஐயர், பழ நெடுமாறன் மற்றும் அமெரிக்க மனித உரிமை சட்டத்தரணி கரேன் பார்கர் (Karen Parker) உட்பட தமிழ்த்தேசிய கருத்தை பரப்புரை செய்யும் பலர் மாநாட்டில் பங்குபற்றியிருந்தனர்.
1985 ஆம் ஆண்டு நேபாள நகரான திம்புவில் தமிழ் ஆயுத இயக்கங்களுடன் ஜே.ஆர் அரசாங்கம் நடத்திய பேச்சுவார்தையில் இணக்கம் காணப்பட்ட அடிப்படைகளின் பிரகாரம் அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டுமென மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
பிரபல சமூகச் செயற்பாட்டாளர் என்.சீவரட்னம் ஏற்பாடு செய்த இந்த மாநாட்டில் ரெலோ இயக்கத்தின் முன்னாள் பேச்சாளர் என். சுத்தியேந்திரா, ஐக்கிய நாடுகள் சபை தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை அங்கரிக்க வேண்டுமெனக் கோரியிருந்தார்.
திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் உட்பட வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்த மாநாடு பற்றி விபரங்களும் ஒற்றையாட்சிக்குள் பதின்மூன்று சாத்தியமில்லை என்று 1988/ 89 ஆண்டுகளில் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் உள்ளிட்ட பல கருத்துக்கள், எந்த ஒரு தமிழ்த் தேசியக் கட்சிகளினாலும் ஆவணப்படுத்தப்படவில்லை.
அதேநேரம் 1978 ஆம் ஆண்டு இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் பிரகாம், 1988 இல் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் இணைக்கப்பட்ட உறுப்புரை 154 (3) இன் பிரகாரம் ஏனைய மாகாணங்களையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணை ஒன்றின் மூலம் இணைக்கலாம் என்று அரசாங்கம் விளக்கமளித்திருக்கிறது.
அதாவது வடக்குக் கிழக்கு மாகாணம் மாத்திரமல்ல வடக்கு மாகாணத்துடன் வட மத்திய மாகாணம், அல்லது மேல் மாகாணத்துடன் வடமேல் மாகாணம் போன்ற அருகருகாகவுள்ள மாகாணங்களை இணைக்க முடியும் என்றே பொருள்கொள்ள முடியும்.
வடக்கு, கிழக்கு இணைப்பைப் பிரிக்க, ஜே.வி.பியினால் 2006 இல் இலங்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில், நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பு மிக முக்கியமானது.
அதாவது வடக்கு, கிழக்கு இணைப்பு ஏற்பாடுகளைக் கொண்டிருந்த மாகாண சபைகள் சட்டத்திலுள்ள நிபந்தனைகளுக்கு மாறாக வடக்கு, கிழக்கு இணைப்பை நீடித்துச் சென்றமையானது அரசியலமைப்பிற்கு முரணானது என்று நீதியரசர்கள் தமது தீர்ப்பில் விளக்கியுள்ளனர்.
ஆனால் எந்த ஒரு மாகாணங்களையும் இணைப்பது அரசியல் யாப்புக்கு முரணானது என்றோ அல்லது மாகாணங்களை இணைக்க முடியாதென்றோ உயர் நீதிமன்ற நீதியரசர்கள் தமது தீர்ப்பில் கூறவில்லை.
அதேநேரம் எந்த ஒரு மாகாணங்களையும் இணைப்பதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பெரும்பான்மை பெறவேண்டிய அவசியமும் இல்லை. சர்வஜன வாக்கெடுப்பும் தேவையில்லை. இது பற்றி பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் பற்றிய ஏற்பாடுகளில் கூறப்பட்டுள்ளது.
ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ள இந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சிங்கள ஆட்சியாளர்கள் பல சந்தர்ப்பங்களில் சர்வதேச பிரதிநிதிகளுக்கு விளங்கப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக வடக்குக் கிழக்கு மாகாணம் சிங்கள பௌத்ததேசிய அரசியல் நோக்கில் பிரிக்கப்பட்டாலும், நடைமுறையில் உள்ள ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் மூலம் மீள இணைக்க முடியும் என்று நம்பக் கூடிய தகவல்கள் மற்றும் ஒற்றையாட்சியை நியாயப்படுத்தித் தமிழ் - முஸ்லிம் மக்கள் இந்த அரசியல் யாப்பு ஏற்பாடுகளின் மூலம் சகல உரிமைகளையும் பெற்று வாழக்கூடிய சூழல் இருப்பதாகவும் ஜெனீவா மனித உரிமைச் சபையில் சிங்கள இராஜதந்திரிகள் ஏலவே சுட்டிக்காட்டியுள்ளனர்.
இப் பின்னணியில் சென்ற பத்தாம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற இராஜதந்திரிகளுடனான சந்திப்பிலும் இது பற்றிய மேலதிக விளக்கங்கள் கொடுக்கப்பட்டதாகவே தகவல்கள் கசிந்திருக்கின்றன.
இராஜதந்திரிகளும் அதனை ஏற்றுள்ளனர் என்றும் தமிழ்த்தேசியக் கட்சிகளுடன் விரிவாகப் பேசி அழுத்தம் கொடுப்பதாகவும் இராஜதந்திரிகள் சிலர் உறுதி வழங்கியதாகவும் அறிய முடிகின்றது. ஆகவே அடுத்த சில வாரங்களில் இராஜதந்திரிகள் தமிழ்த் தலைவர்களைச் சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் பதின்மூன்றில் உள்ள ஏற்பாடுகள் எதுவும் நடைமுறையில் சாத்தியப்படக்கூடியதல்ல. அதுவும் வடக்குக் கிழக்கை இணைக்க இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையைக்கூடப் பெற முடியாது என்ற அரசியல் உள் நோக்கங்களைக் காரண காரியத்துடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு குறிப்பாகத் தமிழரசுக் கட்சி எழுத்து மூலம் புரிய வைக்க வேண்டும்.
சம்பந்தன் இது பற்றி நாடாளுமன்றத்தில் பல சந்தர்ப்பங்களில் ஆற்றிய உரைகளில் விபரித்திருக்கிறார். குறிப்பாக பதின்மூன்றை தும்புத் தடியாலும்கூடத் தொட்டுப் பார்க்க முடியாதென்றும் அதற்குரியவாறு பதின்மூன்றில் உள்ள அதிகாரமற்ற பலவீனங்கள் பற்றியும் சம்பந்தன் நாடாளுமன்றத்தில் ஆதாரங்களுடன் விபரித்திருக்கிறார்.
சம்பந்தன் ஆங்கிலத்தில் நிகழ்த்திய அந்த உரைகளை நூலாக வெளியிட்டாலே இலங்கை அரசாங்கம் குறிப்பாகச் சிங்கள ஆட்சியாளர்கள் பதின்மூன்று பற்றிக் கூறுகின்ற அத்தனை பொய்களும் வெளிச்சத்துக்கு வரும்.
பதின்மூன்று சாத்தியமில்லை என்ற இந்த உண்மைகளை வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஏற்கனவே அறிந்திருந்தாலும், இந்தோ பசுபிக் பிராந்திய அரசியல் - பொருளாதாரப் போட்டிகளினால் இலங்கை அரசாங்கத்தைத் தம் பக்கம் இழுக்கும் விதமாகவே அரசியல் நகர்வுகளை மேற்கொள்வர் என்பது கண்கூடு.
ஆனால் புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிகள் மற்றும் அரசியல் கொதி நிலைமைகளுக்கு ஏற்ப தமிழரசுக் கட்சி பதின்மூன்று பற்றியும் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உள்ள ஆபத்துகள் பற்றியும் ஆதாரங்களோடு எடுத்துச் சொன்னால் விரும்பியோ விரும்பாமலோ, அமெரிக்க இந்திய அரசுகள் செவிசாய்க்க வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் உருவாகும்.
ரணில் கையாளும் ஆபத்தான அரசியல் பொறியை (Political Trap) உடைத்து தமிழர்களுக்கு எதிரான அநீதிகளை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழ்க் கட்சிகளுக்கே உண்டு. சஜித்துக்கும் ஜே.வி.பிக்கும் அந்தத் தேவை இல்லை.
வடக்குக் கிழக்குத் தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்று இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. ஆகவே பதின்மூன்று சாத்தியமில்லை என்று நியாயப்படுத்தும் அரசியல் வேலைத் திட்டங்களைத் தமிழ்த்தேசியக் கட்சிகள் பொது வேலைத்திட்டமாக முன்னெடுக்கத் தவறியுள்ளன.