தமிழர் தாயகத்தில்

சர்வதேச முதலீடுகளும் தமிழ்த்தேசிய அரசியல் நீக்கமும்

நிரந்தர அரசியல் தீர்வற்ற ஆபத்தான நிலைமை குறித்து நோக்கத் தவறும் தமிழ்த்தரப்பு
பதிப்பு: 2023 மே 31 15:08
புதுப்பிப்பு: ஜூன் 03 21:47
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவிகள் பெற்றுள்ள நிலையிலும், மேலும் கடனுதவிகளை எதிர்பார்க்கும் பின்னணியிலும் இலங்கை தமது வர்த்தகச் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் திட்டங்களை வகுத்து வருகின்றது. ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை குறித்த தீர்மானங்களுக்கு உரிய பொறுப்புக் கூறப்படவில்லை. ஆனால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்குரிய ஏற்பாடுகளை மாத்திரம் ஜனாதிபதி ரணில் துரிதமாக மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் அமெரிக்க இந்திய மற்றும் ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் தமிழ்த்தேசிய அரசியல் நீக்கத்துக்கும் வழி வகுக்கப்படுகின்றது.
 
ஈழத்தமிழர் விவகாரத்தைச் சர்வதேச அரங்கில் சூடு தணியாமல் வைத்திருப்பதற்கு தமிழ்த்தரப்புக் கையாளும் நுட்பம் என்ன? வடக்குக் கிழக்கில் பௌத்த மயமாக்கல் பற்றி அமெரிக்க - இந்திய அரசுகள் இதுவரையும் பகிரங்கமாக வாய் திறக்காமல் இருப்பதன் பின்னணி குறித்தும் தமிழ்த்தரப்பு ஆழமாகச் சிந்திக்கத் தவறியுள்ளது

இந்தோ - பசுபிக் பிராந்தியத்தை மையமாகக் கொண்ட புவிசார் அரசியல் - பொருளாதார நெருக்கடிகள் மற்றும் ரசிய - உக்ரைன் போரினால் ஏற்பட்டுள்ள சர்வதேச சிக்கல்கள் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் பொருளாதாரப் பலவீனங்கள் போன்றவற்றைச் சாதகமாகப் பயன்படுத்திச் சிறிய நாடான இலங்கை, குறிப்பாக ரணில் கையாளும் உத்தி, ஈழத்தமிழர்களின் எழுபது வருட அரசியல் விடுதலை விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வற்ற ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் நோக்கத் தவறுகின்றன.

ஜப்பானுக்குச் சென்றிருந்த ரணில், 2009 இற்குப் பின்னரான சூழலில் இலங்கையில் நல்லிணக்கம் உருவாகியுள்ளது என்ற தொனியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இலங்கையில் சர்வதேச நாடுகள் முதலீடுகள் செய்ய வேண்டிய அவசியங்கள் குறித்தும், அபிவிருத்திச் செயற்பாடுகளின் மூலம் நல்லிணக்கத்தை அடைய முடியும் என்ற தொனியும் ஜப்பானில் வெளிப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை விவகாரம் எடுக்கப்பட்டுக் கடுமையான அறிக்கை வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், ரணில் சர்வதேச நாடுகளின் முதலீடுகளை இலங்கையில் உள்ளீர்க்கும் முயற்சியில் முனைப்புக் காட்டுவதன் பின்னணி என்பது, ஈழத் தமிழர் விவகா ரத்தை முற்று முழுதாகச் சர்வதேச அரங்கில் இருந்து நீக்கம் செய்யும் நோக்கம் என்பது பகிரங்கமாகியுள்ளது.

இரண்டு தசம் ஒன்பது பில்லியன் நிதியை வழங்கியுள்ள ஐ.எம்.எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியமும் அடுத்த உதவிகளுக்கு முன்னர் நல்லிணக்கத்தின் அவசியம் பற்றி எடுத்துக் கூறியுள்ளது. குறிப்பாக இனப் பிரச் சினைக்கான அரசியல் தீர்வையே ஐ.எம்.எப் நல்லிணக்கம் என்று அர்த்தப்படுத்துகிறது.

நிதி வழங்குவதற்கான முழுமையான ஒப்பந்தத்தில் ஐ.எம்.எப் கைச்சாத்திடுவதற்கு முன்னர் இலங்கை அரச ஊழியர் மட்டத்தில் நடத்திய பேச்சுக்களில் இலங்கை அரசாங்கம் வழங்கிய பல உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்று ஆசியாவுக்கான மூலோபாயங்களை வழங்கும் வெரிடே ரிசர்ச் ( (Verite Research) என்ற சுயாதீன சிந்தனைக்குழு சென்ற புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் ரணில் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

சென்ற ஏப்ரல் 2023 இன் இறுதியில், இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் கண்காணிக்கக்கூடிய கடப்பாடுகளில் இருபத்து ஐந்து வீதத்தை மாத்திரமே இலங்கை நிறைவேற்றியுள்ளது. ஆனால், இரண்டு முக்கியமான கடமைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இதனால் இலங்கையின் எதிர்காலப் பொருளாதாரச் செயற்பாட்டில் பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாத இறுதியில், மதிப்பீட்டிற்குப் போதுமான தகவல்கள் இலங்கையிடம் இருந்து கிடைக்காததால், அடையாளம் காணப்பட்ட பத்துவீத உறுதிப்பாடுகளின் முன்னேற்ற நிலையைக் கண்டறிய முடியாதுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

ஏலவே வழங்கப்பட்ட உறுதி மொழிகளை நிறைவேற்ற மேலும் வெளிப்படைத் தன்மைகள் இருக்க வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. இப் பின்புலத்தில் ஜப்பானுக் குச் சென்ற ரணில் விக்கிரமசிங்க ஜப்பானில் முதலீடு செய்துள்ள இந்திய முதலீட்டாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலரைச் சந்தித்து உரையாடியிருக்கிறார்

2023 ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் நிறை வேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இரண்டு உறுதிமொழிகளை இலங்கை தவறவிட்டுள்ளது.

இவற்றில் முதலாவது வரி அதிகரிப்புத் தொடர்பானது. வரிகளை அதிகரிப்பதற்கான திருத்தம் ஏப்ரல் நான்காம் திகதி பகிரங்கப்படுத்தப்பட்டது. இருப்பி னும், இந்தத் திருத்தம் இன்னும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை, இது செயல்முறை தாமதமாக இருப்பதைக் குறிக்கிறது.

இரண்டாவது, மத்திய வங்கி சட்டமூலத்திற்கு நாடாளுமன்ற அங்கீகாரம் பெறுவது தொடர்பானது. வரித் திருத்த மசோதாவைப் போலவே, இந்த மசோதாவும் மார்ச் ஏழாம் திகதியன்று பகிரங்கப்படுத்தப்பட்டது, ஆனால் இன்னும் நாடாளுமன்றத்தில் விவாதிக் ப்பட்டு அங்கீகரிக்கப்படவில்லை.

இப் பின்னணியிலேதான் சர்வதேச நாணய நிதியம் வழங்கவுள்ள அடுத்த கட்ட நிதி பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன. இரண்டாம் கட்டத்துக்குரிய பேச்சுக்கள் தற்போது அதிகாரிகள் மட்டத்தில் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை.

ஏனெனில் ஏலவே வழங்கப்பட்ட உறுதி மொழிகளை நிறைவேற்ற மேலும் வெளிப்படைத் தன்மைகள் இருக்க வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. இப் பின்புலத்தில் ஜப்பானுக் குச் சென்ற ரணில் விக்கிரமசிங்க ஜப்பானில் முதலீடு செய்துள்ள இந்திய முதலீட்டாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலரைச் சந்தித்து உரையாடியிருக்கிறார்.

இலங்கையில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலமே வருமானத்தைப் பெற முடியுமெனச் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய பரிந்துரைகளின் படி வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கைக்கு வரவழைப்பதில் ரணிலின் கவனம் திரும்பியுள்ளது. ஆனால் இலங்கையின் இந்த அணுகுமுறை இந்தியாவுக்குத் திருப்தியளித் திருப்பதாகக் கூறமுடியாது.

ஏனெனில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவுஸ் திரேலிய பிரதமர் அந்தோனி அல்போனீஸ் (Anthony Albanese) ஆகியோர் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலும் வர்த்தகச் செயற்பாடுகளை விரிவாக்கம் செய்வது பற்றியும் பேசியுள்ளதாகத் தகவல்கள் கசிந் துள்ளன. இலங்கையில் சீனாவின்; செல்வாக்கு அதிக ரித்துள்ள பின்னணியில் இப்பேச்சு இடம்பெற்றி ருக்கிறது.

கனிமங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றில் இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் கடந்த புதன்கிழமை கைச் சாத்திட்டுள்ளன. இதன் பின்னரே இரு தலைவர்களும் தெற்காசிய விவகாரங்கள் குறித்துப் பேச்சு நடத்தியிருக்கின்றனர்.

மோடியின் மூன்று நாள் அவுஸ்திரேலியா பயணத்தின் இறுதி நாளில் சந்தித்த இரு தலைவர்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு விரிவான பொருளாதார ஒத் துழைப்பு ஒப்பந்தம் (comprehensive economic cooperation agreement - CECA) ஒன்றை செய்ய தங்கள் உறுதிப் பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். இந்த ஒப்பந் தம் தொடர்பான அடுத்த இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் ஜூன் ஜூலை மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ளது.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (Economic Cooperation and Trade Agreement -ECTA ) அல்லது கடந்த ஆண்டு முடிவடைந்த இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மற்றும் வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை அவுஸ்திரேலிய இந்திய நாடு களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தியுள்ள தாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் கூறுகின்றன.

பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள், குறிப்பாக உக்ரைன் பொருளாதார விளைவுகள், இந்தோ - பசுபிக், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவின் பசுபிக் தீவு நாடுகளுடன் கடல்சார் சவால்கள், உலகளாவிய தெற்கின் நன்மைக்கான சாத்தியமான ஒத்துழைப்பு மற்றும் ஐ.நா அமைப்புகளின் சீர்திருத்தங்கள் குறித்து இருவரும் விவாதித்திருக்கின்றனர்.

சீனாவில் இலங்கை அதிகளவில் செல்வாக்குச் செலுத்தும் விடயங்களும் பேசப்பட்டிருக்கின்றன. 2003 ஆம் ஆண்டில் இந்திய IOC எண்ணெய் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கும் வரை, இலங்கையில் சில்லறை எரிபொருள் சந்தையில் CPC எனப்படும் இலங்கை பெற்றோலிய நிறுவனம் மட்டுமே இருந்தது.

ஆனால் எதிர்வரும் யூலை மாதத்தில் இருந்து சீன சினோபெக் (Sinope) என்ற எண்ணெய் நிறுவனம் ஒன்று இலங்கை யில் பெற்றோல் விற்பனையில் ஈடுபடவுள்ளது. அதற்குரிய ஒப்பந்தம் ஒன்றை இலங்கை சீனா நிறுவனம் ஒன்றுடன் செய்துள்ளது.

அவுஸ்திரேலியா, அமெரிக்காவின் ஆர்.எம் பார்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் சில்லறை எரிபொருள் விற்பனை செய்வதற்குரிய உரிமங்களை வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியது. இருப்பினும் இப்போது வரை சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

முதலீடுகளை அதிகரிப்பதன் மூலமே வருமானத்தைப் பெற முடியுமெனச் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய பரிந்துரைகளின் படி வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கைக்கு வரவழைப்பதில் ரணிலின் கவனம் திரும்பியுள்ளது

இது குறித்த விவகாரங்களும் அவுஸ்திரேலியப் பிரதமர் அல்போனீஸ் மோடியுடன் உரையாடியதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. அடுத்த இருபது ஆண்டுகள் எரிபொருள் விற்பனை செய்ய சீன நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளமை குறித்து அமெரிக்க, இந்திய மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கும் நிலையில் அதனைச் சமாளிக்கும் நோக்கில் ரணில் கையாளும் உத்தி இந்தியாவுக்குத் திருப்தியளிக்குமா? இல்லையா? என்ற கேள்விகள் எழுகின்றன.

ஆனால், ரணிலின் காய் நகர்த்தல்களையும் மீறி இலங்கையில் கூடுதல் முதலீடுகளை செய்து வர்த்தகச் செயற்பாடுகளை அதிகரிப்பதே இந்தியாவின் பிரதான மூலோபாயமாகவுள்ளது.

பிராந்தியப் பாதுகாப்பை மையப்படுத்தி அமெரிக்க - இந்திய மற்றும் அவுஸ்தி ரேலிய அரசுகளுக்கு ரணிலின் இந்த அணுகுமுறை கோபத்தை ஏற்படுத்தினாலும் அதனை வேறு வர்த்த கச் செயற்பாடுகள் அல்லது கடன் திட்டங்கள், நிதி நன்கொடைகள் மூலம் இலங்கையை தமக்குரிய வாறு மாற்றிவிடும் வாய்ப்புகள் உண்டு.

வீழ்ந்து கிடக்கும் பொருளாதார மீட்சிக்காகவும் ஈழத்தமிழர் விவகாரத்தில் சர்வதேசத்தின் அழுத்தங்களில் இருந்து தப்பும் நோக்கிலும் இலங்கையும் தேவையான அளவு வல்லரசு நாடுகளின் புவிசார் அரசியல் பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப கீழ்ப்படியும் சூழலும் உண்டு.

இது ரணிலுக்கு மாத்திரமல்ல புதிதாக பதவியேற்கவுள்ள எந்த ஒரு சிங்கள ஆட்சியாளருக்கும் பொருந்தும். ஆனால், ஈழத்தமிழர் விவகாரத்தைச் சர்வதேச அரங்கில் சூடு தணியாமல் வைத்திருப்பதற்கு தமிழ்த்தரப்புக் கையாளும் நுட்பம் என்ன? வடக்குக் கிழக்கில் பௌத்த மயமாக்கல் பற்றி அமெரிக்க - இந்திய அரசுகள் இதுவரையும் பகிரங்கமாக வாய் திறக்காமல் இருப்பதன் பின்னணி குறித்தும் தமிழ்த்தரப்பு ஆழமாகச் சிந்திக்கத் தவறியுள்ளது.