2009 இற்குப் பின்னரான புவிசார் அரசியல்

காசாவில் இன அழிப்பு - சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா மனு

மேற்கு சார்ந்த செல்லப்பிள்ளை அரசியலும் இந்தியாவின் ஓரவஞ்சகமும் ஈழத்தமிழர்களுக்குரிய நகர்வைத் தடுத்ததா?
பதிப்பு: 2024 ஜன. 06 16:14
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 29 22:23
main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
#tamil
#nadu
#canada
#us
பலஸ்தீன மக்கள் மீது இன அழிப்பு நடைபெறுவதாகவும் அந்தப் பெரும் சர்வதேசக் குற்றத்துக்கு இஸ்ரேலின் அரச பொறுப்பு விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றும் காசா மீது மேற்கொண்டுள்ள படையெடுப்பை உடனடியாக விலத்திக்கொள்ளும் ஆணையையும் பிறப்பிக்கவேண்டும் என்றும் கோரி தென்னாபிரிக்க அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ள வரலாற்று முக்கியத்துவமான சர்வதேசச் சட்ட நகர்வு டிசம்பர் 29 ஆம் திகதியன்று நடைபெற்றுள்ளது. எண்பத்து நான்கு பக்கங்கள் நீளமான தென்னாபிரிக்காவின் குற்றப்பத்திரிகை கிடைத்துள்ளதை சர்வதேச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது மட்டுமல்ல, உடனடி நடவடிக்கை தொடர்பான பகிரங்க இரண்டு நாள் அமர்வுகளை ஜனவரி 11 ஆம் 12 ஆம் திகதிகளில் நடாத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
 

ஈழத்தமிழர் மீது இதேபோன்று நடாத்தப்பட்ட இன அழிப்புப் போருக்கு எதிராக தென்னாபிரிக்காவை நகரவைப்பதில் ஈழத்தமிழரின் மேற்கு சார்ந்த 'செல்லப்பிள்ளை அரசியல்' தவறியுள்ளதா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளை இந்தியாவின் ஈழத்தமிழர் தொடர்பான 'ஓரவஞ்சக அரசியல்' பாதித்துள்ளதா, தென்னாபிரிக்காவின் வெளியுறவுக்கொள்கை இலங்கை ஒற்றையாட்சி அரசைத் தனது நட்புச்சக்தியாக்கும் 'தென்னுலக நலன் சார்ந்த அரசியல்' காரணமாகின்றதா என்ற கேள்விகள் எழுகின்றன

எதிர்பார்த்தது போல் இஸ்ரேல் தனது கடும் எதிர்ப்பை தென்னாபிரிக்கா மீது ஊடக வெளியில் காட்டியுள்ளது.

இஸ்ரேல் இன அழிப்புப் போரில் பயன்படுத்தும் ஆயுதக் கருவிகளை வழங்குவதோடு, இஸ்ரேல் மீது ஐ. நா. பாதுகாப்புச்சபைத் தீர்மானங்களை கடுமையாக நிறைவேற்ற முற்படும்போதெல்லாம் அதை நீர்த்துப்போகச் செய்யும் இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்காவும் தென்னாபிரிக்காவைக் கண்டித்துள்ளது.

இருந்தபோதும், சர்வதேச நீதிமன்றில் தனது சார்பான சட்ட நிபுணர்களையும் அனுப்பி வாதிடவேண்டிய நிலைக்கு இஸ்ரேல் தள்ளப்பட்டுள்ளது.

மலேசியா விரைந்து வரவேற்பு
மலேசியா விரைந்து வரவேற்பு
சர்வதேசத் தளத்தில் தென்னாபிரிக்காவின் இந்தத் துணிகர நடவடிக்கை கவனத்தை ஈர்த்துள்ளது மட்டுமல்ல பெரும் ஆதரவையும் பெற்றுவருகிறது. துருக்கி, இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகள் இந்த நகர்வை விரைந்து வரவேற்றுள்ளன. வேறு நாடுகளும் இந்த நகர்வில் தம்மை இணைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உக்ரெய்ன் மீதான ரசியப் படையெடுப்புக்கு எதிரான தடை அரசியலுக்குப் பின்னால் அணிவகுக்குமாறு அமெரிக்கா வற்புறுத்தியபோது அந்த வேண்டுகோளுக்கு அடிபணிய மறுத்த நாடுகளில் தென்னாபிரிக்காவும் ஒன்று.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இஸ்ரேலுக்கு எதிராக எந்தவித கடும் நடவடிக்கையையும் ஏற்படுத்தவிடாது தடுத்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் சர்வதேச அரசியலுக்கு எதிரான சவாலைத் தனது சர்வதேச சட்ட நகர்வால் தென்னாபிரிக்கா எதிர்கொள்ளத் துணிந்துள்ளமைக்கு மாறிவரும் உலக ஒழுங்கு காரணமாகிறது.

காசா மீது நடாத்தப்படுவது போன்ற அதே பாணியில் ஈழத்தமிழர் மீது நடாத்தப்பட்ட இன அழிப்புப் போருக்கு எதிராக தென்னாபிரிக்காவை நகரவைப்பதில் ஈழத்தமிழரின் மேற்கு சார்ந்த 'செல்லப்பிள்ளை அரசியல்' தவறியுள்ளதா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளை இந்தியாவின் ஈழத்தமிழர் தொடர்பான 'ஓரவஞ்சக அரசியல்' பாதித்துள்ளதா, தென்னாபிரிக்காவின் வெளியுறவுக்கொள்கை இலங்கை ஒற்றையாட்சி அரசைத் தனது நட்புச்சக்தியாக்கும் 'தென்னுலக நலன் சார்ந்த அரசியல்' காரணமாகின்றதா என்ற கேள்விகள் எழுகின்றன.

திட்டமிடப்பட்ட பாரிய இன ஒடுக்குமுறையில் இருந்து அரசியல் விடுதலை பெற்றுத் தனி அரசாக இயங்கி வரும் தென்னாபிரிக்கா பலஸ்தீன விவகாரத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது பாராட்டுக்குரியது.

இதை வரவேற்கும் வேளை, 2009 இல் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்புத் தொடர்பாக எந்த ஒரு சர்வதேசச் சட்ட நகர்வையும் முன்னெடுக்கத் தென்னாபிரிக்க அரசு இது வரை முன்வரவில்லை என்பதையும் கூர்மையாக நாம் நோக்கவேண்டும். மாறாக, அரசியல் தீர்வு எதுவுமற்ற போலியான நல்லிணக்க அரசியலை நோக்கியே தென்னாபிரிக்காவின் சார்புநிலை இருந்துவந்துள்ளது. இதற்கு ஒரு துருவ உலக ஒழுங்கில் ஆட்சி மாற்றங்களை மட்டும் குறியாகக் கொண்டியங்கிய மேற்கு நாடுகளும் காரணமாயின.

இதற்கு மாற்றாக, இன அழிப்புக்கு எதிராக ஏதாவது ஒரு நாட்டைத் தானும் சர்வதேச நீதிமன்று ஊடாக அசையவைக்கும் நகர்வை ஈழத்தமிழர் தரப்பு இலக்காகக் குறிவைத்து இயங்கியிருக்கவில்லை. ஈழத்தமிழர்களின் தரப்புகள் அர்த்தமுள்ள முயற்சிகள் எதையும் மேற்கொள்ளத் தவறியது ஏன் என்ற கேள்வியும் இங்கு முன்வைக்கப்படவேண்டியது.

தற்போது உலக ஒழுங்கில் மாற்றம் ஏற்பட்டு வருகின்றபோதும் ஈழத்தமிழர் விடயத்தில் அணுகுமுறை மாற்றம் தானாக ஏற்பட்டுவிடும் என்று தமிழர் தரப்பு செல்லப்பிள்ளை மற்றும் எதிர்பார்ப்பு அரசியலில் இனியும் தங்கியிருப்பது பொருத்தமற்றது.

கடந்த காலத்தில், தென்னாபிரிக்காவின் நோபல் பரிசு பெற்ற காலஞ்சென்ற ஆயர் டெஸ்மன்ட் டூட்டு போன்றவர்களோடு ஏதோ ஒரு வகையில் உறவை உருவாக்கியிருந்த அருட்தந்தை எஸ். ஜே. இமானுவல் போன்றோர் இஸ்ரேல் சார்பான அமெரிக்க வழிநடத்தலுக்கு பலிக்கடா ஆனது உட்பட்ட பல தொலைநோக்கற்ற தவறுகளை 2009 இற்குப் பின்னர் ஈழத்தமிழர்களின் சர்வதேச அணுகுமுறை கைக்கொள்ளத் தவறியுள்ளது வெளிப்படை.

துருக்கியின் வரவேற்பு
துருக்கியின் வரவேற்பு
ஒரு சிலரை மட்டும் இதற்கான காரணங்களாகக் குற்றம் சுமத்துவதற்குப் பதிலாக சர்வதேச நீதி தொடர்பாக ஈழத்தமிழர்கள் மீண்டும் மீண்டும் தவறாகப் பலியிடப்படுவதற்கான வழிநடத்தல் அல்லது மூலகாரணங்கள் எவை என்று ஆராய்வது எதிர்கால வழிவரைபடத்துக்கு ஆரோக்கியமானது.

ஓர் அரசியற் துன்பியல் வரலாறாகப் புரண்டு ஓடியுள்ள கடந்த பதினான்கு வருடங்களில் தென்னாபிரிக்காவுக்கோ அல்லது வேறு உலக ஒழுங்குகளைச் சிந்திக்கத் தலைப்படும் எந்த ஒரு நாட்டுக்குமோ பயணித்து ஈழத்தமிழர் மீதான இன அழிப்புத் தொடர்பாக தமிழ்த்தேசிய அரசியலில் ஈடுபடும் எவரும் விபரித்துப் பேசியிருக்கவில்லை. மேற்கை அல்லது இந்தியாவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'செல்லப்பிள்ளை அரசியல்' என்ற மனநிலை இதற்குத் தடையாக இருந்துள்ளது.

ஆனால், சிங்கள ஆட்சியாளர் தரப்பில், மகிந்த ராஜபக்ச இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்த போதுகூட தென்னாபிரிக்காவில் அப்போது உப ஜனாதிபதியாக இருந்த தற்போது ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் சிறில் ரமபோசாவுடன் தந்திரோபாய உறவை நெருக்கமாகப் பேணியிருந்தார். ரமபோசாவும் மகிந்தவுடன் நெருங்கிய நண்பராக இருந்து கொழும்புக்கு வந்து சென்றிருக்கிறார்.

அப்போதைய தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜாக்கோப் சூமா இலங்கைக்கும் தென் சூடானுக்குமான விசேட தூதராக சிறில் ரமபோசாவை 2014 ஆம் ஆண்டில் நியமித்திருந்தார். பொதுநலவாயக் கூட்டின் சந்திப்பை அடுத்த நகர்வாக அது அமைந்திருந்தது.

சிங்கள ஆட்சியாளர் தரப்பில், மகிந்த ராஜபக்ச இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்த போதுகூட தென்னாபிரிக்காவில் அப்போது உப ஜனாதிபதியாக இருந்த தற்போது ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் சிறில் ரமபோசாவுடன் தந்திரோபாய உறவை நெருக்கமாகப் பேணியிருந்தார். ரமபோசாவும் மகிந்தவுடன் நெருங்கிய நண்பராக இருந்து கொழும்புக்கு வந்து சென்றிருக்கிறார்

அதன்போது, மேற்கு நாடுகளின் ஆதரவோடு நல்லிணக்க அரசியல் தூதராக ரமபோசா செயற்பட்டது மட்டுமல்ல, சிங்களத் தரப்போடும் நல்லுறவை வெளிக்காட்டியிருந்தார். தற்போது அவரே தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாகியுள்ள சூழலில், அவரின் கருத்தில் தாக்கம் ஏற்படுத்த தமிழ்த் தரப்பு கடுமையாக உழைக்கவேண்டியிருக்கும். தற்போது மேற்கு நாடுகளோடு அவரது அரசியலுக்கு கணிசமான விரிசல் ஏற்பட்டுள்ளது என்பதும் இங்கே கவனிக்கப்படவேண்டியது.

தென்னாபிரிக்காவில் புலம்பெயர்ந்த தமிழர்களைக் கொண்டிருக்கக் கூடிய தமிழர்களால் இது தொடர்பில் இதுவரை எந்த முனைப்பையும் மேற்கொள்ள இயலாமற்போயிருந்தாலும் இனியாவது ஆக்கபூர்வமான நகர்வுகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

இன அழிப்பை நுட்பமாக மறுத்து போர்க்குற்றங்களை இரண்டு தரப்புகளும் புரிந்தன என்ற கருத்தியலை மட்டும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மேற்குலக சக்திகள் முன்வைத்த அணுகுமுறைக்குத் தென்னாபிரிக்கத் தமிழரான முன்னாள் ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரே துணைபோயிருந்தார்.

இலங்கையில் நடைபெற்றது இன அழிப்பு என்ற கருத்தை முன்வைக்கத் தவறிய நவநீதம்பிள்ளை போன்றோரின் கருத்தை மாற்றுவதற்கு தற்போதாவது ஈழத்தமிழர் தரப்பு ஏதேனும் காத்திரமான முயற்சியை மேற்கொண்டுள்ளதா என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கிறது.

இவ்வாறான பாரிய தவறுகளை ஈழத்தமிழர் தரப்பு, குறிப்பாக தமிழ்த்தேசிய அரசியலில் ஈடுபடும் கட்சிகளும் புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் ஒரு புறம் இழைத்துக்கொண்டிருக்க, மறுபுறம் உலகத் தமிழர் பேரவை என்ற தனிநபர் குழு இதே தென்னாபிரிக்காவுடன் சிங்கப்பூர் தீர்மானத்தில் இருந்து இமாலயத் தீர்மானம் வரை தவறான அரசியலை முன்னெடுத்துள்ளது.

உலக ஒழுங்கில் வேறுபட்ட நலன்களைக் கொண்டிருக்கக் கூடிய ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல அமெரிக்காவும் இதே தென்னாபிரிக்க மாதிரியையே - அதுவும் முற்றிலும் தலை கீழாகத் - தமிழர்களுக்கு முன்வைத்துவருகின்றன.

அண்மையில் மேற்கு நாடுகளின் தூதரகங்கள் இமாலயத் தீர்மானத்தையும் அதைத் தொடர்ந்த சந்திப்புகளையும் வரவேற்றுக் கருத்து வெளியிட்டமை இதை எடுத்துக்காட்டுகிறது. இந்த நிலை மாறவேண்டுமானால், தென்னாபிரிக்காவில் சில அடிப்படை மாற்றங்களை ஈழத்தமிழர்களின் தரப்புகள் இனியாவது சாதிக்கவேண்டும்.

மிகப்பெரிய தவறுகள் நடக்கும் போது மட்டும் அவற்றை விமர்சித்துவிட்டு மேற்கொள்ளவேண்டிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறும் தமிழர் அரசியற் கட்சித் தரப்புகளும் இமாலயத் தவறுகளையே புரிந்துகொண்டிருக்கின்றன.

விளைவாக, இலங்கை ஒற்றையாட்சி அரசின் தேர்தல் அரசியற் சகதிக்குள் மட்டுமே தமிழ் மக்கள் தவிக்கவிடப்பட்டுள்ளார்கள்.

மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஒரு துருவ உலக ஒழுங்கின் எதிர்ப்பாளன் என்ற கோணத்தில் மாத்திரம் தென்னாபிரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது என்று மேலோட்டமாக மட்டும் இந்த நகர்வை எடுத்துக்கொள்ளக் கூடாது.

இன அழிப்பு எங்கு நடந்தாலும் அதனை எந்த ஓர் அரசும் சர்வதேச நீதி என்ற அடிப்படையில் கவனத்தில் எடுக்க கடமைப்பட்டுள்ளது என்ற கருத்தும், இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் ஓர் அரசுக்கு எதிராக மற்றோர் அரசு வழங்குத் தாக்கல் செய்ய முடியும் என்ற கருத்தும் மட்டுமல்ல, தென்னாபிரிக்கா தான் கடந்து வந்த நிறரீதியான இன ஒடுக்குமுறை தொடர்பான வரலாற்றுப் புரிதலுடன் இந்த நடவடிக்கையை அணுகியிருக்கிறது என்ற கருத்தும் மனுவை வாசிக்கும்போது வலுப்படுகிறது.

எப்போது பலஸ்தீன மக்கள் விடுதலை காண்கிறார்களோ அப்போது தான் தென்னாபிரிக்காவில் தாம் முன்னெடுத்த அடக்குமுறைக்கு எதிரான போராட்டமும் முழுமையாக வெற்றியடையும் என்ற கருத்துநிலையை நெல்சன் மண்டேலாவும் வெளிப்படுத்தியிருந்தார் என்பதையும் இங்கு நினைவுகூரவேண்டும்.

ஆபிரிக்க தேசிய காங்கிரசின் சிறில் ரமபோச தலைமையிலான தென்னாபிரிக்கா தற்போதைய புவிசார் அரசியல் போட்டிச் சூழலில் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் மீதான வழக்குத் தாக்கல் நகர்வு ஈழத்தமிழர்களுக்குத் தேவையான சர்வதேச நீதிக்கான சட்டகத்தைப் பலப்படுத்துகின்றது என்பதை ஈழத்தமிழர்கள் இங்கு உற்று நோக்கவேண்டும்.

தமிழ் இன அழிப்பு நடைபெற்றுள்ளது என்று 2013 இல் தமிழ்நாட்டு அரசு சட்டசபையில் பிரேரணை ஒன்றை நிறைவேற்றியிருந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த அமரர் செல்வி ஜெயலலிதா பிரேரணையை நிறைவேற்றியிருந்தார். எதிர்கட்சியாக இருந்த திமுகவும் ஆதரவு வழங்கியிருந்தது.

தற்போது தமிழ் நாட்டில் ஸ்ராலின் தலைமையிலான திமுக ஆட்சியும் ஜெயலலிதா அம்மையார் மேற்கொண்ட துணிகரமான நடவடிக்கைக்கு ஒப்பான, அல்லது அதையும் விஞ்சிய ஒரு நிலைக்குச் செல்லாமல், தேர்தல் வாக்குறுதிகளில் கூட நலிந்துபோகும் நிலையில் ஈழத்தமிழர் தொடர்பான தமிழ்நாட்டின் சர்வேதச முக்கியத்துவத்தை முடக்கிவைத்துள்ளது ஆழ்ந்த கவலைக்குரியது.

தமிழ்நாட்டின் முனைப்பு ஜெயலலிதா அம்மையார் நிறைவேற்றிய தீர்மானத்தின் பாதையில் பயணித்துவிடக்கூடாது என்பதற்காக இலங்கையின் பழுத்த இராஜதந்திரியான மிலிந்த மொறாகொட போன்றவர்கள் திரைமறைவில் செயற்பட்டுவருகிறார்கள். இதிலே நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்கெயுமும் பங்களித்துவருகிறார் என்று பரவலாகக் கருதப்படுகிறது.

இவ்வாறான சூழலில் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை உள்ளிட்ட தென்னாபிரிக்காவில் உள்ள தமிழர்களை ஈழத்தமிழர் தரப்பு முறையாக அணுகி இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு தொடர்பான விடயங்களைப் பேசுவதற்குரிய சூழலை இனியாவது உருவாக்கவேண்டும்.

இன அழிப்பை ஒத்துக்கொள்ளாமலும் அதற்குரிய அங்கீகாரத்துடன் நீதிவழங்கப்படாமலும் நல்லிணக்கம் சாத்தியமில்லை என்ற கருத்தியல் ஆழமாகப் பேசப்படவேண்டும்.

ஈழத்தமிழர்களுக்கு என்று ஒரு வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கும் தமிழ் ஆய்வாளர்கள் சிலர் இந்த விடயம் தொடர்பாக மேலும் ஆராய்ந்து தென்னாபிரிக்க அரசை எவ்வாறு அணுகுவது என்பது தொடர்பான விபரங்களைப் பகிரங்கமாகப் பேச வேண்டும்.

2009 இல் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நடந்த அதே இன அழிப்புப் போர்தான் இன்று காசாவிலும் நடக்கிறது.

ஆகவே துணிவோடு செயலில் இறங்க வேண்டும் என்பதற்கு தென்னாபிரிக்கா, இஸ்ரேல் அரசுக்கு எதிராகச் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதை வலுவான ஒரு முன்னுதாரணமாக எடுக்க வேண்டும்.

மியன்மாரில் ரொஹின்யா முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து கொண்டிருப்பது இன அழிப்பு என்று சர்வதேச நிதிமன்றதில் கம்பியா என்ற ஆபிரிக்க நாட்டால் தொடுக்கப்பட்டு பின்னர் மேற்கு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளால் ஆதரிக்கப்பட்ட வழக்கு விசாரணை நடைபெறுகின்றது. இதை மியன்மார் அரசு கடுமையாக எதிர்த்திருந்தாலும் அந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

ஆகவே சர்வதேச நீதிமன்றத்தில் ஓர் அரசு இன்னோர் அரசுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்ற விதிகளுக்கு அமைவாக தற்போது ஈழத்தமிழர் விடயத்தில் ஓரளவு சாதகமான போக்கை வெளிப்படுத்தும் கனடிய அரசுக்கு அங்குள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மேலும் பல வியூகங்களை வகுத்து ஈழத்தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு என்பதை கனடிய அரசின் வெளியுறவுக் கொள்கையில் சேர்ப்பதற்குரிய அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.

சர்வதேச நீதிமன்று என்பது வேறு, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்று என்பது வேறு. சர்வதேச நீதிமன்றில் இன அழிப்புத் தொடர்பான அரச பொறுப்பு விசாரிக்கப்படும். ஆனால், குற்றவியல் நீதிமன்றில் தனிமனிதர்களின் குற்றப்பொறுப்பு மட்டுமே விசாரிக்கப்படும்.

மியன்மாரில் ரொஹின்யா முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து கொண்டிருப்பது இன அழிப்புத்தான் என்று சர்வதேச நிதிமன்றதில் வழக்கு விசாரணை நடைபெறுகின்றது. ஆபிரிக்க நாடு ஒன்றுதான் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறது. இதை மியன்மார் அரசு கடுமையாக எதிர்த்திருந்தாலும் அந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் பிடிவிறாந்து இருப்பதால் கடந்த ஓகஸ்ட் மாதம் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற பிறிக்ஸ் (BRICS) மாநாட்டில் ரசிய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் பங்குபற்ற முடியாதென அமெரிக்கா போன்ற மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடுமையாகக் கண்டித்திருந்தன. ஆனாலும் புட்டினை மாநாட்டில் பங்குபற்ற தென்னாபிரிக்கா வருமாறு அழைப்பேன் என்று ஜனாதிபதி சிறில் ரமபோச சவால் விடுத்திருந்தார்.

இருந்தாலும் மேற்கு நாடுகளின் கடும் அழுத்தங்களினால் இறுதியில் தனது நிலைப்பாட்டை ரமபோச மாற்றிக்கொண்டார். ரசிய ஜனாதிபதிக்குப் பதிலாக வெளியுறவு அமைச்சர் லவ்ரோவ் பிறிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டார்.

உக்ரெயன் அரசுக்கு எதிரான போர்ச்சூழலில் சிறுவர்கள் வலிந்து இடமாற்றப்பட்டதாகச் சொல்லப்படும் உக்ரெய்ன் மற்றும் மேற்கு நாடுகளின் குற்றச்சாட்டைக் கையாண்டு புட்டினுக்கு எதிராகச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்திருந்தது.

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக் கொள்ளும் சர்வதேச உடன்படிக்கையில் ரசியா கைச்சாத்திடவில்லை. ஆனால் உக்ரெயன் கைச்சாத்திட்டுள்ளது. உக்ரெயினில் ரசியா செய்த குற்றம் என்ற அடிப்படையில் படைகளின் உயர் தலைவரான புட்டின் மீது பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது. இந்தப் பிடிவிறாந்தால் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொண்டுள்ள எந்த ஒரு நாட்டுக்கும் பயணிக்க இயலாத நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றின் பிடிவிறாந்தைக் காரணம் காட்டி தென்னாபிரிக்கா மீது அழுத்தம் மேற்கொண்ட மேற்குலகுக்கு எதிரான ஒரு சர்வதேச நகர்வை ரமபோசாவின் தென்னாபிரிக்க அரசு இஸ்ரேல் மீது தொடுத்துள்ள சர்வதேச நீதிமன்றின் ஊடான வழக்கின் மூலம் முன்னெடுத்துள்ளது என்பது மாறிவரும் உலக ஒழுங்கு ஏற்படுத்தியுள்ள சூழலை எடுத்தியம்புவதாக அமைந்துள்ளது. இதனால் பலஸ்தீன விவகாரம் பயனும் பலனும் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இனியாவது சர்வதேச நீதியையும் சர்வதேச அரசியலையும் சரியாகக் கையாள ஈழத்தமிழர்களும் தமிழ்நாடும் உலகளாவிய தமிழர்களும் காத்திரமான நகர்வுகளை முன்னெடுக்கவேண்டும்.

பழைய கருத்தியலில் பயணிக்கும் கருத்துருவாக்கிகளும் மாறி வரும் உலக ஒழுங்கு பற்றிய புதிய அறிவைப் பெற்றுக்கொண்டு இதற்குப் பங்களிக்கவேண்டும்.

அமெரிக்காவுக்குப் பின்னாலும், இந்தியாவுக்குப் பின்னாலும், தனித் தனியாகவும் கூட்டாகவும் செல்லப்பிள்ளை அரசியல் மேற்கொள்வதையும் சொல்வதைக் கேட்டு ஒழுகுவதையும் விடுத்து தற்சார்பு நிலையில் ஈழத்தமிழர் நகர்வுகள் இனியாவது அமையவேண்டும்.