அவை வருமாறு
ஒன்று, கச்சதீவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்,
இரண்டாவது வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைத்து மாகாண சபை முறையை நடைமுறைப்படுத்தல். வேண்டுமானால் சிங்கள பிரதேசங்களில் மாகாண சபை முறையை இரத்துச் செய்யலாம்.
மூன்றாவது, தலை மன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையேயான சுமார் முப்பத்து இரண்டு கிலோ மீற்றர் நீளமுடைய பாலத்தை அமைப்பதற்கு இணங்க வேண்டும்.
ஜெயசங்கர் வழங்கிய இந்த மூன்று பரிந்துரைகளையும் ஜே.வி.பி தற்போது கசிய விட்டிருக்கின்றது.
ஜே.வி.பியின் மத்திய குழுக் கூட்டத்தில் இது குறித்துப் பரிசீலிக்கப்படும் என அனுரகுமார திஸாநாயக்கா உறுதியளித்த விடயமும் கசிய விடப்பட்டிருக்கின்றன.
மாகாண சபைகள் முறையை முற்றாக ஒழித்து இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அமைவான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்க அனுரகுமார திஸாநாயக்கா முன்வைத்த யோசனைகளையும் இந்தியா பரிசீலிக்கிறது என்பதை ஜே.வி.பியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசின் இறைமைக்குப் பாதிப்பில்லாத வகையில் இந்தியா இலங்கைத்தீவில் எந்த ஒரு முதலீடுகளையும் செய்ய முடியுமென அனுரகுமார திஸாநாயக்கா உறுதியளித்திருக்கிறார்.
இந்தியாவுக்கு எதிராகத் தீவிர பிரசாரங்களில் குறிப்பாக ஈழத் தமிழர் விவகாரங்களில் இந்தியாவுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் ஜே.வி.பி. திடீரென புதுடில்லியுடன் உறவு வைத்தமைக்கான வியூகங்கள் ஏதுவாக இருக்குமென்ற கேள்விகள், சந்தேகங்கள் வலுப்பெறுகின்றன.
இப் பின்னணியில் அனுரகுமார திஸாநாயக்காவை இந்தியா அழைத்ததா அல்லது இந்தியாவுடன் நெருங்கினால் சீனா தங்களுடன் நெருங்கிவரும் என்ற நம்பிக்கையுடன் ஜே.வி.பி. இந்தியாவுக்குச் சென்றதா அல்லது ஜே.வி.பியை அழைத்ததால் பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் தங்களுடைய புவிசார் அரசியல் நலன்களுக்கு ஏற்ப நெருங்கிவருமா என்ற உத்தியுடன் புதுடில்லி அழைத்ததா என்ற கேள்விகளும் இல்லாமலில்லை.
ஜே.விக்கு இந்தியா வழங்கிய முக்கியத்துவம் சீனா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. இலங்கைத்தீவில் இந்திய விஸ்தரிப்பைக் கடுமையாக எதிர்த்த ஜே.வி.பிக்கு எவ்வாறு இந்தியா சிவப்பு கம்பள வரவேற்பை வழங்கியது என்பதே இலங்கைத்தீவில் உள்ள பல மூத்த அரசியல்வாதிகளைச் சிந்திக்க வைத்திருக்கிறது.
இந்தியாவுக்குச் செல்வதற்கு முன்னர் கடந்த மாதம் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்குச் சார்பாக வெளியிட்டிருந்த கருத்துகள் குறிப்பாக இந்தியாவை மையப்படுத்திய புவிசார் அரசியல் பற்றிய ஜே.வி.பியின் நிலைப்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவதானித்தது அனுகுமார திஸாநாயக்காவை அழைத்ததாகவும் இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
'இந்தியா என்பது எமக்கு அருகில் இருக்கும் உலகின் பலம்வாய்ந்த நாடு நாம் விரும்பியோ விரும்பாமலோ எடுக்கும் அனைத்து தீர்மானங்களும் இந்தியாவின் நலனை அடிப்படையாகக் கொண்டே அமையுமென அநுரகுமார திஸாநாயக்க அமெரிக்காவில் கூறியதாக த இந்து என்ற ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
தி இந்து பத்திரிக்கைக்குக் கடந்த ஆண்டு அநுரகுமார திஸாநாயக்க வழங்கியிருந்த நேர்காணலில் ஜே.வி.பியின் நிலைப்பாட்டில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், இலங்கைத்தீவு எடுக்கும் எந்தவொரு முடிவும், அது இந்தியாவில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படுமெனவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
'எங்கள் நெருங்கிய அயல் நாடான இந்தியா ஒரு முக்கிய அரசியல் மற்றும் பொருளாதார மையமாக மாறியுள்ளது என்பதை அறிவோம்' என்று அனுரகுமார திஸாநாயக்கா புதுடில்லியில் வைத்துப் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
அதேநேரம் சீனா பற்றிய ஜே.வி.பியின் பார்வையில் மாற்றமில்லை என்று ஜே.வி.பி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கொழும்பில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குக் கடந்த வாரம் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க, இந்திய மற்றும் சீனா போன்ற வல்லரசுகளைச் சுந்தரமாகக் கையாள வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க 2015 இல் பிரதமராக இருந்த போது நாடாளுமன்றத்தில் கூறிய கருத்தை ஏற்றுக்கும் தொனியில் விஜித ஹேரத்தும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் பலமிழந்து சிதறுண்டிருக்கும் சூழலில் ஜே.வி.பி பலமடைந்துள்ளதை இந்தியா அவதானித்திருக்க வேண்டும் என்றும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்கா வெற்றிபெறக்கூடும் என்ற ஒரு நம்பிக்கையிலும் இந்தியா அனுரகுமார திஸாநாயக்காவை அழைத்திருக்கலாம்.
அனுரகுமார திஸாநாயக்காவைச் சந்தித்த பின்னர் ஜெய்சங்கர் வெளியிட்ட கருத்தில் ஜே.வி.பிக்கு இலங்கைத்தீவில் மக்கள் செல்லவாக்கு அதிகரித்துள்ளது என்பதை ஏற்றுள்ளார்.
அதேவேளை அனுரகுமார திஸாநாயக்கா விரைவில் சீனாவுக்கும் பயணம் செய்வார் என்று ஜே.வி.பி தகவல்கள் கூறுகின்றன. ஆகவே இலங்கைத்தீவை மையப்படுத்திய வல்லரசு நாடுகளின் புவிசார் அரசியல் பொருளாதார போட்டிச் சூழலை ஜே.வி.பி நன்கு பயன்படுத்தித் தமக்குரிய உள்ளூர் அரசியல் செல்வாக்கைக் குறிப்பாக வாக்கு வங்கியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது என்ற கருத்தும் உண்டு.
சீனாவுடன் நெருங்கிச் செல்ல வேண்டும் என அனுரகுமார திஸாநாயக்கா இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது கூறியதை எவரும் மறுப்பதற்கில்லை.
அது மாத்திரமல்ல 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா பெருமளவு அக்கறை செலுத்த விரும்பவில்லை என்பதையும் ஜே.வி.பி அவதானித்திருப்பதைச் சமகால அணுகுமுறைகளும் வெளிப்படுத்துகின்றன.
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்யும் நோக்கில் மிலிந்த மொறகொட புதுடில்லியில் தூதுவராக இருந்தபோது மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகள் பற்றியும் ஜே.வி.பி நன்கு அறிந்திருக்கிறது.
பதவிக் காலம் முடிவடைந்த பின்னர் கொழும்புக்கு வந்த மிலிந்த மொறகொட, அனுரகுமார திஸாநாயக்காவைச் சந்திருக்கிறார்.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதை மையமாகக் கொண்டு அமெரிக்கா - இந்திய அரசுகள் கொழும்பில் மேற்கொண்டு வரும் அரசியல் சூழ்ச்சிகள் எதிரும் புதிருமாக இருக்கும் அரசியல் தலைவர்களையும் மற்றும் எதிரும் புதிருமாகவுள்ள கட்சிகளையும் ஒன்றிணைக்கும் வகையில் அமைந்துள்ளன@@
இப் பின்னணியில் ஜே.வி.பியை அமெரிக்க - இந்திய அரசுகள் அழைத்துப் பேசிய நகர்வுகள் மற்றும் இந்த வல்லரசுகளைப் பயன்படுத்தும் ஜே.வி.பியின் உத்திகள் எல்லாமே தற்போது மாறி வரும் உலக அரசியல் ஒழுங்குக்கு ஏற்ற வியூகங்கள் என்பது புரிகிறது.
ஜனாதிபதி ரணிலுடன் கடந்த வாரம் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான இராஜதந்திரி ஒருவர், கிழக்கு மாகாணம் திருகோணமலையை மையப்படுத்திய அமெரிக்க மிலேனியம் சவால்கள் உடன்படிக்கையை ஏற்றால் அடுத்த ஜனாதிபதியாகவும் ரணில் பதவி வகிக்க முடியும் என்ற கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
அல்லது சஜித் பிரேமதாசவை அழைத்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியைப் புதுப்பித்து சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக்கினால் அதற்கும் அமெரிக்கா ழுமு ஒத்துழைப்பு வழங்கும் என்று அந்தத் தொலைபேசி உரையாடலில் கூறியதாகக் கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் விவரிக்கின்றன.
ஆகவே ஜே.வி.பியை மையப்படுத்திய அமெரிக்க - இந்திய மூலோபாயங்களும் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும் அல்லது அமெரிக்க மிலேனியம் சவால்கள் உடன்படிக்கையை ரணில் ஏற்க வேண்டும் என்ற அழுத்தங்கள் பரிந்துரைகள் எல்லாமே, இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் சீனச் செல்வாக்கைத் தடுக்க மேற்கொள்ளும் நகர்வுகள் என்பது கண்கூடு.
அமெரிக்க - இந்திய அரசுகள் முரண்பாட்டில் உடன்பாடாக இந்த நகர்வைக் கையாளுகின்றன என்பது பகிரங்கமாகியுள்ளது.
2009 இறகு பின்னரான சூழலில் இலங்கைத்தீவில் ஒழுங்கான பலமான அரசாங்கம் அமையவில்லை என்பதே அமெரிக்காவின் பிரதான கவலை.
மாறாக ஈழத்தமிழர் விவகாரத்துக்கான தீர்வு முயற்சிகள் அல்லது 2012 இல் ஜெனீவா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா சமர்ப்பித்த இலங்கை பற்றிய பிரேரணைகள் எல்லாமே இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பைத் தங்களுக்குரியவாறு மாற்றியமைக்கும் காய் நகர்த்தல்களே தவிர வேறெதுவுமில்லை.
ஆனால் பலம் என்ற ஒன்று இருந்தால் எந்த ஒரு வல்லரசும் அழைத்துப் பேசும் என்பதற்குத் தற்போது ஜே.வி.பி சிறந்த உதாரணம். 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமிழ்த்தேசியக் கட்சிகள் பலமிழந்து ஒருவருக்கொருவர் முரண்பட்டுத் தேர்தல் வியூகங்களுடன் மாத்திரம் இயங்கியதை அமெரிக்க - இந்திய அரசுகள் நன்கு அவதானித்திருக்கின்றன.
கூட்டுப் பொறுப்பு கூட்டுச் செயற்பாடு இல்லாத ஒரு பின்னணியில்தான் கொழும்புடன் மாத்திரம் பேசினால் போதும் எனவும் பலமுள்ள சிங்களக் கட்சிகளுடன் உறவை வளர்க்க வேண்டும் என்ற முடிவுக்கும் அமெரிக்க இந்திய அரசுகள் வந்திருக்கின்றன.
வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளை மையமாகக் கொண்ட அரசியல் மூலோபாயங்களுக்காகவே அமெரிக்க - இந்திய அரசுகளும் மற்றும் சீனாவும் மும்முனைப் போட்டியாகச் செயற்படுகின்றன.
இந்த நகர்வுகளைச் சிங்களக் கட்சிகளும் இராஜதந்திர மொழியில் நன்கு பயன்படுத்துகின்றன. தற்போது ஜே.வி.பியும் இதற்கு விதிவிலக்கல்ல அனுரகுமார திஸாநாயக்காவின் அமெரிக்க இந்தியப் பயணங்கள் நல்ல படிப்பினையான உதாரணமாகும்.
தமிழ்த்தேசியக் கட்சிகள் 2009 இற்குப் பின்னர் ஜனநாயக வழியில் தீவிரமாகச் செயற்பட்டிருந்தால் தற்போது குழம்பியிருக்கும் உலக அரசியல் சூழலுக்குள்ளும் மாறி வரவுள்ள உலக அரசியல் ஒழுங்குக்கு ஏற்பவும் ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையாண்டிருக்க முடியும்.
இப்போதும் கூட அதற்கான புவிசார் அரசியல் பின்னணிகளும் அதற்குரிய வெளியும் தாராளமாக உண்டு.