யார் யார் என்ன சொல்கிறார்கள், ஏன் அவர்கள் இவ்வாறெல்லாம் சொல்கிறார்கள், அவர்களின் பின்னணியில் சதியாலோசனை இருக்கிறதா என்பதை சமூக வலைப் பாணியில் ஆராய்ந்து குட்டையைக் கிளப்புவது கருத்தாக்க வெளிக்கு உகந்ததல்ல. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே ஆக்கபூர்வமானது.
பொதுவேட்பாளர் எனும் கருத்தியல் எவ்வளவு முக்கியமானதோ அவ்வளவுக்கு பொதுவேட்பாளராக முன்வைக்கப்படவிருக்கும் மனிதரும் முக்கியமானவர்.
ஏன் என்றால் கருத்தியல் திசை திருப்பப்படுவதைப் போல அக் கருத்தியலை ஆணையாகத் தாங்கும் மனிதரும் திசை திருப்பப்பட்டால் கருத்தியலின் ஆணையே தனது அடிநாதத்தை இழந்துவிடும்.
ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில் இவ்வாறாக மக்கள் ஆணையைத் திசை திருப்பிய வரலாறு ஜி. ஜி. பொன்னம்பலம் போன்ற தலைவர்களில் இருந்து அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் வரை மட்டுமல்ல 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஈழத்தமிழர் தேசியம் பேசும் அரசியல் கட்சிகளில் மக்களாணை பெற்ற தலைவராகத் தன்னை வெளிப்படுத்தி பின்னர் சிங்கக்கொடி விசுக்கிய முதுபெரும் இரா. சம்பந்தன் உள்ளிட்டவர்கள் ஈறாகத் தொடர்கிறது.
தேர்தல் வேட்பாளராக ஒரு தடியை நட்டு, தடி முக்கியமல்ல அதன் பின்னால் இருக்கும் கருத்தியல் தான் முக்கியம், ஆகவே தடிக்கே உங்கள் வாக்கு என்ற கருத்தியலை மக்களின் நேசிப்புடன் இயங்கும் நேர்மையான ஒரு போராட்டத் தலைமை முன்வைத்தால், அதற்குக் கட்டுப்படும் போக்கு ஒரு காலத்தில் இருந்தது.
இன்று அது இல்லை.
இன்றைய, ஆக்கிரமிக்கப்பட்ட ஈழத்தமிழர் தேசத்துக்கு அவ்வாறான அன்புக்கட்டளை பிறப்பிக்கும் நம்பகத்தன்மையை எந்த சிவில் சமூக அமைப்பும் இலகுவாகப் பெற்றுவிட இயலாது.
ஆதலால், கருத்தியலும் உறுதியாக இருக்கவேண்டும், அதைத் தாங்கி வெளிப்படும் வேட்பாளரும் உறுதியானவராக இருக்கவேண்டும். இவை இரண்டும் பின்னிப்பிணைந்து வெளிப்படுவதே பொதுவேட்பாளர் என்ற கோட்பாடு.
இந்தக் கோட்பாட்டை பின்னால் எப்படி நகர்த்திச் செல்லலாம் என்ற அதீத கற்பனைகளில் ஈடுபட்டு வெறுந் தடிகளைத் தேட முற்பட்டால், தடியே தன்னைத் தாக்கும் நிலையே உருவாகும். ஆகவே, வெறுந் தடி வேட்பாளராகலாம் என்ற கதையை விட்டுவிட்டு உருப்படியான வேட்பாளரின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளவேண்டும்.
அதற்கும் முன்னதாக, பொதுவேட்பாளருக்கான கருத்தியல் எவ்வாறானதாக இருக்கவேண்டும் என்பதில் தெளிவு நிலை அவசியமாகிறது.
இந்தத் தெளிவைப் பெறுவதற்கு துருவங்கள் பெயர்ந்துள்ள உலகளாவிய அரசியற் போக்குகளையும் சர்வதேச நீதித் துறையில் ஏற்பட்டிருக்கும் பாரிய மாற்றங்களையும் அவை தரும் வாய்ப்புக்களையும் புரிந்திருப்பது மிகப் பிரதானமானது.
இலங்கைத் தீவின் உள்ளார்ந்த அரசியலோ, பொருளாதாரமோ, ஈழத்தமிழர் தேசத்தின் உள்ளார்ந்த அரசியலோ பொருளாதாரமோ, அல்லது இலங்கைத் தீவின் தேர்தல் அரசியலோ ஈழத்தமிழர் தேசத்துக்கான அரசியல் தீர்வை நல்கப்போவதில்லை என்பது வரலாற்று உண்மை.
ஈழத்தமிழர் தமது உரிமைக்கும் நீதிக்குமான அளவுகோல்களை ஒற்றையாட்சிக்கு உட்பட்ட பொறிமுறைகளுக்குள் ஒருபோதும் முடக்கக் கூடாது.
ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் வேரூன்றிய (Entrenched Clauses) தன்மைகள் ஈழத்தமிழர் தேசத்தால் ஒருபோதும் ஒப்புக்கொள்ள இயலாதவை. இந்த வேரூன்றிய தன்மைகள் பல உறுப்புரைகளில் வெளிப்படுகின்றன, இவற்றோடு ஆறாம் சட்டத்திருத்தம் போன்ற அரசியலமைப்புத் திருத்தங்களிலும் இவை வெளிப்படுகின்றன.
இவ்வாறான உறுப்புரைகளையும் திருத்தங்களையும் ஒருசேர மறுதலிக்கும் ஈழத்தமிழர் ஆணையாக பொதுவேட்பாளரின் கொள்கைப் பிரகடனம் அமையவேண்டும். அது உலக சமூகத்தை நோக்கிய பொறுப்புகள் சார்ந்த கோரிக்கையாக வெளிப்படவேண்டும்.
வேரூன்றிய தன்மை கொண்ட உறுப்புரைகள் எவை என்பதை தற்போதைய அரசியலமைப்பின் 83 ஆம் உறுப்புரை தெரிவிக்கிறது. அரசியலமைப்பின உறுப்புரைகளான 1, 2 (ஒற்றையாட்சி), 3 (இறைமை தீவின் முழுமக்களுக்கானது - சிங்கள ஏகபோகம்), 6 (சிங்கக் கொடி), 7, 8, 9 (பௌத்தத்துக்கு முன்னுரிமை), 10, 11 ஆகிய ஒன்பது உறுப்புரைகளில் ஏதேனும் புதிய அரசியலமைப்பு ஊடாகவேனும் மாற்றம் கொண்டு வரவேண்டுமாயின் இவ் உறுப்புரைகள் மூன்றில் இரண்டுக்கும் குறையாத நாடளுமன்ற வாக்குகளோடு மட்டுமல்ல, இலங்கைத்தீவு முழுவதுமான பொது வாக்கெடுப்புடனும் ஜனாதிபதியின் ஒப்புதலுடனும் மட்டுமே மாற்றப்படலாம் என்ற மூன்று தடையோட்டங்களைத் தாண்டிச் செல்லவேண்டியதாக அமைந்துள்ள வேரூன்றிய சிக்கல் தன்மை இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பில் உண்டு.
இந்த அரசியலமைப்புகளுக்கு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஈழத்தமிழர் மக்களாட்சி ஆணை வழங்கப்படவில்லை. இலங்கை ஒற்றையாட்சி அரசின் இறைமைக்குள் மட்டும் குறுக்கப்படும் எந்த ஒரு பொறிமுறையூடாக, அதுவும் குறிப்பாக ஈழத்தமிழர் கூட்டு உரிமையை மறுக்கும் நோக்கில் அமைந்துள்ள அரசியல் அமைப்புக்கு உட்பட்ட தேர்தல் அரசியல் மூலமாக தமிழ்த் தேசிய அபிலாசைகள் ஒருபோதும் நிறைவேற்றப்பட இயலாதவை என்பது கண்கூடு.
ஆகவே, உள்ளக யாப்பு நிலையில் வேரூன்றிய தன்மைகளைத் தாண்டி ஈழத்தமிழரின் உரிமைக்குரல் எவ்வாறு சர்வதேச மயப்படுத்தப்படுகிறது என்பதிலேயே அரசியற் தீர்வுக்கான சூழலும் நீதிக்கான சூழலும் இலங்கைத் தீவுக்குள் உருவாகமுடியும்.
இதுதான் இலங்கைத் தீவின் ஒற்றையாட்சி ஈழத்தமிழர் மீது சுமத்தியுள்ள வரையறை. இந்த வரையறைக்கு அப்பால் ஈழத்தமிழர் தமது கூட்டு உரிமையையும் நீதிகோரலையும் பற்றுக்கோடாகக் கொண்டு நகர்வதன் மூலமே தமக்கான நீதியையும் கூட்டுரிமைகளையும் தீவுக்குள் நிறுவமுடியும்.
அது எப்படி?
வெளியக சுயநிர்ணய உரிமையை நியாயப்படுத்தல், ஈழத்தமிழர் தேசத்தின் தனித்துவமான இறைமையின் பாற்பட்டு புதிய யாப்புருவாக்கத்தை நிர்ப்பந்திப்பதற்கான சர்வதேசத் தரப்புகளின் பொறுப்பை வலியுறுத்தல், சர்வதேச நீதிக்கான சரியான தமிழர் நிலைப்பாடு மேலும் தெளிவாக நியாயப்படுத்தப்படல், ஒற்றையாட்சி நிராகரிப்பு தெளிவாக வெளிப்படுதல், மத முன்னிலைத்துவம் குறைந்த பட்சம் தமிழர் தாயகத்தில் அடியோடு மறுக்கப்படுதல் போன்ற நிலைப்பாடுகள் ஊடாக மட்டுமல்ல, ஐ.நா. மத்தியஸ்தத்துடனான பொதுவாக்கெடுப்பு என்ற கோரிக்கையையும் இணைத்து முன்வைப்பதன் ஊடாக தமிழர் பிரதிநிதிக்கான பொதுவாக்கெடுப்பாக ஈழத்தமிழர் தமது பொதுவேட்பாளர் தளத்தைப் பயன்படுத்தலாம்.
அதாவது ஈழத்தமிழரின் வெளியுறவுக் கொள்கையின் பாற்பட்டதாகவே பொதுவேட்பாளருக்கான ஆணை வடிவமைக்கப்படவேண்டும். உள்ளக அடிப்படைகளில் அல்ல என்பதே முடிந்த முடிபாகவேண்டும். இதிலே நழுவற்போக்குகளுக்கு இடமளிக்கப்படுவதாக பொதுவேட்பாளருக்கான கொள்கைப் பிரகடனம் அமையக் கூடாது.
அதுமட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் போர்க்குற்ற ஆதாரங்கள் பூதக்கண்ணாடிகளால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருக்கும் தருணம் இது என்பதை உணராத நிலையில் ஈழத்தமிழர் தமது அரசியற் கோரிக்கைகளை முன்வைப்பது அபத்தமானது.
வெளியக அழுத்தங்களோ சர்வதேச விசாரணையோ பலனளிக்கப்போவதில்லை, உள்ளக செயல்முறைகளே இலங்கைக்கு இனிமேல் உகப்பானவை என்ற கருத்தியலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அறிக்கையின் பிரதான பிரேரிப்பாகக் கொண்டு வரவேண்டும் என்பதில் திரைமறைவில் பல நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அவற்றில் முன்வைக்கப்படும் கருத்தியல் எவ்வாறு வெளிப்படும் என்பதை அரசறிவியல் தெரிந்தவர்கள் மட்டும் தான் ஊகிக்கமுடியும் என்பதல்ல. சாதாரண பொதுமக்களால் கூட ஊகிக்க இயலும்.
இலங்கை அரசு ஐ.நா. மனித உரிமைப் பொறிமுறையை விமர்சனங்கள் ஊடாகவும் தந்திரோபாயமாக அழுத்தங்கள் மூலமும் கையாளுகிறது. கடும்போக்கைக் கடைப்பிடிப்பதும் ஒருவித தந்திரோபாய உத்தியாக ஜெனீவா நோக்கி இலங்கை அரச தரப்பால் கையாளப்படுகிறது.
ஈழத்தமிழர்களின் மனித உரிமைத் தரப்புகள் அவ்வாறில்லை, வெறுமனே மேய்க்கப்படும் தரப்புகளாக அவை மாறியுள்ளன. ஐ.நா. மனித உரிமைப் பேரவை ஈழத்தமிழர் மீதான இன அழிப்பைத் தொடர்ச்சியாகப் புறக்கணித்து வருவது தொடர்பாக தமிழ்ப் பார்வையிலான விமர்சனங்கள் ஜெனீவாவை நோக்கி முன்வைக்கப்படவேண்டும்.
இலங்கைத் தரப்பு முன்வைக்கும் விமர்சனங்களும் தமிழ்த் தரப்பு முன்வைக்கும் விமர்சனங்களும் ஒரே தராசில் சீர்தூக்கிப் பார்க்கப்படுவது சர்வதேச மனித உரிமை அரசியலாகியுள்ள சூழலில் தமிழர் தரப்பு தனது நிலைப்பாட்டை விமர்சனப் பார்வையோடு வலியுறுத்தத் தவறுவது தனது தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக் கொள்வதற்கு ஒப்பானது.
ஆகவே, பொதுவேட்பாளருக்கான கொள்கைப் பிரகடனம் சர்வதேசத்தை நோக்கியதாக அமைய வேண்டியதன் முக்கியத்துவம் இதன் மூலம் விளங்கிக்கொள்ளப்படுகிறது.
இறுதியாக, பொதுவேட்பாளர் ஏன் சாதாரண ஒருவராக அமையக்கூடாது என்பதை விளங்கிக்கொள்வதும் முக்கியமாகிறது.
சர்வதேசக் கவனத்தை ஈர்க்கவியலாத, உள்ளக அழுத்தங்களுக்கு அடிபணியக்கூடிய, அனுபவமற்ற ஒருவரால் மேற்குறித்த பொதுவேட்பாளர் நிலைப்பாட்டை எடுத்துச் செல்ல இயலாது.
அனுபவம் அற்றவர்கள் நிலைப்பாட்டை மாற்றிவிடும் அழுத்தத்துக்கு உள்ளாகும் போது ஈழத்தமிழர் முன்வைக்கும் நிகழ்ச்சிநிரல் முழுமையாக அடிபட்டுப்போய்விடும்.
அழுத்தங்கள் எவ்வாறு உருவாக்கப்படலாம்?
முதலாவது கருத்தியல் திரிபுநிலையை ஏற்படுத்தல், இரண்டாவது திரைமறைவில் நடக்கும் நிதியூட்டல், மூன்றாவது அச்சுறுத்தல் ஊடாக அடிபணிய வைத்தல்.
இம் மூன்று தடைகளையும் தாண்டி ஓடும் வலு உள்ள ஒருவர் பொதுவேட்பாளராக முன்வைக்கப்படலாம்.