பொதுவேட்பாளர் விவகாரம்--

கருவிலேயே தவறுகிறதா தமிழ்த் தேசியப் பேரவை முயற்சி? அதைக் காப்பாற்ற வழி ஏதும் உண்டா?

இவர்கள் இழைக்கும் அணுகுமுறைத் தவறு என்ன? இதற்கான அறிகுறிகள் அல்லது சகுனங்கள் தான் எவை?
பதிப்பு: 2024 ஜூலை 01 13:50
புலம்: முல்லைத்தீவு
புதுப்பிப்பு: ஜூலை 01 22:36
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
#unp
#sjp
ஈழத்தமிழர்களுக்கென்று தனியாக அடையாளப்படுத்தப்பட்ட மரபுவழித்தாயக உரிமையை அவர்கள் தொடர்ச்சியாகக் கோரி வந்துள்ளார்கள். இது ஈழத்தமிழர் தேசியத்துவத்தின் முதலாவது அச்சாணி நிலைப்பாடு. ஒரு தனித்துவமான தேசிய இனமாகத் தமது அரசியல் வேணவாவை அவர்கள் முன்வைத்துப் போராடி வந்துள்ளார்கள் என்பது இரண்டாது அச்சாணி நிலைப்பாடு. மறுக்கப்படவொண்ணாத் தன்னாட்சியுரிமையின் அடிப்படையைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளார்கள் என்பது மூன்றாவது அச்சாணி அடிப்படை. இந்த மூன்று தூண்களுக்கும் அடுத்தபடியாக இரண்டு தூண்களாக மொத்தம் ஐந்து தூண்கள் அடிப்படையானவை. இந்த ஐந்து தூண்களையும் நினைவுபடுத்தி, தமிழ்த் தேசியப் பேரவை முயற்சி எதுவித கோப தாபங்களுக்கும் அப்பாற்பட்டு அணுகப்படவேண்டும்.
 
வடக்கில் ஐந்து மாவட்டங்கள், கிழக்கில் மூன்று மாவட்டங்கள். வடக்கில் முப்பத்து நான்கு பிரதேச செயலகப் பிரதேசங்கள், கிழக்கில் நாற்பத்தைந்து. இவற்றில் ஈழத்தமிழர் செறிந்து வாழும் பிரதேச செயலகப் பகுதிகளில் இருந்து பங்கேற்பு உறுதிப்படுத்தப்படுவது மிகவும் அடிப்படையானது

ஐரோப்பிய காலனித்துவ முடிவின் பின் ஈழத்தமிழர்கள் தமது தனித்துவமான இறைமை அடிப்படையில் ஓர் அரசை உருவாக்குவதிலோ, அதன் அரசியலமைப்பைத் தமது வேணவாவின் அடிப்படையில் தீர்மானிப்பதிலோ, தமது கூட்டடையாளத்தை அழிவிலிருந்து பாதுகாக்கும் வகையிலோ தமக்குரிய இறைமையைப் பயன்படுத்த இயலாதவர்களாகத் தொடர்ந்தும் அந்நிய ஆதிக்கத்துக்குள் அரசியல் தீர்வு மறுக்கப்பட்டு வைக்கப்பட்டுவந்துள்ள மக்கள் கூட்டம் என்பதால் இனிமேலும் மறுக்கப்படவொண்ணா இறைமைக்கு அவர்கள் உரித்துடையவர்கள் என்பது நான்காவது அச்சாணி நிலைப்பாடு.

இவற்றை தாயகம், தேசியம், தன்னாட்சி, தனித்துவமான இறைமை என்று நான்கு தூண்களாக தமிழ்த் தேசியப் போராட்ட அரசியல் முன்வைக்கிறது.

அதேவேளை, இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு தேசிய இனம் என்ற வகையில் இன அழிப்புக்கான சர்வதேச நீதியை வலியுறுத்தும் நிலைப்பாடு 2009 இன அழிப்புப் போரின் பின்னர் நேரடியாக வலியுறுத்தப்படவேண்டிய ஐந்தாவது அச்சாணியாக, இன்னுமொரு தனிப்பெரும் தூணாகக் கணிக்கப்படவேண்டிய நிலைப்பாடாகியுள்ளது.

இவ்வாறு ஐந்து தூண்களான நிலைப்பாடுகளில் தாம் இயங்குவதாகக் காட்டிக்கொள்ளும் தமிழ்த் தேசியத் தேர்தல் அரசியற் கட்சிகளும் அவற்றின் கூட்டுகளும் இந்த அச்சாணிக் கொள்கைகளுக்கு முரணான அரசியலமைப்புக்கும் அதன் பதின்மூன்றாம் திருத்தம் என்ற பொறிக்குள்ளும் மாட்டிக்கொண்டு செயற்படுவதால் தத்தமது அணுகுமுறைகளில் வேறுபட்டு, தமக்குள்ளும் பிளவுபட்டுச் சிதைந்து போயுள்ளன.

மேற்குறித்த ஐந்து தூண்களிலும் அடிப்படையான நிலைப்பாடு வலியுறுத்தப்பட்டு ஒற்றுமையாகவோ அல்லது புரிந்துணர்வுடன் ஏதோ ஒரு வகையில் ஒன்றித்தோ வெளிப்படவேண்டும். இதற்கு ஏற்கனவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அவை காத்திரமானவையாக நீடிக்கவில்லை.

முள்ளிவாய்க்கால் இன அழிப்புப் போரின் முடிவின் பின்னான பதினைந்து ஆண்டுகளில் இந்தக் கட்சிகளைப் பொருத்தமான கொள்கைரீதியான ஒற்றுமைக்குள் கொண்டுவரும் 'பூனைக்கு மணிகட்டும்' கைங்கரியத்தில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்த கட்சிகளால் சிதறடிக்கப்பட்டு, பிளவுகள் பலவாக்கப்பட்டு, ஒட்டுமொத்த ஈழத்தமிழர் தேசமும் தேர்தல் அரசியலுக்குள் சிக்தித் தவறித் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில் மீண்டும் பொது அமைப்புகளின் கூட்டு ஒன்றை உருவாக்கி மேற்குறித்த ஐந்து அச்சாணி நிலைப்பாடுகளில் நேர்மையான, வெளிப்படைத்தன்மையான அணுகுமுறையூடான விவாதங்கள் ஊடாக தெளிவை உள்ளும் புறமும் ஏற்படுத்திச் செயற்படவேண்டும் என்பது ஈழத்தமிழர்களின் ஆழமான விருப்பு.

இலங்கை அரசியலமைப்புக்குள் ஒரு தீர்வும் சாத்தியமாகப் போவதில்லை என்றால் அதற்கு அப்பாற்பட்ட மக்களாட்சிப் பயணத்தை வலியுறுத்த தேர்தல் அரசியலை எவ்வாறு மக்கள் பயன்படுத்துவது என்ற கேள்விக்கான விடையை வலுவாக முன்வைத்து செயற்படுத்தப்படவேண்டிய பொது முயற்சியாக அது வெளிப்படவேண்டும்.

ஆனால், அவ்வாறு வெளிப்படாத அறிகுறிகள் சகுனங்களாகத் தென்பட ஆரம்பித்துள்ளமை மிகுந்த கவலைக்குரியது.

இந்தப் பொது முயற்சியை முன்னெடுப்போர் தமது அணுகுமுறையில் தவறிழைத்து கருவிலேயே தமிழ்த் தேசியப் பேரவை என்ற முயற்சிக்குத் தாமே பொறிவைக்கும் சூழ்நிலையை தோற்றுவித்துள்ளார்களா என்ற கேள்வி பெரிதாக எழுந்துள்ளது.

இவர்கள் இழைக்கும் அணுகுமுறைத் தவறு என்ன? இதற்கான அறிகுறிகள் அல்லது சகுனங்கள் தான் எவை? அப்படியானால், இந்த அணுகுமுறைத் தவற்றுக்கும் சகுனப் பிழைகளுக்கும் அப்பாற்பட்டுச் சென்று, விரைவாகக் குறித்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தமிழ்த் தேசியப் பேரவை என்ற முயற்சியைக் காப்பாற்ற வழியுண்டா?

இவர்கள் இழைக்கும் அணுகுமுறைத் தவறு என்ன? இதற்கான அறிகுறிகள் அல்லது சகுனங்கள் தான் எவை? அப்படியானால், இந்த அணுகுமுறைத் தவற்றுக்கும் சகுனப் பிழைகளுக்கும் அப்பாற்பட்டுச் சென்று, விரைவாகக் குறித்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தமிழ்த் தேசியப் பேரவை என்ற முயற்சியைக் காப்பாற்ற வழியுண்டா?

இந்த அடிப்படைக் கேள்விகளுக்கு விடைகாண முயல்கிறது இந்தக் கட்டுரை.

சில தனிநபர்கள் கூடுதலாகத் தமது ஆளுமையை ஒரு முயற்சிக்குள் செலுத்தும்போது அவர்களின் தனிப்பட்ட குணாம்சங்கள் பொது அமைப்பின் தன்மைகளாக மாறிவிடுவதாலும் அணுகுமுறைத் தவறும் சகுனப் பிழைகளும் தோன்றலாம் என்ற புரிதலோடு, குறித்த அணுகுமுறைத் தவற்றையும் சகுனப் பிழைகளையும் திருத்தி முன்னேறவேண்டும் என்ற நல்ல நோக்கோடும் அக்கறையோடும் மட்டுப்படுத்தப்பட்ட அவதானிப்புகளிலும் கருத்துநிலைகளிலும் கவனம் செலுத்துவோம்.

முதலில் சகுனப் பிழைகளாக நோக்கப்படும் தவறான அறிகுறிகள் பற்றி கூர்மை ஆசிரிய பீடத்தின் நேரடியான அனுபவத்தை வாசகர்களுக்குப் பதிந்துகொள்வது அவசியமாகிறது. அதன் பின், அது தொடர்பான எமது காய்தல் உவத்தலுக்கும் அப்பாற் சென்று கவனத்தைக் குவிப்பது ஆரோக்கியமானதும் வெளிப்படைத் தன்மைக்கு நன்மை பயப்பதுமாகும்.

முதலாவது சகுனப் பிழை பற்றிய எமது அனுபவத்துக்கு வருவோம்.

கடந்த 2024 முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவேந்தல் தொடர்பான பொதுவான அறிக்கையிடலுக்குள் ஜனாதிபதிப் பொதுவேட்பாளர் என்ற இலங்கைத் தேர்தல் அரசியலுக்குள்ளான நகர்வு தொடர்பான அறிவித்தலும் ஒரு பந்தியில் கலந்து விடப்பட்டிருந்தது. இதை இறுதிக்கணத்தில் கண்ணுற்றதும் குறித்த பொது அமைப்பின் தொலையாடற் குழுமத்துக்குள் குறித்த பந்தி பொருத்தமற்றது என்பது உள்ளார்ந்த ரீதியில் எம்மால் சுட்டிக்காட்டப்பட்டது.

ஓர் அறிக்கையில் தவறு இருந்தால், திருத்திய அறிக்கையை வெளிக்கொணர்வது எந்த ஒரு பொது முயற்சிக்கும் இருக்கவேண்டிய அவசியமான அடிப்படைப் பண்பு.

ஏன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் இலங்கை ஜனாதிபதிப் பொது வேட்பாளர் பற்றிய கருத்தாடலோ முன்னறிவிப்போ துளியேனும் முன்வைக்கப்படக் கூடாதது என்பதை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமல்ல.

இலங்கை அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டு நின்று போராடி இன அழிப்புப் போரை எதிர்கொண்டு தமது உயிர்களை அர்ப்பணித்தோர் தொடர்பான நினைவேந்தலில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்தாடலை முன்வைப்பது பொருத்தமற்றது என்பது முதன்மையான காரணம்.

அதற்கு அடுத்ததாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்பான எமது விமர்சனங்களுக்கும் அப்பால், அவர்களின் ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணித்தல் என்ற நிலைப்பாட்டுக்கு நேரெதிராக முரண்படும் ஒரு நகர்வை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான அறிக்கையிடல் உள்ளடக்குவதும் நல்லதல்ல என்பது அரசியல் நாகரிகம் சார்ந்த இரண்டாவது காரணம்.

இவ்விரண்டு நியாயபூர்வமான காரணங்களும் புறக்கணிக்கப்பட்டு அறிக்கையிடலில் ஏற்பட்ட 'தவறு' தொடர்பான எந்தவித காலந்த தாழ்த்திய விவாதமோ திருத்தமோ நடைபெறவில்லை என்பது கூர்மையின் நேரடியான அனுபவப் பதிவு.

குறித்த அறிக்கைத் 'தவறு' இறுதிக்கணத்திலாவது சுட்டிக்காட்டப்பட்டபோது விரைவாக அதைத் திருத்திய அறிக்கையாக வெளியிடுவதற்குப் பதிலாகக் கால அவகாசம் போதாமை என்ற காரணத்தைக் கோடிகாட்டிவிட்டு நிலைப்பாட்டை காலந் தாமதித்துக் கூட விவாதிக்காமால் பொதுக்கூட்டமைப்பு என்ற முயற்சியை இயக்குவோர் செயற்பட்டனர்.

அடுத்தபடியாக, கொள்கையைத் தெளிவுபடுத்தி, அதை முன்னெடுக்கவல்ல தக்க வேட்பாளரை அடையாளம் காணும் செயற்பாட்டில் வெளிப்படைத் தன்மையோடு செயற்படுவதற்குப் பதிலாக, இவற்றுக்கு அப்பாற்பட்ட விவாதங்களில் மட்டும் தமது முயற்சியையும் நேரத்தையும் விரயம் செய்யும் போக்கு வெளிப்பட்டது. கேள்விகள் எழுப்பப்படும் போதெல்லாம், அவற்றை ஒவ்வொரு 'உப குழு' எதிர்வரும் காலத்தில் தீர்மானிக்கும் என்ற மேலோட்டமான ஒரு விளக்கம் மட்டுமே தரப்படுகிறது.

கொள்கை தொடர்பாகவோ பொதுவேட்பாளர் யார் என்பது தொடர்பாகவோ பகிரங்க விவாதங்கள் இல்லை. மேலோட்டமாக சுயநிர்ணய உரிமை தேசியம் என்ற கருத்தியலில் இணைவதாகச் சொல்லிவிட்டு, வடக்கில் மட்டும் கூட்டங்கள், கேள்விகள் கேட்கப்பட்டால், அவை ஒவ்வொன்றையும் பின்வரும் காலத்தில் தனிவேறான 'உப குழுக்கள்' முடிவெடுக்கும் என்ற 'மொட்டை விளக்கம்' வேறு

இது இரண்டாவது சகுனப் பிழை.

இந்தச் சூழலிற் தான் அரசியற் கட்சிகளிற் சிலவற்றோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வது பற்றி அதுவும் ஒரு குறித்த கூட்டொன்றின் தரப்போடு இணைந்து வவுனியாவில் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை கடந்த சனியன்று இணைந்து நடாத்தியுள்ள செயற்பாடு வெளிப்பட்டுள்ளது.

இது மூன்றாவது சகுனப் பிழை.

இந்த மூன்று சகுனப் பிழைகள் தொடர்பாக உள்ளார்ந்த கட்டுரை வடிவிலும், உள்ளார்ந்த தொலையாடற் குழுமத்துக்குள்ளும் எமது கருத்து தவறாது பதியப்பட்டுள்ளது.

இருப்பினும், யார் எதைச் சுட்டிக்காட்டினாலும், முள்ளிவாய்க்கால் அறிக்கையிடலில் ஏற்பட்ட அதே தவறும் அதே போக்கிலான நொண்டி விளக்கங்கள் தரப்படும் நிலையும் தான் மீண்டும் வெளிப்படுகின்றன.

'வேண்டாப் பெண்டிர் கைபட்டாற் குற்றம், கால்பட்டாற் குற்றம்' என்று போக்கில் இவர்கள் முன்வைக்கப்படும் விமர்சனங்களைக் கையாளுகிறார்களா என்று மட்டும் இவற்றை இலகுவாகத் தாண்டிச் சென்றுவிட இயலாது.

எனினும், கூர்மையின் காய்தல் உவத்தலுக்கு அப்பால் சென்று நிலைப்பாடுகளையும் அணுகுமுறைகளையும் அணுகுவோம்.

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ஐந்து அச்சாணிகள் அல்லது தூண்கள் தொடர்பான நிலைப்பாடு தெளிவுபடுத்தப்படவில்லை. மேலோட்டமாக, சுயநிர்ணய உரிமை, தேசியம், இன அழிப்புக்கான நீதி என்று சொற்களை மட்டும் சோடித்து ஒரு நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியாது.

மரபுவழித் தாயகம் என்ற தூணின் அடிப்படையில் தாயகத்தில் கூட்டு உரிமை தொடர்பான ஈடுபாடுள்ள அனைத்து அடிப்படை அலகுகளிலும் தொழிற்படவேண்டும். வெறுமனே வடக்கு கிழக்கு என்று மட்டும் பார்க்காது இவ்விரண்டு மாகாணங்களிலும் காணப்படும் அடிப்படை நிலப் பரப்புகளில் பங்கேற்பு உறுதிப்படுத்தப்படவேண்டும்.

வடக்கில் ஐந்து மாவட்டங்கள், கிழக்கில் மூன்று மாவட்டங்கள். வடக்கில் முப்பத்து நான்கு பிரதேச செயலகப் பிரதேசங்கள், கிழக்கில் நாற்பத்தைந்து. இவற்றில் ஈழத்தமிழர் செறிந்து வாழும் பிரதேச செயலகப் பகுதிகளில் இருந்து பங்கேற்பு உறுதிப்படுத்தப்படுவது மிகவும் அடிப்படையானது. கீழிருந்து மேல் நோக்கி ஒரு மக்கள் கட்டமைப்பு உருவாக்கப்படுவதும், அதிலே மக்களாட்சி ஆணை பிரதிபலிக்கப்படவேண்டுமாயின், தமிழ் மக்களுக்கான ஒரு நிழற் பாராளுமன்றமாக ஏதோ ஒரு வகையிலாவது அது பார்க்கப்படும் வகையில் அதன் அடிப்படை அலகு தோற்றுவிக்கப்படவேண்டும்.

எழுந்தமானமாக நல்ல நோக்கோடு இணையும் அமைப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு மக்களாணையின் பாற்பட்ட ஒரு நகர்வை மேற்கொள்வது பலவீனமானது.

தாயகம் என்ற தூணுக்கு அடுத்தபடியாக தேசியம் என்ற அடிப்படை முக்கியமாகிறது. ஈழத்தமிழர்கள் இலங்கைத் தீவில் ஒரு சிறுபான்மை என்ற அடிப்படையில் எந்தத் தேர்தல் அரசியற் பார்வையையும் அங்கீகரிக்கத் தயாரில்லை என்பதையும், தீவுக்கும் அப்பாற்பட்டுச் செல்லும் புலம்பெயர் சமூகத்தின் நீட்சியையும் கருத்திற் கொள்வதுமாக தேசிய இனம், தேசம் என்ற கருத்தியல் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

ஈழத்தமிழர் தேசிய இனத்தின் இணைபிரியா அங்கமாகப் புலம்பெயர் ஈழத்தமிழர் பங்கேற்பு உறுதிப்படுத்தப்பட குறைந்தபட்சம் புலம்பெயர் மக்கள் அதிகமாக வாழும் நாடுகளிலிருந்து ஈழத்தமிழர் சமூகப் பங்கேற்பு ஏற்படவேண்டும்.

தாயகத்துக்கு அடுத்தபடியாக தேசியம் இவ்வாறு உறுதிப்படுத்தப்படவேண்டும். வெறுமனே நிதிக்கு மட்டும் புலம்பெயர் சமூகம் தேவை, அரசியற் போராட்டத்தில் அவர்களின் பங்கேற்பு தேவையில்லை என்றால், இலங்கை என்ற அரசியலமைப்புக்குள் எம்மை நாமே குறுக்கிக் கொள்கிறோம் என்ற தமிழ்த் தேசிய நீக்கம் என்ற செயற்பாடாக அது மாறிவிடுகிறது.

தன்னாட்சியுரிமை என்பதை வலியுறுத்துவதற்கும், தனித்துவமான இறைமை என்பதை வலியுறுத்துவதற்கும் அடிப்படையான சர்வதேச சட்டம் சார்ந்த நிலைப்பாடுகள் மட்டுமல்ல, இலங்கை அரசுருவாக்கம் எவ்வாறு தமிழ்த் தேசியத்தை நிராகரித்து வந்துள்ளது என்பதும் தமிழ் மக்களின் அரசியல் வேணவா எவ்வாறு திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதும் இன அழிப்புப் போரின் முடிவுக்குப் பின்னரும் எவ்வாறு எமது தாயகமும் தேசியமும் ஆக்கிரமிக்கப்படுகின்றன என்பதை வெளிப்படுத்துவதும் தோற்றுவாய் நியாயப்பாடுகளாக முன்வைக்கப்படவேண்டியவை.

ஆதலால், ஆக்கிரமிக்கப்பட்ட தாயகமும் தேசமும் என்ற கருத்துநிலை வெளிப்படுத்தப்பட வேண்டும்.

இதைப் போலவே, இன அழிப்பு என்பதற்கான தலையாய சர்வதேசக் குற்றத்துக்கு இலங்கை அரசுக்கான பொறுப்பு சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாகக் கையாளப்படவேண்டும் என்ற நிலைப்பாடு வெளிப்படுத்தப்படவேண்டும்.

இவ்வாறு ஐந்து தூண்களும் தெளிவாகக் கையாளப்பட்டால் ஒரு பொது முயற்சி தமிழ்த் தேசியத்தை அடுத்த கட்டத்திற்கு தெளிவாக நகர்த்தும் பொதுக்கட்டமைப்பும், அக்கட்டமைப்பின் அழுத்தத்தில் சரியாக இயங்கப் புறப்படும் அரசியற் கட்சிகளுமாக, கீழிருந்து மேலாக கொள்கையடிப்படையிலான தெளிவு ஏற்படுத்தப்பட்டு, கொள்கையடிப்படையில் தேர்தல் அரசியற் கட்சிகள் அனைத்தின் மீதும் ஒட்டுமொத்தச் சமூக அழுத்தம் ஏற்படுத்தப்பட்டு, அந்த அழுத்தத்தின் விளைவாக அரசியற் கட்சிகள் வழிப்படுத்தப்படும் சூழல் உருவாகும்.

பூனை திருட்டுத்தனமாகப் பால் குடிக்கும் போது தனது கண்ணைத் தானே மூடிக்கொள்ளுமாம் என்று ஒரு கற்பனை ஒப்பீடு தமிழில் வழக்கில் உள்ளது.

அதைப் போல, திருட்டுத் தனத்தோடு நாம் செயற்படவில்லை என்பதை நிறுவவேண்டிய பொறுப்பு பொது முயற்சியில் தமது நேரத்தையும் முயற்சியையும் அதீதமாகச் செலவிடும் தனிநபர்களுக்கு இருக்கிறது. இவர்களை முன்நிறுத்தி முட்டுக்கொடுக்கும் அனைவருக்கும் இந்தப் பொறுப்பு இருக்கிறது.

நிலைமையைக் கூர்மையாகக் கண்காணிக்கும் போது, நடைமுறையில் இந்தப் பொறுப்பு புறக்கணிக்கப்படுவதான வேறு விதமான படிமமே வெளிப்படுகிறது.

பொது அமைப்புகளின் கூட்டு என்ற பெயரில் ஒரு புதிய அமைப்பு மட்டும் உருவாக்கப்படுகிறது. அந்த அமைப்பு முழுமையாக உருவாகும் முன்னரே ஓர் அரசியற் கட்சிக் கூட்டோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி ஒன்றாக வீற்றிருந்து பத்திரிகையாளர் மாநாடு நடாத்தும் நிலை தோன்றியுள்ளது

பொது அமைப்புகளின் கூட்டு என்ற பெயரில் ஒரு புதிய அமைப்பு மட்டும் உருவாக்கப்படுகிறது. அந்த அமைப்பு முழுமையாக உருவாகும் முன்னரே ஓர் அரசியற் கட்சிக் கூட்டோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி ஒன்றாக வீற்றிருந்து பத்திரிகையாளர் மாநாடு நடாத்தும் நிலை தோன்றியுள்ளது.

கொள்கை தொடர்பாகவோ பொதுவேட்பாளர் யார் என்பது தொடர்பாகவோ பகிரங்க விவாதங்கள் இல்லை. மேலோட்டமாக சுயநிர்ணய உரிமை தேசியம் என்ற கருத்தியலில் இணைவதாகச் சொல்லிவிட்டு, வடக்கில் மட்டும் கூட்டங்கள், கேள்விகள் கேட்கப்பட்டால், அவை ஒவ்வொன்றையும் பின்வரும் காலத்தில் தனிவேறான 'உப குழுக்கள்' முடிவெடுக்கும் என்ற 'மொட்டை விளக்கம்' வேறு.

அப்படியானால், சில முடிவுகள் முற்கூட்டியே மேற்கொள்ளப்பட்ட நிலையில், மக்கள் மத்தியில் ஒரு நாடகம் அரங்கேற்றப்படுகிறதா என்ற கேள்வி எழுவது நியாயமானதே.

ஓர் ஊடக ஆசிரிய பீடத்தின் நேரடி அனுபவத்துக்கும் அப்பாற் சென்று, சமூகப் பொறுப்புடன் இங்கு முன்வைக்கப்பட்டுள்ள கரிசனைகளை உள்வாங்கி, வெளிப்படைத் தன்மையோடும், தம்மைத் தாமே திருத்திக் கொள்ளாமல் திருத்தப்படவேண்டிய கட்சிகளைத் திருத்த முடியாது என்பதை நிறுவிச் செயற்படுபவர்களாகவும் பொது அமைப்பு முயற்சிக்குப் பின்னால் முனைந்திருப்போர் இனியாவது செயற்பட முன்வரவேண்டும்.