அமெரிக்க இந்திய மேலாதிக்கங்களால் கையாளப்படும் பிடிக்குள் சிக்காது செயலாற்ற

ஈழத் தமிழர் தேசத்துக்குத் தனித்துவமான சமவுடைமை இயக்கம் காலத்தின் தேவை

தமிழ் மக்கள் பொதுச் சபைக்குப் பிரதான சோதனை
பதிப்பு: 2024 செப். 25 18:34
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 28 10:20
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
'தர்மத்தின் வாழ்வுதனைச் சூதுகவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்' என்பதற்கு அமைய ஈழத்தமிழர் தேசியப் பிரச்சனைக்கான அரசியற் தீர்வு காணும் சுயநிர்ணய உரிமைப் பயணத்தில் முதற்பாதி நடந்து முடிந்து விட்டது. சூதுகவ்வலுக்கு ஐரோப்பிய காலனித்துவம், குறிப்பாகப் பிரித்தானிய காலனித்துவம், அதன் தொடர்ச்சியாக நவகாலனித்துவமாக அமெரிக்காவுக்குக் கைமாறிய இரு துருவ, ஒரு துருவ உலக வல்லாதிக்க அரசியல் மட்டும் மூல காரணமல்ல. இந்தியத் துணைக் கண்டத்தில் மேலெழுந்துள்ள பிராந்திய மேலாதிக்கமும் முக்கியமான ஒரு காரணி. ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டம் இலங்கை ஒற்றையாட்சி அரசின் இன அழிப்புப் போர் மூலம் அழிக்கப்படுவதற்கு இவை அனைத்தும் துணைபோயின.
 
சிங்களப் பேரினவாத சக்திகள் போலிச் சோஷலிசத்தை மார்க்சியவாதிகள் போல உள்வைத்து, தாராண்மைவாத மேற்குலகோடு ஒத்தியங்கும் மேலங்கியைப் போர்த்தி உலக அரசியலைக் கையாளத் தேவையான அரச கட்டுக்கோப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தான் தற்போது அனுரகுமார திசாநாயக்கா ஜனாதிபதி ஆகியுள்ளதற்கான விஞ்ஞான விளக்கம்

இவ்வாறு சூதுகவ்விய இரு துருவ, ஒரு துருவ காலத்தைத் தாண்டி பல்துருவ உலக ஒழுங்குக்குள் பயணிக்கப்போகின்ற தற்காலமும் எதிர்காலமும் ஈழத்தமிழர் தேசத்துக்குத் தர்ம வெற்றியை ஈட்டித்தரவேண்டுமானால் சிங்கள இடதுசாரிகளில் தங்கியிராத ஈழத்தமிழர்களுக்கான தனித்துவமும் பலமும் வாய்ந்த சமவுடைமை (சோஷலிச) மக்கள் இயக்கம் வடக்கு கிழக்கில் கட்டியெழுப்பப்படவேண்டும். தமிழ் மக்கள் பொதுச்சபையால் இதைச் சாதிக்க இயலுமா என்ற கேள்வி பூதாகரமானதாக எழுகிறது.

இதுவரை காலமும் இலங்கைத் தீவுக்குள் வளர்வதும் தேய்வதுமாயிருந்த மார்க்சிய, கம்யூனிச, சமவுடைமைப் போக்குகள் சிங்கள பேரினவாதத்துக்குப் பலிக்கடா ஆக்கப்பட்டது வரலாறு.

இதற்கு இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை உருவாக்கியவர்களின் வரலாறே சாட்சி.

பேரினவாதச் சிந்தனை முன்போல இலங்கைத் தீவில் தற்போது இல்லை என்ற வாதத்தைப் போலித்தனமாகப் பலர் முன்வைத்துவருகிறார்கள். பலர் அதை நம்பியும் வருகிறார்கள்.

இதற்கான சூழலை இலங்கைத் தீவு எதிர்நோக்கியுள்ள பொருளாதாரச் சிக்கல் உருவாக்கி விட்டது என்று ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினர் தாமாகவே நம்புவதும் அல்லது அவர்கள் அவ்வாறு நம்பவைக்கப்படுவதம் இறுதியில் ஈழத்தமிழர்கள் தம்மைத் தாமே ஏமாற்றுவதற்கும் ஏமாற்றப்படுவதற்குமே வழி கோலும்.

அமைப்பு மாற்றம் (system change) என்ற கோசத்தில் தென்னிலங்கையில் நடந்திருப்பது என்னவென்றால், சிங்களப் பேரினவாதத்துக்குத் தேவையான புதிய உலக ஒழுங்கைக் கையாளும் அரச கட்டுக்கோப்பு (body politic) உருவாக்கப்பட்டுள்ளமையே அன்றி வேறொன்றுமல்ல.

புவிசார் அரசியல் (geopolitics) என்ற சொல்லை 1916 இல் அறிமுகப்படுத்திய சுவீடன் நாட்டு அரசறிவியலாளரும் புவியியலாளருமான யுகான் ருடோல்ப் செல்லேன் என்ற அறிஞர் உயிரியல் அரசியல் (biopolitics) என்ற சொல்லையும் அறிமுகப்படுத்தியவர்.

புவிசார் அரசியலைக் கையாள்வதற்கு வேண்டிய உயிரியல் அரசியலை சிங்கள தேசம் தன்னகத்தே கொண்டுள்ளது. காலத்துக்கேற்ப உலக அரசியலைக் கையாளும் நோக்கோடு தன்னைக் கட்டமைத்துக்கொள்ளும் அது தீவுக்குள் அமைப்பு மாற்றம் ஊழல் எதிர்ப்பு போன்ற வேறு விதமான வெளிப்படுத்தல்களை அவ்வப்போது சூழலுக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளும்.

சிங்களப் பேரினவாதத்தின் உயிரியல் அரசியலையும் புவிசார் அரசியலையும் அரச கட்டுக்கோப்பையும் ஒரு சேர விளங்கிக்கொள்ளும் தன்மை ஈழத்தமிழர் தேசத்தினருக்கு அவசியம் தேவையானது.

சிங்களப் பேரினவாத சக்திகள் போலிச் சோஷலிசத்தை மார்க்சியவாதிகள் போல உள்வைத்து, தாராண்மைவாத மேற்குலகோடு ஒத்தியங்கும் மேலங்கியைப் போர்த்தி உலக அரசியலைக் கையாளத் தேவையான அரச கட்டுக்கோப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தான் தற்போது அனுரகுமார திசாநாயக்கா ஜனாதிபதி ஆகியுள்ளதற்கான விஞ்ஞான விளக்கம்.

ஒரு மக்கள் மயப்படுத்தப்பட்ட ஈழத்தமிழருக்கேயுரிய சமவுடைமை மக்கள் இயக்கத்தைக் கட்டுவதற்கு பொதுச்சபை தயாரா, இல்லையென்றால் நாடாளுமன்ற நாற்காலி அரசியலுக்கு அடித்துக் கொடுக்கும் தேர்தல் ஓட்ட அரசியலுக்கான வெள்ளோட்டமாக சங்கொலி முழக்க உருவாகியது தான் பொதுச்சபையா என்ற கேள்வி பல தளங்களில் முன்வைக்கப்படுகிறது

அவ்வப்போது உண்மையான முற்போக்குவாதிகளாகத் தென்பட்ட சிங்கள அரசியல் செயற்பாட்டாளர்களில் பெருமளவினர் பேரினவாதத்துக்குப் பலியாகிவந்துள்ள வரலாறு தருகின்ற படிப்பினை என்னவென்றால் தென்னிலங்கை இடதுசாரியத்திலும் முற்போக்குத் தனத்திலும் தங்கியிராத தனித்துவத்தோடு ஈழத்தமிழருக்கான புரட்சிகர மக்கள் இயக்கம் கட்டமைக்கப்படவேண்டும் என்பதாகும்.

சிங்களப் பேரினவாதத்துக்குப் பலியாகாமல் ஈழத்தமிழர் தேசத்துக்கு நீதியான அரசியல் தீர்வை நோக்கி முற்போக்குத் தன்மையோடு வலிமையாகச் செயற்பட ஒரு சிங்கள முற்போக்குவாதி முனைந்தால் இலங்கைத் தீவில் அவ்வாறான ஒருவர் வாழ இயலாத நிலை ஏற்படும்.

இவ்வாறு, இங்கு வாழ்வைத் தொடர இயலாமல் சில சிங்கள முற்போக்குச் செயற்பாட்டாளர்களும் பத்திரிகையாளர்களும் ஐரோப்பாவில் அரசியல் புகலிடம் பெற்று வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறானவர்கள் இலங்கைத் தீவில் காலடி வைக்கவும் இயலாத நிலையே காணப்படுகிறது.

இலங்கைத்தீவுக்குள் வாழ்ந்தபடி ஈழத்தமிழர் தேச உரிமைக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இயங்கிய விரல் விட்டு எண்ணக்கூடிய சிங்கள இடதுசாரிகள் ஒருபோதும் தாக்கம் செலுத்தவல்ல சக்திகளாக தென்னிலங்கை அரசியலில் மேலெழ இயலாது, தீவிரமாக இயங்கவும் இயலாது. இதற்கு காலஞ்சென்ற விக்ரமபாகு கருணாரத்ன ஓர் உதாரணம்.

ஆகவே, சிங்கள இடதுசாரிகளோடு அமைப்பு ரீதியாகச் சேர்ந்து பயணிக்கும் விசப் பரீட்சைகளில் ஈடுபடுவது புத்திபூர்வமான செயற்பாடு அல்ல.

இவ்வாறு செயற்பட்டவர்களில் திறமை வாய்ந்த அம்பலவாணர் வைத்திலிங்கத்தில் இருந்து நாகலிங்கம சண்முகதாசன் வரை சாதிக்க இயலாததை ஈழத்தமிழர் தேசியப் பிரச்சனையில் வேறெவராலும் சாதிக்க இயலும் என்று கற்பனை செய்வதே சிரமமாகும்.

இரு துருவ உலக ஒழுங்குக் காலத்தில் தெளிவான சோஷலிச அடிப்படைகளில் தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சியும், தமிழர் விடுதலைக் கூட்டணியும், ஆயுதப் போராட்ட விடுதலை இயக்கங்களும் அணிவகுத்திருந்தன.

ஆனால், இரு துருவ உலக அரசியிலில் ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை பயங்கரவாதம் என்ற படிமத்துக்குள் 1984 கால கட்டத்திலேயே அமெரிக்கா கையாள ஆரம்பித்திருந்தது.

அப்போது ஈழ விடுதலை இயக்கங்களுக்குப் பயிற்சியளித்த இந்திய மேலாதிக்கமும் ஒரு சில ஆண்டுகளில் தனது கையாளுகை அல்லது மேலாதிக்கம் என்ற போக்கை வெளிப்படுத்தியது.

விளைவாக, சோஷலிசக் கொள்கையை வெளிப்படையாகப் பிரஸ்தாபித்தால் தமது செயற்பாடுகளுக்கு நெருக்கடி உருவாகும் என்று விடுதலைப் புலிகள் வெளிப்படையாக தமது சமதர்மக் கொள்கையை பறைசாற்றுவதைத் தவிர்த்துவந்தாலும், அவர்களின் சத்தியப் பிரமாணம் தொட்டு தலைமையின் கொள்கை வரை சோஷலிச தத்துவம் இரண்டறக்கலந்த இரத்தமாக இருந்தது.

'எமது புரட்சி இயக்கத்தின் புனித இலட்சியமாம்' என்று ஆரம்பித்த சத்தியப்பிரமாணம் 'சுதந்திர சமதர்ம' என்றே ஒலித்துவந்தது. 1993 இல் வடமொழி நீக்கம் செய்யப்பட்ட பின்னரும் அது 'சமவுடைமைத் தன்னாட்சி' என்றே முள்ளிவாய்க்கால் வரை ஒலித்தது.

அதன் பின் ஈழத்தமிழர் மத்தியில் சோஷலிச மக்கள் இயக்கம் இல்லாது போய்விட்டது.

சி. கா. செந்திவேல் தலைமையில் நீர்வேலியில் இருந்து இயங்கும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வளர்ச்சியடையாத ஒன்றாகவும் ஈழத்தமிழர் தேசிய விடுதலை குறித்து காத்திரமான கள நகர்வுகள் எதையும் மேற்கொள்ள இயலாததாகவும் இருந்துவருகிறது.

இலங்கைத்தீவுக்குள் வாழ்ந்தபடி ஈழத்தமிழர் தேச உரிமைக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இயங்கிய விரல் விட்டு எண்ணக்கூடிய சிங்கள இடதுசாரிகள் ஒருபோதும் தாக்கம் செலுத்தவல்ல சக்திகளாக தென்னிலங்கை அரசியலில் மேலெழ இயலாது, தீவிரமாக இயங்கவும் இயலாது. இதற்கு காலஞ்சென்ற விக்ரமபாகு கருணாரத்ன ஓர் உதாரணம்

தனிமனித முயற்சியாக 2014 இல் காலமடைந்த அபிமன்னசிங்கம் மாணிக்கசோதி மேற்கொண்டதை விட குறிப்பிடத்தக்க வேறு எதுவும் நடைபெறவில்லை.

இப்படியான சூழலில், இந்திய, மேற்கு மேலாதிக்கத் தன்மைக்கும் பயங்கரவாதப் பூச்சாண்டிக்கும் அப்பாற்பட்டு அமைதிவழிப் போராட்டத்தை அணிதிரட்டி முன்னெடுக்கவல்ல ஈழத்தமிழ்த் தேசிய சமவுடைமை இயக்கம் ஒன்று பலமானதாகக் கட்டப்படுவதே ஈழத்தமிழர்களின் தேசமாகத் திரள்வதன் கட்டுக்கோப்பாக அமையும்.

ஈழத்தமிழர் தேசத்தின் சமவுடைமை இயக்கத்தை ஆக்கபூர்வமாக உருவாக்க முடிந்தால் 'மீண்டும் தர்மம் வெல்ல' அது வழிவகுக்கும்.

பல்துருவ உலக ஒழுங்கில் மிக வேகமாக மேலெழுந்து வரும் உலகளாவிய தெற்கை (Global South) சிங்கள தேசம் கையாளும் அரச கட்டுக்கோப்பை உருவாகியுள்ளது. ஈழத்தமிழர் தேசம் தனக்குரிய கட்டுக்கோப்பை முன்னெடுக்காது இனியும் தாமதிக்கக் கூடாது.

இவ்வாறான ஒரு மக்கள் மயப்படுத்தப்பட்ட ஈழத்தமிழருக்கேயுரிய சமவுடைமை மக்கள் இயக்கத்தைக் கட்டுவதற்கு பொதுச்சபை தயாரா, இல்லையென்றால் நாடாளுமன்ற நாற்காலி அரசியலுக்கு அடித்துக் கொடுக்கும் தேர்தல் ஓட்ட அரசியலுக்கான வெள்ளோட்டமாக 'சங்கொலி' முழக்க உருவாகியது தான் பொதுச்சபையா என்ற கேள்வி பல தளங்களில் முன்வைக்கப்படுகிறது.

'சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த' கதையாக பொதுச்சபையின் கதை முடிந்துவிடக் கூடாது.