பொதுத் தேர்தலை தமிழ்த் தேசமாய்த் திரண்டு எதிர்கொள்ளத் தயாரில்லை

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த பொதுக்கட்டமைப்பினர் பொறுப்புக்கூறலுக்குரியவர்கள்

கொள்கையின்றி பொதுச்சபை உருவாக்கியதால் ஏற்பட்ட விளைவு
பதிப்பு: 2024 ஒக். 02 18:47
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 03 14:57
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
'தானாடா விட்டாலும் தசையாடும்' என்பது போல் ஈழத்தமிழர் தேசத்தினர் மீண்டும் தமது உரிமைக்காக எழுச்சிபெற்று அணிதிரள்வார்கள் என்பதை ஜனாதிபதித் தேர்தலில் சங்குச் சின்னத்தின் ஊடாக நிறுவினார்கள். இருப்பினும், வடக்கு-கிழக்கில் மேலதிகமாக முப்பதினாயிரம் வாக்குகள் பா. அரியநேத்திரனின் சங்குச் சின்னத்துக்குக் கிடைத்திருந்தால் இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கு ஜனாதிபதியாகியுள்ள அநுர குமார திசாநாயாகாவை விட தமிழர் தாயகத்தில் சங்குச் சின்னம் முன்வைத்த கொள்கைக்குக் கூடுதலான அங்கீகாரம் இருப்பது வாக்குகள் ஊடாக உறுதிப்படுத்தப்படும் நிலை தோன்றியிருக்கும். சர்வதேசத்துக்கும் ஒரு செய்தியைக் கனதியாகச் சொல்ல முடிந்திருக்கும்.
 
தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் செப்ரம்பர் 27 ஆம் திகதி வரை விளக்குச் சின்னமே பதிவில் இருப்பது தெரிகிறது. சங்குச் சின்னமாக அது மாற்றப்படுவது உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பது பகிரங்கமாக உறுதிப்படுத்தப்பட இன்னும் சில நாட்கள் எடுக்கக்கூடும். அதற்கும் அப்பால் இவ்வாறு மாற்றும் முடிவில் பொதுச்சபை அதிருப்தி வெளியிட்டிருந்தும் அம்முடிவை மறுபரிசீலனை செய்ய அவர்கள் தயாராக இல்லை என்பதும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் பதிலில் தெரிகிறது

ஆனால் அநுர பெற்ற வாக்குகள் சங்குக்கு கிடைத்த வாக்குகளை விட அதிகமாக இருப்பதால் அவரே ஈழத்தமிழர்களை எள்ளி நகையாடக்கூடிய நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதற்கும் அப்பால் வேறு சிக்கல்களையும் முகங்கொடுக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

பொதுச் சபையிலிருந்து தாமே அதை இயக்குவதாக பாவலா காட்டிவந்த பலரும் மக்கள் மத்தியில் இறங்கி பரப்புரை செய்யவில்லை. ஊடகங்கள் ஊடாகவும் சமூக வலைத்தளத்திலும் அவர்கள் இயங்கியதைப் போல அடிமட்டத் தளத்தில் மக்கள் மட்டத்தில் இறங்கிச் செயற்படவில்லை. கூட்டங்களில் பங்கேற்றார்கள்.

பொதுச்சபைப் பேராளர்களை விட, இணைந்திருந்த கட்சிகளிற் சில எந்தவகையிலும் அடிமட்டவேலைகளில் தம்மை ஈடுபடுத்தியிருக்கவில்லை. அடிமட்ட மக்கள் மத்தியில் இவர்கள் இறங்கிப் பணியாற்றியிருந்தால் இலகுவாக அநுர குமாரவை விட அதிகளவு வாக்குகளை சங்குச் சின்னம் பெற்றிருக்கும் என்ற பரவலான விமர்சனம் எழுந்துள்ளது. இது படிப்பினைக்குரிய முக்கியமான பாடம்.

தானாடாவிட்டாலும் தசையாடிப் பொதுமக்களும் புலம்பெயர் சமூகமும் எழுச்சிபெற்று தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்குப் பின்னால் தேசமாகத் திரளும் வாய்ப்புள்ளதை நிறுவிய நல்ல அறிகுறி வெளிப்படுத்தப்பட்டுள்ளமை மறுக்கவியலாத உண்மை.

அதைப்போல, வேறு சில நன்மையான அறிகுறிகளும் விளைவுகளும் இந்த முயற்சியின் படிப்பினையாகக் கிடைக்கின்றன.

தமிழரசுக்கட்சியின் ம. ஆ. சுமந்திரனின் நிகழ்ச்சிநிரல் என்ன என்பதும் மாவை சேனாதிராஜாவின் இரட்டைத்தன்மையும் அவரது விருப்பு வாக்குத் தொடர்பான அறிவுக்குப் புறம்பான வியாக்கியானமும் வெளிப்படையாக தமிழரசுக்கட்சியின் அவலத்தை அம்பலமாகியுள்ளன. இந்த விமர்சனங்களில் இருந்து கணிசமாக சிவஞானம் சிறிதரன் தப்பித்துள்ளார்.

அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ‘ஆப்பிழுத்த குரங்காக’ தன்னைத் தானே தனது எதிர்மறைத் தன்மையைக் கண்ணாடியில் பார்த்து உணர்ந்துகொள்ள சங்குச் சின்னத்துக்குப் பின்னால் மக்கள் திரட்சிபெற்றமை அவர்களுக்குரிய படிப்பினையையும் கொடுத்துள்ளது.

எனினும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்மறையான நிலை மேலும் சீரழிந்து, வடக்கு-கிழக்கில் அநுரவின் மக்கள் சக்தி ஊடுருவினாலும் பரவாயில்லை ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் தோற்கவேண்டும் என்று உள்ளாரச் சிந்திப்பது தெரியவருகிறது.

இவ்வாறான சூழலில், எடுத்த காரியத்தில் சில பத்தாயிரம் வாக்குகளால் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் 'முயற்சி திருவினையாக்கும்' என்ற பயணத்தில் உறுதியோடு அடுத்த நகர்த்தலை பொதுத் தேர்தலை நோக்கி மேற்கொள்ள முழுமூச்சுடன் பொதுச்சபை செயற்பட்டிருக்கவேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள தருணத்தில் பொதுச்சபையினர் வட்சப் குழுமங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கச் சகிக்காத வெறுப்பில் புற்றுக்குள் தலையிழுத்துப் பதுங்க ஆரம்பித்தது அவர்களின் நம்பகத்தன்மை மீதும் கேள்வியை உருவாக்கிவிடும் ஆபத்தைத் தோற்றுவித்துள்ளது. இது நல்லதல்ல.

பொதுக்கட்டமைப்புப் புரிந்துணர்வு
பொதுக்கட்டமைப்புப் புரிந்துணர்வு
குறிப்பாக, ஏழு கட்சிகளுடன் உடன்படிக்கை செய்துகொண்ட எழுவர் பொதுச்சபை தொடர்பாக பொறுப்புக்கூறலுக்கு உரியவர்கள்.

த. வசந்தராஜா, சி. அ. யோதிலிங்கம், பேராசிரியர் கே. ரி. கணேசலிங்கம், செல்வின் இரேனியஸ், ராசலிங்கம் விக்னேஸ்வரன், ஏ. ஜதீந்திரா, ம. நிலாந்தன் ஆகியோரே அந்த எழுவரும் ஆவர்.

தமிழ் மக்கள் பொதுச்சபையும் ஏழு கட்சிகளும் இணைந்து தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு அறிவிக்கப்பட்டபோது ஒன்பது புரிந்துணர்வு உறுப்புரைகள் கொண்டு கையெழுத்திட்ட உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அந்த உடன்படிக்கையின் ஐந்தாம் உறுப்புரை பின்வருமாறு அமைகிறது:

"தமிழ்ப் பொதுவேட்பாளராக நிறுத்தப்படுபவரும் அவருக்கான தேர்தல் சின்னமும் தமிழ்ப் பொது நிலைப்பாட்டுக்கான ஒரு குறியீடாக மட்டுமே கருதப்படுதல் வேண்டும்."

இந்த உறுப்புரையை மீறுவதாகவே சங்குச் சின்ன மாற்றம் தொடர்பான முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

அதுமட்டுமல்ல, ஜனாதிபதி தேர்தல் முடிவோடு பொதுக்கட்டமைப்பு என்ற அமைப்பு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று அந்த உடன்படிக்கை எங்கும் உரைக்கவில்லை. மாறாக, உடன்படிக்கையின் ஒன்பதாம் உறுப்புரை பின்வருமாறு அமைகிறது:

"தமிழ்த் தேசிய இனத்தின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் குறிக்கோளுடன் தொடர்ந்து செயற்படுவதென இருதரப்பும் மேலும் இணங்கிக் கொள்கின்றனர்."

ஆகவே, பொதுச்சபையின் எழுவரும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் பொதுமக்களின் காதில் பூ வைக்க முற்படுகின்றார்களா என்ற கேள்வி எழுவது நியாயமானதே.

பொதுச்சபையோடு உடன்படிக்கை செய்து கொண்ட ஏழு கட்சிகளில், தேர்தல் அரசியலில் நாட்டம் செலுத்தாத பொ ஐங்கரநேசனை கூர்மை தொடர்பு கொண்டு இது குறித்து இன்று வினவியது.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் கடந்தவாரம் யாழ் தில்கோ விடுதியில் நடைபெற்ற பொதுச்சபையும் ஏழு கட்சிகளும் இணைந்த பொதுக் கட்டமைப்பின் கூட்டம் ஒன்றில் ரெலோ கட்சியின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனா என்று பொதுவெளியில் அறியப்படுபவருமான கோவிந்தன் கருணாகரன் சங்குச் சின்னத்தைப் பொதுத் தேர்தலிற் பயன்படுத்துவது பற்றிய விருப்பத்தை முன்வைத்தார் என்று ஐங்கரநேசன் கூர்மைக்கு விளக்கினார்.

அந்த விருப்பத்தை நியாயப்படுத்துவதற்கு, நீதியரசர் க. வி. விக்னேஸ்வரனின் கட்சி தனிக் கட்சி என்றும் அக் கட்சி சங்குச் சின்னத்தை பயன்படுத்தினால் எதிர்காலத்தில் சங்குச் சின்னம் பொதுக் கட்டமைப்புக்குக் கிடைக்காது என்றும் கூறியிருந்தார். அத்துடன் ஆனந்த சங்கரி உதயசூரியன் சின்னத்தை தன்வசப்படுத்தியது போன்றதொரு நிலை வரலாம் எனவும் ஜனா சுட்டிக்காட்டியதாக அவர் விளக்கினார்.

ஜனாவின் கூற்றில் தனக்கு உடன்பாடு இருக்கவில்லை என்றும் சங்குச் சின்னத்தைப் பயன்படுத்த முடியாது எனவும் அக்கூட்டத்திலேயே தான் வெளிப்படுத்திவிட்டதாகவும் ஐங்கரநேசன் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவோடு பொதுக்கட்டமைப்பு என்ற அமைப்பு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று அந்த உடன்படிக்கை எங்கும் உரைக்கவில்லை

எனினும், கூட்டத்தில் ஒரு தீர்மானம் எட்டப்பட்டதா இல்லையா என்று கேள்விக்கு இரண்டுங்கெட்டான் நிலையில் கூட்டம் முடிவடைந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஸ் பிரேமச்சந்திரனோடு கூர்மை தொடர்பு கொண்டு இது குறித்து வினவியபோது, அவர் மேற்குறித்த கூட்டம் கடந்த புதன்கிழமை (செப்ரம்பர் 25) இடம்பெற்றதென்றும், அதில் விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவில்லை. ஆனாலும் அவர் சார்பில் இருவர் கலந்துகொண்டதாகவும், தீர்மானம் மேற்கொள்ளப்பட்டே சங்குச் சின்னம் தொடர்பான முடிவு எட்டப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் ஓரிரு நாட்களுக்குள் சங்குச் சின்னம் தமது கூட்டணியின் சின்னமாகப் பதியப்படுவது பற்றிய தேர்தல் ஆணைக்குழுவின் முடிவு கிடைத்துவிடும் என்றும் கடுந்தொனியில் வாதிட்டார்.

குறித்த தில்கோ விடுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் பொதுச்சபையின் சார்பில் பங்கேற்ற அரசியல் ஆய்வாளர் ம. நிலாந்தன், பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் ஆகியோர் தெளிவான மறுப்பை உடனடியாகக் கூட்டத்தில் முன்வைக்கத் தவறியதால் மேற்குறித்த முடிவு அங்கு எட்டப்பட்டிருப்பதான வாதத்தை குறித்த கட்டமைப்பினர் முன்வைக்கிறார்கள்.

நிலாந்தனுடனும் கணேசலிங்கத்துடனும் இது குறித்து கூர்மை தொடர்பு கொண்டு வினவியபோது அவர்கள் குறித்த கூட்டத்தில் முடிவெதுவும் எட்டப்படவில்லை என்றும் பொதுச்சபையின் இதர உறுப்பினர்களுடனும் அமைப்புகளுடனும் கலந்தாலோசித்துப் பதில் சொல்வதற்குத் தமக்குக் கால அவகாசம் தேவை என்ற கருத்தையே தாம் குறித்த கூட்டத்தில் முன்வைத்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

ஆகவே, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணியினர் தமது குத்துவிளக்குச் சின்னத்தை தேர்தல் ஆணைக் குழுவில் சங்குச் சின்னமாக மாற்றிவிட முயற்சியெடுத்திருக்கிறார்கள் என்பது ஐயத்துக்கிடமின்றித் தெரியவருகிறது.

அரியநேத்திரனும் பொதுச்சபையினரும் தேர்தல் ஆணைக் குழுவுக்கு இது குறித்த தமது உடன்பாடின்மையை எழுத்துமூலமாக அறிவித்திருப்பதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத பொதுச்சபை உறுப்பினர் கூர்மைக்குத் தெரிவித்தார். இது குறித்து பொதுச்சபையின் எழுவரில் எவரும் நேரடியாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை

மேற்குறித்த கூட்டம் முடிந்த ஓரிரு நாட்களில் பொதுச்சபையினர் கூடி விவாதித்து கட்சிகளுடனான தமது உடன்படிக்கையின் பிரகாரம் அவ்வாறு ஒரு பகுதிக் கட்சியினர் சங்குச் சின்னத்தைப் பயன்படுத்துவது புரிந்துணர்வுக்கு ஒவ்வாத செயல் என்று தமது ‘பொதுச்சபை’ என்ற வட்சப் தொடர்பாடற் குழுமத்துக்குள் பகிரங்கமாக அறிவித்தனர். அந்த அறிவித்தல் பின்வருமாறு:

"நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபை நேரடியாக ஈடுபடாது.

"இத்தீர்மானம் இன்று செப்டம்பர் 29 ஆம் தேதி, திருகோணமலை உப்பு வெளி, ஆயர் இல்ல மண்டபத்தில், நடந்த பொதுச் சபைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச்சபையும்தமிழ்த் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கி, பொது வேட்பாளரை களம் இறக்கின.

"ஆனால் அதுபோல நாடாளுமன்றத் தேர்தலில் நேரடியாக தேர்தலில் ஈடுபடுவதில்லை என்று பொதுச்சபை முடிவு எடுத்துள்ளது. மேலும் பொதுச் சின்னம் ஆகிய சங்கு சின்னத்தை இத்தேர்தலில் பயன் படுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுக் கட்டமைப்புக்குள் உள்ள கட்சிகளிடம் கேட்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது."

திருகோணமலைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பொதுச்சபை உறுப்பினர் கூர்மைக்கு கருத்துத் தெரிவிக்கையில் பொதுக்கட்டமைப்பில் சமதரப்பாகப் பங்கேற்கும் பொதுச்சபை முதலில் தனக்குள் முடிவுகளை மேற்கொள்ளாமல் பொதுக்கட்டமைப்புக் கூட்டத்தைக் கூட்டியது தவறாகும் என்றும் இது தொடர்பான கடுமையான விசனம் முன்வைக்கப்பட்ட பின்னரே மேற்குறித்த எழுத்துமூல அறிவிப்பை வட்சப் குழுவுக்குள் பொதுச்சபையினர் பதிந்ததாகவும் குறிப்பிட்டார்.

இந்த இடைவெளிக்குள் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தனது விளக்குச் சின்னத்தை சங்குச் சின்னமாக மாற்றியமைக்க விண்ணப்பித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் செப்ரம்பர் 27 ஆம் திகதி வரை விளக்குச் சின்னமே பதிவில் இருப்பது தெரிகிறது. சங்குச் சின்னமாக அது மாற்றப்படுவது உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பது பகிரங்கமாக உறுதிப்படுத்தப்பட இன்னும் சில நாட்கள் எடுக்கக்கூடும்.

அதற்கும் அப்பால், இவ்வாறு மாற்றும் முடிவில் பொதுச்சபை அதிருப்தி வெளியிட்டிருந்தும் அம்முடிவை மறுபரிசீலனை செய்ய அவர்கள் தயாராக இல்லை என்பதும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் பதிலில் தெரிகிறது.

நிலைமை இவ்வாறிருக்க, அரியநேத்திரனும் பொதுச்சபையினரும் தேர்தல் ஆணைக் குழுவுக்கு இது குறித்த தமது உடன்பாடின்மையை எழுத்துமூலமாக அறிவித்திருப்பதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத பொதுச்சபை உறுப்பினர் கூர்மைக்குத் தெரிவித்தார். இது குறித்து பொதுச்சபையின் எழுவரில் எவரும் நேரடியாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை.

எது எவ்வாறாயிருப்பினும், பொதுச்சபையும் ஏழு கட்சிகளும் சேர்ந்து உருவாக்கிய பொதுக்கட்டமைப்பு வெறும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கூட்டு மட்டுமே என்பதான புதுக் கதையொன்றை பொதுச்சபையினர் அவிழ்த்து விட்டுள்ளமை மக்கள் மத்தியில் கவலையை உருவாக்கியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை பொதுச்சபையின் குறிக்கோள் தோல்வியடைந்துள்ளது என்பதை ஒப்புக்கொண்டு, அதேவேளை எடுத்த முயற்சியின் பின்னால் திரட்சியடைந்த மக்களையும் செயற்பாட்டாளர்களையும் அடுத்த கட்டத்துக்கு இட்டுச் செல்வதற்குப் பதிலாக, வெளிப்படைத் தன்மையின்றி நட்டாற்றில் விட்டு பொதுச்சபையினர் தப்பிக்க முயல்வது நல்லதல்ல.

வேறொரு தருணத்தில் மக்களைத் தேசமாகத் திரளச் செய்வதற்கான நம்பகத்தன்மையை இது வெகுவாகப் பாதிக்கும்.

இதற்குள் செல்வின் இரேனியஸ் என்ற எழுவரில் ஒருவர் பெரும் புலம்பலாக ஒரு திறந்த மடலை எழுதியுள்ளார்.

தனிநாட்டுக் கோரிக்கையை நிராகரிக்கும் தனது நிலைப்பாட்டை அதிலே அவர் வெளிப்படுத்தியுள்ளதோடு புதிய திசையில் பயணிக்கவேண்டும் என்று குழப்பமான கருத்துகளை முன்வைத்திருக்கிறார்.

அந்தப் பகுதி பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

பொதுச்சபை உறுப்பினர் செல்வின் இரேனியசின் பத்துப்பக்க மடலில் சர்ச்சைக்குரிய ஒரு பகுதி
பொதுச்சபை உறுப்பினர் செல்வின் இரேனியசின் பத்துப்பக்க மடலில் சர்ச்சைக்குரிய ஒரு பகுதி

தனது திறந்த மடல் என்ற போர்வையில் பொதுச்சபையின் கருத்தாக சில கொள்கை சார் விடயங்களை எடுத்தெறிந்த போக்கில் அவர் முன்வைத்துள்ளமை சர்ச்சைக்குரியது.

சுயநிர்ணய உரிமை பற்றிய தனது பார்வையை அவர் குழப்பமானதாக வெளிப்படுத்தியுள்ளார்.

உண்மையில் பிரிந்து செல்லும் உரிமையைக் கைவிடாமல், இரு இறைமையுள்ள தேசங்களாகக் இணைப்பாட்சி நோக்கி புதிய அரசியலமைப்பு நோக்கிப் பயணிப்பது தான் சுயநிர்ணய உரிமை என்பதன் பொருள்.

செல்வின் முன்வைப்பது போல சுமந்திரனின் கொள்கை தான் பொதுச்சபைக்கும் என்றால், தமிழரசுக் கட்சியே போதுமே, பொதுச்சபை எதற்கு?

பொதுச்சபை தனது கொள்கையை வகுக்காமல் கட்டமைப்பை மட்டும் முன்னிலைப் படுத்தியதால் ஏற்பட்ட விளைவு இது.

கூட்டங்களில் வழுவழுப்பான போக்கில் இருந்துவிட்டு, விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்பது போல் அறிவித்தல்களை மேற்கொள்வதும் தனி ஆவர்த்தனமாக மடல்கள் வரைவதுமாக பொதுச்சபையின் முன்னோடிகள் என்று தம்மைத் தாமே முன் நிறுத்தியவர்கள் தமக்குத் தாமே ஆப்புவைத்துக் கொண்டுள்ளனர்.

இப்படியாக, சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த துன்பியல் சம்பவமாக பொதுச்சபையின் செயற்பாடு முடிவடையக்கூடாது.

ஜனாதிபதித் தேர்தலை விடவும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதில் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தையும் வழிநடத்துவதற்கான தேவை எழுந்துள்ளபோது, தாமே வழிகாட்டிகள் என்ற தோரணையில் கருத்துகளை வழங்கி பிரமுகர் அரசியலை மேற்கொண்டவர்கள் இன்று புறமுதுகு காட்டி ஓடுவது தவறானது.

தவறுகளில் இருந்து திருந்தும் வெளிப்படைத்தன்மையை நிறுவி பொதுச்சபை தன்னைத் தானே சுதாகரித்துக்கொண்டு விரைந்து பயணிக்க முன்வரவேண்டும்.