இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரப் போராட்டம்

உண்ணாவிரத போராட்டங்கள் மூலம் கைதிகளை விடுவிக்க முடியாது- தலதா அத்துக்கோரல
பதிப்பு: 2018 செப். 24 15:12
புதுப்பிப்பு: செப். 24 19:26
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கொழும்பு வெலிக்கடை, மகசீன் மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. வெகுஜன அமைப்புக்களின் ஒன்றிய ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை காலை ஒன்பது மணிக்கு போராட்டம் இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர். இலங்கையின் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஏழுபேர், தம்மை விடுவிக்குமாறு கோரி கடந்த பத்து நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
ஆகவே தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்தும் நோக்கில் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

அதேவேளை இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் போர்க்காலத்தில் கைது செய்யப்பட்டு, இன்று வரை தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உண்ணாவிரதப் போராட்டங்கள் மூலமாக விடுதலை செய்ய முடியாதென இலங்கையின் நீதியமைச்சர் தலதா அத்துக்கோரல எச்சரிக்கை செய்துள்ளார்.

சட்டத்தின் முன் எல்லோரும் சமன் என்றும் அவர் கொழும்பில் கூறியுள்ளார். ஆனாலும் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரித்து, யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் கடந்த 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் அடையாள உண்ணாவிரத போராட்டமும் இன்று மாலை ஐந்து மணி வரை நடைபெற்றது.

இந்த அடையாள உண்ணாவிரதத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில், ஒன்பது வருடங்கள் சென்று விட்ட பின்னரும், சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை என போராட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்கள் குற்றம் சுமத்தினர்.

மைத்திரி- ரணில் அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை என்றும், தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் கையாண்ட அதே நடைமுறையை பின்பற்றுவதாகவும் கைதிகளின் உறவினர்கள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர்.

அதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் விடயத்தில் மைத்திரி- ரணில் அரசாங்கம் இனவாதக் கண்ணோட்டத்துடன் செயற்படுவதாக அருட்தந்தை சத்திவேல் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.