இலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

காலிமுகத்திடலில் ஒன்று கூடிய மக்கள்
பதிப்பு: 2018 செப். 27 15:34
புதுப்பிப்பு: செப். 27 23:03
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கொழும்பு வெலிக்கடை, மகசீன், அனுராதபுரம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் இன்று வியாழக்கிழமை முற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. காலி முகத்திடலில் உள்ள இலங்கை ஜனாதிபதியின் செயலகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்றமையினால் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. கலகமடக்கும் இலங்கைப் பொலிஸார், கம்பிகளினால் செய்யப்பட்ட வேலிகளை அமைத்து ஜனாதிபதி செயலகத்துக்குப் பாதுகாப்பு வழங்கினர்.
 
பெருமளவு இலங்கைப் பொலிஸாரும் காலிமுகத்திடலில் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எவரும் ஜனாதிபதி செயலக வளாகத்துக்குள் செல்லவில்லை.

மாறாக வெளியே நின்று கோஷம் எழுப்பினர். அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு கோரி உரக்கச் சத்தமிட்டனர்.

விடுதலை செய்வதாகக் கூறி கைதிகளை மைத்திரி- ரணில் அரசாங்கம் மூன்று வருடங்களாக ஏமாற்றுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைதிகளின் உறவினர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பலருக்கு வழக்கு விசாரணை கூட ஆரம்பிக்கப்படவில்லை என்றும் குற்றம் சுமத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் சிங்கள இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகளும் பௌத்த சமயக் குருமார் சிலரும் கலந்துகொண்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோஷம் எழுப்பினர்.

போரின்போதும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலிலும் வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்திலும் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இலங்கை இராணுவத்தினராலும் இலங்கைப் பொலிஸாராலும் தமிழ் இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

எத்தனைபேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து இலங்கைச் சிறைச்சாலைகள் திணைக்களம் சரியான புள்ளிபரங்களை இதுவரை வெளியிடவில்லை.

ஆனாலும் நுாற்று ஏழு கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அருட் தந்தை சத்திவேல் கூறுகின்றார்.

எனினும் இதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அனுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகள் எட்டுப்பேர் கடந்த இரு வாரத்திற்கும் மேலாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் மற்றும் அடையாள உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.