இந்திய ஒன்றிய அளவில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு செலுத்தும் தாக்கத்தினால், சமூகத்தில் சாதி, மத வேறுபாடுகளால் ஒடுக்கப்படுவோர் மெல்ல மெல்ல மேலெழுந்து வருகின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை 1920களில் இருந்தே நீதிக்கட்சியின் ஆட்சியின் பயனாலும், தொடர்ச்சியான திராவிட இயக்கங்களின் ஆட்சியினாலும், இடஒதுக்கீடு முறை பல்வேறு படிநிலைகளில் நிலைத்து, உயர்ந்து நிற்கிறது எனலாம். மேலதிக விவரங்களும் ஆதாரங்களும் கீழே உள்ள தொகுப்பில் காணலாம்.
இந்திய துணைக்கண்டத்தில் இருந்து பிரித்தானிய அரசு தன் அதிகாரத்தை விட்டு 1947ஆம் ஆண்டு வெளியேறிய பிறகு உருவான இந்திய ஒன்றியக் குடியரசில், முதன் முதல் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது தமிழகத்தில் உருவான கிளர்ச்சியினாலேயே என்பது வரலாறு. அத்திருத்தம் சமூகநீதியை உறுதிப்படுத்துவதற்கானது என்பது மிக முக்கியம்.
அனைவருக்கும் அனைத்தும் பகிர்ந்தளிக்கப்படும் சமூக நீதியே, நிலையான, அரோக்கியமான, நவீன சமூகத்தை நிலைநாட்டும். சமூகநீதியினை அடிப்படையாக கொண்டே தமிழகத்தில் சமூக அரசியலும் வாக்கு அரசியலும் செயல்பட்டுவருகிறது.
இச்சமூகநீதி பாதையினாலேயே, தமிழகம் இந்திய ஒன்றியத்தில் பிற மாநிலங்களை ஒப்பிடும்பொழுது, கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் உள்ளிட்டவைகளில் வளர்ந்து, செழித்து நிற்பதாக, பொருளாதாரத் துறையில் நோபல் பரிசுப் பெற்ற அமெர்த்தியா சென் மற்றும் ஜீயான் ட்ரேஷ் இணைந்து எழுதிய, "An Uncertain Glory: India and its Contradictions" என்னும் புத்தக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.
இன்றையச் சூழலில், இந்திய ஒன்றிய நடுவண் அரசாங்கத்தைக் கைப்பற்றி ஆட்சி செலுத்தும் கடும்போக்கு வலதுசாரிக் கட்சியின் ஊக்கத்தால், சமூகநீதியை பாதுகாத்து வரும் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக, பல்வேறு தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக, உச்சநீதிமன்றங்களில் பல வழக்குகள் பதியப்பட்டு, இறுதியில், சமூகநீதிப் பாதைக்கு வெற்றியே கிட்டி வந்தாலும், தொடர்ந்தும் இனி வழக்குகளை எதிர்கொள்ள, வரலாற்றைப் பின்னோக்கி அறிந்தும் தெளிந்தும் வைத்திருப்பது தமிழகத் தமிழர்களின் கடமையாகும்.
இத்தகைய நிலையில், கூர்மை வெளியிடும் இடஒதுக்கீடு தொடர்பான வரலாற்றுத் தொகுப்பு, சமூக அரசியலில் ஈடுபடுவோருக்கு அறிவு பலத்தைக் கொடுக்கும் என நம்புகிறோம்.
இடஒதுக்கீடு வரலாறு:
இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பிரித்தானிய அரசின் வல்லாதிக்கத்தை எதிர்த்து அரசியல் விடுதலைப் போராட்டம் நிகழ்ந்த காலக்கட்டங்களில், பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை கற்பித்து, மனிதர்களிடையே வேற்றுமையை நிலைநாட்டி வந்த சனாதன முறைக்கு எதிரான சமூக விடுதலை போரட்டத்தையும் முன்னெடுத்து மண் தமிழ்நாடு !
மன்னர் ஆட்சிக்குப் பின்னரான ஆங்கிலேய காலனியாதிக்க ஆட்சியிலும் பிராமணர்களது செல்வாக்கு உயர்ந்திருந்தது. சுமார் 3.2 சதவிகிதம் மட்டுமே இருந்த பிராமணர்கள் சகல துறைகளிலும் பெரும்பான்மையான வாய்ப்புகளை தாங்கள் மட்டுமே அனுபவித்தனர். ஆங்கில வழிக் கல்வியும், முன்னர் மன்னர் காலங்களில் இருந்த அதிகாரமும் அவர்களுக்கு இந்த நிலையை கொடுத்தன. சுதந்திரப் போராட்டத்தின் போதும் அதன் பின்னரான நாட்டின் தலைமையும் அவர்களிடமே இருந்தன. அடுத்த நிலைகளில் சத்திரியர்கள், வைசியர்கள் பதவிகளில், கல்வியில் இடம்பெற்றனர்.
கீழ் கண்ட ஆவணங்களின் வழியே இந்நிலையை உணரலாம்
1. "மாவட்டங்களில் உள்ள சார்புநிலைப் பணிகளில் சில குறிப்பிட்ட குடும்பங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவே அந்த பகுதிகளில் முதன்மை சாதிகளுக்குப் பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்" என வருவாய்த்துறையின் நிலைமை குறித்து 1854 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசு உத்தரவு (எண். 128 (2)) கூறுகிறது.
2. "பெரும்பான்மை மக்கள் எவ்வித உதவியுமின்றிக் கற்றுக்கொள்ள இயலாத நிலையில் இருக்கிறார்கள்" என்று 1883 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கல்விக் குழுவின் அறிக்கை, அத்தியாயம் 1 இவ்வாறு கூறுகிறது.
3. 09.03.1894 அன்று வெளியிடப்பட்ட, அரசுக் குழு ஒன்றின் நிலை ஆணைதான் (Board's Standing order - 128(2)), '"அரசு வேலைகளில் ஒரே ஒரு சாதியாரின் ஆதிக்கம் இருப்பதை" அறிந்து கூறியது.
இந்த 3 குறிப்புகளும் ஆங்கிலேய ஆட்சியில் கல்வி பெறும் உரிமை, தரமான வேலை வாய்ப்புரிமை, நில உரிமை, அரசியல் உரிமை, சமூக பங்கேற்பு உரிமை, அரசியல் அதிகாரம் என எல்லாவற்றிலும் சாதி ஆதிக்கத்தின் தாக்கத்தையும் யார் அதிகமாக பயனடைந்தனர் என்ற தகவலையும் தருகின்றன. இத்தகைய நிலைமையை மாற்றவே வகுப்புவாரி உரிமை / விகிதாச்சார உரிமை / வகுப்புவாரி பிரதிநிதித்துவம்/ இடஒதுக்கீடு என்ற ஒரு சமூகநீதி முழக்கம் வரலாற்றில் உருவாகிறது.
*உரிமை எல்லோருக்குமென கேட்டு அவர்கள் மட்டும் வைத்துக்கொண்டார்கள்*
1884 ஆம் ஆண்டில் இந்தியத்துணைக்கண்டத்தில் இருந்து விடைபெற்றுச் செல்கின்ற ரிப்பன் பிரபுவை வழியனுப்ப, அன்றையக் காலக்கட்டத்தில் பிரித்தானிய அரசுக்கு விசுவாசிகளாக இருக்கிற சுமார் 300 பேர் ஓரிடத்தில் கூடுகிறார்கள். கூடிய அவர்களிடையே ஒரு ஒற்றுமை இருக்கிறது அவர்கள் பெரும்பாலும் வர்ணாசிரம உயர்சாதியினரகவே இருக்கிறார்கள்.
அதன் பின்னர் அவர்கள் அனைவரும், 1885 ஜூன் மாதம் சென்னையில் சந்திக்கிறார்கள். அப்பொழுதுதான், காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்குகிறார்கள். அக்கூடுகையிலேயே மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முதல் இரண்டு தீர்மானங்கள் புகழ்பாடும் தீர்மானங்கள் என்றும் கூட சொல்லலாம் (1. ராஜ விசுவாசத்தை உறுதியாக கடைப்பிடிப்போம், 2. பிரித்தானிய அரசு நீடு வாழ்வதற்கு இறைவன் அருள் புரிய வேண்டும்). மூன்றாவது தீர்மானம், "பிரிட்டிஷ் அடிமை இந்தியாவில் உள்ள இந்திய வேலைகளை இந்தியமயமாக்குக!"
1885-90 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில், மாவட்டத் துணை ஆட்சியர், மாவட்ட நீதிபதிகள், அலுவலக முதன்மை பணிகள் இந்திய குடிகளுக்கு எனப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. ஆனால், அவையனைத்தும், வர்ணாஸசிரம உயர்சாதியினரே வைத்துக் கொண்டார்கள். இதனால் தான் எதிர்ப்பு எழுந்தது. இஸ்லாமியர்கள் முஸ்லீம் லீக் என்ற அமைப்பாக திரண்டு எதிர்ப்பு குரல் எழுப்பினார்கள். மராத்தியத்திலும் சென்னை மாகாணத்திலும் முதல் எதிர்ப்புக் குரல் எழுந்தது.
திராவிட மகாஜன மாநாட்டில் - பண்டிதர் அயோத்திதாசர்
1891 ஆம் ஆண்டில் "விகிதாச்சார உரிமை" என்ற சமூகநீதிக் கருத்தை தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்கள் முன்வைத்தார். 1891 டிசம்பர் 1ஆம் தேதி உதகமண்டலத்தில், அயோத்திதாசர் பண்டிதர் கூட்டிய திராவிட மகாஜன மாநாட்டில் போடப்பட்ட முதல் தீர்மானமே, கிராம அலுவலர் உட்படப் பல அரசாங்கப் பணிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு செய்வதன் மூலம், அவர்களின் பொருளாதார வாழ்வை உயர்த்துமாறு கோருகிற இடஒதுக்கீட்டுத் தீர்மானமாகும். அதன் அடிப்படையில் தொடர்ந்துப் போராடி, இரண்டு இடஒதுக்கீட்டு ஆணைகளையும் பண்டிதர் அயோத்திதாசர் பெற்றார்.
பார்ப்பனரல்லாத பலர் கையொப்பமிட்ட மனு
1892 ஆம் ஆண்டு அனைவருக்கும் வேலைப் பகிர்வு வேண்டும் என்று கூறி, பார்ப்பனரல்லாத பலர் கையொப்பமிட்டு, அன்றைய சென்னைத் தலைமாகாண (Madras Presidency) ஆளுநராக இருந்த வென்லெக்கிடம் மனுக் கொடுத்தனர். அதற்கும் எவ்விதப் பயனும் ஏற்படவில்லை.
இரு நூல்கள் 1893 ஆம் ஆண்டில் Fair Play என்ற பெயரை நூலாசிரியர் பெயர் என்று அச்சிடப்பட்ட இரண்டு புத்தகங்கள் "1.பிராமணர் அல்லாதார் இனங்களும் இந்திய அரசுப் பணியும்" (The Non Brahmin Races and Indian Public Service) - "2.பிராமணர் அல்லாதார் இனங்கள் தெளிவு பெறுவதற்கான வழிவகைகள்" (The Ways and Means for the Amelioration of Non Brahmin Races) வெளியாகின. உண்மையில் "பிராமணர் அல்லாத இனங்கள்" என இனங்களின் அடையாளங்களை சுட்டிக்காட்டி வந்த இவ்விரு நூல்களில் முதல் நூல் பிராமணர் அல்லாதார் இன மக்களின் பிரச்னைகளை விளக்கும் வகையிலும் இரண்டாம் நூல் அவற்றுக்கான தீர்வுகளைச் சொல்லும் வகையிலும் அமைந்திருந்தன.
###########################
'முஸ்லீம் லீக்' கட்சி தொடங்கப்பட்ட உடனேயே இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையையே முதலில் முன்னிறுத்தினர். 1906 அக்டோபர் 1ஆம் நாள் ஆகாகான் தலைமையில் அன்றைய தலைமை ஆளுநர் மிண்டோவைச் சந்தித்து இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு கோரினர்.
அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு 1909 ஆம் ஆண்டு, மின்மோலிமார்லி சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்லாமியர்களுக்குத் தேர்தல்களில் தனித்தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த இடஒதுக்கீடு அரசியல் தளத்தில் மட்டுமே அமைந்தது, வரலாற்றில் பிரிட்டிஷ் வெள்ளையர் அரசு வழங்கிய முதல் இடஒதுக்கீடு இதுவேயாகும்.
###########################
சென்னை மாகாண பிராமணர் அல்லாதார் சங்கம் - 1909
பிராமணர் அல்லாத மக்களின் நலனை உறுதி செய்ய - முன்னேற்றம் குறித்து விவாதித்த பி.சுப்பிரமணியம், எம்.புருஷோத்தம நாயுடு என்ற இரண்டு வழக்கறிஞர்கள் முயற்சியால், The Madras NonBrahmin Association என்ற "சென்னை மாகாண பிராமணர் அல்லாதார் சங்கம்" 1909இல் உருவானது.
மக்களின் பிள்ளைகள் கல்வி கற்க - இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில்நுட்பக் கல்விப் பயிற்சி பெற - தாய்நாடு திரும்பியதும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர - சமூக அங்கீகாரத்தை அரசியல் அதிகாரத்தை உறுதி செய்ய வேண்டுமென்ற 5 முதன்மையான குறிக்கோள்களாக முன்வைக்கப்பட்டது.
தொடங்கப்பட்ட சிலநாட்களிலேயே, வகுப்புவாதத்தைத் தூண்டுகிறது, இன வாதத்தைப் பரப்புகிறது, இதனை ஊக்குவிக்கக் கூடாது என சென்னை மாகாணத்தைச் சேர்ந்த பிராமணத் தலைவர்கள் பத்திரிகைகளுக்கும் வெள்ளைக்கார அதிகாரிகளுக்கும் எழுதுமளவிற்கு வளர்ந்த இந்தச் சங்கம், பொருளாதாரப் பிரச்னை - அரசியல் நெருக்கடி என தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த சூழ்ச்சியிலேயே செயல்பாடற்று நின்று போனது!
சென்னை தலைமாகாண பிராமணர் அல்லாதார் சங்கம் முடங்கிய பிறகு தான், பிராமணர் அல்லாத மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு எழுச்சி ஏற்பட்டது என்று கூட சொல்லலாம்.
சென்னை ஐக்கியக் கழகம்
இவ்வேளையில் அரசுப் பணியில் இருந்த பிராமணர் அல்லாதவர்கள் ஒருங்கிணைப்பு அவசியம் என்று உணர்ந்த சரவண பிள்ளை, ஜி. வீராசாமி நாயுடு, துரைசாமி முதலியார், என். நாராயணசாமி நாயுடு போன்ற பிரமுகர்கள் இணைப்பால் சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெருவில் 1912 ஆம் ஆண்டில் சென்னை ஐக்கியக் கழகம் (The Madras United League) என்ற புதிய இயக்கம் சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெருவில் டாக்டர் சி.நடேசன் முதலியார் செயலாளர் - எஸ்.ஜி. அரங்க ராமானுஜம் துணைச் செயலாளர் பொறுப்புகள் ஏற்று உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் அரசியலில் 'கழகம்" என்ற சொல் இடம் பெறுவதற்கான தொடக்கப்புள்ளி இதுதான். இதுவே பின் 1913 முதல் திராவிடர் சங்கம் என்று புதுப் பெயர் பெற்றது.
தென்னிந்திய மக்கள் சங்கம்
1916-ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 20 ஆம் நாளன்று 'வெள்ளுடை வேந்தர்' பி.தியாகராயச்செட்டியார் வெளியிட்ட (NON-BRAHMIN MANIFESTO) 'பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை' ஒரு பெரும் கலகக்குரலாக இருந்தது. அதனை தொடர்ந்து டி.எம்.நாயர் உள்ளிட்டோர் முன்னின்று தொடங்கிய 'தென்னிந்திய மக்கள் சங்க'த்தோடு (South Indian Peoples Association Ltd) இணைந்து பிராமணரல்லாத மக்களின் சமூகநீதியையே பிரதான முழக்கமாக கொண்ட பின்னாளில் மக்களால் "JUSTICE PARTY" என்றும் "நீதிக்கட்சி" என்றும் அழைக்கப்ப்படும்படியாக மாறியது.
திராவிட சங்க விடுதி
டாக்டர் சி.நடேசன் முதலியார், அதே ஆண்டில் பிராமணர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்கும் மாணவர் விடுதிகளில் கூடப் பாகுபாடுகள் நிறைந்திருந்த நிலையில், அந்நிலையைப் போக்க சென்னையில் திராவிட சங்க விடுதியை (Dravidian Association Hostel) உருவாக்கினார்.
பிற்காலத்தில் இந்திய நிதியமைச்சராக ஆகவிருந்த ஆர்.கே.சண்முகம், பாரிஸ்டர் ரங்கராமானுஜம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர்களாக விளங்கிய டி.எம்.நாராயணசாமிப் பிள்ளை, எஸ்.ஜி.மணவாள ராமானுஜம் மற்றும் சடகோப முதலியார், பிற்காலத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக வந்த சுப்பிரமணிய நாடார் போன்றவர்களெல்லாம் இந்த விடுதியில் தங்கிப் படித்தவர்கள்தான்!
இந்தியாவின் பல மாநிலங்களில் சுதந்திரத்திற்கு பிறகும் இன்றுவரை சரியாகக் கிடைத்திடாத கல்வியில் சமூக நீதி மற்றும் சமூக நலத்திட்டங்கள், பிரித்தானிய ஆட்சிக்காலத்திலேயே குறைந்த அதிகாரம் கொண்ட மான்டேகு -செம்ஸ்போர்டு திட்ட "இரட்டை ஆட்சி" முறையிலேயே சாத்தியப்படுத்திக் காட்டியது அன்றைய சென்னை மாகாணம்.
150 ஆண்டுகளாகப் பெயருக்குத்தான் ஆங்கிலேயர்கள் ஆட்சி என்று சொல்கிறார்கள் உண்மையில் இங்கே பிராமணர்களின் ஆட்சிதான் நடந்துவருகிறது. பிராமணர்களின் நலனுக்காக மட்டுமே காங்கிரஸ் கட்சி இயங்குகிறது. இதை மாற்றி பிராமணர் அல்லாதார் இன மக்களின் நலனுக்காக ஒரு புதிய அரசியல் இயக்கம் காணவேண்டுமென தென்னிந்தியா கண்ட முதல் இயக்கம் தான் "நீதி கட்சி".
வடக்கே உருவான 'முஸ்லீம் லீக்' கட்சியின் பெரும் முயற்சியால், 1909 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மின்மோலிமார்லி சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்லாமியர்களுக்குத் தேர்தல்களில் தனித்தொகுதிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு நீதிக்கட்சிக்கு பெரிய உந்து சக்தியாக மாறியது. அதுவே, 1917 -1920 ஆம் ஆண்டுகளில் சென்னை மாகாணம் முழுவதும் அரசியல் கோரிக்கையாக ஒலிக்கத் தொடங்கியது.
1920 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் அக்கட்சியே வெற்றிப் பெற்ற. நீதிக்கட்சி, திவான் பகதூர் கடலூர் சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் சென்னை மாகாண ஆட்சிப் பொறுப்பை ஏற்றது.
17.12.1920 ஆம் நாளன்று, சென்னை மாகாண அமைச்சரவையை அமைத்தது. பதவியேற்றவுடனேயே, அரசு வேலைவாய்ப்புகளில் அனைத்து மத-சாதியினருக்கம் இடஒதுக்கீடு வழங்க ஆணை பிறப்பித்தது.
முதல் கம்யூனல் G.O - முதல் வகுப்புவாரி அரசாணை
சமூக நீதியின் ஆணிவேரான வகுப்புவாரி இடஒதுக்கீட்டுச் சட்டமானது முதல் மசோதாவாக முதல் கம்யூனல் G.O (MRO Public Ordinary Service GO 613) 1921ஆம் ஆண்டு பனகல் அரசர் பனங்கன்டி ராமராயநிங்கார் ஆட்சியில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
20.5.1922 அன்று கல்லூரிகளில் எல்லாத் தரப்பு மாணவர்களையும் சேர்க்க, குழுக்கள் அமைக்கும் அரசாணைக்கு உத்தரவிட்டது.
21.6.1923 அன்று கல்வி மறுக்கப்பட்ட பிராமணரல்லாத குழந்தைகளைத் தொடக்கப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்க அவசர உத்தரவிட்டது
24.9.1924 அன்று தாழ்த்தப்பட்ட மாணவர்களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாகச் சேர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
புதிய பல்கலைக்கழகம் காண இயற்றப்பட்ட சட்டம் "புதிய பல்கலைக்கழகம் சட்டம்" தான் பின்னாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக இது காரணமாயிற்று.
'சென்னைத் தலைமாகாண சங்கம்' - பெரியார் + திரு.வி.க
இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை நீதிக்கட்சி மிக வலிமையாக உயர்த்திப் பிடித்ததால் அக்கட்சியின் செல்வாக்கு, தமிழ்நாட்டிலும், அன்று சென்னைத் தலைமாகாணத்தில் இணைந்திருந்த தென்னிந்தியப் பகுதிகளிலும் மிக விரைந்து பரவியது.
அதனைக் கண்ட காங்கிரஸ் கட்சிக்குள்ளும் விவாதம் பரவியது. காங்கிரசில் இருந்த பார்ப்பனர் அல்லாதோர் ஒருங்கிணைந்து 'சென்னைத் தலைமாகாண சங்கம்' (Madras presidency Association) என ஒன்றை உருவாக்கினர். பெரியார், திரு.வி.க. போன்றோர் அச்சங்கத்தில் பொறுப்பாளர்களாக இருந்தனர். அச்சங்கமும் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை முன்வைத்தது.
நீதிக்கட்சியின் வகுப்புரிமையை காங்கிரஸ் கட்சி ஏற்க வேண்டுமென நெடுங்காலமாக காங்கிரசுக்குள் வலியுறுத்தி வந்த தந்தைப் பெரியாரின் கோரிக்கையை, மேட்டுகுடிகள் நிரம்பி வழிந்த அன்றைய காங்கிரஸ் கட்சி ஏற்காத காரணத்தால், அக்கட்சியின் சார்பில் நடைபெற்ற காஞ்சிபுர மாநாட்டு பந்தலிலேயே, தாம் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி "வகுப்புவாரி உரிமைக்கு போராடாதவன் கோழை" என்று கூறி சுயமரியாதை இயக்கத்தை கட்டமைத்தார்.
Communal GO Ms No.1021
1926ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சியில் அமரும் வாய்ப்பை நீதிக்கட்சி இழந்தது. ஆட்சியை கைப்பற்றிய சுயராஜ்யக்கட்சி, மீண்டும் நீதிக்கட்சி ஆட்சியை அமைக்கும் வாய்ப்பை தந்துவிடக்கூடாது என கருதி நீதிக்கட்சியின் பி.சுப்பராயன் கவுண்டர் என்பவரை மட்டும் அழைத்து சுயேட்சை அமைச்சரவை அமைக்கச் செய்தனர்.
இருந்தாலும் எதிர்கட்சியான நீதிக்கட்சியின் தலைவர் பனகல் அரசர் ஆலோசனையிலேயே இந்த ஆட்சியையும் தொடர்ந்தார் பி.சுப்பராயலு கவுண்டர். இதன் காரணமாக பின்னர் ஜனவரி 1928 அன்று சுயராஜ்யக்கட்சி எதிர்த்து வந்த சைமன் கமிஷனை எதிர்க்க மறுத்த பி.சுப்பராயன் கவுண்டர் அமைச்சரவையில் இருந்து சுயராஜ்யக்கட்சி பின்வாங்க மீண்டும் நீதிக்கட்சியே முழுமையாக ஆளும் கட்சியாக நின்றுவிட்டது.
சமூகநீதி இயக்கத்தின் தளபதி சௌந்தரபாண்டியன் அவர்கள் ஆதரவில் எஸ்.முத்தையா முதலியாரின் முயற்சியால் முதல் இடஒதுக்கீட்டுச் சட்டம் 13.9.1928 அன்று வகுப்புரிமை ஆணையாக - communal GO Ms No.1021 அன்று வெளியிட்டப்பட்டு அவ்வாணையை முழுமையாக செயல்படுத்தி, அரசுப் பணிகளில் பார்ப்பனர் - பிறசாதியினர் -தாழ்த்தப்பட்டோர் - முஸ்லிம்கள் - ஆங்கிலோ_இந்தியர் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினரும் இடம் பெற வழி வகுத்தார்.
15.9.1928 சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் பிராமணரல்லாத மாணவர்களைச் சேர்ப்பதற்கான உத்தரவு செயல்முறைக்கு அனுமதிக்கப்பட்டது. 27.2.1929 வகுப்புவாரி ஒதுக்கீட்டுக்கான அரசாணை வெளியிட்டு சமூக நீதிக்கான ஒரு பாதையை திறந்தது. சமூகநீதி முன்னோடிகளில் ஒருவரான சிவகங்கை எஸ்.இராமச்சந்திரன் "தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்க்காத பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தப்படும்" என்று ஆணையிட்டார்.
வெறும் பதிவுதுறைக்கு மட்டுமே நடைமுறைக்கு வந்த இந்த வகுப்புரிமை ஆணையை எல்லா துறைக்கும் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவைகளை தந்தை பெரியார் "குடி அரசு" இதழில் எழுதினார். பிறகு எல்லா துறைகளுக்கும் இந்த வகுப்புரிமை ஆணை நடைமுறைபடுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
8.33 சதவிகித இடஒதுக்கீடு ஆணை
'ஏற்றத்தாழ்வு' ஒழிய 'சமூகநீதி' மலர ஒடுக்கப்பட்ட எல்லா மக்களுக்கும் அவரவர் மக்கட்தொகை அடிப்படையில் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டுமென்ற அடிப்படையில் 1931 ஆம் ஆண்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடந்தது.
எடுக்கப்பட்ட சாதிவாரியான மக்கள் கணக்கெடுப்பின்படி, 32 கோடியாக இருந்த அன்றைய துணைக்கண்ட மக்கள் தொகையில் 8 கோடிப் பேர் இஸ்லாமியராக இருந்தனர். (அது பாகிஸ்தானையும் உள்ளடக்கிய இந்தியத் துணைக்கண்டம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்). எனவே, அரசின் எல்லா வேலைவாய்ப்புகளிலும், இஸ்லாமியர்களுக்கு 25% இடஒதுக்கீடும், சீக்கியர், பார்சி, கிறித்துவர், ஆங்கிலோ இந்தியர் ஆகிய நால்வருக்குமாகச் சேர்த்து 8.33 சதவிகித இடஒதுக்கீடும் வழங்கும் ஆணை 1933 இறுதியில் வெளியிடப்பட்டது. சென்னைத் தலைமாகாணப் பார்ப்பனர் அல்லாதோருக்குச் சிறப்பு இடஒதுக்கீடு
சென்னை மாகாண முதலமைச்சராக பொப்பிலி அரசர் பதவி (இரண்டாவது முறையாக 5 நவம்பர் 1934 - 4 ஏப்ரல் 1936) வகித்த போது 1935 ஆம் ஆண்டு அவருடைய ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட 'சென்னைத் தலைமாகாணப் பார்ப்பனர் அல்லாதோருக்குச் சிறப்பு இடஒதுக்கீடு' என்னும் கோரிக்கையை எடுத்துக்கொண்டு, சர்.ஏ.இராமசாமி முதலியார் டெல்லி சென்றார்.
அங்குள்ள அமைச்சர்கள் அனைவரையும் சந்தித்து, தன் கோரிக்கைக்கு ஆதரவு திரட்டினார். ஆனால், டெல்லியிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், அதுபோன்ற ஒதுக்கீடு, ஆதி திராவிட மக்களின் நலனைப் பாதிக்கும் என்று மறுத்துக் குறிப்பு எழுதினர். இருப்பினும் அங்கேயே இருந்து மீண்டும் அனைவருக்கும் 'சென்னைத் தலைமாகாணப் பார்ப்பனர் அல்லாதோருக்குச் சிறப்பு இடஒதுக்கீடு' குறித்து தெளிவினை ஏற்படுத்தி அதனை நடைமுறைக்கு கொண்டுவர பெரும்பாடுபட்டார்.
பார்ப்பனர் அல்லாதோர் இட ஒதுக்கீட்டுச் சட்டம்
மத்திய அரசுப் பணிகளுக்கும் இதே போல இட ஒதுக்கீடு வேண்டும் எனக் கேட்டுப் போராடியதன் விளைவாய் 1935 -ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த "சென்னை மாகாண பார்ப்பனர் அல்லாதோர் இட ஒதுக்கீட்டுச் சட்டம்" மூலம் அப்போதைய இம்பீரியல் வங்கி, தனியார் இயக்கி வந்த தென்னக இரயில்வே நடைமுறைக்கு வந்தது. (1944 ஆம் ஆண்டுக்குப்பின் தென் மராத்தா இரயில்வேயிலும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.)
"வடக்கு காங்கிரஸ் வங்காள கமிட்டி - தென்னக காங்கிரஸ் பார்ப்பன கமிட்டி" என பண்டிதர் அடையாளப்படுத்திய காங்கிரஸ் கமிட்டியின் கதையானது 1936 ஆம் ஆண்டுக்கு பின் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பார்ப்பனரே வரமுடியாத நிலையை உருவாக்கியது இந்த வகுப்புவாரி உரிமை குறித்த விழிப்புணர்வு !
வடக்கில் இருந்து வந்துபோகும் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களே சாடும் அளவிற்கு இங்கே வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோலோச்சியது பி.எஸ் குமாரசுவாமி ராஜா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த பி.கோபால் ரெட்டி "எல்லோருடைய இதயத்திலிருந்தும் எண்ணங்களில் இருந்தும் வகுப்பு வேற்றுமை (சாதிய வேற்றுமை களையப்பட்டுவிட்டால்) அன்று நிச்சயமாக வகுப்புவாரி பிரதிநிதித்துவம் முறை இரத்து செய்ய இந்த சர்க்கார் தயங்காது"என்று அவர்களுக்கு பதில் அளித்ததெல்லாம் தனி வரலாறு ! இவ்வாறாக " சமூகநீதியின் தலைநகர் " என்ற அரசியல் அடைமொழியை சென்னை மாகாணம் அடைந்தது.
சாதிவாரிக் கணக்கெடுப்பு
'இடஒதுக்கீட்டு முறை' நடைமுறையில் இருந்தாலும் பிராமணரல்லதார் எல்லோருக்கும் அது சென்றடையவில்லை. 'ஏற்றத்தாழ்வு' என்னும் நச்சுமரத்தை வீழ்த்த 'கம்யூனல் ஜி.ஓ' ஆணை வந்த பிறகு தான் பல போராட்டங்கள் தொடங்கின. வெள்ளையரிடமிருந்து பிராமணர் வாங்கிக் கொண்டது போல பிராமணர்களிடமிருந்து வாங்கி உயர்பிரிவு மக்களிடமே போய்ச் சேர்ந்துவிட்டதாகவும் அதனால் உடனடியாக சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென குரல் வந்துவிட்டது.
வகுப்புவாரி உரிமையிலான இடஒதுக்கீடு
பிரிட்டிஷ் அடிமை இந்தியாவில் நீதிக்கட்சியில் ஆட்சியில் தொடங்கிய "வகுப்புவாரி உரிமையிலான இடஒதுக்கீடு" 1950 ஆம் ஆண்டில் இந்திய துணைக்கண்டம் குடியரசான நிலையிலும் இந்த சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலும் தொடர்ந்து வந்தது.
இந்துக்களைத் தனியாகச் சேர்த்து இட ஒதுக்கீடு
அதன் பின் ஆட்சிக்கட்டிலில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் முதல்வராக அமர்ந்த ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் "பிராமணரால்லாத பிற்படுத்தப்பட்ட இந்துக்களைத் தனியாகச் சேர்த்து இட ஒதுக்கீட்டை" 24.03.1947 அன்று அறிமுகப்படுத்தினார்.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தரவு
ஓமந்தூரார் பதவியேற்ற பிறகு, 1928-ஆம் ஆண்டுமுதல் பிறப்பிக்கப்பட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தரவைப் பின்வருமாறு திருத்தி, மொத்த உத்தியோகம் 14 என்றால், பிராமணருக்கு 2, கிறிஸ்துவருக்கு 1, முஸ்லிமுக்கு 1, ஆதிதிராவிடருக்கு 2, பிற்பட்டோருக்கு 2, மற்ற பிராமணர் அல்லாதாருக்கு 6 என்ற வீதத்தில் உத்தியோகம் வழங்கப்பட வேண்டும்' என்று உத்தரவிட்டார். 24.03.1947 அன்று அரசு பிறப்பித்த அந்த ஆணை மூலமாக, நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, 21.11.1947 அன்று 12 என்று கணக்கிடப்பட்ட பணியிடங்களை 14-ஆக உயர்த்தி, உயர்த்தப்பட்ட 2 பணியிடங்களும் பிராமணர் அல்லாத பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு ஒதுக்கீடு செய்து, இந்தியாவிலேயே முதன்முறையாகத் தனி ஒதுக்கீடு வழங்கிய அரசு என்ற பெருமையை சென்னை மாகாண அரசுதான் அடைந்தது.
இட ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு தடை
"வகுப்புவாரி பிரதிநிதித்துவ இடஒதுக்கீட்டுச் சட்டம்" மக்கள் மத்தியில் பிளவுகளை உண்டாக்குமென கூறி காந்தியார் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் வெள்ளைக்கார ஆட்சியிலும் தொடர்ந்து வந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் விடுதலைப் பெற்ற இந்தியாவில் தான் முதல்முறையாக தடை செய்யப்பட்டது. இந்தியச் மத்திய அரசுப் பணிகளில் இருந்து வந்த இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை இரத்து செய்தது இந்திய அரசு !
இந்திய துணைக்கண்டத்திற்கான அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்க அண்ணல் அம்பேத்கார் தலைமையில் அமைக்கப்பட்ட அரசியலமைப்புக் குழுவில் நிறைந்திருந்த பிராமண அழுத்தத்தின் காரணமாக "அரசியலமைப்பின் 16(4) வழி வேலை வாய்ப்புகளில் மட்டும் இட ஒதுக்கீடு" என்ற சட்டத்தை அதில் கொண்டு வரப்பட்டது.
செண்பகம் துரைராசன் வழக்கு
அத்தோடு சென்னை மாகாணத்தில் நடைமுறையில் இருந்துவந்த "வகுப்புவாரி பிரதிநிதித்துவம்" (இடஒதுக்கீட்டு முறை) கல்வித்துறையில் பின்பற்றப்படுவதால் தனக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த செண்பகம் துரைராசன் என்பவரும் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என அதே பிராமண சமுதாயத்தை சார்ந்த மாணவர் *சி.ஆர்.சீனிவாசன் என்பவரும் சென்னை மாகாண உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர், இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் குழுவில் இடம்பெற்று ஆதிக்கம் செலுத்திய அல்லாடி கிருஷ்ணசாமி அய்யங்கார் என்பவர் தாமாகவே முன்வந்து இவ்வழக்கிற்காக வாதாடினார். (செண்பகம் துரைராசன் மருத்துவக் கல்லூரிக்கே விண்ணப்பிக்காமல் வழக்கை தொடர்ந்தார் என்பது தனிக் கதை இந்த வழக்கின் முழுத் தீர்ப்பின் விவரம்:
http://judis.nic.in/supremecourt/imgs1.aspx?filename=1194)
வகுப்புவாரி இடஒதுக்கீட்டு உரிமைச் சட்டம் செல்லாது
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 15வது விதி மற்றும் 29(2)வது விதிஎன சில அடிப்படை உரிமைப் பிரிவுகள் சிலவற்றைச் சுட்டிக்காட்டி, "வகுப்புவாரி உரிமைச் சட்டம் ஆணை" சமத்துவத்திற்கு எதிரானது என்கிற வாதத்தை ஏற்று, விண்ணப்பிக்கிற தகுதியில்லாத பெண் விண்ணப்பிக்காத இடத்திற்காகப் போடப்பட்ட வழக்கில் தான் வகுப்புவாரி இடஒதுக்கீட்டு உரிமைச் சட்டம் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பைத் துணையாகக் கொண்டு,வகுப்புவாரி உத்தரவை அமல்படுத்துவது இந்திய அரசியல் சட்டத்திற்கு முரணானது; ஆதலால், அதனை அமல்படுத்தக்கூடாது என இந்திய ஒன்றிய அரசு 1950 செப்டம்பர் மாதம் மாகாண அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.
சென்னை மாகாணமே கொதித்தெழுந்தது
உயர்சாதியினரால் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்கள் சமுதாயத்தினரும் கல்வி-வேலைவாய்ப்பில் பயன்பெறும் வகையில் 1928 முதல் 1950 வரை நடைமுறையிலிருந்த சட்டம் செல்லாது என சென்னை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததால், அன்றைய சென்னை மாகாணமே கொதித்தெழுந்தது - பெரியார் தலைமையிலான தி.க, அண்ணா தலைமையிலான திமுக தனித்தனியே போராட்டக் களம் கண்டன. கட்சி வேறுபாடுகளின்றி மக்கள் அனைவரும் பெரியாருக்கு ஆதரவு தந்தார்கள். காங்கிரஸ் இயக்கத்தில் ஒரு பிரிவினரும்கூட இந்த நியாயமான கோரிக்கைக்கு மறைமுகமான நல்லாதரவு காட்டினர்.
14.08.1950 அன்று சென்னை மாகாணம் முழுவதிலும் முழுவதிலும் உள்ள கம்யூனல் ஜி.ஓ. காக்க மாணவர்கள் களத்தில் இறங்கினர். கல்வி, அரசியல் உத்தியோகங்களில் பின்தங்கிய மக்களுக்கு ஜனத்தொகை விகிதாச்சாரப்படி இடஒதுக்கீடு செய்யும் வகையில், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு இடமளித்து அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும்' என்ற பெரியாரின் தீர்மானத்தை மாணவர்கள் மக்களில் முன்னிலையில் நிறைவேற்றினார்.
வகுப்புரிமை நாள் கொண்டாடுங்கள்
சமூக நீதிக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை எதிர்த்து நாடெங்கும் 14.09.1950 அன்று வகுப்புரிமை நாள் கொண்டாடுங்கள்! என தந்தை பெரியார் வேண்டுகோள் விடுத்தார். மாணவர்களும், இளைஞர்களும், பொது மக்களும் கட்சி வேறுபாடின்றி, அரசியல் சட்டம் ஒழிக! வகுப்புவாரி உரிமை வேண்டும்! என்ற முழக்கத்தை கைக்கொண்டனர்.
மாட்டை விடு இல்லையென்றால் நாட்டை கொடு என 2017 ஆம் ஆண்டு சென்னை மரினாவில் எழுந்த அதே குரல் தான் அப்பொழுதும் எழுந்தது. ஆனால் அது அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் அல்லது அரசியல் சட்டம் ஒழிய வேண்டும்' என வேறுவிதமாக ஒலித்தது. வகுப்புவாரி இடஒதுக்கீட்டு உரிமைச் சட்டம் செல்லாது என அறிவித்த இந்திய ஒன்றிய அரசின் அமைச்சர்கள் சென்னை மாகாணத்திற்கு வரும்போது கறுப்புக்கொடி காட்டி நம் வெறுப்பை,எதிர்ப்பை தமிழக மக்களும் உணர்த்தினர். டெல்லி அரசாங்கத்திற்கு புதுதலைவலியாக அது மாறி நின்றது.
திருச்சியில் கம்யூனல் ஜி.ஓ மாநாடு
வேலைவாய்ப்பில் மட்டுமே ஒதுக்கீடு என்பதை எதிர்த்து அனைத்துக் கட்சியிலும் உள்ள வகுப்புவாரி உரிமை ஆதரவாளர்களின் ஆதரவையும் சேர்த்து தமிழ்நாட்டின் திருச்சியில் 1950 டிசம்பர் முதல் தேதியன்று பெரியார் கூட்டி கம்யூனல் ஜி.ஓ. மாநாடு நடத்தினார். அதில் எங்காளுங்களுக்கு வேலைவாய்ப்புக்கு இட ஒதுக்கீடு கொடுத்துட்ட, ஆனா, எங்காளு இன்னும் படிக்கவே இல்லையே, பிறகு எப்பிடி வேலை வாய்ப்புக்குப் போய் நிப்பான்? என்று அவர் டெல்லி அரசாங்கத்தை பார்த்து கேட்டார்.
கிட்டதட்ட விடுதலை - திராவிடநாடு - தினத்தந்தி உள்ளிட்ட 150 மேற்பட்ட பத்திரிக்கைகள் மக்களிடம் போராட்டச் செய்தியை கொண்டு சேர்த்தன.
இந்தத் தீர்ப்பால் மக்களுக்கு ஏற்பட இருக்கிற ஆபத்தை உணர்த்துகிற வகையில், அறிஞர் அண்ணா அப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு பொன் விலங்கு' என்ற தலைப்பில், 30 ஆண்டுகளாக நாடு முழுவதும் நல்லறிவாளர்கள் பேசிப் பேசி ஆதரவு திரட்டினர். அந்த வகுப்புவாரி முறை, இதோ சட்ட விரோதம் என்று ஆகிவிட்டது அமைச்சர்களே என்ன செய்யப்போகிறீர்கள்? சமூக நீதியைக் காக்கப் போரிடப் போகிறீர்களா? அல்லது சந்துபொந்து தேடி அலையப்போகிறீர் களா? நேர்மையாளர்களே! நாட்டுத் தலைவர்களே! நிலைமையைக் கவனியுங்கள். எதிர்கால வேலைத் திட்டம் என்ன? என்று உரிமைக் குரல் எழுப்பியிருந்தார் அண்ணா.
முதல் சட்டத் திருத்தம் - 2.6.1951
எல்லோரின் இலக்கும் ஒன்றாகவே இருந்ததால், போராட்டம் வெற்றிப்பாதையை நோக்கி வீர நடையைப்போட்டது. எழுந்த எழுச்சியின் தாக்கம் குறித்து டெல்லியில் பிரதமர் ஜவகர்லால் நேருவிடம் பெருந்தலைவர் காமராசர் எடுத்துக் கூறினார். இதனையடுத்து, வகுப்புவாரி இடஒதுக்கீட்டு உரிமை பாதுகாக்கப்படும் வகையில் இந்திய நாடாளுமன்றத்தில் 2.6.1951 அன்று இந்திய அரசியல் சட்டத்தில் 15வது விதியின் உட்பிரிவாகச் சேர்த்து முதல் திருத்தம் செய்யப்பட்டது. சென்னை மாகாணத்தில் நடந்த நிகழ்வுகள்...
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 15வது விதியின் உட்பிரிவாகச் சேர்க்கப்பட்டது. அதன்படி, "குடிமக்கள் சமுகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய மக்களுக்கும் அல்லது தாழ்த்தப்பட்ட மற்றும் மலைசாதி மக்களுக்கும் அவர்களின் முன்னேற்றங்கருதி, மாகாண (மாநில) அரசாங்கம் தனிச்சலுகை வழங்குவதாகச் செய்யும் எந்த தனி ஏற்பாட்டையும் இந்த 15வது விதியின் ஒரு பிரிவோ அல்லது விதி 29-ன் 2-வது உட்பிரிவோ தடை செய்யாது தடை செய்யாது" என்ற திருத்தம் செய்யப்பட்டது. சட்டத் திருத்தம் ஏன் வருகிறது என நேரு அறிமுக உரையாற்றும் போது, சென்னை மாகாணத்தில் நடந்த நிகழ்வுகள் (In Madras Provinance) இந்தச் சட்டத் திருத்தத்தைச் செய்ய வலியுறுத்தச் செய்கிறது எனக் கூறி தமிழக மக்களின் போராட்டத்தைப் பதிவு செய்தார் ! முதல் திருத்தத்தின் மூவர்
அண்ணல் அம்பேத்கர் தலைமையில் உருவான அரசியல் அமைப்புச் சட்டத்தில், அவசியமான இந்த முதல் திருத்தம் அவர் வாழ்ந்த காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டு, 18.6.1951 அன்று குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற்று நடைமுறை செய்யப்பட்டது. இந்த வரலாறு தமிழ்நாட்டிற்கு மட்டுமே உரியது. முதல் திருத்தத்தின் மூவர்' பெரியார் அண்ணா - காமராஜர் !
இதுவரை 101 முறை திருத்தம் பெற்ற, வெள்ளையர் வெளியேறிய சுதந்திரத்தின் பின் அமைக்கப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தின் முதல் திருத்ததிற்கு தமிழ்நாடும் அதன் சமூக விழிப்புணர்வால் எழுந்த அரசியல் எழுச்சியே காரணமாய் இருந்தது.
அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பெற்ற முதல் திருத்தத்துக்குப் பிறகு, பி.எஸ். குமாரசாமி ராஜா (6 ஏப்ரல் 1949 - 26 ஜனவரி 1950) தலைமையில் இயங்கிய காங்கிரஸ் அரசு, உத்தியோகங்களிலும், கல்வி நிலையங்களிலும் பிற்பட்ட வகுப்பினருக்கு 25% தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஜனத்தொகை விகிதாச்சாரப்படி 15% மொத்தம் 41% இட ஒதுக்கீடு செய்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தரவை மீண்டும் புதிதாகப் பிறப்பித்துச் செயல்படுத்தியது.
'சுதந்திர இந்தியாவிலும்' தொடர்ந்த அதே வர்ணாஸ்ரமம்
இந்தியா மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம் (1948 Census of India Act) கீழ் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு நடைபெற்ற இது முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1951 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.
ஒரு குறிப்பிட்ட வர்ணாஸ்ரம உயர் சாதியினரின் ஆதிக்கம் 'சுதந்திர இந்தியாவிலும்' சுதந்திரமாகத் தொடர்ந்தது. 1951ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 3.5 % மட்டுமே இருந்த பிராமணர்கள், நிதி, நீதி, நிர்வாகத் துறைகளில் 50 % மேலாக இருந்தனர். அக்கால கட்டத்தின் ஒரு சிறிய புள்ளி விவரத்தைப் பாருங்கள்.
இந்தியா முழுவதும் இருந்த அரசுச் செயலர், துணைச் செயலர் பதவிகள் 506. அவற்றுள் 351 பேர் பிராமணர்கள். உச்ச நீதி மன்ற 16 நீதிபதிகளில் 9 பேர் பிராமணர்கள். 140 வெளிநாட்டுத் தூதுவர்களில் 68 பேர் பிராமணர்கள். இந்தியாவின் மொத்தம் 3500 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 2376 பேர் பிராமணர்கள். ஆளுநர்களாக இருந்த 27 பேரில் 13 பேர் பிராமணர்கள்.
இந்நிலைமை ஒரு நாட்டை எங்கு கொண்டு போய்ச் சேர்க்கும்? இது எவ்வளவு பெரிய சமூக அநீதி? இந்தியத் துணைக்கண்டமெங்கும் இந்த முணுமுணுப்புகள் கேட்கத் தொடங்கின. பிறகு அவை முழக்கங்களாக மாறத் தொடங்கின.
இதன் பின்னர் பார்ப்பனரல்லாத மக்களின் விடிவிற்காக தன்னுடைய கனவு இன்னும் நிறைவடையாததை உணர்ந்த பெரியார், 'தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போல, பிராமணர் அல்லாத மற்ற மக்கள் அனைவருக்கும் ஜனத்தொகையின் அடிப்படையில் விகிதாச்சாரப்படி கல்வி மற்றும் உத்தியோகத் துறைகளில் அரசியல் சட்டரீதியாக இடஒதுக்கீடு செய்துதர வேண்டும்' என்று கூறி போராட்டத்தை மீண்டும் தொடங்கினார்.
பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு முறை!
1951 முதல் சட்டத் திருத்தம் வந்த போதே, அதில் Socially and educationally (சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்) பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சொல்லைச் சேர்த்தனர். விவாதத்தில் Socially and educationally என்பதோடு Economically (பொருளாதாரத்திலும்) எனவும் சேர்க்க வேண்டும் என தற்பொழுதைய பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஜனசங் கட்சியை தொடங்கியவரான எஸ்.பி.முகர்ஜீ வலியுறுத்த, அதற்கான ஆதாரப்பூர்வ மறுப்பை டாக்டர் அம்பேத்கார் அவர்கள் கூற பின்னர் பெரும்பான்மையான உறுப்பினர்களும், நேருவும் அவ்வாறு Economically என்ற பதத்தை இணைக்க மறுத்தனர். திருத்தம் அரசியல் நிர்ணயசபையில் வாக்கெடுப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட Economically (பொருளாதாரத்திலும்) என்பதை சேர்க்கக் கூடாது என 234 பேரும் வாக்களித்தனர்.
காமராஜரின் மதிய உணவுத் திட்டமும் சமூகநீதியும்
1955 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி சென்னை பூங்கா நகர் மெமோரியல் மண்டபத்தில், நடைபெற்ற சென்னை மாகாண தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மாநாட்டில் கல்வித்துறை இயக்குனர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் ஏழைக்குழந்தைகள் அனைவருக்கும் பள்ளிக்கூடத்தில் மாலை நேரத்தில் இலவச மதிய உணவு வழங்குவது பற்றி அப்பொழுதைய முதல்வர் காமராஜரிடம் ஆலோசிக்க அதுவே தமிழ்நாட்டின் கல்விச் சூழலை விரிவுப்படுத்திய மேம்படுத்திய மதிய உணவுத் திட்டமாக மாறியது. உலகளாவிய புதுமை திட்டமான மாணவர்களுக்கு வழங்க அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவு திட்டமானது சமூகநீதியின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் கல்வியறிவு பெற்ற இளம் பெண்களின் விகிதமானது உயர்ந்ததற்கான ஒரு காரணமாக இருந்தது என்கிறது சமீபத்திய thewire நடத்திய ஆய்வு
(https://sempiyanwritings.blogspot.com/2018/08/blog-post_27.html)
பாரதியார் பிறந்த எட்டையபுரத்தில், முதன் முதலாக மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் காமராஜர் கூறியதாவது: "அன்னதானம் நமக்குப் புதிதல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு அளித்தோம். இப்போது பள்ளிக்கூடத்தைத் தேடிச்சென்று சோறு போடுகிறோம். இதன் மூலம் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுத்த புண்ணியம் இரண்டும் சேரும். எல்லோருக்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட, எனக்கு முக்கியமான வேலை வேறு இல்லை. எனவே, மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஊர்வலமாக வந்து பகல் உணவு திட்டத்திற்கு ஒவ்வொருவரிடமும் பிச்சை எடுக்கச் சித்தமாக இருக்கிறேன்." என்றார் .
காகா கலேல்கர் குழு (முதல் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன்)
சமூக நீதிக்காக தமிழகத்தில் எழுந்த போராட்டத்தின் விளைவாக பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு தரலாம் என்ற சட்டத்திருத்தம் அளித்த பண்டிதர் நேருவின் அமைச்சரவை அத்தோடு யாருக்கெல்லாம் இடஒதுக்கீடு தரலாம் என ஆய்வு செய்ய அரசியல் சட்ட பிரிவு 340 படி அப்போது எம்.பி.யாக இருந்த காகா கலேல்கர் என்பவர் தலைமையில் குடியரசுத் தலைவரால் நிறுவப்பட்ட ஒரு குழுவை அமைத்தது அரசு !
முதல் பிற்படுத்தப்பட்டோர் கமிஷனாக அறியப்படும் காகா கலேகர் குழு 1953 ஆம் ஆண்டில் தொடங்கிய தன்னுடைய ஆய்வை மூன்று ஆண்டுகள் கழித்து 1955 மார்ச் 30 ஆம் தேதியில் அறிக்கையாக அமைச்சரவைக்கு அளித்தது.
இந்தியா முழுவதும் சுற்றிய முதல் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் நேரடியாக 182 வினாக்கள் அடங்கிய வினாத்தாளைக் கொடுத்துத் தகவல்களைத் திரட்டியது. இத்தகவல்களின் அடிப்படையில்,
1. இந்தியா முழுக்க 2,399 சாதிகளை பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளன என்றும், 830 சாதிகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளன எனவும் அடையாளம் காட்டியது 2. பிற்படுத்தப்பட்ட/ மிகவும் பிற்படுத்தப்பட்ட இந்த சாதியினர் முன்னேற நிலச்சீர்திருத்தம், வயது வந்தோர் கல்வி, அரசு வேலைவாய்ப்பு உட்பட பல காரியங்களைச் செய்தாக வேண்டும் 3. எல்லா கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 70 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் 4. வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் 5. இந்து சமூகத்தில் பாரம்பரியமாக நடந்து வரும் சாதிய முறையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பிற்படுத்தப்பட்ட தன்மையை மதிப்பிட வேண்டும் 6. பெண்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் 7. அரசுப்பணிகளில் ஒவ்வொன்றாக சொல்லும் போது 40, 33.3, 25 என்று குறைக்க வேண்டும் - 8. 1961 ஆம் ஆண்டு எடுக்கப்படவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக எடுக்க வேண்டும் என பரிந்துரைத்தது.
இப்படியாக அறிக்கையை எழுதிவிட்டு அறிக்கையில் கையெழுத்தும் போட்டுவிட்டு அதை அரசுக்கு அனுப்பும் போது குடியரசுத் தலைவருக்கு கூடவே ஒரு தனிப்பட்ட கடிதம் ஒன்றையும் வைத்து அதிலே பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தை ஏற்றுக்கொண்டு அறிக்கையில் எழுதியிருக்கிறேன். ஆனால் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தருவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. என அனுப்பிய இக்குழுவிற்கு தலைமை தாங்கி இரண்டு ஆண்டுகள் ஆய்வு செய்த காகா கலேல்கர் எப்படிப்பட்ட நேர்மையாளர் ? என்று நீங்களே பாருங்கள்.
இந்த முதல் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் அளித்த அறிக்கையானது, சாதிப் பிளவை அதிகரிக்கும் என கூறி (உயர்சாதியினர் நிறைந்த) அரசியல் சட்ட நிபுணர்களாலும் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் புறக்கணிக்கப்பட்டது.
(அந்த முழு அறிக்கையை இங்கே காணலாம்: https://dspace.gipe.ac.in/xmlui/bitstream/handle/10973/33678/GIPE-058127-Contents.pdf?sequence=3&isAllowed=y - https://en.wikipedia.org/wiki/Kalelkar_Commission )
பண்டிதர் நேரு கைப்பட எழுதிய Demi-Official
2.6.1951 அன்று இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்ட போது 'திருத்தம் ஏன் வருகிறது? ' என அறிமுக உரையாற்றும் போது தன்னை ஒரு நாத்தீகன் என்றும் சோஷலிஸ்ட் என்றும் சொல்லிக் கொண்ட நேரு, இட ஒதுக்கீட்டை, பொருளாதார ரீதியாக எனச் சேர்க்கக் கூடாது என்று சொன்ன அதே நேரு அவர்கள் 1961ஆம் ஆண்டில் அனைத்து மாநில அரசுகளுக்கும் தன் கைப்பட ஓரு கடிதம் (Demi-Official) எழுதினார். இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பேக்வார்ட் கிளாஸ் என்று சொல்கிற போது முடிந்தவரை பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்குக் கொடுங்கள், சாதி ரீதியாகக் கொடுப்பதை நான் விரும்பவில்லை.! என்பதே அக்கடிதம்.
"வெளிப்பகட்டிற்கு புரட்சியாளனாகவும் உள்ளே பார்ப்பனனாகவும் வாழ்ந்தவர் நேரு" என்று பெரியார் சொல்லுவார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
1960 ஆம் ஆண்டில் ஆந்திர முதல்வர் நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்களின் தலைமையிலான 66%-க்கு இட ஒதுக்கீட்டை விரிவுப்படுத்தியது. 1963-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு எப்போதும் 50% விழுக்காட்டுக்கு மேல் போகக்கூடாதென தீர்ப்பளிக்கும் வரை அது நடைமுறையில் இருந்தது.
28 செப்டம்பர் 1962 எம்.ஆர். பாலாஜி Vs State Of Mysore
(இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகளில் மிக முக்கியமான வழக்காக இந்த வழக்கு இன்று வரையிலும் கருதப்படுகிறது.)
(கோல்ஹாபூர் சமஸ்தானத்தில் நூற்றுக்கு 50 இடங்கள் பார்ப்பனர் அல்லாதாருக்கு என்று ஆணையிட்டு முதன்முதலாக இடஒதுக்கீடு கொண்டு வந்த சாகுமகாராஜ் - சென்னை மாகாணத்தில் பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தை முன்னின்று வழிநடத்தியவரான டி.எம். நாயர் - பார்ப்பனர் அல்லாதார் எல்லோரும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ( பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சிறுபான்மையினருக்கும் சேர்த்தே) என்று ஆய்வு செய்து 75 விழுக்காட்டு இடங்களை இட ஒதுக்கீடாக அளித்த பாரிஸ்டர் கிருஷ்ணராஜ உடையார் ஆகிய இந்த மூவரும் இலண்டனில் ஒன்றாக படித்தவர்கள். ஒன்றாக இருந்தவர்கள், ஒன்றாக சிந்தித்தவர்கள், ஒத்த சிந்தனையுள்ளவர்களாக இந்தியாவிற்கு வந்தவர்கள் பின்பு மூன்று பகுதிகளில் இந்த இடஒதுக்கீடு புரட்சியைத் தொடங்கியவர்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.)
பாரிஸ்டர் பட்டம் பெற்ற மைசூர் அரசர் கிருஷ்ணராஜ உடையார் ஆட்சியில் இருந்த பொழுது ( 1894-1940 ) யார் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்று அறிய ஒரு பட்டியல் எடுக்க மைசூர் அரசின் தலைமை நீதிபதி ஆங்கிலேயர் லெஸ்லீ மில்லர் என்பவர் தலைமையில் ஒரு ஆய்வுக் குழுவை நியமித்து பரிந்துரைகளை பெறுகிறார். அந்தக் குழுவோ ஆய்வு செய்து அளித்த பரிந்துரையில் பார்ப்பனர் அல்லாதார் எல்லோரும் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்று கூறுகிறது. அதன்படி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சிறுபான்மையினருக்கு 75 விழுக்காட்டு இடங்களை இட ஒதுக்கீடு செய்து மைசூர் அரசர் உத்தரவிடுகிறார். பின்பு அது படிப்படியாக 68% - 65% - 60% ஆக மாறி 1962 ஆம் ஆண்டில் 68 % ஆக இருந்த போது 1962 ஆம் ஆண்டு இதனை எதிர்த்து எம்.ஆர் பாலாஜி என்பவர் இத்தனை % இடஒதுக்கீடு கொடுத்தால் தகுதி, திறமை எல்லாமே போய்விடும் என உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் வழக்குரைஞர் எஸ்.கே.வேங்கடரண்யா அய்யங்கார் என்பவர் எம்.ஆர்.பாலாஜி சார்பாக வழக்குரைஞராக வழக்காட மூத்த நீதிபதி பீ.பி.கஜேந்திர கட்கார் தலைமையிலான சின்ஹா - புவ்னேஷ்வர்.பி, வாஞ்சூ கே.என், கே.சி.தாஸ், குப்தா, ஷா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் சாதிவாரியான மக்கட்தொகை கணக்கெடுப்பு போன்ற அறிவியல் அடிப்படை என எதையும் கருத்தில் கொள்ளாமல் இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்கு மேல் இருக்கக்கூடாது எனத் தீர்ப்பு வழங்கியது. அதற்குப் பின் வந்த பல நீதிபதிகள் 50% என்பது தவறு என்று கூறிவிட்டார்கள். ஆனாலும் 5 பேர் கொண்ட அமர்வு சொன்னாத் தீர்ப்புத்தான் வழக்குகளின் பொதுவான எடுத்துக்காட்டாக இருக்கிறது. (எம்.ஆர் பாலாஜி Vs State Of Mysore வழக்கின் தீர்ப்பின் முழுவிவரமறிய
https://en.wikipedia.org/wiki/Court_Cases_Related_to_Reservation_in_India - https://indiankanoon.org/doc/599701/ )
*தி.மு.க ஆட்சியில்*
இதற்கிடையே தமிழ்நாட்டில் 1967 ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி.மு.க. இந்திய துணைக்கண்டத்திலேயே தேசிய கட்சியை ஓரங்கட்டி அமைக்கப்பட்ட முதல் மாநில கட்சியாக அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கிறது. பிற்படுத்தப்பட்டோரின் ஆட்சியாக அது பரிணமித்தது. எதிர்பாராதவிதமாக பேரறிஞர் அண்ணா மறைந்திட அவருக்கு பின் அமைந்த மு.கருணாநிதி அரசாங்கம் தான் பிற்படுத்தப்பட்டோருக்கான தனி அமைச்சர் - அமைச்சகத்தை இந்தியாவிலேயே முதலில் உருவாக்கியது.
முன்னாள் சென்னை மாகாண முதல்வர் காமராசர் ஆட்சிக்காலத்தில் பொதுப்பட்டியல் - 59%, பிற்படுத்தப்பட்டோர் - 25%, தாழ்த்தப்பட்டோர் - 16% என்று இருந்ததை 1971 ஆம் ஆண்டில் ஏ.என்.சட்டநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் தந்த பரிந்துரையின்படி பொதுப்பட்டியலை (59-8) 51% என குறைத்து, பிற்படுத்தப்பட்டோருக்கு (25%+6%) 31% என்றும் தாழ்த்தப்பட்டோருக்கு (17%+1%) 18% என்றும் உயர்த்தி புதிய இட ஒதுக்கீடு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலமாக இட ஒதுக்கீட்டை 49% ஆக்கினார். ஆனால் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் ஆட்சியில் பொதுப்பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சாதிகளில் முப்பது விழுக்காட்டினரை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கொண்டு வந்து இணைத்து போடப்பட்ட ஓர் ஆணை, இடஒதுக்கீட்டின் அடிப்படைக்கு அறமாக அமைந்ததையே கேலிக்குள்ளாக்கி உண்மையிலேயே பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு அநீதி இழைத்துவிட்டதென விமர்சிக்கப்பட்டது.
(பெரியார் கலைஞரிடம்,50 சதவீதத்துக்கு மேல் தானே போகக் கூடாது; 49 சதவீத அளவுக்கு உயர்த்துங்கள் என்று ஆலோசனை கூறினார். அதேபோல் கலைஞர் இடஒதுக்கீட்டை 49 சதவீதமாக உயர்த்தினார்.)
N.M.தாமஸ் vs கேரள அரசு (1976)
ஆயினும் N.M.தாமஸ் vs கேரள அரசு (1976) வழக்கில்ஒரு மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிக அதிகமாக, மக்கள் தொகையில் 80% அளவிற்கு இருந்தால், அவர்களுக்குச் சரியான பிரதிநிதித்துவம் வழங்க 80% வேலைவாய்ப்பை அரசு ஒதுக்கீடு செய்தால், அரசின் அச்செயல்பாடு முறையானது அல்ல என சொல்ல முடியுமா? இது அரசியல் சட்டம் 16(4) பிரிவை மீறியதாகுமா?" என்று எழுப்பிய கேள்விக்கு
நீதிபதி மூர்டுஸ்சா பசல் அலி அவர்கள் , "நிச்சயமாக இல்லையென்ற பதில்தான் இருக்க முடியும்." என்று தீர்ப்பளித்தார் (AIR 1976, SC 490). இந்த தீர்ப்பின் பலத்தில்தான் மற்றைய மாநில அரசுகள் 50%க்கும் மேல் இட ஒதுக்கீட்டளவை அதிகரிக்க முடிந்தது.
*எம்.ஜி.ஆர் ஆட்சியில்*
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு தற்பொழுதுள்ள தகுதி (வருமான வரம்பு) காரணமாக அத்தகுதியுள்ள போதிய நபர்களுக்கு பணிகள் கிடைக்காமல் இருக்குமானால், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்கள் காலாவதி ஆகிவிடும் என்று கூறி கம்யூனல் ஜி.ஒவை பொருளாதார அடிப்படையிலான எக்னாமிக் ஜி.ஒவாக ஆணையாக மாற்றும் ஒரு புதிய ஆணையை 1979 ஆம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்த அஇஅதிமுக தலைமையிலான எம்ஜிஆர் அரசு அறிவித்தது.
சமூக நீதியின் அடிப்படையில் அதுவரை இருந்துவந்த "கம்யூனல் ஜி.ஒவை பொருளாதார அடிப்படையிலான "எக்னாமிக் ஜி.ஒ"வாக மாற்றிய இட ஒதுக்கீட்டு ஆணையை தி.மு.க, தி.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய அரசியல் கட்சிகள் ஓரணியில் நின்று இதனை கடுமையாக எதிர்த்தன. காங்கிரஸ் தலைவர் களும் இப்போராட்டத்தில் கை கொடுத்தனர்.
(1971 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அமைத்த சட்டநாதன் ஆணைய தந்த பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் வருமான வரம்பு விதிக்கலாம் என்ற பரிந்துரையை சிலரது தவறான ஆலோசனையின் காரணமாக எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைக் கொண்டுவர முடிவு செய்தது. 9,000 ரூபாய் வருமான வரம்பு உத்தரவைப் பிறப்பித்து இருந்தது கவனிக்கத்தக்கதாகும்)
பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் வழக்குத் தொடர்ந்தன. ஆனால், நீதிமன்றமோ அந்த வழக்கை தள்ளுபடி செய்து எம்.ஜி.ஆர் வழங்கிய இட ஒதுக்கீடு சரி தான் என்று தீர்ப்பளித்தது.
(இதனிடையே 1980 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க படுதோல்வியை சந்தித்தது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சிறுபான்மை மக்களின் உரிமைக்காக கொண்டுவரப்பட்ட சமூக ரீதியிலான இடஒதுக்கீட்டில் கைவைத்ததே தோல்விக்கு முதல் காரணம் என்று அ.இ.அ.தி.மு.க.வின் மூத்தத் தலைவர்கள் எம்.ஜி.ஆரிடம் சொன்னதை அவரும் உணர்ந்தார்.)
நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து, தேர்தல் முடிந்த இரு வாரங்களுக்குள் அதாவது 20.01.1980 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டிய எம்.ஜி.ஆர். அதில் விவாதிக்கப்பட்ட அம்சங்களின் அடிப்படையில், 24.01.1980 அன்று இரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் முதலாவதாக பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டது. இரண்டாவதாக தமிழகத்தில் இடஒதுக்கீட்டின் அளவு 68 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 31 விழுக்காட்டிலிருந்து 50 % என உயர்த்தப்பட்டது.
ஒவ்வொரு கிராமத்திலும், ஏதோ ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பரம்பரை பரம்பரையாக கிராம நிர்வாகத்தை கவனித்துவரும் முறையை ஒழித்து, கிராம நிர்வாக அலுவலர் என்கிற பதவியை ஏற்படுத்தி அதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். இதன் மூலம், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கிராம நிர்வாக அலுவலராக வரக்கூடிய சூழல் உருவானது என்பது மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு செயலாகும்.
1980 ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டவருக்கான இட ஒதுக்கீட்டை எம்.ஜி.ஆர். அரசாங்கம் 31% விழுக்காட்டிலிருந்து 50% உயர்த்தி இருந்தாலும் அதே நேரத்தில் எம்.ஜி.ஆர் அரசாங்கமும் பொதுப்பட்டியலில் இருந்த உயர்சாதிக்காரர்களில் 5% விழுக்காட்டினரைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்துவிட்டது. இதனால் உண்மையிலேயே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பெரிதும் பின்னடைவு ஏற்படும் என்ற கருத்து பரவலாக எழுந்தது.
பி.பி. மண்டல் குழு (இரண்டாம் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன்)
1953 ஆம் ஆண்டு காகா கலேல்கர் குழு அமைக்கப்பட்டு அக்குழு தந்த பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டு கிடப்பில் போட்ட நேரு அவர்களின் அமைச்சரவை அதன் பிறகு வந்த குல்சாரிலால் நந்தா - லால் பகதூர் சாஸ்திரி - இந்திரா காந்தி ஆகிய மூவரின் அமைச்சரவைகள்) பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்ன உதவிகள் செய்யலாம் என்பதைப்பற்றி ஆய்வதற்கு அடுத்த குழு அமைக்க எவ்விதமான முன்னெடுப்புகளையும் செய்யவே இல்லை.
இந்நிலையில் அம்மையார் இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலை நெருக்கடி காலக்கட்டத்திற்கு பிறகு 1978 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றும் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களின் அமைச்சரவையின் உள்துறை அமைச்சராக இருந்த திரு. சரண்சிங் அவர்களால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340 பிரிவிற்கிணங்க பீகார் மாநிலத்திற்கான மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நீதியரசர். பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் (பி.பி.மண்டல்) அவர்களை தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட சமூக உரிமைகள் ஆணையம் நியமிக்கபடுகிறது. (இந்த சரண்சிங் தான் மாகாணத்திற்கு ஒரு பெரியார் வேண்டும் என்ற நூலை எழுதியவர்)
இந்தக் குழுவானது, சமூக மற்றும் கல்வி அடைப்படையில் பிற்படுத்தப்பட்டோரை அடையாளம் காண்பதுடன் சாதிப் பாகுபாட்டை களையும் பொருட்டு மக்களுக்கான இட ஒதுக்கீடு பற்றிய கேள்விகளை கருத்தில் கொண்டு "சமூக ரீதியாக - கல்வி ரீதியாக - பொருளாதார ரீதியாக" மூன்று பெரும் தலைப்பின் கீழ் பதினொரு வரைகூறுகளை ஏற்றுக் கொண்டது.
மூன்று அடிப்படை காரணிகள்
சமூக அடிப்படைக் காரணிகள்: 1.சாதி, 2.குடும்பம், 3.திருமணம், 4.பெண்கள் உழைப்பு. 17 வயதிற்குக் கீழ் திருமணமாகிற பெண்கள் - அது கிராமத்தில் % எத்தனை இருந்தால், நகரத்தில் எத்தனை % இருந்தால் என்று விழுக்காடு கணக்கு எடுத்தார்.
25 % மாநில சராசரிக்கு அதிகமாக திருமணம் செய்பவர் - நகரமாக இருந்தால் 10 % அதிகம் திருமணம் செய்த சாதிகள் என்று பிரிக்கிறார். உடலுழைப்பை 50 % அதிகமாக செய்கிற சாதிகளை பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்று சொல்கிறார். (நான்கு வகையாகப் போட்டு அது ஒவ்வொன்றுக்கும் 3 மதிப்பெண்கள் போடுகிறார்.)
கல்வி அடிப்படைக் காரணிகள்: 1. எந்த சாதியினர் 5-15 வயது வரை பள்ளிக்கு செல்லாதவர்கள் மாநில படிப்பறிவற்றவர்கள் சராசரியை விட 25% அதிகம் உள்ள சாதியினர். 2. எந்த சாதியினர் 5-15 வயது வரை Drop-Outs பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டவர்கள், இதில் மாநில சராசரியை விட 25% அதிகம் உள்ள சாதியினர். 3. எந்த சாதியில் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் மாநில சராசரியை விட 25% குறைவாக உள்ள சாதியினர். (மூன்று வகையாகப் போட்டு அது ஒவ்வொன்றுக்கும் 2 மதிப்பெண்கள் போடுகிறார்.)
பொருளாதார அடிப்படைக் காரணிகள்: 1. எந்த சாதியில் மாநில சராசரிக் குடும்ப சொத்தை விட 25% குறைவாக குடும்பச் சொத்து வைத்துள்ளனரோ அவர்கள். 2. எந்த சாதியில் குடிசையில் வசிப்போர் மாநில குடிசைவாசிகளின் சராசரியை விட 25% அதிகமாக உள்ளனரோ அவர்கள். 3. எந்த சாதியில் அரை கிலோமீட்டருக்கு மேல் நடந்து சென்று குடிநீர் எடுப்பவர்கள் 50% உள்ளனரோ அவர்கள். 4. எந்த சாதியில் நுகர்கடன் வாங்குவோர் மாநில சராசரியை விட 25% அதிகமாக உள்ளனரோ அவர்கள். 5. மாநிலத்தில் கடனை மாநில சராசரிக்கு மேல் பெற்றிருக்கிற குடும்பங்கள்.
ஆய்வு நடத்திய முறை :
* அந்தக் குழு உட்கார்ந்த இடத்திலிருந்து ஆய்வு செய்யவில்லை. இந்தியாவில் அப்பொழுதிருந்த 406 மாவட்டங்களில் 405 மாவட்டங்களில் போய் அவர்கள் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தினார். (பெரும் மழை காரணமாக அஸாமில் இருந்த ஒரே ஒரு மாவட்டத்திற்கு போகமுடியவில்லை.)
* பேரா.எம்.என்.சீனிவாஸ் அவர்கள் தலைமையில் 15 மானுடவியல் அறிஞர்கள் அடங்கிய குழு அமைத்து நாடு முழுவதும் சமூக, கல்வி நிலை பற்றி கணினி கள வழியான ஆய்வு செய்து கருத்துக்களை கேட்டார்கள்.
* மத்திய அரசின் டாடா நிறுவனம், டெல்லி பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பிரிவு போன்ற அமைப்புகளை வைத்து ஆய்வு செய்து அறிக்கையை அறிவியல் பூர்வமாக பட்டியலிட்டார்.
* இந்திய மானுடவியல் அளவை மையம், கல்கத்தா, உதவியுடன் கிராமங்களில் ஆய்வு செய்யப்பட்டு சமூக, பொருளாதார வாழ்வு பற்றிய செய்திகள் திரட்டப்பட்டன. இது தவிர அகில இந்திய நிறுவனங்களிடமிருந்தும் செய்திகள் சேகரிக்கப்பட்டன.
* இந்திய சட்ட நிறுவனத்தின் உதவியுடன் 20 வருடங்களாக வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகள் பரிசீலிக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டவர்களின் வளர்ச்சி மற்றும் இடஒதுக்கீடு சம்பந்தமான சட்ட நுணுக்கங்கள் கணிக்கப்பட்டன.
இப்படியெல்லாம் கணக்கெடுத்து ஆராய்ச்சி செய்து 22 மதிப்பெண் போட்டு அதில் எந்த சாதி 11 மதிப்பெண்களுக்கு மேலிருக்கிறதோ அந்த சாதிகளை வகைப்படுத்தி எழுதிவிட்டு அந்த சாதியெல்லாம் பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்று இந்த குழு பரிந்துரை தருகிறது.
பி.பி. மண்டல் குழு கொடுத்த ஆறு பரிந்துரைகள்
1. கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு. 2. வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு. 3. கடன் கொடுப்பதில் 27% (தொழிற்பயிற்சிக்கு) இட ஒதுக்கீடு. 4. நில உடமை என்பது இந்த நாட்டில் உற்பத்தி சக்திகள் எல்லாம் ஆதிக்க சாதிகள் கையில் இருப்பதால் தான் இவர்களுக்கு பொருளாதார வளர்ச்சியில்லை, எனவே உற்பத்தி உறவுகளைப் புரட்சிகரமாக மாற்றியமைக்க வேண்டும். (இந்த பரிந்துரையை குறித்து யாரும் பேசுவதே இல்லை) 5. அரசு உதவி பெறும் தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு. 6. மீனவர் போன்ற மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை தாழ்த்தப்பட்ட பட்டியலுக்கு மாற்றியமைத்து அவர்களுக்குத் தனித் தொகுதி ஒதுக்கவேண்டும்.
பிற்படுத்தப்பட்ட மக்கள் தொகை ?
மற்ற பரிந்துரைகளை விட்டுவிட்டு நாம் மீண்டும் கல்வி வேலைவாய்ப்பு துறைகளில் "பிற்படுத்தப்பட்ட மக்கள் இடஒதுக்கீடு" என்ற பக்கம் வருவோம். எல்லா மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து ஆய்வுகள் நடத்தி இப்படியாக யார்யாரெல்லாம் பிற்படுத்தப்பட்ட மக்கள் என வகைப்படுத்தி பட்டியலிட்டு - பிற்படுத்தப்பட்ட மக்கள் எத்தனை பேர் என்றும் பட்டியலிட்ட இந்த குழு இந்துக்களில் 44 % பிற்படுத்தப்பட்டவர்கள்; இஸ்லாமிய, கிருத்துவம், சீக்கியம் போன்ற மதங்களில் இருப்பவர்கள் 8% பிற்படுத்தப்பட்டவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மக்கள் தொகையை கணக்கிட்டு மொத்தம் 52% பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர் என்றது.
*கல்வித்துறையில்*
அனைத்து அரசு மற்றும் கல்வி நிலையங்களின் கணிசமான விகிதத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பின் மூலம் வரும் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றது.
வேலைவாய்ப்புத் துறைகளில் இடஒதுக்கீடுகளை கடந்து பரிந்துரைத்தவைகளில் சில ...
1. பணியுயர்வுகளில் இட ஒதுக்கீடு செய்வது. 2. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு சாதகமான நில சீர்திருத்தங்கள் செய்வது. 3. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தொழில் தொடர்பான தொழில் நுட்ப நிறுவனங்களை திறப்பது. 4. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக்காக அனைத்து அமைச்சகங்களிலும் சிறப்புப் பிரிவு உருவாக்குவது. 5. ஒவ்வொரு 20 வருடங்களுக்கு ஒரு முறை பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக மேற்கொள்ளப்படும் முன்னேற்றத்தை ஆய்வு செய்தல்.
52% இருக்கும் மக்களுக்கு 27% மட்டுமே ஒதுக்கீடா?
பின் ஏன் 52% பிற்படுத்தப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு மத்திய அரசின் கீழ் வரும் அனைத்து பதவிகளிலும் 27 % மட்டுமே பரிந்துரை செய்தது என்ற கேள்வி எழலாம்.
சமூகநீதியை காக்க உழைத்த நீதியரசர் மண்டல் அவர்கள் சமூகம் மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசுப் பணிகள் மற்றும் பொது நிறுவனங்களில் 27 % பரிந்துரை செய்தார் ? என்கிற கேள்வி எழும் பொழுது இந்த நீதிமன்றங்கள் மீண்டும் நமக்கு குறுக்கே வருகின்றன என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
ஈராயிரமாண்டுகளாக தலைமுறை தலைமுறைகளாக ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டு வந்த மக்களுக்கு கிடைத்த முதல் சிறு உரிமையானது வெள்ளையர்கள் ஆட்சியில் தான் நிகழ்ந்தது என்றும் கூட சொல்லலாம். 1943 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ்காரர்கள் தலைமையிலான மத்திய அரசாட்சியில் அண்ணல் அம்பேத்கர் வைசிராய் குழுவில் உறுப்பினரான பின்புதான் தான் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வரலாற்றிலேயே முதல்முதலாக 8.3 % இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வருகிறது. 1950 ஆம் ஆண்டில் இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பொழுது கூட வெறும் 12.5 தான் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இருபது ஆண்டுகள் கழிந்த நிலையில் 1970 ஆம் ஆண்டில் தான் 15 % ஆக மட்டுமே உயர்ந்தது. அறிவியல் முறையில் மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தாலும் பட்டியலின மக்களுக்கு அதிகமாக % இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதே எதார்த்தம். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்த வரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 14%, தாழ்த்தப்பட்டவர்களுக்கு 14% பெரும் போராட்டங்களுக்கு பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கப்பட்டது.
நாடாளுமன்றங்களில் சட்டமன்றங்களில் வழியே இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் 330, 332 என்ற பிரிவுகள் சொல்கிறபடி கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 1980 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் தான் பட்டியலின மக்களுக்கு 15% பழங்குடி மக்களுக்கு 7.5% பரிந்துரை செய்யப்பட்டு மொத்தமாக 22.5 % இடம் பங்கீடு கொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு இருக்கிறது. ஆனால் மத்திய அரசில் இல்லவே இல்லை]
மண்டல் குழு இடஒதுக்கீடு 27%?
எம்.ஆர். பாலாஜி Vs State Of Mysore என்ற வழக்கில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு கூறுவது போல நூறு விழுக்காட்டில் இடஒதுக்கீடு என்பதே வெறும் 50% விழுக்காட்டிற்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற உத்தரவால் மீதமுள்ளது (50% - 22.5%) 27% இருக்கும்படியாக மண்டல் குழு வேறு வழியின்று பரிந்துரை செய்தது.
பிற்படுத்தப்பட்ட மக்கட் தொகை 52 % விழுக்காடு என்பதை ஏற்றுக்கொள்கிற மண்டல் குழு வேறு வழியின்று பரிந்துரை செய்தது. இதனால் எழும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நியாயமான கோபமானதை "மக்கள் தொகை அடிப்படையில் தங்களின் இட ஒதுக்கீட்டு உரிமை பேரம் இன்னலுக்கு பின் போராடி பெற்ற பட்டியலின பழங்குடி மக்களுக்கு எதிராக வர்ணாஸ்ரம உயர்சாதி கும்பல் மாற்றி வருவதை உணர்ந்தால், உணர்ந்து அதை அறிவின் ஆற்றலாக மாறினால் எம்.ஆர். பாலாஜி Vs State Of Mysore என்ற உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பிற்கு பின்னால் உள்ள அரசியல் தந்திரத்தை சூழ்ச்சியை உணரலாம். உண்மையான சமூக நீதி விரோதிகளை அடையலாம் காண முடியும்.
அறிக்கையை புறக்கணிக்க வைத்த அதிகாரம் !
மொரார்ஜி தேசாய் அவர்களின் ஜனதா ஆட்சியில் (1978 ஆம் ஆண்டு) அமைக்கப்பட்டு இடையறாது இரு ஆண்டுகள் அறிவியல் முறைப்படி ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பெற்ற நிலையில் சரண் சிங் அவர்களின் மதசார்பற்ற ஜனதா ஆட்சியில் மண்டல் கமிஷன் தனது அறிக்கை 31.12.1980 அன்று கொடுத்து. மதசார்பற்ற ஜனதா ஆட்சி கவிழ்ந்து அம்மையார் இந்திரா காந்தி அவர்களின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பெற்ற அந்த 5 ஆண்டுகள் மூன்று மாத காலத்திற்குஅறிக்கையை வெளியிடுவதற்கு ஒரு போராட்டம் நடைபெற வேண்டிய சூழல் எற்பட்டது. அம்மையார் இந்திரா காந்தி அவர்களின் மறைவையடுத்து ஆட்சிக்கு அந்த அவரது மகன் ராஜீவ்காந்தி காந்தி அவர்களால் ஐந்து ஆண்டுகளும் மீண்டும் அதே பழைய நிலை. கிட்டதட்ட 10 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்த ஒரே அறிக்கையாக நாம் மண்டல் கமிஷன் அறிக்கையை சொல்லலாம். அத்தனை தடைகள், எதிர்ப்புகள் குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்த உயர் சாதியினர் போட்ட முட்டுக்கட்டைகளால் மண்டல் அறிக்கையை காங்கிரஸ் அரசு அமல்படுத்த தயங்கி புறக்கணித்தது.
50 % இடஒதுக்கீட்டை சொன்ன நீதிபதிகள்
மூத்த நீதிபதி பீ.பி.கஜேந்திர கட்கார் தலைமையிலான சின்ஹா - புவ்னேஷ்வர்.பி, வாஞ்சூ கே.என், கே.சி.தாஸ், குப்தா, ஷா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற சொன்ன 50 விழுக்காட்டிற்குள் இருக்க வேண்டுமென்ற தீர்ப்பை, அதன் பின்னர் வந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளாக பொறுப்பேற்ற நீதியரசர் கிருஷ்ண அய்யர், நீதியரசர் ஓ. சின்னப்ப ரெட்டி, நீதியரசர் பகவதி, நீதியரசர் பசல்அலி, நீதியரசர் தேசாய், நீதியரசர் மாத்யூ, நீதியரசர் ஹெக்டே உள்ளிட்ட ஏராளமான நீதிபதிகள் "50% விழுக்காட்டிற்குள் எந்த அடிப்படையும் இல்லை, அரசியல் சட்டம் அப்படி சொல்லவில்லை என்று பல்வேறு தீர்ப்புகளில் மறுத்து சொன்னாலும் 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் சொன்னதை மாற்றவே முடியவில்லை. காரணம் 50% விழுக்காட்டு இடஒதுக்கீட்டை மறுபரீசிலனை செய்ய சொன்ன இவர்கள் எல்லாம் இரண்டு நீதிபதிகள், ஒரு நீதிபதி என்ற பெஞ்சில் இருந்து சொன்னதால் அந்த ஐந்து நீதிபதிகள் 1962 ஆம் ஆண்டு சொன்னதை மாற்ற முடியவில்லை.
108 சாதிகளின் சமூக நீதிக்கான வன்னியர் போராட்டம் 1987 108 சாதிகளுக்கான இட ஒதுக்கீட்டை வென்ற "சமூக நீதிக்கான வன்னியர் போராட்டம் 1987" வெடித்தது. வடதமிழ்நாடே கிளர்ச்சி பூமியாக மாறி நின்றது.
அனைத்து சமுதாயத்தினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்றவகையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அந்த வகையில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 2% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று 28 வன்னிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் 20.07.1980 அன்று உருவான தனது முதல் மாநாட்டில் வன்னியர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.
இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை வலியுறுத்தி ஏராளமான மாநாடுகள், போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் ஆகியவை நடத்தப்பட்ட போதிலும், அதுகுறித்து பேச்சு நடத்துவதற்கு கூட எம்.ஜி.ஆர் அரசு முன்வராத காரணத்தால் ஒரு வாரத்திற்கு அதாவது 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி முதல் செப்டம்பர் 23ஆம் தேதி வரை தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்துவதென 26.06.1987 அன்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதை போலவே போராட்டத்தை தொடங்கியது வன்னிய சங்கம்.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடும், மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 2 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற தொடர் சாலை மறியல் போராட்டத்தின் முதல் நாளிலேயே திண்டிவனத்தில் தலைமையேற்றிருந்த மரு. ராமதாஸ் உள்ளிட்ட மற்ற தலைவர்களும் கைது செய்யப்பட்டு, சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சமூக நீதிக்கான இந்த போராட்டத்தை எப்படியாவது சிதைத்து விட வேண்டும் என்ற முடிவில் இருந்த பொறுப்பு முதலமைச்சர் நெடுஞ்செழியன், அமைச்சர்கள் பண்ருட்டி இராமச்சந்திரன், ப.உ.சண்முகம், வி.வி.சுவாமிநாதன் ஆகியோர், போராட்டம் தொடங்கிய 3 மணி நேரத்தில் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டனர்.
தடியடி நடத்துவது, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவது, முழங்காலுக்கு கீழே சுட்டு எச்சரிக்கை செய்யாமல் காக்கை குருவிகளை சுடுவது போல போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்களை காவல்துறையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.
operation yellow flower என்ற கொடிய ஒடுக்குமுறையில் எதிர்த்து போராடி உயிர் ஈந்த:-
1. பார்ப்பனப்பட்டு ரங்கநாதன் 2. சித்தணி ஏழுமலை 3. ஒரத்தூர் செகநாதன் 4. முண்டியம்பாக்கம் சிங்காரவேலு 5. கயத்தூர் முனியன் 6. கயத்தூர் முத்து 7. கொழப்பலூர் முனுசாமி 8. கோலியனூர் விநாயகம் 9. கோலியனூர் கோவிந்தன் 10. தொடர்ந்தனூர் வேலு 11. சிறுதொண்டமாதேவி தேசிங்குராஜன் 12. பேரங்கியூர் அண்ணாமலை 13. மேச்சேரி அமரத்தானூர் மயில்சாமி 14. வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன் 15. சிவதாபுரம் குப்புசாமி 16. முரசவாக்கம் கோவிந்தசாமி 17. குருவிமலை முனுசாமி 18. காயிரம்பேடு மருதசாமி 19. நத்தமேடு சுப்பிரமணி 20. விளம்பூர் பன்னீர்செல்வம் 21. பாப்பனம்பட்டு வீரப்பன் 22. பாப்பனம்பட்டு பரமசிவம் 23. கயத்தூர் தாண்டவராயன்
பெண்கள் மீதும் ஒடுக்குமுறை
இவர்கள் தவிர காவல்துறையினரின் தாக்குதலில் ஏராளமானோர் உடல் உறுப்புகளை இழந்து முடமாகினர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். மக்கள் வழிபடும் கோவில்கள் சூறையாடப்பட்டன. இந்த அடக்குமுறைக்கு துணையாக இராணுவமும் வரவழைக்கப்பட்டது. சுருக்கமாகக் கூற வேண்டுமானால் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்களால் இப்படிப்பட்ட ஒரு பெரும்படுகொலைக்கு வடதமிழ்நாடே உள்ளாக்கப்பட்டது.
அப்படியும் கூட எழுச்சி மிகுந்த போராட்டத்தை அடக்க முடியவில்லை. போராட்டம் நடைபெற்ற 7 நாட்களும் தமிழகத்தில் ஒரு வாகனம் கூட ஓடவில்லை. இந்தியாவில் வேறு எங்குமே இப்படி ஒரு போராட்டம் நடத்தப்பட்டதில்லை. அந்த வகையில் இது ஒரு வரலாறு. அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்தைத் தாண்டியும் போராட்டம் நீடிக்கும் என்று அஞ்சிய அதிகாரிகள், மத்தியச் சிறையில் அடைக்கப் பட்டிருந்த என்னை சந்தித்து, போராட்டத்தை முடித்துக் கொள்ளும்படி வன்னியர் சங்கத்தினருக்கு அறிவுறுத்தல் விடுத்து அறிக்கை வெளியிடும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி நானும் அறிக்கை வெளியிட்டேன். அதையேற்று 23ஆம் தேதியுடன் போராட்டம் கைவிடப்பட்டது.
எதிர்க்கட்சிகள் மௌனம்
இட ஒதுக்கீட்டிற்காக போராடிய மக்கள் மீது இத்தகைய அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்படும் பொழுதும் சமூக நீதி கோரி போராட்டம் நடத்தியதற்காக 20,461 பேர் கைது செய்யப்பட்டு பல நாட்கள் சிறையில் வாடிய பொழுதும் எதிர்க்கட்சியாக இருந்த திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளோ எதிர்ப்புகளை சடங்குத்தனமகவே தெரிவித்ததாக மருத்துவர் ராமதாஸ் அவர்கள் எழுதியுள்ளார்.
ஊடகங்கள்
போராடிய மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அடக்குமுறைகள் குறித்து அப்போது வெளிவந்த தராசு, பல்லவராயர் போன்ற வார இதழ்கள் தான் சமூக அக்கறையுடன் செய்திகளை வெளியிட்டன. தினந்தந்தி, மாலைமலர் போன்ற நாளிதழ்கள் ஓரளவு செய்திகளை வெளியிட்டன. மற்ற ஊடகங்கள் இந்த அடக்குமுறைகள் குறித்து வாய் திறக்கவில்லை. ஆனால், அமெரிக்காவிலிருந்து வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் இதழ் இந்த போராட்டம் குறித்து போராட்டக்களம் குறித்து படத்துடன் கால் பக்கம் அளவுக்கு செய்தி வெளியிட்டது.
மரம் வெட்ட காரணம்?
போராட்டத்தின் ஒரு வழிமுறையாக பாதிக்கப்பட்ட மக்கள் உணர்ச்சி வேகத்தில் சாலையில் போக்குவரத்தை தடுக்க வேண்டும் என்றெண்ணி சில இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டு சாலையில் போடப்பட்டு போராட்டத்தின் நியாயமான அற சீற்றத்தை வெளிப்படுத்தினர்.
எண்ணற்ற உயிர்களை பலி கொடுத்து ஏராளமான இழப்புகளை சந்தித்த பிறகு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பி வந்த எம்.ஜி.ஆர் 25.11.1987 அன்று அனைத்து சமுதாயத்தினரையும் அழைத்துப் பேச்சு நடத்தி அனைத்து சாதித் தலைவர்களின் கூட்டுக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மளிகையில் நடைபெற்றது.
13% இட ஒதுக்கீடு கோப்புகள் அழிப்பா? இடஒதுக்கீடு குறித்த பேச்சுக்களின் போது வன்னியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்த எம்.ஜி.ஆர் 13 % இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்திருந்ததாகவும், அதற்குள் அவர் மறைந்து விட்டதால் அது தொடர்பாக தயாரித்து வைக்கப்பட்டிருந்த கோப்புகள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 20 % இடஒதுக்கீடு
இத்தகைய போராட்டத்தின் விளைவாக எம். ஜி. ஆர் மறைவுக்குப் பின் மூன்றாம் முறையாக 1989 ஆம் ஆண்டில் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களின் தலைவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC) என்ற புதிய பிரிவை ஏற்படுத்தி 108 பின்தங்கிய சமூகங்களை அதில் இணைத்து கல்வி, வேலைவாய்ப்பில் 20 % இடஒதுக்கீட்டை அறிவித்தார்.
"மண்டல் கமிசன்" உயிர்க்கொடுத்த வி.பி.சிங்
1980 தொடங்கி 1990 வரை 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் தடைகள், எதிர்ப்புகள் என உயர் சாதியினர் போட்ட முட்டுக்கட்டைகளால் புறக்கணிக்கப்பட்டு மண்டல் அறிக்கையானது, ஜனதா தளம் கட்சியின் தலைவரான வி.பி. சிங் அவர்களின் தலைமையிலான தேசிய முன்னணி அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த அரசானது 1990ஆம் ஆண்டு ஆகஸ்டு 7 ஆம் தேதியன்று, சமூகம் & கல்வி ரீதியில் பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசுப் பணிகள் மற்றும் பொது நிறுவனங்களில் 27 % இடஒதுக்கீடு அளிப்பதாக அறிவித்தது. ஆகஸ்ட் 13 ஆம் தேதி அரசாங்க ஆணை வெளியிட்டிருந்த போதும், வி.பி.சிங் அவர்கள், அந்த அறிக்கையை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்துதலை இரண்டு நாட்கள் கழித்து அவரது சுதந்திர தின உரையில் அறிவித்தார்.
*திட்டமிட்ட போராட்டங்கள்*
மண்டல் கமிஷன் அறிக்கையை சட்டப்பூர்வமாக நடைமுறைப் படுத்த போகிறோமென வி.பி.சிங் அவர்கள் அறிவித்தது தான் பாக்கி வடஇந்தியா முழுவதும் அரசிற்கு எதிரான எதிர்ப்புகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன. வட இந்தியாவில் இம்முடிவுக்கு பிற்படுத்தப்பட்ட மக்கள் அல்லாத வர்ணாஸ்ரம உயர்சாதியினரிடமிருந்து கடும் எதிர்ப்பு ஏற்பட்டு நகர்புறங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.
1. சிவில் பணிகளில் மட்டுமே இட ஒதுக்கீடு 2. வேலை வாய்ப்புகளில் நீதித் துறையிலும், அறிவியல் உயர் ஆய்வுகளிலும் இட ஒதுக்கீடு இல்லை என ஒரு விதி விலக்கை வைத்தார். 3. மண்டல் அறிக்கையில் இருக்கும் 3740 சாதியினனருக்கு இட ஒதுக்கீடு இல்லை. மத்திய அரசுப் பட்டியல், மாநில அரசுப் பட்டியல் என இரண்டிலும் இருக்கும் 2௦௦௦ சாதியினருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு (~60%).
என்ற அறிவிப்பிற்கே பல இடங்களில் மாணவ-மாணவியர் விடுதிகளில் தங்கியிருந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் ஆதிக்க சாதியினரால் மிரட்டப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர். இடப்பங்கீட்டை எதிர்த்து 'திட்டமிட்டு' மாணவர் கிளர்ச்சியை உருவாக்க முயன்றனர். அதில் ராஜிவ் கோஸ்வாமி என்ற கல்லூரி மாணவன் டெல்லியில் தன்னை எரித்துக் கொள்ள முயன்றார். அதிலிருந்து மற்றவர்களால் பத்திரமாக மீட்கப்பட்டு உயிர்க்கு எவ்விதமான சிக்கலும் இன்று காப்பாற்றப்பட்டார். சுரீந்தர் சிங் சவுகான் என்ற மாணவர் தீக் குளித்து இறந்தார்.
இப்படியான நெருக்கடி நிலையை சந்தித்த பின்னரும் நெஞ்சுரத்தோடு இடப்பங்கீடு கொள்கையை வி.பி.சிங் அவர்களின் அரசு அமல்படுத்தியது.
எல்.கே. அத்வானி பேரணி - ராஜீவ்காந்தி அமைதி
அப்பாவி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை தங்களுக்கு சாதகமாக ஒன்று திரட்ட, உணச்சிகரமான தீவிர இந்துதத்துவ அமைப்புகளின் போராட்டமான "இராம ஜென்மபூமி" விவகாரத்தை, பாரதிய ஜனதா கட்சியின் அன்றையத் தலைவர் எல் கே அத்வானி தலைமையில் பேரணி நடத்தியது (1990).
இப்பேரணியை பாரதிய ஜனதா கட்சி நடத்த, மண்டல் அறிக்கையினை மடைமாற்றம் செய்யும் நோக்கமும் மறைமுகமாக இருந்ததாக அன்றைய காலக்கட்டங்களில் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இவை அனைத்தையும் ராஜீவ்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி அமைதியாக வேடிக்கை பார்த்ததையும் இங்கே நினைவுப்படுத்திப் பார்க்கலாம்.
சமூகநீதி காவலரானார் - வி.பி.சிங்
மதசார்பற்ற மக்களுக்கான நால்லாட்சியை நடத்திய நேர்மையான மக்கள் தலைவரான வி.பி.சிங் அவர்களின் அரசை பாரதிய ஜனதா கட்சி (காங்கிரஸ் கட்சி மறைமுக கூட்டு) கவிழ்த்தது. இந்திய அரசியலில் பதவி சுகங்களுக்காக கொள்கையில் சமரசம் செய்யாத மனிதராக பெரியார் அம்பேத்கர் ஆகியோரின் வரிசையில் வி.பி.சிங் அவர்களை வரலாறு உயர்திப்பிடித்தது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மனங்களில் வி.பி.சிங் இதன் மூலம் நிலையான இடத்தை பெற்றார். சமூகநீதி காவலரானார்.
இந்திய அளவில் அரசுத்துறை - கல்வி - வேலை இருந்தவர்கள் ...
1990 ஆம் ஆண்டில் இந்திய அளவில் அரசுதுறைகளில் கல்வியிலும், வேலையிலும் இருந்தவர்கள் பற்றி 1990 டிசம்பர் 23 ஆம் தேதி என அச்சிடப்பட்ட சண்டே வார இதழில் வெளியிட்ட தகவல்கள் இந்த கேள்விகளுக்கு பதில் தரும்.
மாநில தலைமைச் செயலாளர்கள் 26 பேரில் 19 பேர் (73.07%) பேர் பிராமணர்கள்.
துணைச் செயலாளர்கள் 500 பேரில் 310 பேர் (62%) பிராமணர்கள்.
ஆளுநர்கள் மற்றும் உதவி ஆளுநர்கள் 27 பேரில் 13 பேர் (48.15%) பிராமணர்கள்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேரில் 9 பேர் ( 56.25%) பிராமணர்கள்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேரில் 166 பேர் (50.30%) பேர் பிராமணர்கள்.
தூதுவர்கள் 140 பேரில் 58 பேர் (41.42%) பிராமணர்கள்.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் 98 பேரில் 50 பேர் (51.02%) பிராமணர்கள்.
மாவட்ட நீதிபதிகள் 438 பேரில் 250 பேர் (57.07%) பிராமணர்கள்.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 3300 பேரில் 2376 பேர் (72%) பிராமணர்கள்.
பாராளுமன்ற லோக்சபை உறுப்பினர்கள் 530 பேரில் 190 பேர் (35.85%) பிராமணர்கள்.
பாராளுமன்ற மேலவை உறுப்பினர்கள் 244 பேரில் 89 பேர் ( 36.48%) பேர் பிராமணர்கள்.
பெரும்பான்மை இடங்களை அனுபவித்து கொண்டே இதே 1990 ஆம் ஆண்டில் தான் இடப்பங்கீடை "வர்ணாசிரம உயர்சாதியினர்" எதிர்த்தனர் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
நரசிம்மராவ் கொண்டு வந்த புதிய குறிப்பாணை
திரு.வி.பி.சிங் அவர்களின் ஒன்றிய அரசாங்கம் கவிழ்ந்தவுடன் அடுத்து நடைபெற்ற 1991 ஆம் ஆண்டில் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க அந்த அமைச்சரவையில் அரசியலைவிட்டே ஒதுக்கிப் போவதாக சொன்ன P.V. நரசிம்மராவ் பிரதமரானார். ஆட்சி கவிழ்ப்பிற்கு பின் நின்று போயிருந்த மண்டல் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த உள்ளதாக சொன்ன நரசிம்மராவ் மண்டல் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த புதிய குறிப்பாணை ஒன்றை போடுகிறார்.
திரு.வி.பி.சிங் போட்ட மண்டல் ஆணையில் இருந்த வார்த்தைகளை மாற்றிப் கொடுக்கப்பட்ட 27% ஒதுக்கீட்டில் poorer section of the backward class என்ற சொல்லை இணைத்தும், அந்த இட ஒதுக்கீட்டிலும் இடம் பெறாத சமூகத்தைச் சேர்ந்த (அதாவது வர்ணாஸ்ரம உயர்சாதி ஏழைகளுக்கு) ஏழைகளுக்கு 10% ஒதுக்கீட்டைக் கொடுக்கவும் புதிய சட்ட ஆணையை பிறப்பித்தார். மண்டல் அறிக்கையின் படி, பிற்படுத்தபட்டோர் 27%, பட்டியலின + பழங்குடியினர் = 22.5 % மொத்தம் 49.5 % பொதுப் பிரிவு 50.5%. பிரதமர் நரசிம்ம ராவ் இன்னொரு 10% பொதுப் பிரிவில் சேர்க்க செய்தார். அப்படி 10% சேர்த்தால் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் கூறிய 50% மேல் செல்லும் என்று தெரியாமல் அவர் செய்திருக்க வாய்ப்பில்லை என்றே சட்ட ஆர்வலர்கள் அன்றைக்கு குற்றசாட்டி உள்ளனர்.
இந்திரா சஹாணி Vs இந்திய ஒன்றிய அரசு 1992 (மண்டல் வழக்கு)
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மிகமுக்கியமான வழக்காக இந்திரா சஹாணி வழக்கானது கருதப்படுகிறது. மண்டல் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அரசாங்க ஆணையின் எதிர்த்து தொடுக்கப்பட்டதாகும் இந்திரா சஹாணி வழக்கை உச்சநீதிமன்றத்தின் நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையிலான ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரித்து, தீர்ப்பு எழுதியது.
இந்த வழக்கானது இரு குறிப்பாணைகள் (வி.பி.சிங் & பி.வி.நரசிம்ம ராவ்) மூலம் நடைமுறைப்படுத்தப்படும் இடஒதுக்கீடானது சட்டத்தின் முன் அனைவரும் சமமாக பாவிக்கப்படுவார்கள் என்ற அடிப்படை உரிமையினை பாதிக்கிறது என்ற வாதத்தினை முன் வைத்தது, இந்த கருத்தை முன் வைத்து தாங்கள் பாதிக்கப்படுவதாக முறையிட்டவர்கள் யாருமே எந்த ஒரு இட ஒதுக்கீட்டிலும் இடமே பெறாதவர்கள் பொது பிரிவினை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர்களது வாதம் இடஒதுக்கீடு யார் யாருக்கு ? என்பதை விட இட ஒதுக்கீடே தவறு என்பதாக தான் இருந்தது என்பதை தான் நாம் வழக்கை கவனிக்கையில் உணர முடிகிறது.
முதலில் அரசாங்க ஆணையை செயல்படுத்துவதற்கு தடையை விதித்து, பின் 1992 ஆம் ஆண்டு நவம்பர் 16 அன்று அதன் தீர்ப்பில் மண்டல் ஆணையத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்த வி.பி. சிங் கொண்டு வந்த சட்டமும், இட ஒதுக்கீடு அரசாங்க ஆணையையும் செல்லுமென உறுதி செய்தது. இந்திரா சஹாணி Vs ஒன்றிய அரசு வழக்கின் விளைவாக அமைக்கப்பட்டதே தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.
இந்த அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் சமூக நீதியைப் பாதுகாக்கும் வகையில் தீர்ப்பு வரைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திரா சஹாணி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் கருத்துகள் பின்வருமாறு:
1. பட்டியலின் பிரிவினர் / பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகிய இட ஒதுக்கீட்டுப் பயனாளிகள் ஒட்டுமொத்த அளவில் 50 % இட ஒதுக்கீட்டிற்கு மேல் இருக்க கூடாது.
2. 50 % இட ஒதுக்கீட்டிற்கு மேல் இருக்க கூடாது என்ற விதி ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். எனினும் தொலைவில் உள்ள பகுதிகள் அல்லது பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களின் அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இந்த விதி தளர்த்தப்படலாம் முன்கொணர்தல் விதிக்கு அனுமதியளிக்கப்படுகிறது. ஆனால் இது சதவீதம் இட ஒதுக்கீட்டு வரம்பிற்கு உட்பட்டது.
3. நரசிம்ஹராவ் அரசு கொண்டுவந்த பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர் பிரிவினர்களுக்கு அரசாங்கப் பணிகளில் 10 % இட ஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசாங்கத்தின் சுற்றறிக்கை ரத்து செய்யப்படுகிறது.
4. அடுத்த மாறுதலான பிற்படுத்தபட்டவர்களிடையே poorer section என்பதை பிற்படுத்தப்பட்டவர்களில் ஏழைகள் என்று அர்த்தம் கொள்ள முடியாது என்று கூறி சமூக ரீதியில் மேலும் பின் தங்கிய வகுப்பினர் என்று தான் எடுத்துக் கொள்ள முடியும் என்றும் கூறியது. அதாவது பிற்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர் என்று பிரிக்கிறோமே அதனை மேலும் முன்னுரிமை (preference) என்ற பதத்தினையும் அப்படியே அர்த்தம் கொள்ள முடியாது என்றும் கூறியது. அவ்வாறு அர்த்தம் கொண்டால் அனைத்து ஒதுக்கீடும் மிகவும் பின் தங்கிய வகுப்பினருக்கு போய் பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஏதும் கிடைக்காது. எனவே இரு வகுப்பினருக்கும் எந்த விகிதத்தில் பகிர்ந்தளிப்பது என்பதை அரசே முடிவு செய்து கொள்ளலாம்.
5. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களில் கிரீமி லேயர் (Creamy Layer) கண்டிப்பாக இட ஒதுக்கீட்டு வசதியிலிருந்து நீக்கப்பட வேண்டும். (தமிழகம் தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டது)
6. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களாக மேலும் வகையீடு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
7. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில், "எஸ்.சி./எஸ்.டி. ஊழியர்களுக்கு அரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது. இதை 5வது வருடத்திலிருந்து அமல்படுத்த வேண்டும்" என்றது. (இவ்வழக்கிற்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத ஒரு பிரச்னையில் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.)
இவ்வாறு, மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுப் பரிந்துரைகளானது இறுதியாக 1992 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. (தீர்ப்பின் முழு விவரம் இங்கே http://judis.nic.in/supremecourt/qrydisp.asp?tfnm=16589)
நாகராஜ் வழக்கு !
பதவி உயர்வில் இடஒதுக்கீடு இரத்து செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு இந்திரா சஹாணி வழக்கில் சொல்லப்பட்ட "எஸ்.சி./எஸ்.டி. ஊழியர்களுக்கு அரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது" என்ற தீர்ப்பை எதிர்த்து எம். நாகராஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது 19-10-2006 அன்று வெளியிட்ட தீர்ப்பில் கீழ்க்காணும் 3 நிபந்தனைகளை விதித்தது.
1. அரசின் உயர் பதவிகளில் இடம் காலியாக இருக்கிறது என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
2. இப்பதவிகளில் எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்களை நியமிக்கும் அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில்தான் உள்ளார்கள் என்பதை அரசு ஊர்ஜிதப்படுத்த வேண்டும்.
3. இப்பதவிகளில் எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்களை நியமனம் செய்தால் அரசின் நிர்வாகத் திறன் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என்று அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
இந்த மூன்று நிபந்தனைகளைத் தெளிவாக்கிய பின்னர் தான் பதவி உயர்வில் எஸ்.சி./எஸ்.டி. ஊழியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
69 % இட ஒதுக்கீடும் ஜெயலலிதாவும்
சமூகநீதி அரசியலில் அடித்தளமாக இருக்கின்ற தமிழ்நாட்டை பொறுத்தவரை நீதிக்கட்சி காலத்தில் இருந்தே நூற்றாண்டாக இருந்து வருகிற ஒன்றுதான் என்றாலும் அதற்கான பல வழக்குகளை சிறைகளை கொடுமைகளை இழப்புகளை தடைகளை போராட்டங்களை செய்து போராடி சிறுக சிறுக பெற்ற உரிமையாக தான் இடஒதுக்கீடு பார்க்கப்படுகிறது.
சென்னை தலைமாகாண பிராமணர் அல்லாதார் சங்கம் தொடங்கி நீதிக்கட்சி சுப்பராயலு ரெட்டியார், பனகல் அரசர், பி.சுப்பராயன் கவுண்டர், எஸ்.முத்தையா முதலியார், தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சி ஓமந்தூரார், காமராஜர் திமுக அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி அதிமுக எம்ஜிஆர் இட ஒதுக்கீட்டை உயர்த்தி சமூகநீதியை வளர்த்துக்கொண்டே வந்தனர்.
வன்னியர் தனி ஒதுக்கீடு போராட்டம் காரணமாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) வகுப்பை உருவாக்கி 50% பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடு 30% பிறபடுத்தப்பட்டோர் + 20% மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எனப் பிரித்து வழங்கப்பட்டு வந்தே நேரத்தில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பின்னர் அஇஅதிமுக வின் தலைவராக பொறுப்பேற்று 1991 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல்வராக ஆட்சியில் செல்வி. ஜெ.ஜெயலலிதா அமர்ந்த சில மாதங்களிலேயே 16.11.1992 அன்று மண்டல் குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது.
அதில், இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது என்ற தீர்ப்பானது, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள மிகவும் போராடிப் பெற்ற உரிமையான 69 % இடஒதுக்கீட்டுக்கு ஆபத்தாக வந்து விடுமோ என்ற நிலை ஏற்பட்டது.
தமிழ்நாட்டின் முதல்வராக ஆட்சியில் இருந்த செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள் 69% இட ஒதுக்கீட்டை தமிழக அரசின் கொள்கை முடிவாக சட்டமன்றத்தில் அறிவித்தார்.
உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு, தமிழகத்தில் நடைமுறையில் இருந்த 69 % இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக இருந்ததால், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 1993 நவம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில், தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் 69 % இடஒதுக்கீட்டு முறை தொடர்வதற்கு, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினார்.
இந்திரா சஹாணி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பால் பாதிப்பு ஏதும் ஏற்படாத வண்ணம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசின் தீர்மானம் சட்ட முன்வடிவாக அறிமுகம் செய்யப்பட்டு, 1993 டிசம்பர் 31 அன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு, பின்னர் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவந்து, அரசியலமைப்புச் சட்டம் 31பி, 31சி ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் 9 ஆவது அட்டவணையில் வரிசை எண் 257ஏவில் சேர்க்கப்பட்டது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் நீதிக்கட்சி அரசு காலம் தொட்டு நடைமுறையில் இருந்து வரும் சமூக நீதி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் இருந்து பாதிக்காமல் நடைமுறைக்கு கொண்டுவர வழி வகுக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் காட்டிய ஒருமித்த உணர்வால், மத்திய அரசும் குடியரசுத் தலைவருக்கு தமிழக இடஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்தது. 19.07.1994 அந்த ஒப்புதல் வர 76ஆவது சட்டத்திருத்தமாக ஒன்பதாம் அட்டவணையிலும் சேர்க்கப்பட்டது.
ஆயினும் ஒன்று போயின் அடுத்தது என்பது போல் தொடர்ந்து பல வழக்குகளில் பலவித தீர்ப்புகள் கிடைத்து வருகின்றன. முழு விவரம் : (http://indiacode.nic.in/coiweb/amend/amend76.htm)
தமிழ்நாடு அரசின் சட்டம் (45/1944) செல்லும் தன்மையினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்கள் (454/1994 மற்றும் 194/2006) மீது, உச்சநீதிமன்றம் ஓர் ஆணையைப் பிறப்பித்தது.
50 % இட ஒதுக்கீட்டுக்கு அதிகமான தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீட்டை இரத்து செய்யகோரும் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கபாடியா, ராதாகிருஷ்ணன், சுதந்திர குமார் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் வெளிப்படுத்தப்பட்ட கிரீமிலேயர் தொடர்பாக தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையினைப் பெற்று 12.7.2011 தேதிக்குள் ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை ஒன்றினைப் பிறப்பித்தது (13.7.2010 மற்றும் 3.1.2011).
அதன்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தனது அறிக்கையினை 8.7.2011 அன்று முதல் அமைச்சரிடம் அளித்தது - தமிழ்நாடு அரசின் சட்டம் (45/1994) எவ்விதக் குறைபாடுமின்றி துல்லியமாக உள்ளது என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தெளிவுபடுத்தியது.
பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த அறிக்கை தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் 8.7.2011 அன்று தமிழ்நாடு அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கையினை ஏற்றுக் கொள்வது என்றும் தமிழ்நாடு சட்டம் 45/1994இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி 69 % இடஒதுக்கீட்டினைத் தொடர்ந்து செயல்படுத்துவது என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 11.7.2011 அன்று ஓர் அரசாணையும் தமிழ்நாடு அரசால் பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30%, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 20%, தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18%, பழங்குடியினருக்கு 1% - மொத்தம் 69% இடஒதுக்கீடு தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுவிட்டது.
14.8.2003 ஆம் ஆண்டில் நீதிபதி லக்கோத்தி தலைமையிலான உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் தனியார் நிறுவனங்களில் இடப்பங்கீட்டை முழுமையாக ரத்து செய்தனர்.
மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்ற பொழுது கலைஞர் மு. கருணாநிதி மத சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கு கல்வி-வேலைவாய்ப்பில் தனி ஒதுக்கீடு வழங்கும் சட்டம்.. ஈ.வெ.ரா.நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம், (இதன் மூலம் பெண்கள் கல்வியை உயர்த்தி சாதிவாரியான இடஒதுக்கீட்டில் பெண்களையும் பங்குபற்ற வைத்து பாலின இடஒதுக்கீடாகவும் மறைமுகமாக அதை மாற்றி), அப்படி படித்துப் பட்டமும் பெற்று வரும் பெண்களுக்கு அரசுப் பணிகளில் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில் 30% இடஒதுக்கீட்டை கொண்டு வந்தார்.
பழங்குடியினர்க்குத் தனியே 1 விழுக்காடு; சிறுபான்மையினரான இஸ்லாமியர்க்கு 3.5 விழுக்காடு; தாழ்த்தப்பட்டோருள் மிகவும் தாழ்த்தப்பட்டோராக உள்ள அருந்ததியர்க்கு 3 விழுக்காடு என இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு சமூக நீதி போற்றப்பட்டது தி.மு.க. ஆட்சிக்காலத்திலேதான்.
69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போதும் இன்னொரு மனுவை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருப்பதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் - சமூக நீதிக்கு எதிராக, குறிப்பாக நடைமுறையில் உள்ள 69 % இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பின்னப்பட்டு வரும் சதி வலைகளை அறுத்து எறியும் வகையில் தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, இட ஒதுக்கீடு என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உதவியவை நூல்களும் தகவல்களும் :
1854 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசு உத்தரவு
1883 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கல்விக் குழுவின் அறிக்கை
பண்டிதரின் கொடை: விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை - கௌதம சன்னா
1893 ஆம் ஆண்டில் Fair Play என்ற பெயரை நூலாசிரியர் பெயர் என்று அச்சிடப்பட்ட இரண்டு புத்தகங்கள்
The Non Brahmin Races and Indian Public Service 2. The Ways and Means for the Amelioration of Non Brahmin Races - 1893 ஆம் ஆண்டு Fair Play
NON - BRAHMIN MANIFESTO - பி.தியாகராயச் செட்டியார்
காங்கிரசை விட்டுவிலகியதேன் ? பெரியார் - குடியரசு
எது வகுப்புவாதம் ? - பன்மொழிப்புலவர் காஅப்பாத்துரை
காங்கிரஸ் மாநாடுகள்
நீதிக்கட்சி குறித்த வே .ஆனைமுத்து அவர்களின் தனித்தனி கட்டுரைகள்
ஆவணக்காப்பக வெளியிடுகள்
நீதிக்கட்சி யாருக்கு பாடுபட்டது ? - முனைவர் பு .இராசதுரை
காமராஜ் - ஒரு சகாப்தம் என்ற நூல் ஆசிரியர் ஆ. கோபண்ணா
மாணவி செண்பகம் துரைராசன் மருத்துவக் வழக்கு http://judis.nic.in/supremecourt/imgs1.aspx?filename=1194
the wire கட்டுரை தமிழாக்கம் https://sempiyanwritings.blogspot.com/2018/08/blog-post_27.html
சட்டத் திருத்தம் ஏன் வருகிறது ? என பண்டிதர் நேருவின் பாராளுமன்ற அறிமுக உரை
முதல் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் https://dspace.gipe.ac.in/xmlui/bitstream/handle/10973/33678/GIPE-058127-Contents.pdf?sequence=3&isAllowed=y - https://en.wikipedia.org/wiki/Kalelkar_Commission
TAMILNADU FINANCE IN THE PLANNING ERA Prof.K.S.Sonachalam
தருமி
திராவிட இயக்க வரலாறு - ஆர் .முத்துக்குமார்
இந்திய அரசியல் சட்டத்தின் முதல் திருத்தம்! - பி.தயாளன்
http://popularfronttn.org
69% இடஒதுக்கீடு: ஒன்பதாவது அட்டவணை
தமிழக பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய அறிக்கை - நீதியரசர் ஜனார்த்தனம்
MR.Balaji Vs State Of Mysore தீர்ப்பு
தி ஹிந்து தமிழ் இணைய செய்திகள்
உண்மை எம்ஜிஆர் 1௦௦ சிறப்பிதழ்
Politics and Social Conflict in South India The Non-Brahmin Movement and Tanie Seperation (Berkeley: University of California Press, 1969) - Sundravadivelu.
Great Britain parliamentary papers, Vol XXI (Reports from Commissioners etc. Vol XI).
Caste in Indian Politics, Rajini Kothari
இடஒதுக்கீட்டில் அநீதி கொளத்தூர் மணி https://www.youtube.com/watch?v=gDiWpllh99o&list=PLA3494DD131A3C82E
திராவிட இயக்க வரலாறு பகுதி -1 ஆர்.முத்துக் குமார்
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்குகள்.