இந்த நிலையில் கடந்த 2017ஏப்ரல் 29 ஆம் திகதி அன்று இலங்கை கடற்படையினர் முள்ளிக்குள கிராமத்தின் முன்பகுதியில் உள்ள மக்களுக்கு சொந்தமான காணியில் சுமார் 100 ஏக்கர் காணியை கையளிப்பதாகக் கூறியிருந்தனர்.
இவ்வாறு விடுவிப்பதாக கூறப்பட்ட காணியில் 77 ஏக்கர் காணிகள் மட்டுமே கடந்த ஆண்டு ஏப்ரல் மாத காலப்பகுதியில் இலங்கை கடற்படையினரால் விடுவிக்கப்பட்டிருந்தன.
தமிழ் மக்களுக்கு சொந்தமான ஏனைய 23 ஏக்கர் காணியினை எதிர்வரும் 8 மாத காலங்களுக்குள் கையளிப்பதாகக் கடற்படையினர் உறுதியளித்திரு்ந்தனர்.
இந்த நிலையிலேயே முள்ளிக்குளம் கிராமத்தின் முற்பகுதியில் கடற்படையினரால் ஏலவே விடுவிக்கப்பட்ட காணிகளில் தற்காலிக கொட்டில்களில் குடியிருந்து வரும் தமிழ் மக்களின் சுதந்திரமான நடவடிக்கைகளுக்கு கடற்படையினர் தொடர்ந்தும் தடைவிதித்துள்ளனர்.
பிரதேசத்தில் உள்ள உள்ளக வீதிகளை குடியமர்ந்துள்ள மக்கள் பயன்படுத்துவதற்கு இலங்கை கடற்படையினர் தடைவிதிப்பதுடன் குறித்த உள்ளக வீதிகளில் முட்கம்பிகளாலான வீதித்தடைகளை கடற்படையினர் அமைத்து வருவதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
மக்களின் தற்காலிக கூடாரங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்குள் தினமும் காட்டு யானைகள் வருகை தருவதனால் இப்பகுதி மக்களுக்கு உயிராபத்து ஏற்படுவதற்கான சாத்தியங்களும் அதிகம் காணப்படுகின்றன.
முள்ளிக்குளம் முற்றுமுழுதாக மீனவக் கிராமமாக இருக்கும் நிலையில் இப்பகுதி மீனவர்கள் முள்ளிக்குளம் மீனவ இறங்குதுறையை முழுமையாக பயன்படுத்துவதற்கும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் தடைவிதித்து வருவருகின்றனர்.
முள்ளிக்குள கிராமத்தின் முன்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள முள்ளிக்குளம் கடற்கரையிலுள்ள மீன்பிடி இறங்குதுறைக்கு நேரடியாக செல்வதற்கு அனுமதி மறுத்துள்ள இலங்கை கடற்படையினர் மீனவர்களை மலங்காடு வழியாக சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரமுள்ள சுற்றுப்பாதை வழியாகவே முள்ளிக்குள கடற்கரைக்கு செல்ல வேண்டும் என்று பணித்துள்ளதாகவும் கூறப்படுின்றது.