அந்த விடயங்களில் தலையீடுகள் அவசியம் இல்லையெனவும் திலக் மாரப்பன கூறியுள்ளார்.
ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்படுகின்ற தீர்மானத்தில் இருந்து அரசாங்கம் விலகிச் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வலியுறுத்தியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் திலக் மாரப்பன, கடந்தகாலங்களில் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு அவப்பெயர் ஏற்பட்டிருந்ததாகச் சொன்னார்.
அந்த அவப்பெயரை 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மைத்திரி - ரணில் அரசாங்கம் நீக்கியதாகவும் சர்வதேச உதவிகளுடன் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
அதேவேளை இலங்கை தொடர்பாக ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்லே பச்செலெட் வெளியிட்டுள்ள அறிக்கை மிகவும் பாரதூரமானதென இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எச்சரிக்கை விடுத்துள்ளர்.
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியே ஜெனீவா மனித உரிமைச் சபையின் இறுக்கமான பிடிக்குக் காணரம் என்றும் சந்திரிகா கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோது கூறினார்.
ஜெனீவாத் தீர்மானம் வெறுமனே போர்க்குற்ற விசாரணைக்கான தீர்மானம் அல்ல. அது இலங்கையின் இறைமை தன்னாதிக்கத்தைச் சவாலுக்கு உட்படுத்தும் தீர்மானம் என்றும் கூறிய சந்திரிகா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்தத் தீர்மானத்தை போர்க்குற்ற விசாரணைக்கு மாத்திரமே உரியது என கருதுகின்றார் எனவும் குற்றம் சுமத்தினார்.
எதிர்வரும் 20 ஆம் திகதி ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்படவுள்ளது.
அந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கி மேலும் இரண்டு வருட கால அவகாசத்திற்கும் இணக்கத்தை இலங்கை அரசாங்கம் தெரிவிக்கவுள்ளது.
இந்த நிலையில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோர் ஜெனீவா மனித உாிமைச் சபை ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
ஆனால் இந்த விமர்சனங்கள் வெறுமனே நாடகம் என்றும் ஜெனீவா மனித உரிமைச் சபை இலங்கை அரசு என்ற கட்டமைப்பைக் காப்பாற்றுவதாகவும் இதனை மகிந்த ராஜபாக்ச உள்ளிட்ட அனைத்து சிங்கள அரசியல் கட்சிகளும் அறிந்துள்ளதாகவும் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
தமிழ்த் தரப்பின் நிலையற்ற நிலைப்பாடே இந்த நிலைக்குக் காரணமென யாழ் பல்கலைக்கழக கல்விச் சமூகம் கவலை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான இலங்கை உயர் அதிகாரிகள் குழு ஒன்று விரைவில் ஜெனீவா சென்று இலங்கையின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறவுள்ளது.