இலங்கையின் தலைநகர் கொழும்பு தெஹிவளை, கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களில் ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட பதினொரு தமிழர்களைக் கடத்திச் சென்று கப்பம் கோரிய சம்பவம் தொடர்பாக இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மீதான வழக்கும் விசாரணையும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
இறுதிப் போரின் போது இலங்கைப் படையினர் புரிந்த போர்க்குற்ற விசாரணைக்குப் பதிலாக வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளுக்கு வெளியே கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் தமிழர்கள் மீது இலங்கைப் படையினர் மேற்கொண்ட கடத்தல் காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பான விடயங்களில் தொடர்புள்ள இலங்கைப் படையினர் மீது விசாரணைகளை நடத்த ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
இதேவேளை, கொழும்பு - தெஹிவளை, கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களில் ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட பதினொரு தமிழர்களை கடத்திச் சென்று கப்பம் கோரிய சம்பவம் தொடர்பாக இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மீது தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவு கூறியுள்ளது.
எதிர்வரும் ஏப்பிரல் மாதம் நான்காம் ஆம் திகதி விசாரணைகள் மீண்டும் நடைபெறவுள்ளன. கடந்த மார்ச் 19 ஆம் திகதி நான்கு மணிநேரம் பதினொராம் திகதி எட்டு மணிநேரமும் பதின்மூன்றாம் திகதி ஆறு மணி நேரமும் விசாரணைகள் நடத்தப்பட்டதாக இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூகக் கொள்கை தொடர்பான விசாரணைப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு தமிழர்கள் கடத்தப்பட்டமை குறித்து முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட முழுமையாக அறிந்திருந்தார் என்றும் விடயங்களை மூடி மறைத்துள்ளமை விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவு நேற்றுப் புதன்கிழமை நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
பதினொரு தமிழர்களும் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதை, இலங்கைக் கடற்படையின் முன்னாள் புலனாய்வு பிரதானியும் தற்போது ரியர் அட்மிரல் அதிகாரியுமான ஆனந்த குருகே, கரன்னாகொடவின் ஆலோசகராக பதவி விகித்த கொமாண்டர் உதயகீர்த்தி பண்டார, முன்னாள் கிழக்கு கட்டளைத் தளபதி ரியர் அட்மிரால் துஷித் வீரசேகர ஆகியோரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களில் இருந்து கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விசாரணை அறிக்கையை இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூகக் கொள்கை தொடர்பான விசாரணைப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.