வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலர்பிரிவுகளில் வவுனியா வடக்கு பிரதேசச் செயலகமும் ஒன்று. அதன் மையபிரதேசமாக நெடுங்கேணி நகர்பகுதி அமைந்துள்ளது.
2009 இற்கு முன்னர் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த பகுதி 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் பல பௌதிக, சமூகரீதியான, மாற்றங்களை வுவனியா மாவட்டம் சந்தித்து வருகின்றது.
தமிழர்களின் பூர்விக நிலமான வவுனியா இன்று அதன் தனித்துவ தன்மையை இழந்து நிற்கிறது. காரணம் சிங்கள குடியேற்றங்கள். முல்லைத்தீவு, திருகோணமலை, அனுராதபுரம், போன்ற மாவட்டங்களோடு வவுனியா வடக்கின் கிழக்குப் பகுதி சங்கமிக்கும் அடர்ந்த பெருங்காடுகளைக் கொண்டமைந்துள்ளது.
அதனால் அங்கு குடியேற்றங்களும் மிக இலகுவாக நடைபெறுவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நெடுங்கேணி நகரிலிருந்து கிழக்கு புறமாக 15 மைல் தொலைதூரத்தில் காணப்படுகின்ற அடர்ந்த வனாந்தரப்பகுதியில் பரவலாககுடியேற்றங்கள் செய்யப்பட்டும், இனிமேல் செய்யப்படுவதற்கும் தயாராகி இருக்கும் நிலைமையை பார்க்க கூடியதாக உள்ளது.
மருதோடைகிராமத்திலிருந்து நீண்டு செல்கின்ற வீதி இரு பக்கமும்வானளவு உயர்ந்த மரங்களை நிரப்பியபெருங்காடுகளாக உள்ளதுடன் மனிதர்கள் வசிப்பதற்குரிய நிலை அங்கு இரண்டாம் பட்சமாகவேகாணப்படுகிறது.
அப்பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் காடுகள் அளிக்கப்பட்டு சிங்கள மக்கள் குடியமர்த்த பட்டிருக்கிறார்கள். குறித்த பகுதியிலிருந்து வெலி ஓயாபிரதேசம் ஐந்து கிலோமீட்டர் தொலை வில்காணப்படுகிறது.
அங்கு குடியேற்றப்பட்ட மக்களில் அனேகமானோர் அனுராதபுரத்தை சொந்த இடமாக கொண்டுள்ளதுடன் குடியேற்றப்பட்ட பின்னர் பலருக்கு வீடுகள் வழங்கப்பட்டு, வீதிகள் அமைக்கப்பட்டு, யானை வேலி அமைக்கப்பட்டு சில வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இங்கு பிரச்னை என்னவென்றால் நெடுங்கேணியை அண்டிய பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சிங்கள கிராமங்களான நிகவெவ, சபுமல்தன்ன, போகஸ்வெவ உட்பட முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட வெலிஓயா, சம்பத்நுவர போன்ற பகுதிகளிற்கான வாக்காளர் பட்டியல்கள் வவுனியா மாவட்டத்துடன், இணைக்கப்பட்டுள்ளது
இம்முறை நடைபெற்ற உள்ளாட்சிமன்ற தேர்தலிலும் அந்தமக்கள் வவுனியாவடக்கு பிரதேச சபைக்கே தமது வாக்கைஅளித்துள்ளனர்.ஆனால் அவர்களுடைய பிரதேசசெயலக பிரிவாக வெலிஓயா காணப்படுகிறது.
அதுமுல்லை தீவு மாவட்டத்தின் நிர்வாகத்திற்குட்பட்டது. இதேவேளை மின்சார தேவைகளுக்காகவும், தொலைதொடர்பு சேவைகளை பெறுவதற்காகவும் அம்மக்கள் அனுராதபுரம் நோக்கியும்செல்கின்றனர். இது நிர்வாக ரீதியாக பலபிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது.
இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி சபைதேர்தலில் சிங்களமக்கள் குடியேற்றபட்ட 17 கிராமங்கள்இணைக்கப்பட்டு 4 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. அந்த 17 கிராமங்களில்அதிகமாக வாக்குகளை கொண்ட சிங்கள கிராமமானபோகஸ்வெவ (தமிழ்கிராமமான கொக்கச்சான்குளமே சிங்களமக்கள் குடியேற்றபட்டு போகஸ்வெவ என்று பெயர் மாற்றபட்டுள்ளது)
தமிழ் மக்களின் எல்லை கிராமங்களான வெடிவைத்தகல், கோவில்புளியங்குளம், இஊஞ்சல்கட்டி போன்றவை இணைந்து ஒரு வட்டாரமாக உருவாக்கப்பட்டது. போகஸ்வெவகிராமத்தில் 350 வாக்குகள் இருப்பதுடன் குறித்த மூன்று தமிழ் கிராமங்களிலும் 175 வாக்குகளே இருக்கின்றன.
இதனால் இம்முறை நடைபெற்றதேர்தலில் இந்த வட்டாரத்தில் சிங்கள பிரதிநிதிஒருவரே வெற்றி பெற்றுள்ளார்,அவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் கட்சியை சார்ந்தவராகவும் இருக்கிறார்.
அவர் தமிழ் கிராமங்களிற்கு சேவைசெய்வார் என்பதை எதிர்பார்க்க முடியுமா? அத்துடன்இணைக்கப்பட்டுள்ள இந்த சிங்கள கிராமத்திற்கும்,தமிழ் கிராமத்திற்கும் இடைபட்ட பகுதி 10 கிலோமீட்டருக்கும் அதிகமான பெரும்காடுகளைகொண்டமைந்திருக்கிறது.
இந்நிலையில் இந்தஇணைப்பு எவ்வாறு சாத்தியம் என்று எண்ணதோன்றுகிறது. எனவே போரால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுடைய எல்லை கிராமங்கள் அபிவிருத்தியைஎதிர்பார்த்து நிற்கையில் அது தொடர்பில் கரிசனையின்றியே குறித்தஎல்லை நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது.
போர்சூழல் காரணமாக ஏற்பட்ட அழிவுகள்,இடப்பெயர்வு,போரிற்கு பின்னர் முறையாகமேற்கொள்ளப்படாத, மீள்குடியேற்ற செயற்பாடுகள்காரணமாக வவுனியா வடக்கில் உள்ள எல்லையோரகிராமங்கள் மக்கள் இல்லாமல் அழிந்து வரும்நிலையை சந்திக்கின்றன.
குறிப்பாக வெடிவைத்தகல் ,கோவில்புளியங்குளம்,ஊஞ்சல்கட்டிபோன்றவை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மண்ணின் மைந்தர்களின் வரவுக்காக ஏங்கி நிற்பதைபார்க்க கூடியதாக இருக்கிறது. 40 ற்கும் மேற்பட்டகுடும்பங்கள் வசித்து வந்த வெடிவைத்தகல்கிராமத்தில் தற்போது ஒரேயொரு முதியவர் மட்டும்வாழ்ந்து வருகிறார்,அதுபோல கோவில்புளியங்குளம்பகுதியில் 6 குடும்பங்கள் வாழ்கின்றன.
இப்பகுதியில்உள்ள இரு பாடசாலைகள் புதர்வளர்ந்துமாணவர்களின் வருகைக்காக ஏங்கிநிற்கிறது. குளங்களும்,வயல் ,நிலங்களும் அதிகம்காணப்பட்டாலும் அவற்றை பயன்படுத்த மக்கள்இல்லை என்பது,பெரும் குறையாக உள்ளது.
உலகமயமாதல் சூழலில் நகரத்தை நோக்கிய மனிதர்களின் பயணம் கிராமங்களை சோபையிழக்கச் செய்திருக்கிறது. எது எப்படியோ போர்ச் சூழல்காரணமாக சோபையிழந்து நிற்கும் கிராமங்களும்,மனிதர்கள் நடமாடாத வீதிகளும்,பாழடைந்த வீடுகளும்போர் அழிவுகளையும் மக்களின் முன்னையஇருப்பையும் தாங்கி நிற்கின்றன.
இவ்வாறான நிலைமை எதிர்காலத்தில் சிங்களகுடியேற்றங்கள் அமைக்கப்படுவதற்கு இலகுவாக அமைந்து விடுகிறது.
முல்லைதீவு,திருகோணமலை,அனுராதபுரம்,வவுனியா ஆகிய மாவட்டங்களின் எல்லைகளின் மையபகுதியான நெடுங்கேணியின் கிழக்கு பகுதிகளில் அரசினால் மேற்கொள்ளபடும் வகைதொகையின்றிய சிங்கள குடியேற்றங்களால் அரசதிணைக்களங்களிற்கிடையே பல்வேறு நிர்வாகசிக்கல் நிலைமைகள் உருவாக்கியிருக்கிறது.
இதனை காரணம் காட்டி எதிர்காலத்தில் வடக்குமாகாணத்தில் புதிய சிங்கள மாவட்டம் ஒன்று உருவாக்கப்படும் நிலையையும் மறுப்பதற்கில்லை. இது அரசின்நீண்டகாலதிட்டம் என்பது தமிழர்தரப்பின் நிலைப்பாடு. ஏற்கனவே தமிழ்மக்களின் இடப்பெயர்வுகளினால் பாதிப்படைந்திருந்த பகுதிகளை மகாவலி தனக்குள் விழுங்கிகொண்டுள்ளதுடன் சீரானசிங்கள குடியேற்றங்களை பரவலாக மேற்கொண்டுவருகிறது.
கொக்கச்சான்குளம்(போகஸ்வெவ),முல்லைதீவின் மணலாறு(வெலிஓயா),,போன்றவை மகாவலி எல்வலயத்திற்குள் உள்ளடக்கபட்டு 3 ஆயிரம் குடும்பங்களைசேர்ந்த 12 ஆயிரம் சிங்களமக்கள் குடியேற்றபட்டுள்ளனர்.
மொரகாகந்தை நீர்தேக்கத்தில் இருந்து மகாவலிநீரை வவுனியாவின் சேமமடுகுளத்திற்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் அரசினால்மேற்கொள்ளபட்டுவருகின்றது.
இந்நிலையில் மகாவலி எல் வலயகருதிட்டம் நிறைவுபெறும் போது சுமார் 6 ஆயிரம் சிங்களகுடும்பங்களை அதனைஅண்டிய பகுதிகளில் குடியேற்றுவது என எல் வலயத்தின் கருத்திட்ட வரைபில்குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே மீதமுள்ள சிங்கள குடியேற்றதிட்டங்களை செயற்படுத்தும் நடவடிக்கையே அண்மைய நாட்களில் நெடுங்கேணி கச்சல்சமனங்குளத்தில் புத்தர்சிலை ஓன்றை நிறுவி அக்கிராமத்தின் பெயரை சபுமல்கஸ்கந்த என்று மாற்றியிருந்ததுடன் அதற்கு அருகில் அமைந்துள்ள,ஊற்றுகுளம் தமிழ் கிராமமும் அபகரிக்கபட்டுள்மையை கூறமுடியும்.
குடியேற்றதிட்டங்கள் மேற்கொள்ளப்படும் பொழுது அந்தந்தமாவட்டங்களில் உள்ள மக்களிற்கு அல்லதுமாகாணத்தில் உள்ள மக்களிற்கே முன்னுரிமைஅளிக்கப்பட வேண்டும்.13 ம்திருத்த சட்டத்திலும் அது தொடர்பாக கூறப்பட்டுள்ளது.
இங்குள்ள தமிழ் மக்களிற்கு காணிகள் தேவைப்படும் நிலையில் அதனைகருத்தில் கொள்ளாது வெளிமாகாணங்களை சேர்ந்தமக்களை குடியேற்றுவதானது இலங்கை அரசினுடைய பேரினவாதமனோபாவத்தை வெளிக்காட்டி நிற்பதுடன், நிலங்களை அபகரித்து விட்டால் தமிழ்மக்களுடைய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை நசுக்கி விடலாம் என்ற கபட நோக்கத்தையும் கொண்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் அது நில ஆக்கிரமிப்பு போராக மாறியது. அதெற்கெதிராக தமிழ்மக்களும், மக்களை பிரதிநிதித்துவ படுத்துபவர்களும் போராடாவிட்டால் எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்திற்குள் சிங்கள மாவட்டம் ஒன்று இணைந்து கொள்ளும் நிலைமையை தவிர்க்கமுடியாது.