ஐநுாறாவது நாட்களைக் கடந்தும்

மைத்திரி- ரணில் அரசாங்கம் பொறுப்புக்கூறவில்லை; காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தொடர் போராட்டம்

ஐநுாறு நாட்களில் ஏழு தாய்மார் உயிரிழப்பு என்றும் தெரிவிப்பு
பதிப்பு: 2018 ஜூலை 01 23:16
புதுப்பிப்பு: ஜூலை 02 00:28
main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகத்தில் போருக்கு முன்னரும் போருக்கு பின்னரான காலத்திலும், இலங்கைப் படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், கிளிநொச்சியில் நடத்தி வரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஐநுாறாவது நாளை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு இன்று முற்பகல் பத்து மணிக்கு ஏ-9வீதியில் மாபெரும் போராட்டம் ஒன்று நடைபெற்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், கடந்த ஐநுாறு நாட்களாக இரவு பகலாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த 500 நாட்களில் ஏழு தாய்மார் உயிரிழந்துள்ளனர். தமது பிள்ளைகள் மீண்டும் திரும்பி வருவார்களா என்று ஏங்கி, மனம் உருகிப் போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார், ஏமாந்த நிலையிலேயே உயிரிழந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.
 
கடத்தப்பட்டும், வலிந்து காணமல் ஆக்கப்பட்டும் இலங்கைப் படையினரிடம் சரணடைந்த பின்னரும் காணமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

ஆனால் இதுவரை இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் உரிய பதில் வழங்கவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

விளக்கம்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், கடந்த ஐநுாறு நாட்களாக நடத்தி வரும் கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பாக பிரதிநிதி ஒருவர் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும்போது எடுக்கப்பட்ட படம். இந்தப் போராட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையின் அருட்தந்தையர்கள். பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்துக்கு அமைவாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை பற்றிக் கண்டறியும் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்டது.

அதன்படி அலுவலகம் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் கொழும்பை மையமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. ஆனால் அந்த அலுவலகத்தில் தமக்கு நம்பிக்கை இல்லையென காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

தமிழர் தாயகப் பிரதேசங்களுக்கு நேரடியாக வந்து காணாமல் போனவர்களின் உறவினர்களை, அந்த அலுவலகத்தின் பிரதிநிதிகள் சந்தித்தபோதும், நம்பிக்கை இல்லையென உறவினர்கள் நேரடியாகவே கூறியிருந்தனர்.

குறித்த அலுவலக பிரதிநிதிகளை வெளியேறுமாறு கோரி உறவினர்கள் திருகோணமலையில் இலங்கை அரச செயலகத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை, இலங்கைப் படையினரால் கடத்தப்பட்டும், கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடியறியும் சங்கத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஏழாயிரத்தி 400 கடிங்களில், ஒரு கடிதத்துக்கேனும், இதுவரை பதில் கிடைக்கவில்லை என வன்னி மாவட்ட உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறியிருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் கடந்த ஆண்டு மே மாதம் வவுனியாவில் நடத்திய போராட்டத்தின்போது அவர் இவ்வாறு கூறியிருந்தாா்.

அதேவேளை, தகவல் அறியும் உரிமைச் சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் செயற்பட்டு வருகின்றது.

ஆனால், அந்தச் சட்ட மூலத்தின் படி, காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தகவல்கள் உறவினர்களினால் கோரப்பட்டது. எனினும் அதற்கும் உரிய பதில் கிடைக்கவில்லையென உறவினர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு மரணச் சான்றிதழும் நஷ்டஈடும் கொடுக்கப்படும் என மைத்திரி- ரணில் அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் புதிதாக பதவியேற்றபோது இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரும் அவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அதனை ஏற்க முடியாது என்றும், தமது உறவினர்களுக்கு என்ன நடத்தது என்பது தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் உறவினர்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.