இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் குழப்பம்

இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் சமாந்தரமான உறவுகள்- இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விளக்கம்

ஆனால் அமெரிக்க ஆதரவு அமைச்சர் மங்கள சமரவீர அமைதி- எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
பதிப்பு: 2018 ஜூலை 05 16:52
புதுப்பிப்பு: ஜூலை 05 23:17
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள மத்தல விமான நிலையத்தை தொடர்ச்சியாக வைத்திருப்பதற்கு சீனா ஆர்வம் காட்டவில்லை. இதனால் இந்தியாவுக்கு மத்தல விமான நிலையத்தை குத்தகைக்கு வழங்கியுள்ளதாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளோடும் சமாந்தரமான முறையில் கொடுக்கல் வாங்கல்களை, இலங்கை மேற்கொண்டு வருவதாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியதால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.
 
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் ஊடாக சீன இராணுவம் இலங்கைக்குள் பிரவேசிக்க முடியாது. இது குறித்து சீன அரசுடன் உயர்மட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட்டு இணக்கம் எற்பட்டது என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

ரணில் விக்கிரமசிங்கவின் இரகசியமான சீன-இலங்கைத் திட்டமிடலின் ஊடாகவே சீனாவுடன் சில விடயங்கள் பேசப்படுவதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

ஜே.வி.பி.மற்றும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் இன்று பதிலளித்தார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்பனை செய்து விட்டதாகவும் மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கிவிட்டதாகவும் இதனால் இலங்கையின் தேசிய வளங்கள், வருமானங்கள் ஆகியவற்றை இலங்கை மக்கள் இழக்கும் நிலை ஏற்படும் எனவும் ஜே.வி.பி குற்றம் சுமத்தியிருந்தது.

கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களான தினேஸ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார அகியோர் இந்தியாவுக்கு மத்தல விமான நிலையத்தை வழங்கியமை தொடர்பாக தமது எதிர்ப்பையும் வெளியிட்டிருந்தனர்.

இதற்குப் பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தை குறைகூறினார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் முன்னைய ஆட்சியின்போது ஆயிரத்தி 320 மில்லியன் டொலர் கடன் பெற்றே நிர்மாணிக்கப்பட்டது என்றும், ஆனாலும் எந்தவொரு கப்பலையும் துறைமுகத்துக்குள் கொண்டு வரமுடியவில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

ரணில்
சீன தூதுவர் சென் சே யுவாங், இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்து உரையாடியபோது எடுக்கப்பட்ட படம்

2011 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தினால் 47 பில்லியன் ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளதாகவும், ஆனால் விற்பனை செய்யவில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

அதேவேளை, அம்பாந்தோட்டை துறைமுகத்தை மைத்திரி- ரணில் அரசாங்கம் சீனாவுக்கு விற்பனை செய்துவிட்டதாகவும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் துறைமுகம் விற்பனை செய்யப்படவில்லை என்றும் கூட்டு எதிர்க்கட்சி வெளிப்படையாகவே குற்றம் சுமத்தி வருகின்றது.

சீனாவுக்கு விற்பனை செய்யவில்லை என்றால் குத்தகைக்கு கொடுக்கப்பட்ட ஆவணங்களை இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஜே.வி.வி. உறுப்பினர் ஹந்துநெத்தி கடந்த வாரம் கோரியிருந்தார்.

ஆனால் ஆவணங்கள் எதுவும் இதுவரை இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷவை கூட்டு எதிர்க்கட்சி. ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சீனா இந்தியா ஆகிய நாடுகளுடனான உறவுகள், கொடுக்கல் வாங்கல் குறித்து சிங்களக் கட்சிகளின் உறுப்பினர்கள் ஏட்டிக்குப் போட்டியாக குற்றச் சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.

அம்பாந்தோட்டை முறைமுக விகாரம் குறித்து இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர ஏன் அமைதியாக இருக்கின்றார். வெளியுறவு அமைச்சர்தானே பதிலளிக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய நண்பரான இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்துடன் நெருங்கிய உறவைப் பேணி வருகின்றார்.

2015ஆம் ஆண்டு இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் மைத்திரி- ரணில் அரசாங்கத்தை உருவாக்குவதிலும் அமைச்சர் மங்கள சமரவீர முக்கியமானவராகச் செயற்பட்டிருந்தார்.

ஆனாலும், அம்பாந்தோட்டைத் துறைமுகம், கொழும்புத் துறைமுகம், மத்தல விமான நிலை விவகாரம் குறித்த ஏற்பாடுகள் இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அறிவிக்கப்படாது இரகசியமாகவே மேற்கொள்ளப்பட்டதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

ரணில் விக்கிரமசிங்கவின் இரகசியமான சீன-இலங்கை திட்டமிடலின் ஊடாகவே சீனாவுடன் சில விடயங்கள் பேசப்படுவதாகவும் அந்தத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவ மற்றும் தொழில் நுட்ப உதவிகளை சீனா வழங்கியிருந்ததாக ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் இலங்கை நாடாளுமன்றத்தில் அன்று பெருமையாகவும் கூறியிருந்தன.

அதேவேளை, மைத்திரி ரணில் அரசாங்கத்தில் வெளியுறவுக் கொள்கையில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அதனை அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் ஒவ்வொன்றும் தமக்குச் சாதகமாக பயன்படுத்துகின்றன. இதனால் இலங்கையில் இராணுவ ஆட்சிக்கு வழியேற்படும் அபாயம் உள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.