வவுனியாவில் பாடசாலை மாணவிக்கு

தொல்லை கொடுத்த இலங்கை இராணுவச் சிப்பாயைக் காப்பாற்ற முற்பட்ட பொலிஸார்

சித்திரவதை, ஆட் கடத்தலில் இலங்கை மீண்டும் முதலிடம்- சர்வதேச அமைப்பு ஒன்றின் அறிக்கை கூறுகின்றது
பதிப்பு: 2018 ஜூலை 10 19:39
புதுப்பிப்பு: ஜூலை 10 23:54
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைகளைத் தடுக்க இலங்கை இராணுவம் முற்று முழுதாக வெளியேற வேண்டும் என போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் கூறிவருகின்றனர். அதேவேளை இலங்கைப் படையினரை மறுசீரமைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் மைத்திரி- ரணில் அரசாங்கம் முன்னெடுக்கவில்லயென சித்தரவதைகளில் இருந்து விடுவித்துக் கொள்ளும் (Freedom from Torture) என்ற சர்வதேச அமைப்பும் கூறியுள்ளது. இலங்கை இராணுவத்தை வெளியேற்றி காணி. பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால், இளைஞர்கள் மத்தியில் திட்டமிடப்பட்டு தூண்டி விடப்பட்டுள்ள வன்முறைகளைத் தடுக்க முடியும் என முதலமைச்சர் விக்னேஸ்வரனும் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கூறியிருந்தார்.
 
இந்த நிலையில், வவுனியாவிலிருந்து பூவரசன்குளம் ஊடாக மெனிக்பாம் சென்ற இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தில் பாடசாலைச் சீருடையுடன் சென்ற மாணவிக்குத் தொல்லை கொடுத்த இராணுவச்சிப்பாயை வவுனியாவில் உள்ள இலங்கைப் பொலிஸ் நிலையத்தில் மறைத்து வைத்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்களும் பேருந்தில் சென்ற பயணிகளும் பொலிஸ் நிலையத்தைச் சுற்றிவளைத்துப் போராடியுள்ளனர்.

இதனால் வவுனியால் பதற்றம் ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் அரை மணிநேரம் தடைப்பட்டது.

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4 மணிக்கு பூவரசன்குளம் ஊடாக மெனிக்பாம் சென்ற பேருந்தில் பாடசாலைச் சீருடையுடன் மாணவி ஒருவர் பயணம் செய்துள்ளார்.

வவுனியா
பேரூந்தில் பயணம் செய்த மாணவிக்குத் தொலை கொடுத்த இலங்கை இராணுவச் சிப்பாயைக் காப்பாற்ற முற்பட்ட இலங்கைப் பொலிஸாருடன் பேரூந்தில் பயணம் செய்த பயணிகளும் பொதுமக்களும் வாக்குவாதப்படும்போது எடுக்கப்பட்ட படம்

அந்தப் பேரூந்தில் பயணம் செய்த இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவர், குறித்த மாணவியிடம் தொலைபேசி இலக்கத்தைக் கேட்டுத் தொல்லை கொடுத்துள்ளார். சித்தரவதையும் செய்துள்ளார்.

இதனை அவதானித்த பயணி ஒருவர், குருமன்காட்டிலுள்ள இலங்கைப் பொலிஸ் காவல் அரணில் பேரூந்ததை நிறுத்துமாறு சாரதியிடம் சொன்னபோது, குறித்த இராணுவச் சிப்பாய் பேரூந்தில் இருந்து இறங்கித் தப்பியோட முற்பட்டுள்ளார்.

ஆனால், பேரூந்தின் சாரதி அவரைத் துரத்திப் பிடித்து பொலிஸ் காவலரனில் ஒப்படைத்து மாணவிக்கு சித்தரவதை செய்தமை குறித்தும் விளக்கமளித்துமுள்ளார்.

பின்னர், வவுனியாவில் உள்ள இலங்கைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்காகக் கூறி, குறித்த சிப்பாயைக் கொண்டு சென்ற குருமன்காட்டு காவலரன் பொலிஸார், இராணுவச் சிப்பாயைக் காப்பாற்ற முற்பட்டுள்ளனர்.

இதனையறிந்த, குறித்த பேரூந்தில் பயனித்த பயணிகளும், பொதுமக்களும் வவுனியாவில் உள்ள இலங்கைப் பொலிஸ் நிலையத்தைச் சுற்றிவளைத்து சிப்பாயை உடனடியாகக் கைது செய்துமாறு அழுத்தம் கொடுத்தனர். தர்க்கப்பட்டனர்.

இதனையடுத்து, வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலையிட்டு இராணுவச் சிப்பாயைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளார்.

இதேவேளை, மாணவிக்குத் தொல்லை கொடுத்த இராணுவச் சிப்பாயை நீதிமன்றத்தில் நிறுத்த வவனியாவில் உள்ள சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த மாணவி சிங்கள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பவர். ஆனாலும் தமிழ் மக்களே இலங்கை இரரணுவச் சிப்பாயை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் சட்டத்தரணி ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

தமிழர் தாயகத்தில் வன்முறைகள், குற்றச் செயல்களைத் திட்டமிட்டு உருவாக்கி வரும் இலங்கைப் படையினர் தொடர்பாகத் தமிழ் மக்கள் அவதானமாகச் செயற்பட்டு வருவதாகவும் அந்தச் சட்டத்தரணி குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கையில் 2015ஆம் ஆண்டு மைத்திரி ரணில் அரசாங்கம் பதவியேற்ற போதும் மிகவும் கொடூரமான சித்திரவதைகள், ஆட்கடத்தல்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கும் சித்தரவதைகளில் இருந்து விடுவித்துக் கொள்ளும் (Freedom from Torture) என்ற சர்வதேச அமைப்பின் 2017 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கைப் படையினரை மறுசீரமைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் மைத்திரி- ரணில் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்றும் அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

உலக நாடுகளில் மிகவும் மோசமான சித்திரவதைகளும் துன்புறுத்தல்களும் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில், இலங்கை மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 2017 ஆம் ஆண்டு சித்திரவதைகளுக்கு உள்ளான 184 பேருக்கு உதவி செய்துள்ளதாக இந்த அமைப்பு கூறியுள்ளது. இவ்வாறு 96 நாடுகளில் சித்திரவதைகளுக்கு உள்ளானவர்களுக்கு உதவி வரும் நிலையிலேயே சித்திரவதைகள் தொடர்பான பட்டியலை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தொடர்ந்தும் மோசமான சித்திரவதைகள் இடம்பெறுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர், பென் எமர்சன் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.

2016 ஆண்டு ஜுலை மாதம் இலங்கைக்கு வந்த பின்னர், அவர் பகிரங்கமாக குற்றம் சுமந்தியிந்ததையும் இந்த அமைப்பு தனது அறிக்கையில் இணைத்துள்ளது.

இதேவேளை, 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான சூழலில் வடக்கு கிழக்கு- தமிழர் தாயகத்தில் வன்முறைகள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை என்று இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் கூறியிருந்தார்.

அத்துடன், இலங்கைப் படையினர், இலங்கைப் பொலிஸாரின் பக்கச்சார்பான செயற்பாடுகள் பற்றியும் அவர் விமர்சித்திருந்தார். இவ்வாறு கூறியதால், அவர் தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகவும் நேரிட்டது.

அத்துடன் அவர் அங்கம் வகிக்கும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கியதேசியக் கட்சியும் அவருடைய இலங்கை நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.