தமிழர் தாயகமான யாழ்

பொன்னாலை பிரதேசம் தொடக்கம் சம்பில்துறை வரை மண் அகழப்படுவதால் நிலத்தடி நீருக்கு ஆபத்து- சபை உறுப்பினர்

கரையோரங்களைக் கடல்காவுகொள்ளும் எனவும் எச்சரிக்கை-
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 20 00:11
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 20 11:40
main photo main photo main photo main photo main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகமான யாழ்ப்பாணத்தில் உள்ள பொன்னாலைப் பிரதேசம் தொடக்கம் சம்பில்துறை வரையான பிரதேசங்களில் மணல் அகழ்வதால், எதிர்காலத்தில் நிலத்தடி நீருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டி வலி.மேற்கு பிரதேசசபையில் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு பின்புறத்தில் இருந்து சம்பில்துறை வரையான கரையோரப் பிரதேசத்தில் ஏற்கனவே யுத்த காலத்தில் இலங்கைக் கடற்படையினர் தமது தேவைக்கு மணல் அகழ்ந்திருக்கின்றனர். அந்த இடங்களில் பெரும் கிடங்குகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில், அந்த இடத்தில் தற்போதும் தொடர்ந்து மணல் அகழ்வு இடம்பெறுகின்றமை ஆபத்தானது என பிரேரணையில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
 
திட்டமிடப்படாத மணல் அகழ்வுகளினால் எதிர்காலத்தில் கரையோரங்களைக் கடல் காவுகொள்ளும் நிலை உருவாகலாம் எனவும் இருக்கின்ற நன்னீர் வளம்கூட இல்லாமல் போகக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் உறுப்பினர் ந.பொன்ராசா பிரேரணையைச் சமர்ப்பித்து உரையாற்றும்போது விளக்கமளித்தார்.

பொன்னாலை, மூளாய், சுழிபுரம், கல்விளான், பாண்டவெட்டை, காட்டுப்புலம் போன்ற பிரதேசங்களில் நன்னீர் மிகக் குறைவாகவே காணப்படுவதாகவும் பொன்ராசா குறிப்பிட்டார்.

இதனால், மணல் அகழ்தல் தொடர்பாக உடனடியாக யாழ் கனியவளத் திணைக்களத்தின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

வலி.மேற்கு பிரதேச சபையின் ஆறாவது கூட்டம் சென்ற 14 ஆம் திகதி திங்கட்கிழமை தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது தமிழர் சம உரிமை இயக்கத்தின், வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ந.பொன்ராசா இந்தப் பிரேரணையைச் சமர்ப்பித்து விளக்கமளித்தார்.

இப் பகுதியில் வசிப்பவர்கள் வளர்க்கும் கால்நடைகளின் மேய்ச்சல் தரவையாக உள்ள இடமாக இந்தக் கரையோரப் பிரதேசமே காணப்படுகின்றது. அத்துடன் மயானங்கள், மாட்டுவண்டிச் சவாரித் திடல்கள் போன்றனவும் இந்தப் பிரதேசத்தில் இருக்கின்றன.

ஆகவே, இந்த இடங்களில் மணல் அகழ்வு இடம்பெறுவதை ஏற்க முடியாது. இதனால் இப்பிரதேசத்தின் இயற்கைச் சமநிலை பாதிப்படையும்.

மணல் அகழப்படுவதற்கு புவிச்சரிதவியல் திணைக்களம் மற்றும் கனியவளத் திணைக்களம் போன்றவற்றின் அனுமதி பெறப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சம்ம்ந்தப்பட்ட திணைக்களங்கள் அந்த இடங்களை ஆய்வு செய்து இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே மண் அகழ்வுக்கு பிரதேச சபை அனுமதியளிக்க வேண்டும்.

ஆனால், மண் ஆய்வுகள் செய்யக்கூடிய சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் உத்தரவுகள் இன்றியே இந்தப் பிரதேசத்தில் மணல் அகழ்வதற்கு அதிகாரிகள் தொடர்ந்தும் அனுமதி வழங்கி வருவதாகவும் பொன்ராசா குற்றம் சுமத்தினார்.

மழைக் காலங்களில் மண் அகழ்ப்பட்ட கிடங்குகளுக்குள் விழுந்து மக்களு்க்கு உயிராபத்துக்கள் ஏற்படலாம் எனவும் அவர் முன் எச்சரிக்கை விடுத்தார்.

இந்தப் பிரேரணை எதிர்ப்புக்கள் இன்றி தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. அத்துடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் சபையில் உறுதியளித்தார்.