பொய்யான உத்தரவுகளை வழங்கி

போராட்டத்தை தடுத்து நிறுத்தியதாக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இலங்கை அமைச்சர் விஜயமுனி சொய்ஸா மீது குற்றச்சாட்டு

சிங்கள மீனவர்கள் வெளியேறவில்லை.
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 25 14:23
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 25 15:00
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கிலும் ஏனைய கடற் பகுதிகளிலும் பலாத்காரமாகத் தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் தென்பகுதி சிங்கள மீனவர்கள் இதுவரை வெளியேறவில்லை என பிரதேச மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பலாத்காரமாக கடலட்டை பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் தென்பகுதி சிங்கள மீனவர்கள் அந்தப்பகுதிகளில் இருந்து வெளியேற்ற வேண்டும் என இலங்கைக் கடற்றொழில் அமைச்சர் விஜிதமுனி சொய்ஸா உத்தரவிட்டிருந்தார். ஆனாலும் இதுவரையும் எந்தவொரு மீனவர்களும் அங்கிருந்து வெளியேற விரும்பவில்லை. பலாத்காரமாகத் தங்கியிருந்து சட்டத்திற்கு முரணாக கடலட்டை பிடிக்கின்றனர். கடந்த 21 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்குச் வருகைதந்த இலங்கை அமைச்சர் விஜிதமுனி சொய்ஸா சிங்களக் கடற்றொழிலாளர்களை சந்தித்து உரையாடியிருந்தார்.
 
அதன் பின்னர் யாழ் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சம்மேளன பிரதிநிதிகளை தனியாகச் சந்தித்து உரையாடியிருந்தார்.

இந்த சந்திப்பை அடுத்தே சிங்கள மீனவர்கள் வெளியேற வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கிப்பட்டிருந்தது. அமைச்சரும் பகிரங்கமாகக் கூறியிருந்தார்.

இந்த உத்தரவு வழங்கப்பட்டு ஐந்து நாட்கள் சென்றுவிட்ட பின்னரும் கூட எவருமே பிரதேசத்தை விட்டு வெளியேறவில்லையென வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கூறுகின்றனர்.

கடந்த 18 ஆம் திகதி வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில் சட்டத்திற்கு முரணாக இரவில் ஒளிபாய்ச்சி கடலட்டை பிடித்துக் கொண்டிருந்த 81 தென்பகுதி சிங்கள மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்திருந்தனர். 28 படகுகளும் கைப்பற்றப்பட்டிருந்தன.

எனினும், கொழும்பு அரசியல் செல்வாக்குகளினால் எந்தவித விசாரனைகளும் இன்றி அனைவரும் விடுதலை செய்யப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட படகுகளும் கைளிக்கப்பட்டுள்ளன.

ஆகவே, கொழும்பில் உள்ள இலங்கைக் கடற்றொழில் திணைக்களத்தின் தலையீடு மற்றும் மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் உயர்மட்டச் செல்வாக்குகளின் அடிப்படையில் கடலட்டை பிடிக்கும் நடவடிக்கைகளில் சிங்கள மீனவர்கள சட்டத்திற்கு முரணாக ஈடுபடுவதாக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், இலங்கை அரசாங்கத்தின் அற்சொற்ப சலுகைகளுக்கு அடிபணிந்து அனைத்தையும் விட்டுக் கொடுத்து வருவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சிங்கள மீனவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்பட்டு வந்தது என்றும் அந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில் இலங்கைக் கடற்றொழில் அமைச்சர் விஜிதமுனி சொய்ஸா பொய்யான உத்தரவை பிறப்பித்தார எனவும் மீனவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.