இலங்கை அனுராதபுரம் சிறைச்சாலையில்

உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் உடல்நிலை கவலைக்கிடம்- உறவினர்கள் கூறுகின்றனர்

மைத்திரி- ரணில் அரசாங்கம் மௌனம்- சம்பந்தன், சுமந்திரன், ரணில் செவ்வாய் சந்திப்பு
பதிப்பு: 2018 செப். 28 21:34
புதுப்பிப்பு: செப். 29 13:37
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இலங்கை அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 15 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் எட்டுப் பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக உறவினர்கள் கூறுகின்றனர். போராட்டத்தை நிறுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படவில்லை எனவும் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். உணவு தண்ணீர் எதுவுமே இன்றி வெறுமனே ஜீவனியை மாத்திரமே கைதிகள் உட்கொள்வதாகவும் மருத்துவ உதவிகளைக் கூட அவர்கள் மறுப்பதாகவும் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதேவேளை கைதிகளை விடுதலை செய்வது குறித்து தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் சந்திக்கவுள்ளனர்.
 
கடந்த புதன்கிழமை மாலை சந்தித்து பேசிய போதும் கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதற்கான இணக்கம் ஏற்படவில்லை என தமிழரசுக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சம்பந்தன் கேட்டுக்கொண்டார். ஆனால் வழங்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் உடனடியாகப் பரிசீலிக்க முடியதென சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கைச் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இதனால் மீண்டும் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசுவதென தீர்மானிக்கப்பட்டதாக சட்டத்தரணி சுமந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

அதேவேளை, உண்ணாவிரதப் போராட்டங்கள் மூலம் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாதென இலங்கையின் நீதியமைச்சர் தலதா அத்துக்கோரல கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் போராட்டத்திற்கு ஆதரவாகவும் யாழ்ப்பாணம். வவுனியா, மன்னார், கொழும்பு ஆகிய பிரதேசங்களில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள், அடையான உண்ணாவிரதப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் மைத்திரி-ரணில் அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லையென, போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் அருட்தந்தை சத்திவேல் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு மைத்திரி- ரணில் அரசாங்கத்தினால் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சி. சிவமோகன் தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை மாலை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேரடியாகச் சென்று உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளைப் பார்வையிட்டார். அதன் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், கைதிகளின் உடல் நிலை மோசமடைந்து வருவதாகக் கூறினார்.

இதேவேளை. கொழும்பு வெலிக்கடை, மகசீன், அனுராதபுரம் சிறைச்சாலைகளில் நூற்றி 37 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறியுள்ளார்.

நூற்றி ஏழு கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆனாலும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் எனவும் அருட்தந்தை சத்திவேல் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை தொடர்பான சரியான தகவலை இலங்கைச் சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.