ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் முரண்பாடு

நல்லாட்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்கிறார் மைத்திரி

சந்திரிக்கா மத்திய குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு
பதிப்பு: 2018 மே 20 16:17
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 27 14:32
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் முரண்பாடுகள் அதிகரித்து வருவதால் நல்லாட்சி என்று தனக்குத் தானே பெயர் சூட்டிக்கொண்டுள்ள அரசாங்கத்தின் பதவிக்காலம் 2020ஆம் ஆண்டு வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லையென கொழும்பு ஊடக வட்டாரங்கள் கூர்மை இணையத்தளத்திற்குத் தெரிவித்தனர்.
 
கடந்த 17 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் கருத்து வெளியிட்ட இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2020 ஆம் ஆண்டு வரை தற்போதைய கூட்டு அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லையெனக் கூறியுள்ளார்.

அத்துடன் தற்போதைய கூட்டில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா இல்லையா என்பதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 23 அமைச்சர்களும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் மைத்திரிபால தெரிவித்துள்ளார்.

அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டு உரையாற்றிக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இடைநடுவே எழுந்து சென்றுவிட்டார்.

அதனையடுத்து மைத்திரிக்கு ஆதரவாகவும் எதிராகவும் மத்தியகுழு உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டனர். கூட்டில் தொடர்ந்தும் இணைந்திருப்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தனித்துவத்துக்க ஆபத்தானது என மூத்த உறுப்பினர்கள், கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆகவே அனைத்து உறுப்பினர்களும் ஒருங்கிணைந்து முடிவெடுத்து, அதனை கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் தீர்மானித்துள்ளதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன கூறியுள்ளார்.

அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சனிக்கிழமை கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலருடன் கலந்துரையாடினார் என்றும் அரசாங்கத்தில் இருந்து விலகி தனித்து செயற்படுவது குறித்து ஆராய்ந்துள்ளதாகவும் கட்சித் தகவல்கள் தெரிவிப்பதாக கொழும்புச் செய்தியாளர் கூர்மைக்குத் தெரிவித்தார்.